
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
16. நல்லார் இணக்கம்
தமிழ்நாடு தழைத்தோங்கியிருந்த காலத்தில், கோப்பெருஞ் சோழன் என்னும் மன்னவன் சோழநாட்டை ஆண்டுவந்தான். காவிரிக்கரையிலமைந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டு செங்கோல் ஒச்சிய அவ்வளவன் புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான்.
அக்காலத்தில் பாண்டிநாட்டிலமைந்த பிசிர் என்னும் சிற்றூரில் புலமைசான்ற ஆந்தையார் ஒருவர் இருந்தார். அவரைப் பிசிராந்தை யென்று அன்பர்கள் அழைத்தார்கள். கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும், வேறு வேறு நாட்டிலும், வேறு வேறு குலத்திலும் பிறந்தவராயினும் ஒத்த உணர்ச்சியுற்றமையால் உயரிய நண்பராயினர். சோழமன்னன், உறையூரில் அரசுவீற்றிருந்தான். ஆந்தை, பாண்டிநாட்டுப் பழம்பதியாகிய பிசிர் ஊரில் வாழ்ந்தார். அரசர் கோமான் வளவர் குலத்திற் பிறந்தவன். ஆந்தை ஆதன் குடியிற் பிறந்தவர். சோழன் பெருஞ்செல்வம் படைத்தவன். ஆந்தை அறிஞர்க்கு அணியாய் வறுமை பூண்டவர். இங்ஙனம் குலத்தாலும், நலத்தாலும், பிறவற்றாலும் வேறுபட்ட அரசனும் ஆந்தையும் உண்மைக் கேண்மைக்கோர் உயரிய சான்றாக விளங்கினர். இருவர் நண்பராதற்கு ஒருவரோடொருவர் நெருங்கிப் பலகாற் பழகுதல் வேண்டற் பாலதன்றென்றும், ஒத்த உணர்ச்சியே நட்பென்னும் உரிமையைப் பயக்குமென்றும் தமிழ்மறை அருளிய வாய்மைக்கு அரசனும், ஆந்தையும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தார்கள்.
கோப்பெருஞ்சோழன் தன்பால் வைத்த தலையாய அன்பின் திறமறிந்த ஆந்தையார், ஒருநாள் மாலைப் பொழுதில் ஆகாய வழியே விரைந்து சென்ற ஓர் அன்னத்தை நோக்கிப் பகர்ந்த அழகிய மொழிகள் நேயம் நிறைந்த அவன் நெஞ்சின் நீர்மையை நன்குணர்த்துவனவாம். வளமார்ந்த குமரித்துறையில் அயிரைமீன் அருந்தி மாலைப் பொழுதில் தன் மனை நோக்கிச் சென்ற ஓர் ஆண் அன்னத்தைக் கண்ட ஆந்தையார், ‘அன்னமே! அன்னமே!! வளமார்ந்த குமரித் துறையில் நீ அயிரைமீன் அருந்தி வடமலையிலுள்ள உன் மனையை நோக்கி ஏகுவாயாயின் ஒன்று சொல்வேன் கேள்!நீ செல்லும் வழியில் சோழநாடு அமைந்திருக்கின்றது. அந்நாட்டின் தலைநகராய கோழி என்னும் உறையூரில் ஓங்கி உயர்ந்த அழகிய மாளிகையில் சோழ மன்னன் வாழ்கின்றான். அவ்வரண்மனையின் வாயில்காப்போனைக் கண்டஞ்சாது நேராக மாளிகையின் உள்ளே நீ சென்றால் கோப்பெருஞ் சோழனென்னும் எனது கோமானைக் காண்பாய் அவன் முன்னே நின்று, வளவனே ! நான் பிசிர் என்னும் ஊரிலுள்ள ஆந்தையின் அடியுறை என்று சொல்வாயாயின், மனமகிழ்ந்து அன்பார்ந்த நின் பேடை அணிதற்குரிய நல்லணியை அம்மன்னன் உனக்கு நயந்தளிப்பான்’ என்றுரைத்த அருமைசான்ற மொழிகளில் அரசனும், அப்புலவரும் உயிர்நண்பராய் அமைந்திருந்த தன்மை நன்கு விளங்கும்.
நெடுங்காலம் உறந்தையில் வாழ்ந்து மன்னுயிரைக் காத்து வந்த மன்னவன், முதுமை வந்துற்றபொழுது தன்னுயிர்க்கு உறுதுனையாய் தவம்புரியக் கருதி நாடும் செல்வமும் துறந்து கானகம் சேர்ந்தான். இவ்வாறு சோழன் அருந்தவம் புரியப் போந்தான் என்று அறிந்த ஆந்தையார் தாமும் உற்றார் உறவினரை நீத்துச் சோழன் இருந்த சூழலை நோக்கி நடந்தார். ஆருயிர் நண்பனாகிய ஆந்தை தம்மைத் தேடிவருதல் ஒருதலையென்றுணர்ந்த அரசன் தன் அருகிருந்த சான்றோரை நோக்கி ‘அன்பரே! என் உயிர்க்குயிராய் உள்ளவன், தென்னவன் நாட்டில் அமைந்த பிசிர் என்னும் சிற்றூரிலுள்ளான். செல்வச் செழுமையுற்று நான் வாழுங்காலத் தில் அவன் வாராதிருப்பினும் இவ்வல்லற்காலத்து ஈங்கு வாராது ஆங்கு நில்லான்’ என்று அறிவுறுத்தி ஆவி சோர்ந்தான்.
காடும் நாடும் காலினாற் கடந்து ஆந்தையார் சோழன் தங்கி யிருந்த சூழலை வந்தடைந்தபொழுது, அவன் ஆவி துறந்தானென் றறிந்தார். அந்நிலையில், அன்பனைப் பிரிந்திருக்க ஆற்றாத ஆந்தையார் உண்ணா நோன்பினை மேற்கொண்டு உயிர் துறந்தார்.
இவ்வாறு ஒத்த உணர்ச்சியுடையார் உயரிய நண்பராய் வாழும் உண்மைக்கு ஒரு சான்று காட்டினார் கவியரசராய கம்பர். வானர நாட்டு வேந்தனாகிய சுக்கிரீவனும், இலங்கை வேந்தன் தம்பியான விபிஷணனும் பலவகை வேற்றுமையுற்றவர். முன்னவன் வானர நாட்டிற் பிறந்தவன். பின்னவன் இலங்கை நாட்டிற் பிறந்தவன். முன்னவன் அரிக்குலத்தினன். பின்னவன் அரக்கர் குலத்தினன். முன்னவன் வெண்ணிறம் வாய்ந்தவன். பின்னவன் கருநிறம் வாய்ந்தவன். எனினும் இருவரும் ஒத்த உணர்வுடையராய் இருந்தமை யால் உள்ளம் ஒன்றி உயரிய நண்பராயினர்.
“தொல்லருங் காலமெல்லாம் பழகினும் தூயரல்லார்
புல்லலர் உள்ளத்தூயார் பொருந்துவர் எதிர்ந்தஞான்றே ஒல்லைவந் துணர்வும்ஒன்ற இருவரும் ஒருநாளுற்ற
எல்லியும் பகலும்போலத் தழுவினர் எழவிற்றேளார்”
என்றார் கவியரசர்.
முன்பு ஒருவரை ஒருவர் கண்டு அறியாத அரிக்குல வேந்தனும், அரக்கர்குல அறிஞனும் அறம் நிரம்பிய மனத்தினர் ஆதலாலும், தம் பிறப்பினால் வந்த புன்மை தீருமாறு அறநெறியாக நின்ற அஞ்சன வண்ணனோடுறவு பூண்டமையாலும் இருவர் உணர்வும் ஒன்றுபட்ட தென்றும், அந்நிலையில் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டமையால், பலநாட் பழகிய பான்மையாளர் போல் இருவரும் ஒருவரையொருவர் தழுவினரென்றும் இனிதெடுத்துரைக்கும் கம்பர் கவியில் நட்பின் பான்மை நன்கிலங்குவதாகும்.
இன்பமும் துன்பமும் கலந்த இவ்வுலக வாழ்க்கையில் இன்பத்தை நிறைப்பதற்கும் துன்பத்தைக் குறைப்பதற்கும் இனிய துணைவர் வேண்டும் என்று அறிந்தோர் கூறுவர். இன்ப நிகழ்ச்சிகளைக் குறித்து நண்பருடன் நாம் கலந்து பேசுங்கால் நம் மனத்தில் மகிழ்ச்சி பெருகுகின்றது. துன்ப நிகழ்ச்சிகளை நண்பரிடம் சொல்லி ஆற்றுதலால் நம் மனத்துயர் மெல்ல மெல்லத் தேய்ந்து ஒழிகின்றது. இதனாலேயே இறைவனால் மாந்தர்க்கு அருளப்பெற்ற சிறந்த நலங்களுள் நட்பும் ஒன்றென்று உயர்ந்தோர் கருதுகின்றனர்.
இத்தகைய நண்பரைத் தேர்ந்துகொள்ளுதல் எளிதாகத் தோன்றினும் உண்மையில் அது மிக அரிது. பொருளாளரது கேண்மையால் ஒன்றும் பெறுதல் இலரெனினும், அன்னார் நண்பரென அயலார் தம்மை மதிப்பரென்றெண்ணி அவரைச் சூழ்ந்திருப்பர் பலர். இப் புன்மக்கள் போலிப் பெருமையாற் பொலிவெய்தக் கருதித் தம் உடலையும் உயிரையும் பொருளுடையார்க்கு அடியுறையாக்குவர். நட்பினாலாய நற்பயனை ஒருவன் பெறல்வேண்டுமாயின் உணர்ச்சி யொத்தவரோடு நேசம் கொள்ளுதல் அடுக்குமேயன்றிச் செல்வச் செருக்குற்றாரை நண்பரெனக் கருதுதல் சீரழிவிற்கே ஏதுவாகும். உணர்ச்சியால் ஒருமைப்பட்டோர் உலகில் ஒரு சிலரேயாவர் என்னும் உண்மை “ஊரில் ஒருவனே தோழன்” என்னும் முதுமொழியால் உணரப்படும்.
இவ்வுலகில் வாழும் மக்களின் மனப்பான்மையை நன்குணர்ந்த கவிஞர், நண்பராகக் கொள்ளத்தக்கார் இன்னார் என வரையறுத்து வழி காட்டியுள்ளனர். வேழம்போல் உயர்ந்தாரது கேண்மையை விரும்பாது, நாயனைய நல்லாரது நேசத்தைப் பெறல் வேண்டும் என்று நாலடியார் உணர்த்துகின்றது.
“யானை யனையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்– யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்”
என்று நாலடியின் கருத்து அறியத்தக்கதாகும்
மாநிலத்தில் வாழும் விலங்குகளுள் வேழமே உருவத்தில் உயர்ந்ததாகும். ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்னும் பழமொழியே அதன் அருமையை இனிதுணர்த்துகின்றது. இன்னோரன்ன நலங்களெல்லாம் அமைந் திருப்பினும் வேழத்தோடு பழகலாகாதென்று அறிந்தோர் கூறுவர். அவ்விலங்கினிடம் உருவும் திருவும் அமைந்திருப்பினும் குணநலம் காண்டல் அரிதாகும். சீற்றமும் மயக்கமும் அதன்பால் இயல்பாக அமைந்த சிறுமைகளாகும். காட்டில் வாழும் யானையை நாட்டிற் கொணர்ந்து கவளம் ஊட்டி ஏற்ற வகையிற் போற்றினாலும், அவ் விலங்கின் தன்மை சிறிதும் மாறுபடுமாறில்லை. பசியறிந்து யானைக்கு உணவருத்திப் பேணும் பாகன் என்றேனும் அதன் வெம்மைக்கே இரையாவான். பன்னாட் பழகிய பாகன் என்றும் பாராது, நல்லுணவளித்த நண்பன் என்றும் கருதாது, சீற்றமுற்றபோது பாகனைச் சிதைக்கும் சிறுமை வேழத்தின் இயல்பாதலால் அவ்விலங்கின் தன்மை வாய்ந்த மாந்தரொடு பழகுதல் ஆகாதென்று ஆன்றோர் அருளிப்போந்தார். இவ்வுலகில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்து இறுமாந்து வாழும் செல்வருடன் அல்லும் பசுலும் பழகினாலும், அவர் குறிப்பறிந்து குற்றேவல் செய்தாலும், இடையறாது இச்சகம் பேசி இன்புறுத்தினாலும் அன்னார் வெகுளுங்கால் பன்னாட் பழகிய பான்மையாரைச் சிதைக்கச் சிறிதும் தயங்கார். பிறன் செய்த சிறு நன்மையைப் பெருநன்மையாகக் கருதி அவன் புரியும் தீமை அனைத் தும் பொறுத்தல் பண்புடையோர் செயலாகும். அவ்வாறன்றிப் பிறன் ஆற்றிய நன்மையனைத்தும் மறந்து ஒரு சிறு தவறு கண்ட விடத்து ஒறுத்தல் இழிந்தோர் இயல்பாகும். செல்வச் செருக்குற்றோர் பிறர் தமக்குச் செய்யும் நன்மையை மறந்து தீமையையே நினைந்து சீற்றமுறும் தன்மையராதலின் அன்னார் இணக்கம் ஆகா தென்று ஆன்றோர் அறிவுறுத்தினார்.
