
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
11. கொக்கு வேட்டை
தென்னாட்டில் தெள்ளிய அருவியாற் புகழ்பெற்றது திருக்குற்றால் மலை. அங்கு கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லை யும் நறுமணங் கமழும்; மூலிகை மணங் கலந்த மந்தமாருதம் நலிந் தோர்க்குப் புத்துயிர் நல்கும்; விண்ணளாவும் வேங்கையின் மலர் களில் வண்டுகள் அமர்ந்து மதுவுண்டு பண்ணார்ந்த பாட்டிசைக்கும்.
“வம்பார்குன்றந் நீடுயர்சாரல் வளர்வேங்கைக் கொம்பார்சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்“
என்னும் தேவாரத் திருப்பாட்டால் அம்மலையின் இயற்கையழகு இனிது விளங்குவதாகும். திருக்குற்றால மலைச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்தாடும் அழகும், மந்திகள் மரங்களில் தாவி விளையாடும் மாண்பும், தினைப்புலங் காக்கும் குறமங்கையர் கல்லெறிந்து கிளியோப்பும் காட்சியும் யாவர்க்கும் சிறந்த இன்பம் விளைப்பனவாகும்.
இத்தகைய வளமார்ந்த குற்றால மலையில் வேட்டையாட விரும்பிச் சிங்கன் என்னும் வேடன் புறப்பட்டான்.
கொக்கிறகைத் தலையில் முடித்து, வக்காமணியைக் கழுத்திலணிந்து, வரித்தோற் கச்சையை வரிந்திறுக்கி, சில்லிக் கோலும் ஈட்டியும் கையிலெடுத்து அவ் வேட்டுவன் புள்ளினம் மலிந்த மலைச்சாரலிற் புகுந்தான். நாய் போல் தடம் பிடித்து, பூனை போல் ஒளி போட்டு, நரி போல் பம்மி, அரி போல் அறையும் திறம் வாய்ந்த சிங்கன் ஆடிப்பாடி அகங்களித்து நடந்தான். அப்பொழுது கண்ணியும் பொறியும் கையிற் கொண்டு, கானகப் பறவையைக் கருத்திற் கொண்டு நூவன் என்னும் குளுவன் மற்றொரு வழியாக அவ்விடம் விரைந்து போந்தான். இங்ஙனம் எதிர்ப்பட்ட வேடர் இருவரும் மனமகிழ்ந்து வேட்டையாடத் தொடங்கினர்.
பறவை போல் ஒளிக்கும் பான்மை வாய்ந்த நூவன், ஒரு புதரில் மறைந்து நின்று புள்ளொலி எழுப்பினான். அவ்வொலியை இனப் பறவையொலி என்று கருதி ஏமாந்த பறவைகள் அத்திசையை நோக்கிப் பறந்தோடி வந்தன. அருகே நின்ற மரத்திலேறிச் சிங்கன் பறந்து வந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ந்தான். மாடப்புறாவும் மரங்கொத்திப் புள்ளும், காடையும் கம்புளும், உள்ளானும் வலியானும், கொண்டைக் குலாத்தியும் கொக்கும், குழாங் குழாமாய் வரக் கண்ட குறவன் மனங்களித்து, வலையை விரிக்குமாறு நூவனைப் பணித்தான். புதரினருகே நூவன் விரித்த வலையிற் சிக்கிய புள்ளி னங்களைக் கண்டு வாயூறிய சிங்கன்,
“காசு பறித்திடும் வேசையர் ஆசாரக்
கண்ணிக்குள் ளேபடும் காழகர் போலவும்
தேசத்துக் கொக்கெல்லாம் கண்ணிக்குள் ளேவந்து
சிக்குது பார்கறி தக்குது பார்”
என்று துள்ளிக் குதித்துப் பாடினான்.
இன்னும் வேட்டைத் தொழிலின் சீர்மையை நன்கறிந்த சிங்கன்,
“கானவர் வேடத்தை ஈனமென் றெண்ணாதே
காக்கை படுத்தான் கருமுகில் வண்ணனும்
மேனுாட் படுத்திட்ட கொக்கிற கின்னும்
விடைமே லிருப்பார் சடைமே லிருக்குது”
என்று நூவனுக்கு உணர்த்தினான்.
‘கருமுகில் வண்ணன் காக்கை வேட்டையாடி அதன் கண் ணொன்றை அறுத்தான். செம்மேனி வாய்ந்த ஈசன் கொக்கு வேட்டையாடி அதன் இறகை வேணியிற் சூடினான். ஆதலால் வானவரும் கையாண்ட கானவர் தொழிலை ஈனமென்றெண்ணாதே’ என்று சிங்கன் அறிவுறுத்தினான்.
இன்னும் கானவர் மனையில் வளர்ந்த வள்ளியின் தேனூறு சொல்லுக்கு வாயூறிய குமரன் கொக்கு வேட்டையாடிய செய்தியைக் குறவன் பாராட்டிப் பேசலுற்றான். கோலமாமயில் மீது குலவும் முருகன், வேற் படை தாங்கி, முதல் வேட்டைக்குப் புறப்பட்டான்; ஆறு நாள் அலைந்து திரிந்து ஓர் அருங் கொக்கை அடித்தான்; வருந்தியடித்த கொக்கை நன்றாக அவித்துச் சாறாக்கி அன்பர்கள் சட்டியிலே வைத்தார்கள். அச்சாற்றைச் செந்தண்மை வாய்ந்த அந்தணரும், சிவநெறிச் சீலரும் ஆதரித்து ஏற்றார்கள். பெருந்தவ முனிவரும் அச்சாற்றைத் தம் தவப்பயனாகக் கருதி அகமகிழ்ந்தார்கள். இங்ஙனம் ஆன்றோர் போற்றும் வண்ணம் அருங்கொக்கு வேட்டையாடிய ஆதிக்குறவன் பெருமையை,
“மீறு மிலஞ்சிக் குறத்தியைக் கொண்ட செவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி யொருகொக்குப் பட்ட(து)
அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறுக வைத்தபின் வேதப் பிராமணர்
தாழங்கொண் டார்சைவர் தாழங்கொண் டார்தவப்
பேற முனிவரும் ஏற்றுக் கொண்டார்”
என்று சிங்கன் வியந்து புகழ்ந்தான். முருகப்பெருமான் கையில் வேலேந்திக் கொடுமை சூழ்ந்த சூரனைக் கொல்லப் புறப்பட்டான். வேலனைப் பாலன் என்றெண்ணி இகழ்ந்த சூரன் ஆறு நாள் அண்ட முற்றும் சுற்றி அமர் விளைத்தான். அக்கொடியோனை முறியடித்துக் கொடுமை தீர்க்கக் கருதிய குமரவேள் ஆறு நாளும் சலிப்பின்றி அவ்வசுரனைத் தொடர்ந்து போர் புரிந்தான். மாயப்போரில் வல்லவனாகிய சூரன் வேலனை ஏய்க்கக் கருதி ஒரு கொக்கு (மாமரம்) வடிவெடுத்து நின்றான். அக்கொக்கினை முருகன் வேலாலெறிந்து வீழ்த்தினான். அந்நிலையில் கொக்காகி நின்ற கொடியோன் குமரன் பெருமையை அறிந்து பணிந்தான். அடிபணிந்தவர்க்கு அருள் புரியும் அறுமுகச் செவ்வேள் சூரனது ஆணவத்தை அவித்து அவனை ஆட்கொண்ட ருளினான். இவ்வருட்செயலைக் கந்தர் சட்டி (சஷ்டி)த் திருநாளாக (சாறு – திருவிழா ) அமைத்து அந்தணரும் அருந்தவரும் ஆதரித்துப் போற்றினார்கள். ஆகவே, மாமரமாய் நின்ற மாறுபடு சூரனை வென்று, அவன் ஆணவத்தை அவித்துச் சாறாக்கிச் சட்டியில் வைத்த சரிதையைக் கொக்கடித்த குமரன் கதையாக வேடன் விரித் துரைக்கும் முறை வியக்கத்தக்கதாகும்.
இங்ஙனம் வேட்டையிற் கைதேர்ந்த முருகன் குன்றக் குறவரது மனையிலே வளர்ந்து தினைப் புலங் காத்த வள்ளியை வேட்டு மணந்தது இயல்பேயன்றோ? ஆறுநாள் அரும்பாடுபட்டுப் பெருங் கொக்கடித்து அடியார்தம் அல்லல் தீர்த்த குமரனுக்கு வள்ளியை வாழ்க்கைத்துணைவியாகக் கொடுத்து, வளமார்ந்த மலையையும் குறவர் தனமாய் வழங்கினார்கள். இவ்வுண்மையை,
“வெள்ளிமலைக் குறவன்மகன்
பழனிமலைக் குறவன்எங்கள் வீட்டிற்
கொண்ட வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி
சீதனமாய் வழங்கினாரால்”
என்று ஒரு குறவஞ்சி நயமாகக் கூறிப் போந்தாள். வேடர் மருகனா யமைந்த முருகன் வேட்டகத்தில் விரும்பியுறைந்து குறிஞ்சிநிலக் குரிசிலாக விளங்குகின்றான்.



