ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

21. பண்டாரப்பாட்டு

ஆன்மவீரம் படைவீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது நால்வகைப் படையையும் வெல்லும் ஆற்றல் அறப்படையை ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும். சைவ சமயத்தைத் தமிழ் நாட்டில் நிலை நிறுத்திய மூவருள் ஒருவராய திருநாவுக் கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி அவர் வாழ்க்கையையும் அவர் தேவாரத்தையும் பாரதியார் ஊன்றிப் படித்துள்ளார். அப்பரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று. மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்ல லாகுமென்று ஆயிரத்திருநூறு ஆண்டுகட்டு முன்னரே தமிழ் நாட்டார்க்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். இவ்வுலகில் புயவலியும் படைவலியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுவர். மேலை நாட்டில் படைச் செருக்குற்று வாழ்ந்த அலெக்சாண்டர், நெப்போலியன் முதலியோரை வீரராகக் கொண்டு போற்றுகின்றார்கள். புயவலியினும் படைவலியினும் பெரிய ஆன்மத்திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்குகின்றார். சமண சமயத்தைக் கைவிட்டு அப்பெருமான் சைவ சமயம் சார்ந்தபொழுது சமண மன்னன் சீற்ற முற்றான்; மதம் மாறித் தவறிழைத்த நாவுக்கரசரைக் கொணருமாறு வெம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ்வீரர் அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆரவாரித்தனர். எனினும் அவர்களது உருண்டு திரண்ட மேனியைக்கண்டு அப்பர் சிறிதும் அஞ்சினாரல்லர்; அவர்கள் கையிலமைந்த படைக்கலம் கண்டுறையளவும் மயங்கினாரல்லர். “நாமார்க்குங் குடியல்லோம், நமனை யஞ்சோம்” என்று தொடங்கும் வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தனியராய் அஞ்சா நெஞ்சின ராய் நின்று அவன் மறப்படையைத் தம் ஆன்மவலியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.

யார்க்குங் குடியல்லேன் யான் என்ப
தோர்ந்தனன் மாயையேஉன்தன்
போர்க்கஞ்சுவேனே பொடியாக்குவேன்
உன்னை மாபையே ”

என்று தன்னை அச்சுறுத்திய மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப்பாட்டில் திருநாவுக்கரசரது வீரக்கட்டுரை விளங்கக்காணலாம்.

பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாய் நிற்கும் தகுதி வாய்ந்தது “அச்சமில்லை” என்று தொடங்கும் ‘பண்டாரப் பாட்’ டே யாகும். அப்பாட்டில்,

பச்சை ஊன் இயைந்த வேற்படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்றெழுந்த அடிகள் நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்தமுடைய தாகும். இன்னும் திருநாவுக்கரசரைத் துன் புறுத்தக் கருதிய அரசன் அவரை நீற்றறையிலிட்டான். அந்நீற்றறை யின் வெம்மையை நாவுக்கரசர் தம் மனச்செம்மையால் வென்றார்.

மாசில் வீணையும் மாலை மதியழம்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
ழசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

என்னும் பாட்டு அந்நிலையில் அப்பரால் பாடப்பட்டதாகும். ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நாவுக்கரசர் பெருமையை அரசன் அறிந்தானல்லன்; பலநாள் உணவின்றியிருந்த அப்பரது பசியைத் தீர்ப்பான் போல் நஞ்சுகலந்த பாற் சோற்றை அவருக்கு ஊட்டுமாறு பணித்தான். அரசனது ஏவலாளர் நஞ்சு தோய்ந்த அன்னத்தை அப்பர் முன்னே படைத்து நயவஞ்சகம் பேசி நின்றார். ஆருயிர் மருந்து எனப்படும் அன்னத்தில் நஞ்சு கலந்த பணியாளரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினாரல்லர்; நண்பரெனவே கருதினார்; அவரிட்ட சோற்றை உண்டு மகிழ்ந்தார்.

இங்ஙனம் பகைவரிட்ட நஞ்சையும், நண்பரிட்ட நல்லமுதெனக் கருதியுண்ட நாவுக்கரசர்,

பெயக்கண்டும் நஞ்சுண்ட மைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்னும் திருக்குறளுக்குச் சிறந்த சான்றாவான்றோ? இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ் செயலை வள்ளுவனார் அருளிய சொல்லொடுகலந்து

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்று பாரதியார் நல்விருந்தளித்தார்.

நஞ்சுண்டும் சாகாதிருந்த நாவுக்கரசரை நசுக்கிச் சிதைக்குமாறு கடக்களிற்றைக் காவலன் அவர்மேல் விடச்சொன்னான். கட்டவிழ்த்து விட்ட கொலைக்களிறு கூடத்தைக் குத்தி ஒரு குன்றமெனப் புறப்பட்டது. வெஞ்சின வேழத்தைக் கண்ணுற்ற அப்பர் சிறிதும் சஞ்சல முற்றாரல்லர்; செஞ்சடைக் கடவுளின் அடியார்க்கு

அஞ்சுவதியா தொன்று மில்லை
அஞ்சவருவதும் இல்லை

என்று நெஞ்சுருகிப் பாடினார். தறுகண் வேழம் வெம்மை நீத்து திருநாவுக்கரசரை வலம்வந்து தாழ்ந்து இறைஞ்சி எழுந்து சென்றது. மதவேழத்தின் செருக்கை யடக்குமாறு திருத்தொண்டர் பாடிய பாட்டே “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்னும் பல்லவிக்கு அடிப்படை என்று கருதுவது தவறாகாது.

இவ்வுலகில் எஞ்ஞான்றும் படைச்செருக்குற்ற மன்னவர் உலகின் அச்சாணியன்ன ஆன்றோரையும், மக்கள் கருத்தில் உச்ச மாக நின்று நிலவும் பெரியோரையும் துச்சமாகக் கருதித் தூறு செய்வதுண்டு. அவ்வகையிலேயே சைவசமய சீலராய் விளங்கிய நாவுக்கரசரைச் சமண மன்னன் பலவாறு ஒறுக்கத் துணிந்தான். இத்தகைய உலகியலை நன்கறிந்த பாரதியார்,

துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்று பாடினார்.

இன்னும் ‘ஊனம் ஒன்றில்லா இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்’ வேறொன்றையும் பொருளாகக் கருதுவதில்லை. மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும், ஞாயிறும் திங்களும் திசை மாறினாலும் அன்னார் மனந்துளங்குவதில்லை. இவ்வுண்மையை,

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான் மத்திறலின் அருமை யறிந்த பாரதியார்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப்போந்தார். நாவுக்கரசர் பெருமையை உலகறியக் காட்ட விழைந்த இறையனார் வானிள மங்கையரை அப்பர்பால் விடுத்து அவரை மயக்கப் பணித்தார். அம்மங்கையர் கண்ணொளி வீசி நாவுக்கரசர் உழவாரத் தொண்டாற்றிய இடந்தொறும் தோன்றி நடமாடினார்கள். வேற்படையினும் கொடிய அன்னார் கண்களைக் கண்டு நாவரசர் சிறிதும் அஞ்சினாரல்லர்; தளர்ந்தாரல்லர். உரன் என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான மங்கையர் தோற்றொழிந்தார். இக்கருத்தை மனத்திற்கொண்டு ‘காதல் புரியும் மாதரார்

கண்கள் வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்று பாரதியார் பாடிப்போந்தார். ஆகவே முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப்பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக்கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *