ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

14. பள்ளரும் பள்ளியரும்

வேளாண்மை என்னும் விழுமிய தொழிலில் தலைசிறந்த நாடு தமிழ்நாடாகும். வேளாளர் அணிவயலில் நாற்றுமுடி தழைக்கு மாயின் நாடாளும் மன்னரது மணிமுடி தழைக்குமென்று வேளாண் மையின் பெருமையைப் புகழ்ந்த நாடு தமிழ்நாடாகும். இன்னும் பாராளும்.. வேந்தரது செங்கோலை நடத்துங் கோல் வேளாளர் ஏரடிக்கும் சிறு கோலே என்று அறிந்து போற்றிய நாடு தமிழ்நாடே யாகும். நன்செய் நிலத்தைப் பண்படுத்திப் பருவத்தில் நீர் பாய்ச் சிப் பயிர்செய்யும் பணியாளர் பள்ளர் என்றும் மள்ளரென்றும் தென்னாட்டில் அழைக்கப்படுவர். வேளாண்மைக்கு மழையின்றி இல்லையாதலின் மழை பொழியும் கார்மேகத்தைக் காணும்பொழுது அன்னார் ஆடிப்பாடி அகங் களிப்பர். விண்ணிலே உலாவும் வெண் ணிற மேகம் நீராவியை ஏற்றுக் கருநிறமுற்று மரங்களடர்ந்த மலைகளைச் சார்ந்து மழை பொழியும் தன்மையை மள்ளர்கள் நன்கறிவார் வானத்தில் மழைக் குறிகள் தோன்றும் பொழுது ஆற்றில் வெள்ளம் பெருகிவருமென்று அறிந்து துள்ளி மகிழ்வார்கள்.

ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறிமலை
ஆளமின்னல் ஈழமின்னல் சூழமின்னுது
நேற்று மின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குது கேணி
நீர்ப்படு சொரித்தவளை ஆர்ப்பரிக்குது
சேற்று நண்டு சேற்றைக் கிள்ளி ஏற்றடைக்குதுமழை
தேடியொரு கோடிவானம் பாடியாடுது
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைசேரிப் புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக்கொள்ளுமே

மேற்றிசையிலும் கீழ்த்திசையிலும் மின்னுகின்றது. நேற்றும் இன்றும் காற்றுச் சுழன்று வீசுகின்றது. கேணியிலுள்ள சொரித்தவளை கத்துகின்றது. சேற்றில் வாழும் நண்டு, வளையின் வாயிலை ஏற்றடைக்கின்றது. வானம்பாடிப் பறவை வட்டமிட்டு ஆடுகின்றது. ஆதலால் ‘இன்று மலையில் மழை பொழிந்து நாளை ஆற்றில் வெள்ளம் வரும்’ என்று பள்ளர்கள் அறிந்து மனங்களிக் கின்றார்கள். அவ்வண்ணமே தென்மலையில் மழை பெய்து பொருனை யாற்றிலும் சித்திரா நதியிலும் வெள்ளம் பொங்கிப் பெருகி வருகின்றது. காலையில் ஆற்றை நோக்கி விரைந்து சென்ற பள்ளர்கள், இரு கரையும் பொழிந்துவரும் புதுப்புனலின் அழகினைக் கண்டு மன மகிழ்ந்து சேரிப் பள்ளியரைக் கூவி யழைத்து வெள்ளத்தின் பெருமையை வியந்து ரைக்கின்றார்கள்.

பொதியமலையிற் பிறக்கும் பொருனையாறும், திருக்குற்றால மலை யிற் பிறக்கும் சித்திரா நதியும், சங்கரன் கோவிலுக்கருகே தோன்றும் செண்பகக்கோதை யாறும் கலந்து ஒன்றுகூடும் இடத்திலமர்ந்த சிற்றூர் முக்கூடல் என்று பெயர் பெறுவதாகும். பெரியாற்றிலும் சிற்றாற்றிலும் பெருகிவரும் வெள்ளம் முக்கூடலிற் கலந்துகூடும் காட்சியை,

குற்றாலத் திரிகூட மால்வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடித் பொருனை நாடித்திருழக் கூடற்பதியை வலங்கொண்டே வற்ற மடுவில் பரவைகுரவை வாளைகோளை தேளிமீன்
மயிந்தி உளுவை பயிந்திகூளி மணலியாறு லோறுமீன் பற்று அசரைமச்ரை கெளிறு பருவராலும் அணையிலே
பாயக்காலில் பாயக்குளத்தில் பாய்வயலிற் பாயவே சிற்றுறென்பது பெற்றாலுமொரு சிறியவர்மனப் பெருமைபோல்
சித்ராநதி பெருகிவார சித்ரம் பாரும் பள்ளியரே

