ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

18. வீரமும் சீலமும்

‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று ஆன்றோர் புகழும் மனைவாழ்க்கையின் அணிகலன் அறிவறிந்த மக்களேயாகும். செல்வச் செழுமையும் அறிவின் செம்மையும் ஒருங்கமைந்ததே யாயினும் மக்களில்லா மனை மாண்பற்றதென்று அறிந்தோர் கூறுவர்.

மாசற்ற அன்பினில் விளைந்த அமிழ்தாகவும், காதலென்னும் கற்பகத்தின் அருங்கனியாகவும் விளங்கும் மக்களில்லாத வாழ்க்கை மணமற்ற மலரை ஒக்குமென்று இம்மாநிலம் கருதுகின்றது. மக்கள் சிறுகையால் அளாவிய கூழ் பெற்றோர்க்கு அமுதினும் ஆற்ற இனியதென்றும், அவர் பேசும் மழலைச்சொல் யாழினும் குழலினும் இனியதென்றும் தமிழ்மறை கூறுகின்றது. இவ்வுலகில் பெறுதற்கரிய பலவகைச் சிறப்பும் பெற்று, நாள்தோறும் அறுசுவையுணவைப் பலரோடுண்ணும் பான்மை வாய்ந்த பெருஞ் செல்வராயினும், குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, உண்ணும் கலத்திலமைந்த சோற்றைக் கையாற் பிசைந்து, நிலத்திற் சிதறி, வாயாற் கவ்வி

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம்வாழு நாளே

என்று பழந்தமிழ்க் கவிஞர் ஒருவர் பண்புற எடுத்துரைத்தார். இவ்வாறு ஐம்பொறிகளுக்கும் இன்பம் விளைத்தலாலேயே மக்களைப் பெற்றவர்கள் ஆனந்தப் பெருவாழ்வ டைந்தவராகக் கருதப்படுகின்றனர்.

‘முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட் சுமந்து’ அந்தி பகலாக இறைவனை வந்தித்து ஒரு பிள்ளையைப் பெற்ற பொழுது அதன் தாய் பேரானந்தம் அடைகின்றாள். அதன் பொருட்டு அவள் பட்ட பாடெல்லாம் கனவிற்கண்ட துயரம்போல் மறைந்தொழிகின்றது; அருமந்த குழந்தையை வளர்க்கும் பணியில் கண்ணும் கருத்துமாய் ஈடுபடுகின்றாள். அக்குழவி பிணியுற்று வருந்துமாயின் அதன் பசுங்குடர் பொறாத கசந்த மருந்தைத் தான் அருந்தி, பால் நினைந்தூட்டி நோயைப் போக்குகின்றாள். இங்ஙனம் ஆதரித்து வளர்க்கும் அருங் குழவி உடல் வளம் பெற்று, கல்வி கேள்விகளிற் சிறந்து, நல் ஒழுக்கம் வாய்ந்து உயர்ந்தோர் மதிப்பிற்கு உரியதாயின், ஈன்ற தாய் எல்லையற்ற இன்பம் அடைவாள். அறிவறிந்த நன் மகனைப் பெற்ற அன்னை எய்தும் உவகையை

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றேன் எனக்கேட்ட தாய்

என்று திருவள்ளுவர் அருளிச் செய்தார். தான் பெற்ற அருமைத் திருமகன் பெருமையைத் தக்கார் எடுத்துரைக்கும் பொழுது அன்னை ஈன்றபோதுற்ற மகிழ்வினும் பெருமகிழ்வடைகின்றாள் என்று நாயனார் உலகியலை நன்குணர்த்தினார். இவ்வாறு வள்ளுவர் அருளிய நல்லுரையின் நயம் தேர்ந்த கம்பர், நலமெலாம் ஒருங்கே வாய்ந்த இராமனை மைந்தனாகப் பெற்ற தசரத மன்னன் எய்திய பேரின்பத்தை எடுத்துரைக்கும் முறை அறிந்து இன்புறத்தக்கதாகும்.

பல்லாண்டுகளாகக் கோசல நாட்டை ஆண்டு வந்த தசரத மன்னன் பலவகைச் செல்வமும் பெற்றிருந்தும் மக்களில்லாக் குறையால் மனம் வாடி வருந்தினான். வாழையடி வாழை போல் வந்த தொல்குலம் வழியடைத்துப் போமாயின் வையகம் வருந்துமே என்று கவலையுற்றான். அம்மன்னன் ஒருநாள் கானகத்தில் வேட்டையாடச் சென்ற போது ஓர் அந்தக முனிவனது மைந்தனை விலங்கென்று கருதி வில்லம்பாலடித்துக் கொன்றான். மன்னனது கணையால் கண்ணனைய காதல் மைந்தன் இறந்தான் என்றறிந்த முனிவன் மனம் கறுத்து மன்னனை நோக்கி “என் போல் பொறுத்தற் கரிய புத்திர சோகத்தால் நீயும் இறக்கக் கடவாய்” என்று சபித்து இம் மண்ணுலகை நீத்து விண்ணுல கெய்தினான். முனிவரது மொழியைச் செவியிலேற்ற தசரத மன்னன் அகமும் முகமும் மலர்ந்தான். நிறை மொழிச் செல்வராய முனிவர் அருளிய மறைமொழி இறையளவும் தவறாது என்று எண்ணி மகிழ்ந்தான். முனிவரது சாபத்தால் தனக்கு மைந்தன் ஒருவன் தோன்றுவான் என்று மனம் களித்து மாளிகை போந்தான்.