வேழத்தை உயர்ந்த பொருளெனக் கருதி மதிக்கும் உலகம், நாயை மிக இழிந்த பொருளெனக் கருதி இகழ்கின்றது. தம் நிலையின் இழிந்த மாந்தரை நாய்கள் என்று பழிக்கும் பழக்கம் இந்நாட்டில் உண்டு. ஆயினும், அவ்விலங்கினிடம் ஓர் உயர்ந்த குணம் அமைந்திருக்கக் காணலாம். செய்ந்நன்றி அறிதல் என்னும் சீரிய அறத்தை உயிரினும் உயர்வாகப் போற்றும் பெருமை விலங்கினங்களுள் நாய்க்கே சிறப்பாக உரியதாகும். தெருக்களில் குறுக்கு மறுக்காகத் திரியும் நாய் பெரும்பாலும் மக்கள் தம் வீட்டினின்று கழித்தெறிந்த மிச்சிலையே உண்டு மகிழ்கின்றது. இங்ஙனம் கழித்த உண்டுகளிக்கும் நாய், மிச்சிலிட்டாரைக் கண்டபொழுது உச்சி குளிர்ந்து, வால் குழைத்துத் தலை தாழ்த்து இன்முகங் காட்டி ஆர்ப்பரிக்கக் காணலாம். பகைவராலேனும் கள்வரா லேனும் பிறவாற்றலேனும் தனக்குணவிட்ட தலைவனுக்குத் தீங்கு நேருங்கால் அதனைத் தடுக்கும் முயற்சியில் தன்னுயிரையும் கொடுக்கும் உயரிய சீலம் நாயினிடம் உண்டு. ஆழநீரில் தவறி விழுந்த தம் தலைவரைக் கவ்வியெடுத்துக் கரைசேர்த்துக் காத்த நாய்களின் கதை இந்நானிலத்திற் பலவாகும். தனக்கினிய தலைவன் நோய்வாய்ப்பட்டு வருந்துங்கால் நன்றிமறவாத நாய் வெருட்டினும் போகாது அவனருகே கிடந்து ஊணுறக்கங் கொள்ளாது, கடைக் கண்ணால் அவனை நோக்கி நோக்கிக் கண்ணீருகுத்தலை நாம் கண்டிருக் கின்றோம். இவ்வாறு தினைத்துணை நன்மைசெய்யினும் பனைத் துணையாகக் கொள்ளும் பான்மைவாய்ந்த நாய், தலைவன் காரண மின்றித் தன்னைத் துன்புறுத்திய போதிலும் அவனருள் நினைந்து அகங்குழையும் தன்மை வாய்ந்ததென்று அறிஞர் கருதுகின்றார்கள். சீற்றமுற்ற தலைவன் தன் கரத்திலமைந்த கூரிய வேற்படையை யெறிந்து வெந்துயர் விளைப்பினும் அவ்விலங்கு அவனை நோக்கி இன்முகங் காட்டி வால் குழைத்து நிற்கும். உடல் புண்ணுற்று எரியும்பொழுதும் உள்ளம் நன்றியறிந்து மகிழ்கலை நாயினிடம் நன்கு காணலாம். “கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்றுள்ளக் கெடும்” என்னும் பொய்யாமொழியின் வழி நின்று, புரவலன் செய்த பெருந்தீமையை அறவே மறந்து, அவன் ஆற்றிய நன்மையை நினைந்து இன்புறும் சால்பு ஏற்றமுடைய தன்றோ? ஆகவே ஏற்றமும் தோற்றமும் இன்றி எளியராய் இவ்வுலகில் வாழும் மக்களுள் நாயின் நற்குணம் வாய்ந்தோர் உண்டென்றும், அன்னார் “ஒரு நன்றி செய்தாரை உள்ளத்தில் வைத்து’ அவரிழைக் கும் தீமையெல்லாம் பொறுத்து நலமே புரிபவரென்றும், அத்தகைய எளியார் கேண்மையே கொள்ளத்தக்கதென்றும் ஆன்றோர் அருளிய உண்மையை அறிந்து ஒழுகுவோர் நலமார்ந்த நட்பின் சுவையுணர்ந்து இன்புற்று வாழ்வர்.