என்று பள்ளர்கள் வியந்துரைக்கின்றார்கள். சிற்றாறென்னும் பெயரமைந்த சித்ரநதியில் பெருகிவரும் புதுப்புனல், பெரியாறென்னும் பொருனை நதியோடு கலக்குமிடத்தில் ஆற்று மீன்கள் கரையில் துள்ளி விழுந்து, மணலிற் புரண்டு, மீண்டும் நீரிற்பாய்ந்து விளையாடு கின்றன. வாளையும் வராலும், கெண்டையும் கெளிறும்,பரவையும் குரவையும், வெள்ளத்தில் புரண்டு களிக்கின்றன. இத்தகைய ஆற்று நீர் கால்வழிப்போந்து குளத்தில் நிறைந்து வயலிற் பாய்கின்றது. பள்ளர்கள் நல்ல நாளும் பொழுதும் பார்த்து ஏர் பூட்டிப் பண்ணை நிலத்தை உழுது பண்படுத்துகின்றார்கள்.

உழுத உழவைக் கண்டு களித்தான் பள்ளர்
உள்ளபேரை யெல்லாம் விளித்தான் தொழுது
தெய்வக்கடன் கழித்தான்—பள்ளன்
தொளியில் விதைகளெல்லாம் தெளித்தான்

என்று முக்கூடற் பள்ளுக் கவிஞர் பள்ளன் பணியைப் பாங்குற எழுதிப்போந்தார். பண்ணை நிலத்தை உழவர் பண்புற உழுத பான்மை கண்டு பள்ளன் மனமகிழ்கின்றான்; செவ்வையாக உழுத உழவரை அருமையாக அழைக்கின்றான்; பயிர் செழித்தோங்குமாறு பரமனைத் தொழுகின்றான்; தொளிப் பருவத்தில் விதையைத் தெளிக்கின்றான். இவ்வாறு பண்ணை வயலிற் பணிசெய்து பள்ளன் சேரிக்குச் செல்கின்றான். சிலநாள் சென்றபின்பு விதைத்த வயலைச் சுற்றிப்பார்க்க வருகின்றான். வயலெங்கும் நெல்முளை கிளம்பியிருக்கக் கண்டு மனங் களிக்கின்றான்.

முளைத்த முளைக்குத் தண்ணீரடைத்தான் கொல்லை
முழுதும் மறுநாள் வெட்டி விடுத்தான்
வளைத்து வேலிசூடி நட்டான்நாற்று
வளர நாளும் எரு விட்டான்

என்று கவிஞர் கூறுமாறு பள்ளன் முளைத்த முளைக்குத் தண்ணீ ரடைக்கின்றான். நீர்கட்டி நின்று முளை அழுகாதவாறு அதிக நீரை வெட்டி வடிக்கின்றான். வளரும் முளையை விலங்குகள் மிதித்து வருத்தா வண்ணம் நாற்புறமும் வேலி யடைக்கின்றான். இவ்வாறு நாற்று நன்றாக வளருமாறு நாள்தோறும் எரு விடுகின்றான். கண்ணுங் கருத்துமாய்ப் பள்ளன் பார்த்து வளர்க்கும் பயிர், நாளுக்கு நாள் உயர்ந்தெழுந்து தழைக்கின்றது. ஏராலே சேறாக்கி, எருவாலே உருவாக்கிய செம்மை கண்டு பள்ளன் இன்புறுகின்றான். பசுமை நிறம் வாய்ந்த பயிர்முகங் கண்டு மனங் களிக்கின்றான்.

வளர்ந்த நாற்றுமுகம் கண்டான்சேரி
மள்ளர் கூடமது உண்டான் அளந்திடா
மகிழ்ச்சி கொண்டான்பண்ணை
ஆண்டவர்க்குச் செய்தி விண்டான்”

நாற்றுமுகங் கண்டு நயப்புற்ற பள்ளன் சேரிப் பள்ளருடன் சேர்ந்து மது வருந்துகின்றான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாற்று வளரும் செய்தியைப் பண்ணையார்க்குத் தெரிவிக்கின்றான்.

இவ்வாறு செழித்து வளர்ந்த நாற்றைப் பருவத்தில் பறித்துப் பண்படுத்தப்பட்ட வயல்களில் பதிப்பது வழக்கம். நடுகை தொடங்கு முன்னே முக்கூடல் அழகர் பதத்தை வந்தித்துத் துதித்து, நாற்று முடியை எடுத்து நெற்றியில் வைத்து நான்கு திசையும் நோக்கி வணங்கிக் கூட்டமாய் நின்று குரவையிட்டுப் பயிர் நெருங்காமலும் கலந்துபோகாமலும் நடுகின்றார்கள்.

படைகொண்டே வருகரனையும்பொரு
விடையும் சேர் திரிசிரனையும்
பண்டுமுடித்த கணையினார் குகன்
கண்டு பிடித்த துணையினார் குடைகுன்றப்
பசுக்கிடை நின்றார் ழக்
கூடல் அழகர் வயலுள்ளே

அங்குமிங்கும் அசைந்து பள்ளியர் நாற்றைப் பதிக்கும் பான்மை அழகுவாய்ந்ததாகும். கானகத்தில் கடும்படைகொண்டு எதிர்த்த சரனையும், ஏறுபோல் எழுந்த திரிசிரனையும், வில்லம்பால் அழித்த அழகர் ஆழநீர்க் கங்கையில் ஓடஞ் செலுத்திய ஏழை லேடனை ஏற்று ‘அருமையில் எளிய அழகினை’க் காட்டிய கதையையும், கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்துக் கோவலரைக் காத்த முறையையும் நாவாரப்பாடி நாற்றுமுடியைப் பள்ளியர் நடுகின்றார்கள். இன்னும்,

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர்
கஞ்சனார்க் கொரு நஞ்சனார்
கடையும் அழதம் உடையுந் திரையில்
காட்டி அண்டருக் கூட்டினார் அடிக்குள்
அடங்கும் படிக்கு முதல்வர்
அழகர் முக்கூடல் வயலுளே

பள்ளியர் நாற்றை நட்டுக் கரையேறுகின்றார்கள்.

முக்கூடற்பதியில் வாழையடி வாழையெனப் பழங்குடியில் வந்த வடிவழகக் குடும்பனுக்கு வாய்த்த பள்ளியர் இருவருள் மூத்த பள்ளி முக்கூடலாள்; இளைய பள்ளி மருதூராள்.

முன்னவள் வைணவப் பள்ளி; பின்னவள் சைவப் பள்ளி. நடுகைக் காலத்திற் கும் அறுவடைக் காலத்திற்கும் இடைப்பட்ட மாதங்களில் இரு பள்ளியரும் இகலிப் பேசுவது வழக்கம்.

மாமன் மகள் என்னும் முறைபற்றி அழகன் மணந்த மூத்த பள்ளி ஒட்டுத்தாலி கட்டிய இளையாளை நோக்கி,

வழக்கிட்டு வந்தேனோ மருதூர்ப்பள்ளிபள்ளன்
மாமன்மகள் என்றென்னை மறித்துக் கொண்டான்

என்று பெருமை பேசினாள். அதற்கு மாற்றம் உரைக்கப் போந்த மருதூர்ப் பள்ளி,

உழக்கில் கிழக்கு மேற்கோ முக்கூடற்பள்ளிமறித்துக் கொண்டான் என்னைக் கண்டென் ஊரிலே வந்தான்

என்று அழகக் குடும்பன் வலிய வந்து தன்னை மணந்த மாண்பினை எடுத்துரைத்தாள். இவ்வாறு எழுந்த பூசல் இருவரும் வழிபடும் இறையவர் மீது பாய்ந்தது. கூடலழகரைக் கும்பிடும் மூத்த பள்ளியும், மருதூர் ஈசனை வழிபடும் இளைய பள்ளியும் ஒருவரை யொருவர் ஏசும் முறை இன்பம் விளைப்பதாகும். செஞ்சடை வானவன் நஞ்சுண்டு பிழைத்ததும், மாயவன் மண்பிசைந்துண்டதும் பள்ளியர் சண்டையில் வெளிப்பட்டது.

நாட்டுக்குள் இருந்துபசிக் காற்றமாட்டாமல் வாரி நஞ்சையெல்லாம் உண்டான் உங்கள் நாதனல்லோடி

என்று முக்கூடற் பள்ளி பழித்துரைக்கக் கேட்டு முனிவுற்ற மருதூர்ச் சைவப் பள்ளி

மாட்டுப்பிற கேதிரிந்து சோற்றுக்கில்லாமல் வேறு மண்ணையுண்டான் உங்கள்கடல் வண்ண னல்லோடி

என்று மாயவனை இழித்துரைத்தாள். இன்னும் அவ்விறைவர் இரு வரும் ஏற்றமின்றித் திரிந்த எளிமையறிந்து பள்ளியர் இருவரும் ஏளனம் செய்யலுற்றார்.

ஏறவொரு வாகனம் தானுமில்லாமல் மாட்டில்
ஏறித்திரிந் தான் உங்கள் ஈசனல்லோடி

என்று நரை வெள்ளே றூர்ந்த நாதனை மூத்தவள் பழித்துரைக்க,

வீறுசொன்ன தென்னமாடு தானுமில்லாமல் பட்சி மீதிலேறித் திரிந்தானுங்கள் மாயனல்லோடி

என்று பருந்திலேறிப் பறந்த திருமாலை இளையவள் பரிகசித்தாள். இவ்வாறு அரியையும் அரனையும் வரம்பின்றி ஏசிய பள்ளிகளின் பிணக்கறுத்து அழகக் குடும்பன் அரியும் சிவனும் ஒன்றென்னும் உண்மையை விளக்கிச் சேரியில் அமைதியை நிலைநிறுத்தினான்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *