
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
13. முருகனும் முழுமதியும்
அந்தி மாலையில் விண்ணிலே எழுந்த முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது. பொய்கையிலமர்ந்த பூங்குமுதம் முகை நெகிழ்ந்து தேன் துளிர்த்து மலர்ந்தது. மலையத் தெழுந்த தென்றல் மெல் லெனத் தவழ்ந்து நறுமணம் கமழ்ந்தது.
சேயைக் கண்ட தாய் போல் நீலத்திரை கடல் பொங்கியெழுந்து ஆர்த்தது. இத்தகைய அழகு வாய்ந்த அந்திப்பொழுதில் தென்மலைச் சாரலில் மகிழ்ந்து விளையாடிய முருகனென்னும் குமரன், குறுகுறு நடந்து சிறுகை நீட்டி விண்ணிலே ஊர்ந்த வெண்மதியின் அழகினைக் கண்டு முக மலர்ந்து அளவிலா இன்பமுற்றான். குளிர்மதியும் குறுநடை பயிலும் முருகனைக் கூர்ந்து நோக்கி நகைமுகம் காட்டுவதாயிற்று. தன்னை நோக்கி முகமலர்ந்த தண்மதியை முருகன் அருகேபோந்து விளையாட அழைத்தான். மழலை மொழிகளால் நெடும்பொழுது வருந்தி யழைத்தும் வான்மதி வாராதிருக்கக் கண்டு குமரன் கண் பிசைந்து அழுது கரைந்தான்.
இளநலம்வாய்ந்த குமரன் விம்மித் தேம்பி அழுவதைக்கண்டு ஆற்றாத முனிவர் ஒருவர் அவ்விடம் விரைந்து போந்து வெள்ளை மதியில் ஊன்றிய பிள்ளையின் கருத்தை மாற்றப் பலவாறு முயன்றார். ஆயினும் முருகன் கண்ணும் கருத்தும் பிற பொருள்களிற் செல்லாப் பெற்றி கண்டு விண்மதிக்கு நன்மதி புகட்டலுற்றார். ‘வெண்ணிலா வீசும் விண்மதியே! முருகனைப்போலவே நீயும் அமுதமயமாய் விளங்குகின்றாய்; கண்டோர் கண்ணையும், மனத்தையும் குளிர்விக்கின்றாய். குமுத வாய் திறந்து குளிரொளி விரிக்கின்றாய்; உயிராய் பயிர் தழைக்க உயரிய அருள் சுரக்கின்றாய். இவ்வாறு பல கூறுகளில் முருகனை நிகர்க்கும் நீ அவனோடு விரும்பி விளையாட வாராய்’ என்று முனிவர் நயந்து அழைத்தார்.
இங்ஙனம் ஒப்புமை காட்டி உவந்தழைத்தும் இறங்காத மதியின் நிலைகண்டு வருந்திய முனிவர், அதன் சிறுமை காட்டி இடித்துரைக்கத் தொடங்கினார். ‘மாலை மதியே! சில கூறுகளில் நீ முருகனை ஒப்பாயெனினும், பல கூறுகளில் அவனுக்கு நீ நிகராகாய். முக்கட் பெருமானாகிய முதல்வனுக்கு நீ ஒரு கண்ணாய் அமைந்தாய்! முருகனோ கண்மணியாயமைந்தான். கலைகள் குறைந்தும், நிறைந்தும் நீ வேறுபடுகின்றாய். முருகனோ எஞ்ஞான்றும் கலைநிறைந்த கனியாய் இலங்குகின்றான். நீ புற இருளையே போக்க வல்லாய். முருகன் அகவிருளை அகற்றவல்லான். உலகில் நீ ஒருபால் ஒளிருங்கால் மற்றொருபால் ஒழிகின்றாய். முருகனோ அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விளங்குகின்றான். நீரிற் பூக்கும் குமுத மலர்களை நீ மலர் விக்கின்றாய். முருகனோ அன்பரது மன மலர்களைத் திறக்கின் றான். எனவே, உன்னிலும் அவன் உயர்ந்தவனல்லனோ? அன்னான் வருக என்றழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ?’ என்று முனி வர் இடித்துரைத்தார்.
இவ்வாறு வேற்றுமை காட்டிக் கட்டுரை கூறியும் முருகன் பெருமையை உணராது இறுமாந்திருந்த தண்மதியைப் பிறிதோர் உபாயத்தால் முனிவர் தெருட்டக் கருதினார். ‘மறுவுற்ற குளிர் மதியே! உன்னை வருந்தி அழைக்கும் குமரன் திறத்தினை நீ அறிந்தாயல்லையே! கருநோயை வேரறுக்கும் முருகன் அருள்பெற்றால் உன் னைப்பற்றியுள்ள கறைநோய் கடுகி ஓடுமே! இருள்சேர் இருவினையுந் துடைத்து அந்தமில இன்பத்து அழியா வீடுந் தரவல்ல முருகனுக்கு உன்பாலமைந்த மறுவினை யகற்றுதல் அரிதாமோ! கரவாது தொழும் அன்பர் கண்ணெதிரே தோன்றித் தண்ணளி சுரந்து வரங் கொடுக்கும் கண்கண்ட பெருந்தெய்வம் முருகனல்லால் உலகில் வேறுண்டோ?’ என்று செம்பொருளாய குமரன் பெருமையைச் செவ்வனே உணர்த்தினார். எனினும், முனிவர் பரிந்துரைத்த மொழிகளை வெண்மதி ஏற்றானல்லன்.
சாம பேத தானங்களால் தண்மதியை வெல்ல இயலாத முனிவர் தண்டத்தைக் கையாளத் தலைப்பட்டார். ‘குறையாகிப் பிறையாகி மிளிரும் குளிர்மதியே! இக்குமரன் ஆற்றலை நீ அறியாய் போலும்! இப்பிள்ளைப் பெருமான் குன்றமெறிந்தான்; குரை கடலிற் சூர் தடிந்தான்; குலிசனைச் சிறையிலிட்டான்; இவ்வேலனைப் பாலன் என்றெண்ணி இகழ்ந்த சூரன் பட்டபாட்டை நீ அறியாயோ? இன்னும் தக்கன் வேள்வி கட்டழிந்த நாளில் நீ மானங் குலைந்ததை மறந்தனையோ? வலிமை சான்ற வேலன் பொருமி அழுது அரற்றுவான். அத்துயர் கண்டு தரியாது இளையனாகிய வீரவாகு பொங்கி எழுவான். அவன் சீற்றத்தை மாற்ற எவராலும் இயலாது. ஆத லால் முருகன் அன்புகூர்ந்து அழைக்குங்கால் அவனுடன் வந்து விளையாடுதலே உனக்கழகாகும் என்று முனிவர் அறிவுறுத்தினார்.
முனிவர் மொழிகளைச் சிறிதும் நெஞ்சிற் கொள்ளாது செருக்குற்று விண்ணிலே தவழ்ந்துசென்ற விண்மதியையும், அம்மதியை மறந்து மற்றொன்றைக் கருத மனமற்றிருந்த முருகனையும் கண்ட முனிவர் செய்வதொன்றறியாது சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
அந்நிலையில் முருகனை வீட்டிற் காணாத அவன் தந்தை, ‘முருகா, முருகா’ என அழைத்துக் குன்றின் சாரலை வந்தடைந்தார். ஆங்கோர் கரும் பாறையின் மீது முனிவரும் குமரனும் அமர்ந்திருக்கக் கண்டார். அருமந்த முருகனை விரைந்தெடுத்து ஆர்வமுற அணைத்துக் கண்ணீர் துடைத்து அழகொழுகும் அவன் திருமுகத்தை அமர்ந்து நோக்கி, ‘என் கண்ணே! கண்மணியே! நீ ஏன் அழுதாய்? தேனும் தினையும் வேண்டுமா? பாலும் பழமும் வேண்டுமா? என்று விருப்புடன் வினவி முத்தமிட்டார். முத்தமிட்டு நிமிர்ந்து அத்தனது சடையிலமைந்த பிறை மதியை முருகன் கண்டுகொண்டான். தன் விருப்பத்திற்கிணங்கி விண்ணினின்றிழிந்த தண்மதியைக் கண்டு உள்ளம் தழைத்தான். தந்தையின் தோளிலமர்ந்து கற்றைச் சடை யின் மீதிலங்கிய குழவித் திங்களைத் தன்னிளங்கரத்தால் வளைத் திழுத்தான். தண்மதியைச் சார்ந்த முருகனது இளநலம் முன்னிலும் சிறந்து இலங்கிற்று. விண்மதியின் தண்மையையும் வெண்மை யையும் கண்டு முருகன் மனங் களித்தான். மதியின் வட்ட வடிவத்தைத் தன் முகத்தோடு ஒட்டிப் பார்த்தான். அதன் மேனியிலமைந்த மறுவைத் தன் மலர்க்கரத்தால் துடைத்தான். மதியுடன் விளையாடிய மைந்தனைக் கண்டு தந்தையார் மனங் குளிர்ந்தார். இறையனார் செயல்கண்டு இன்பக் கண்ணீர் சொரிந்த முனிவர், ‘யாவர்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளவோ என்று பாடிப் பரவினார்.



