
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
20. கலையின் விளக்கம்
‘அழகிய பொருள் என்றும் ஆனந்தம் தரும்’ என்று ஆங்கிலக் கவிஞர் ஒருவர் அருளிப் போந்தார். கண்ணினைக் கவரும் அழகையும், கருத்தினைக் கவரும் அறிவையும், தெய்வ நலங்களாகக் கருதி வழிபட்ட பெருமை பாரத நாட்டினர்க் குரியதாகும். அழகினைத் திருமகள் என்றும், அறிவினைக் கலைமகள் என்றும் கொண்டு அன்னார் போற்றினார்கள். வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப்பணி பூண்டு, வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் கலைமகளைப் பாரதியார் போற்றும் முறை சாலச் சிறந்ததாகும்.
இவ்வுலகில் வழங்குங் கலைகளைக் கவின்கலையென்றும் பயன் கலை என்றும் பகுத்துக் கூறுவதுண்டு. கண்ணையும் செவியையும் கவர்ந்து, அவற்றின் வாயிலாக மனத்திற்கு இன்பம் ஊட்டும் கலைகள் கவின்கலைகளாகும். மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல திறப்பட்ட பொருள்களை ஆக்கிக் கொள்வதற்குச் சாதனமாய கலைகள் பயன்கலைகள் எனப்படும். இவ்விருவகைக் கலைகளின் வடிவமாக நாமகள் விளங்குகின்றாள் என்னும் உண்மையைப் பாரதியார் நன்கு அருளிப் போந்தார்.
செஞ்சொற் கவி இயற்றும் கலைவாணர் கருத்திலும், உள்ளொளி வாய்ந்த உரவோர் மனத்திலும், உலகினர்க்கு ஒளிநெறி காட்டும் உயரிய மறையிலும், கலைமகள் மகிழ்ந்துறைகின்றாள். இன்னும், இன்னிசை வீணையை மலர்க்கரத்திலேந்திய கலைமகள், மக்கள் பேசும் மழலை மொழியிலும், மாதர் இசைக்கும் மதுரப் பாட்டிலும்,கீதம் பாடும் குயிலின் குரலிலும், சிறையாரும் மடக்கிளியின் செந்நாவி லும் அமர்ந்திருக்கின்றாள். அன்றியும் மாடங்களை அழகு செய்யும் ஓவியங்களிலும், கோயில்களிலமைந்த சீரிய சிற்பங்களிலும் கலைமகள் விளங்குகின்றாள். எனவே, செவியினைக் கவரும் இயற் கவியும் இன்னிசையும் கண்ணினைக் கவரும் ஓவியமும் சிற்பமும் அறிவுத் தெய்வம் உறையுமிடங்களாகும்.
இவ்வுலகில் வாழும் மக்களுக்குப் பயன்படும் பொருள்களை ஆக்கி அளிக்கும் தொழிலாளர் பலராவர். இரும்பைக் கொன்று வெம்படை வடிக்கும் கருங்கைக் கொல்லரும், திண்ணிய மரத்தைத் தறித்து முறித்துப் பணி செய்யும் தச்சரும், குழைந்த மண்ணாற் பாண்டங்களை வனையும் குயவரும், பட்டாலும் பருத்தி நூலாலும் ஆடைகள் நெய்யும் சாலியரும் உலக வாழ்க்கைக்குப் பயன்படுங் கலைகளைப் பயின்று பணி செய்கின்றார்கள். இன்னோர் பணிகளிலும் கலைமாது பண்புற்று இலங்குகின்றாள்.
இன்னும் வேதம் பயிலும் வேதியரும், வீரம் விளைக்கும் வேந்தரும், வான்பொருளீட்டும் வணிகரும், தாளாண்மையிற் சிறந்த வேளாளரும் ஒருங்கே வணங்கும் விழுமிய தெய்வம் அறிவுத் தெய்வமேயாகும். மாந்தரது உள்ளத் தாமரையில் இனிதுறைந்து அவர் அறிவினுக்கறிவாய் நின்று புன்னெறி விலக்கி நன்னெறி காட்டும் தெய்வம் கலைத் தெய்வமேயாகும். மேலோரென்றும் கீழோரென்றும் எண்ணாது, செல்வரென்றும் வறிஞரென்றும் கருதாது, முதியரென்றும் இளையரென்றும் பாராது,’எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் அறிவினை விரும்புவோர் அனைவரும் வருக’ என்று அருள் கூர்ந்து அழைத்திடுந் தெய்வம் அறிவுத் தெய்வ மேயாகும்.
இத்தகைய தெய்வத்தை நிறைமொழி மாந்தர் மறைமொழியாற் போற்றினார்கள். அறிவறிந்த மாந்தர் ஆண்டுதோறும் எண்ணும் எழுத்துமமைந்த ஏடுகளை வரிசையாக அடுக்கி அணிவிழா எடுத்தார் கள்; விரையுறு நறுமலர் தூவி வணங்கினார்கள்; வண்ணமும் சுண்ணமும் வழங்கினார்கள். இவ்வாறு ஆண்டுதோறும் நிகழும் நாமகள் விழாவினைக் கண்ட பாரதியார்,
“செந்தமிழ் மணி நாட்டிடை யுள்ளீர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட் கேசெய்வ தென்றல்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றும்“
என்று சாற்றியருளினார். ஆண்டிற்கொருமுறை கலையேடுகளை எடுத்தடுக்கி மலர்மாலை புனைவதும், சந்தனம் சாத்துவதும், மந்திரம் முரல்வதும், வந்தனை செய்வதும் உயரிய வழிபாடென்று கருதுவது பெருந்தவறாகும். ‘பொக்க மிக்கவர்’ பூவையும் நீரையும் கலைமகள் பொருளாகக் கருதமாட்டாள். கலைவடிவாய் நாமகளுக்குகந்த வழிபாடுதான் யாதோ என்று அறிய விரும்புவார்க்குப் பாரதியார் நல்வழி காட்டுகின்றார். தமிழ் நாட்டிலுள்ள வீடுதோறும் கலையின் ஒளி சிறக்கவேண்டும். வீதிதோறும் இரண்டொரு கல்லூரி இலங்கவேண்டும். நகரந்தோறும் கலாசாலைகள் ஓங்க வேண்டும். கல்வி நலம் அறியாத கசடர் வாழும் ஊர்களை எரியினுக்கு இரையாக்க வேண்டும். இவ்வாறு அறியாமையை அழித்து ஒழித்து யாண்டும் கலையின் மணம் கமழச்செய்தலே நாமகளின் அருள் பெறுதற்குரிய நல்ல வழிபாடென்று பாரதியார் அறிவிக்கின்றார்.
நாட்டிலுள்ள ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமென்னும் உண்மையை,
“இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத் தறிவித்தல்“
என்று பாரதியார் அறிவித்துப் போந்தார். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறத்தின் பெருமையை அறிந்து அதனை ஆர்வ முற வளர்த்த நாடு நம் நாடாகும். வருந்தி வந்தவர் அரும்பசி களைந்து அவர் திருந்திய முகங்கண்டு திளைத்த நாடு இந்நாடாகும். கொழு கொம்பின்றிக் குழைந்துகிடந்த சிறு முல்லைக்கொடியின் துயர் கண்டு தரியாது, அக் கொடி படருமாறு தன் பொற்றேரை நிறுத்திச் சென்ற புரவலன் வாழ்ந்த நாடு இந்நாடாகும். வழி நடந்து செல்லும் ஏழை மக்கள் வெங்கதிரோன் கொடுமையால் வருந்தா வண்ணம் இனிய சாலைகளும் சோலைகளும் வகுத்தமைத்து அறம் வளர்த்த நாடு இந்நாடாகும். மும்மைசால் உலகுக்கெல்லா முதல்வனாய இறைவனுக்குச் செம்மை சான்ற கோயில்களும் தளிகளும் எடுத்த நாடு இந்நாடேயாகும். இங்ஙனம் அன்ன சாலைகள் அமைத்தலும், ஆலயங்கள் எடுத்தலும், சாலைகள் வகுத்தலும், சோலைகள் வளர்த்தலும் சிறந்த அறங்களே எனினும், அறிவை வளர்க்கும் கலாசாலைகள் நிறுவுதலே தலையாய் அறமென்று பாரதியார் அறிவுறுத்தினார்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்னும் உண்மையைப் பழந் தமிழ் மக்கள் பொன்னே போற் போற்றினர். கல்வி நலம் வாய்ந்தோரே மக்களாவரென்றும், அந்நலம் அமையப்பெறாத மானுடர் விலங்கனையரென்றும் பழந்தமிழ்ப் பனுவல் பகுத்துரைக்கின்றது. ‘கற்றல் கேட்டல் உடையார் பெரியார்’ என்றார் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர். எனவே, உடம்பினை வளர்க்கும் அன்னசாலையினும் உயிரினை வளர்க்கும் அறிவுச்சாலை சிறந்ததென்று அறைத் லும் வேண்டுமோ? ‘கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி” யாய இறைவன் ‘கல்லார் நெஞ்சில் நில்லான்’ என்னும் உண்மையை உணர்வோ மாயின் இறைவனை வணங்குதற்குரிய ஆலயங்களை அமைப்பதற்கு முன்னே அறிவினை வளர்க்கும் கல்லூரிகளை அமைத்தல் வேண்டும் என்பது இனிது விளங்குவதாகும். இதனாலேயே கலைநல மறியாது வருந்தும் வறிஞர்க்கு எழுத்தறிவிக்கும் அறம் எனைய அறங்களி னும் நூறாயிரம் மடங்கு மேலானதென்று பாரதியார் அறிவித்தார். இத்தகைய கல்விச்சாலைகளை நாடெங்கும் நாட்டுதலே கலைமகள் உள்ளத்தை மகிழ்விக்கும் உயரிய வழிபாடாகும். கல்லூரிகளிற் போந்து எண்ணும் எழுத்தும் பயிலும் மாணவர் கண்ணெதிரே கலைமகளின் வீணையும் கையும் விரிந்த முகமலரும் விழுமிய காட்சி அளிப்பனவாகும்.