இத்தகைய மனப்பான்மை வாய்ந்த மன்னனுக்கு ஓவியத்தில் எழுத வொண்ணா உருவமைந்த இராமன் தலைமகனாய்த் தோன்றினான். தவம் முயன்று அரிதிற்பெற்ற தனி இளங் குமரனைக் காவலன் கண்ணும் ஆவியுமாய்க் காதலித்து வளர்த்தான். காயாமலர் போன்ற மேனியும்,கமலம் போன்ற கண்களும், கலைமணம் கமழும் குமுதவா யும் அமைந்த மைந்தனைக் கண்டு காவலன் மனம் குளிர்ந்தான். இவ்வாறு வளர்ந்து வந்த கமலக் கண்ணனைக் கௌசிக முனிவன் மிதிலை மாநகர்க்கு அழைத்துச் சென்றான். அங்கு அடல் வேந்தரால் அசைக்கவும் இயலாது கிடந்த மலை போன்ற மணவில்லை இராமன் மாலை போல் எடுத்து இமைப் பொழுதில் இறுத் தெறிந்தான். இங்ஙனம் செயற்கரிய செயல் செய்து மண்ணையும் விண்ணையும் மகிழ்வித்து, மிதிலை மன்னன் அருமைத் திருமகளாய சீதையை இராமன் மணந்த பொழுது தசரத மன்னன் மனம் தழைத்தான்.

அப்பால் மிதிலை மாநகரினின்று புறப்பட்டு ஆதி மன்னனும் மணமக்களும் அயோத்தி மாநகரை நோக்கிச் செல்கையில் பாராளும் வேந்தரது பெரும் பகைவனான பரசுராமன் எதிர்ப்பட்டான். எழு மூன்று தலைமுறையாக முடிவேந்தரை மழுவா லெறிந்து முடித்த பரசுராமனைக் கண்டபொழுது தசரத மன்னன் மெய் நடுங்கி ஆவி சோர்ந்தான். அச்சமென்பது அணுவளவு மில்லாத அஞ்சன வண்ணன் மழுவாளன் முன்னே முகமலர்ந்து நின்றான். மிதிலைமா நகரில் மணவில்லை இறுத்துப் புகழ்பெற்ற மைந்தனை நோக்கி “ஐய, சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறிவந்தேன் மலைகுவன் வல்லையாயின் வாங்கிடு இத்தனுவை”

என்று பரசுராமன் வீரமொழி பகர்ந்து தனது பெருவில்லை நீட்டினான். நீலமேனி நெடியோனாய இராமன் அவ்வில்லைக் கையிலேற்று இறைப் பொழுதில் வளைத்து வேத வித்தாய் விளங்கிய பரசுராமனது ஆவியைப் பறிக்க மனமற்றவனாய் அவனது அருந்தவம் அனைத்தையும் ஓர் அம்பால் அழித்தொழித்தான். இவ்வாறு வெல்லுதற்கரிய பரசுராமனை வென்று மன்னர் குலத்தை வாழ்வித்த மைந்தனைத் தசரதன் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் களிப்பெனும் கடலுள் ஆழ்ந்தான். ஆகவே முனிவரது சாபத்தால் ஒரு மைந்தன் பிறப்பான் என்று அறிந்து கவலை தீர்ந்த காவலன், கமலக் கண்ணணைப் பெற்றபோது பெருமகிழ் வெய்தினான்; அப்பால் அம்மைந் தன் வில்லின் செல்வனாய் அமைந்து மிதிலை மன்னனது மணவில்லை ஒடித்தபோது மைந்தனது வீரம் கண்டு மனம் மகிழ்ந்தான்; பின் னும் அடல் வேந்தரது முடியை மழுவால் உடைத்தெறிந்த பரசுராமனது வில்லை வளைத்து அவனது ஆணவத்தை அழித்தபோது கோசல மன்னன் மனம் குளிர்ந்தான். ஆயினும் இம்மூவகை இன்பத்தினும் பெரியதோர் இன்பம் பின்னொருகால் அம்மன்னனுக்கு வாய்த்தது என்று கம்பர் கூறுகின்றார்.

மன்னுயிர்க்கெல்லாம் இனிபனாய் இராமன் அரசாங்க பாரம் தாங்குதற்குரிய தகைமை பெற்றான் என்று அறிந்த தசரத மன்னன் நாடாளும் பொறுப்பை அந்நன்மகனிடம் ஒப்புவித்துத் தவநெறியை மேற்கொள்ளக் கருதினான். மதிநலம் சானற மந்திரத் தலைவரையும் அருள் நிறைந்த ஆன்றோரையும் அரச சபைக்கு அழைத்து ஆதி மன்னன் தன் கருத்தை அறிவித்தான்.அப்பொழுது வினையின் நீங்கி விளங்கிய அறிவு வாய்ந்த வசிட்டமா முனிவன் வேந்தனை நோக்கி “அரசே! மிதிலை மன்னன் திருமகளாய சீதை பொற்பிற்சிறந்த பூமாதினும் நல்லள்;பொறையிற் சிறந்த புவிமாதினும் நல்லள்; அறிவிற் சிறந்த கலைமாதினும் நல்லள்; அம்மங்கையின் தலைவனான இராமனோ மன்னுயிர்க் கெல்லாம் இனியன். கற்றாரும் மற்றாரும் அவனையே உண்ணும் நீரினும் உயிரினும் உயர்வாகக் கருதுகின்றார்” என்று சான்றோனாய வீர மைந்தனது பெருமையை எடுத்துரைத் தான்.

மண்ணினு நல்லள் மலர்மகள் கலைமகள் கலையூர் பெண்ணினு நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள் கண்ணினு நல்லன் கற்றவர் கற்றிலாத வரும்
உண்ணு நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்

என்று முனிவன் கூறிய மொழிகளை மன்னன் கேட்டு மகிழ்ந்தான். கோசல நாட்டுக் குடிகள் இராமனையே உயிராகக் கருதி யுள்ளாரென்று முனிவர் கூறிய உரை கேட்டு மன்னன் மனம் குளிர்ந்தான். கருணை வடிவாய் தன் காதல் மைந்தன் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாய் விளங்குவதை அறிந்து மனம் களித்தான். இந்நிலையில் அரசன் அடைந்த எல்லையற்ற இன்பப் பெருக்கை எழுதப்போந்த கம்பர்,

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப்
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடித்த அப்பெருவில்
குற்ற அன்றினும் எறிமழ வாளவன் இழக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்

என்று திருக்குறளின் மணத்தை வடித்தெடுத்துத் தமது வளமார்ந்த கவியிற் கமழ வைத்தார். மாதவத்தால் உயர்ந்த முனிவன் இராமனை நல்லவன் என்று புகழ்ந்தபோது தசரத மன்னன் முன்னடைந்த மூவகை இன்பத்தினும் முற்றிய இன்பம் அடைந்தான் என்று கவிஞர் கூறியருளினார். அருந்தவம் இயற்றி அஞ்சன வண்ணனைத் தலைமகனாய்ப் பெற்றபோது ஆதிமன்னன் மனக்குறை நீங்கி மகிழ் வெய்தினான்; அப்பால் அம்மைந்தன் வில்லாண்மையிற் சிறந்து திரிபுரம் எரித்த விரிசடைத் தேவனது வரிசிலையை ஓடித்தபோது பெருமகிழ் வடைந்தான்; பின்பு வேந்தர் குலத்தை வேரறுக்க வஞ்சினம் பூண்ட பரசுராமனது வில்லை வளைத்து அவன் செருக்கைச் சிதைத்தபோது பின்னும் மிகமகிழ்ந்தான்; அப்பால் முனிவன் வாயிலாகத் தன் மைந்தனைச் “சான்றோன்” என்று கேட்ட போது முன்னர் அடைந்த மூவகை இன்பத்தினும் முற்றிய இன்பமுற்றான். ஆகவே மைந்தனது ஒப்பற்ற உடல் வளிமை கண்டு மகிழ்ந்திருந்த வேந்தன் அவனது உளப் பண்பை ஆன்றோர் வாயிலாகக் கேட்டறிந்த போது எல்லையற்ற இன்பம் எய்தினான், என்பது இனிதறியப்படும். வீரப்புகழ் விளைக்கும் பேராண்மையினும் உயிர்ப் பண்பாய தண்ணளியால் உலகம் தாங்குந் தன்மையே சிறந்ததென்றறிந்த தசரத மன்னன், மைந்தனது சான்றாண்மையை வீரத்தினும் சிறந்ததாக மதித்து மிக மகிழ்ந்தான், என்று கம்பர் குறித்த நயம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். வேந்தர்க்கு வெற்றிதருவது வேலன்று; செங்கோலேயாகும் என்று செம்மையுறத் தெளிந்த மன்னவன் இராமனது சீலம் அறிந்து சால மகிழ்ந்தான் என்று கம்பர் அருளிய கவியில் வள்ளுவர் வாய் மொழி வளமுற விளங்கக் காணலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *