ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

4. கலிங்கப் போர்

முன்னொரு காலத்தில் சோழநாட்டை விசயதரன் என்னும் வளவன் ஆண்டுவந்தான். அவன் மாற்றரசரை வென்று புகழ் பெற்று அறநெறி திறம்பாது அரசுபுரிந்தான். இங்ஙனம் மன்னர் மன்னனாய் வீற்றிருந்த வளவர்கோமான் பெருமையை,

பரிசில் சுமந்தனர் கவிஞர் பகடு சுமந்தன திறைகள் அரசர் சுமந்தனர் கழல்கள் அவனி சுமந்தன புயழம்

என்று தமிழ்க் கவிஞர் பாராட்டுவாராயினர். போரொடுங்கிய பொன்னி நாட்டில் ஆடவர் கலையினொடும் இசையினொடும் பழகிக் காலங் கழித்தனர். பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளமும் சுரந்த வளநாட்டை ஆண்ட விசயதரனை வில்லவரும் பல்லவரும், கங்கரும் காடவரும், மச்சரும் மாளுவரும், மற்றைய குறுநில மன்னரும் கண்டு வணங்கித் திறையளித்தார்கள்; ஆரம் முதலிய அணிகலன்களையும்,ஆனை முதலிய அரும் பொருள்களையும் அடியுறையாக வைத்து வளவனை வாயாரப் புகழ்ந்தார்கள்.

திறையளித்தற்குரிய குறுநில மன்னருள் வடகலிங்கத் தரசன் ஒருவனே வாராதொழிந்தானென்று அமைச்சர் வாயிலாக அறிந்த வளவன் பெருஞ் சீற்றமுற்றான். மலரனைய மன்னன்முகம் மாறு படக்கண்ட சிற்றரசர் நிலைகுலைந்து நடுங்கினார். அந்நிலையில் குறிப்பிற் குறிப்புணரும் கருணாகரன் என்னும் தானைத் தலைவன், மன்னன் அடிபணிந்து படை திரட்டத் தலைப்பட்டான். மன்றத்தே தூங்கிய போர் முரசின் ஒலிகேட்ட போது பொன்னிநாட்டு வீரரது பெருந் தோள் பொங்கி எழுந்தது. காற்றெறி கடல்போல் கடும்படை விரைந்து சேர்ந்தது. போர்புரியத் தினவுற்ற தோளினராய நாற் படை வீரரோடும் கருணாகரன் கலிங்கத்தை நோக்கி நடந்தான். படைவீரர் கண்களிலமைந்த கனலொளியும், அவர் மேனியிலமைந்த கலனொளியும், படைக்கலங்களின் படரொளியும் கலந்து எம்மருங்கும் இருளை நீக்கி ஒளி விரித்தன. மலையென உயர்ந்த மதகரிப்படையும், காற்றினும் கடிய கலினமாப்படையும், காரெனத் திரண்ட கடுந்தேர்ப்படையும், கடலெனப் பரந்த காலாட்படையும் கண்டோர் வளவனது சேனையின் பரப்பையும் சிறப்பையும் பாராட்டு வாராயினர்.

பார்சி றுத்தலிற் படைபெ ருத்தவோ படைபெருத்தலிற் பார்சி றுத்ததோ

என்று பார்த்துநின்ற மக்கள் பலபல பேசி வியப்புற்றார். சேனை நடந்துசென்ற நெறியில் எழுந்த பெருந்துகள் மேலெழுந்து பரந்து செம்படலமெனப் போர்த்தது. இவ்வாறு சென்ற வளவன் சேனை பல நாடும் நதியும் கடந்து கலிங்கநாட்டை நண்ணியது. மடை திறந்த கடலென மண்டிய படையினைக் கண்ட கலிங்க மன்னன் மனங் கலங்காது பெரும்படையோடு போர்புரிய எழுந்தான். கலிங்கக் களத்தில் இருபெருஞ் சேனையும் நெடும்பொழுது வெம்போர் விளைத்தன.

அமர்க்களத்தில் படைக்கலங்களை ‘எடும் எடும் எடும்’ எனும் ஓசையும், அவற்றை ‘விடும் விடும் விடும்’ எனும் ஓசையும் எங்கும் நிறைந்து கடலொலியை வென்றன. மலையும் மலையும் மலைந்தாற் போன்று மதயானைகள் மலைந்தன. காரும் காரும் பொருதாற்போன்று தேரும் தேரும் பொருதன. புலியும் புலியும் எதிர்த்தாற்போன்று வீரரை வீரர் எதிர்த்தனர். அரியும் அரியும் அடர்த்தாற்போன்று தலைவரும் தலைவரும் அடர்த்தனர். படைவீரர் கண்களிலமைந்த கனலொளி மின்னொளியை வென்றது. வில்லாளரது வெஞ்சிலையினின் றெழுந்த கணைகள் மஞ்சினின் றெழுந்த மழைத்தாரை போன்றன. அம்புமாரியால் எழுந்த செந்நீர் வெள்ளம் ஆறாகப் பெருகி ஓடிற்று. குருதியாறுகளில் அரசரது குடைகள் நுரைபோல் மிதந்தன. வெட் டுண்டு விழுந்த வேழங்களின் உடல்கள் குருதியாற்றினிருபாலும் ஒதுங்கிக் கரை செய்தன.

“விளைகனல் விழிகளின் முளைக்கவே மீனலொளி கனலிடை பிறக்கவே வளைசிலை உருமென இடிக்கவே வடிகணை நெடுமழை சிறக்கவே”

“குருதியி னதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுட லடுக்கியே
கரையென இருபுடை கிடக்கவே”

என்று பரணிக் கவிஞர் வெங்களத்தின் தன்மையை விரித்துரைத் தார்.

கலிங்கநாட்டு வீரர் பலர் கடுங்காற்றில் அகப்பட்ட மரங்கள் போல் அமர்க்களத்தில் அறையுண்டு வீழ்ந்தனர். அவருடம்பி னின்று பொங்கிப் பாய்ந்த குருதிவெள்ளம் ஆறாக ஓடிச் செழுநிலத் தச் சேறாக்கியது. கலிங்கக் கரிகளும் பரிகளும் விலங்குகளுக்கு இரையாயமைந்தன. பார்மீது கிடந்த படைவீரர் உடல்கள் பருந் துக்கு விருந்தாயின.

விருந்தினரு வறியவரும் நெருங்கி யண்ம
மேன்மேலு ழகமலரு மேலோர் போலப்
பருந்தினமும் கழகினமும் தாமேயுண்ணப்
பதுமழக மலர்ந்தாரைப் பார்மின் பார்மீன்

என்னும் பரணிப்பாட்டு அவர் கோலத்தை எழுதிக் காட்டுவதாகும். குருதிதோய்ந்த செம்முகங்களோடு கலிங்கவீரர் பருந்தையும் கழு கையும் விருந்துக் கழைத்துத் தம்முடலையே உண்ணக் கொடுக்கின் றாரென்று கவிஞர் அன்னார் வீரத்தியாகத்தை வியந்துரைப்பாராயினார்.

போர்க்களம் போந்து பிணக்குவியல்களினிடையே நடந்து தம்முயிரனைய கணவரது உடலம் கண்ட மங்கையர் அலறும் காட்சி யையும், காணாத மாதர் அலமரும் கோலத்தையும் எழுதிக்காட்டும் பரணிக் கவிகள் அவலச்சுவை வாய்ந்தனவாம்.

வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி
மணியதரத் தேதேனும் வடுவுண் டாயோ நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து
நின்றவி சோர்வாளைக் காண்மீன் காண்மீன்”

போர்க்களத்தில் வாய்மடித்து வெகுண்டு எழுந்த நிலையில் மாற்றார் படைக்கலத்தால் அடியுண்டு மடிந்து கிடந்த தன் மணாளனைக் கண்ட ஒரு மங்கை, அவன் திருமுகத்தைக் கண்ணீராற் கழுவி, “என் ஐயனே! நீ வாய்மடித்துக் கிடக்கும் வகையென்னே! உன் வாய் இதழில் ஏதேனும் வடுவுண்டாயோ” என்று வினவுகின்றாள். மற்றொரு மங்கை நெடும்பொழுது போர்க்களம் முழுதும் அலைந்து தேடியும் தன் கணவன் உடலைக் காணாது மனம் வெதும்பி, அவன் மனையினின்றும் போந்தபோது அணிந்திருந்த போர்க்கோலத்தை நினைந்து புலம்பலுற்றாள்.

பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
போர்ழகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே எங்கேயென்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்காண்மின்

போர்புரியச் சென்ற தன் காதலனது வலிமைசான்ற கையை நினைந் தாள்; அக்கையிலமைந்த கொடுவாளை நினைந்தாள்; வீரம்செறிந்த அவன் மார்பை நினைந்தாள்; விலங்கல் ஒத்த பெருந் தோளை நினைந் தாள்; அவற்றை மீண்டும் காணப்பெறாமையால், அவை எங்கே எங்கேயென்று குறையிரந்து கொற்றவையை வினவுகின்றாள்.

கலிங்கப்போரில் வாகைமாலை சூடிய கருணாகரன் வெற்றி வீரருடன் மீண்டுவந்து கொற்றவனாய வளவனைக் கண்டு அடி தொழுதான்.

கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்
கடகரியும் வயமாவும் தனமும் கொண்டு சுடர்கதிர்வாள் அபயனடி அருளினோடும்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே

என்று தானைத்தலைவனது தாளாண்மையைப் பரணிக்கவிஞர் புகழ்ந்து போற்றினார். வீரம் விளைத்து விழுப்புண்பட்ட வீரரை வளவன் அகனமர்ந்து நோக்கி அன்புரை வழங்கி விடைகொடுத்து அனுப்பினான்.

மன்னவன் பணிதலைக்கொண்ட இன்னுயிர்க் காதலர் வெற்றி மாலை புனைந்து வருவார் என்று மனந்தழைத்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த மங்கையர் முகமலர்ந்து தம் கணவரை வரவேற்று மகிழ்ந்து அமர்க்களத்தில் நிகழ்ந்த அரும்பெருஞ் செயல்களை அறிய ஆவலுற்றார்கள். அவர் மனத்திலமைந்த ஆர்வத்தை அறிந்த வீரர் கண்டவர்க்கன்றிக் கேட்டார்க்கு உரைப்பருந்தன்மையில் நிகழ்ந்த கலிங்கப் பெரும்போரை அவர் உள்ளங்கொள்ள எடுத்துரைத்தார்.

இவ்வாறு கலிங்கநாட்டுக் கரியையும், பரியையும், காலாட்படையையும் கொன்று, காளிக்கும் கூளிக்கும் வயிறார விருந்தளித்த வளவர்கோமானை அவை மனமகிழ்ந்து கூத்தாடி வாழ்த்தின.

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
பொருனைக் கணவனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
கங்கை மணாளனை வாழ்த்தினவே

கலிங்கநாட்டை வென்று பெரும்புகழ்பெற்ற காவிரி நாட்டரசன் பாட்டுடைத்தலைவனாய் அமைந்து தமிழ்நாட்டில் நீடுவாழ்கின்றான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *