
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
17. இறையவரும் இன்னுயிரும்
மன்னுயிரனைத்தையும் ஆதரித்துக் காக்கும் அருள்நெறியே தகைசான்ற நெறியெனத் தமிழ்நாடு பழங்காலத்தே அறிந்துகொண்டது. பிற உயிர்க்கு நலம்புரிந்தோர் இன்புறுவரென்றும், தீங்கிழைத்தோர் துன்புறுவரென்றும் அறநூல் அறிவுறுத்துகின்றது. இவ்வுலகில் வாழும் உயிர்ப்பொருள்கள் பலதிறப்பட்ட அறிவு வாய்ந்தனவாயினும், அவற்றுள் ஊடுருவிச் செல்லும் உயிர்த்தன்மை ஒன்றே என்னும் உண்மையைப் பழந்தமிழ்ப் பனுவல்களிற் பரக்கக் காணலாம். அறிவாற் குறைந்த உயிர்கள் பல பிறவிகளெடுத்து மேம்பட்டு முற்றிய அறிவுடைய உயிர்களாகுமென்று பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தார்கள். புல்லாகவும் பூடாகவும் நிற்கும் சிற்றுயிர் அறிவு முதிர்ந்து மக்களாகவும் தேவராகவும் வளர்ந்து செல்லும் தன்மையைத் திருவாசகம் தெள்ளிதின் உணர்த்தக் காணலாம். இதனாலேயே புல்லுயிரையும் துன்புறுத்தலாகாதென்று நல்லோர் அருளிப் போந்தார்.
மக்கள் தம் அறிவின் வன்மையால் ஏனைய உயிர்களை நலியா வண்ணம் ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறி அறியத்தக்கதாகும். எல்லாம் வல்ல இறைவனிடம், அச்சமும் அன்பும் எஞ்ஞான்றும் மக்கட்கு உண்டு என்னும் உண்மையை உணர்ந்த அறவோர், வனவிலங்குகள் முதல் புற்பூண்டுகள் ஈறாக உள்ள உயிர்களையும் இறையவரோடிணைத்து அருள்நெறியை இவ்வுலகில் நிலைநிறுத்த முயன்றுள்ளனர். காட்டில் வாழும் விலங்குகளையும், ஊர்ந்து விண்ணிலே பறந்து திரியும் பறவைகளையும், மண்ணிலே செல்லும் உயிர்களையும், நீரிலே வாழும் மீன்களையும், நிலத்திலே மருவிநிற்கும் மரஞ்செடிகளையும் இறையவரோடிணைத்து அவற்றின் உயிரைக் காக்க விரும்பியுள்ளார்கள். காட்டில் வாழும் வேழமும் வேங்கையும், அரியும் பரியும், மானும் மற்றைய உயிர்களும் இறைய வர்க்கு உகந்த பொருள்களாகும். வேழத்தின் உரியும், வேங்கையின் தோலும், ஈசன் உவந்து அணியும் உடைகளாகும். வேங்கையின் தோலை அரையிலுடுத்து, வேழத்தின் உரியால் ஆகத்தைப் போர்த் துக் கடும்பனியுறையும் கயிலைமா மலையில் சிவபெருமான் வீற்றிருக் கின்றார். இன்னும், விழுமிய வேழம் விண்ணவர் தலைவற்குரிய வாகனமாகும். சிவபெருமான் தலைமகனாய பிள்ளையார் திருமுகம் வேழத்தின் முகமாக விளங்குகின்றது. ஆகவே, உருவத்தால் உயர்ந்த வேழம் ஈசனார்க்கும், இந்திரற்கும், பிள்ளையார்க்கும் இனிய உயிராய் இலங்குகின்றது. இத்தகைய யானைக்குத் தீங்கிழைத்தோர் அம்மூவரது சீற்றத்திற்கும் ஆளாவரன்றோ? இன்னும் ஈசன் தோள்களில் ஆரமாய் இலங்கும் நாகம் திருமாலின் பாயலாகவும் அமைந்துள்ளது. ஆகவே, நஞ்சமைந்த நாகமும் இறையவர் இருவரைச் சார்ந்து இனிது வாழ்கின்றது. விலங்கரசெனப்படும் அரிமான் காளியின் ஊர்தியாய்க் களித்திருக்கின்றது. பரிமான் பைரவற்கு உகந்ததாயிற்று. கலைமான் ஈசனார் கையில் இனிதமர்ந்தது.
காட்டுவிலங்குகளை விடுத்து நாட்டுவிலங்குகளைக் கருதுவோ மாயின் அவைகளும் இறையவர்க்கு உகந்த உயிர்களாய் இலங்கக் காணலாம். எருது ஈசனது வாகனமாம். எருமை எமனது ஏற்ற மாம். பசுவின் வயிற்றிற் பிறந்த பாலன் சித்திரபுத்திரனாய்ச் சிறந் தான் திருமாலும் பன்றியாய்த் தோன்றினான். நன்றி மறவாத நாய் சாத்தனது நல்வாகனமாம். ஆடு அங்கியங் கடவுளுக்கு அமைந்த ஊர்தியாம். ஆகவே, எருதுக்குத் தீங்கிழைத்தால் ஈசன் முனிவான். எருமைக்குத் தவறிழைத்தால் எமன் விடமாட்டான். பன்றியைக் கொன்றால் மாயோன் சீறுவான். நாயை எறிந்தால் சாத்தன் தொடர்வான். ஆட்டை அடித்தால் அங்கி அடுவான்.
இனி, பறவை இனங்களைச் சிறிது பார்ப்போம். அன்னமும், கிளியும், சேவலும், மயிலும், குயிலும், கொக்கும், காக்கையும், கலுழ னும், ஒவ்வோர் இறைவனை ஒன்றிவாழக் காணலாம். அயன் அன்னத்தின் மீதமர்ந்தான். மாரவேள் கிளியின்மீது ஊர்கின்றான். குமரவேள் சேவலைக் கொடியாகவும், மயிலைப் பொறியாகவுமுடையான். குயிலை மாரன் தூதனாக்கினான். கொக்கிறகை ஈசன் தன் வேணி யிலணிந்தான். காக்கையைச் சனியன் பிடித்துக்கொண்டான். கலுழனைத் திருமால் கவர்ந்துகொண்டான். ஆகவே, அன்னத்தை அடிக்கச் சென்றால் அயன் சபிப்பான். மழலை பேசும் கிளியைப் பிடித்தால் மாரன் அம்பு தொடுப்பான். சேவலுக்குத் தீங்கிழைத் தால் முருகன் சீறுவான்; மயிலைப் பிடித்தால் அயில் வேலெடுப்பான். குயிலைக் கொன்றால் மாரன் கோபிப்பான். காக்கையைக் கொன்றால் சனியன் தொடர்வான். பருந்துக்குத் தீங்கிழைப்போர் மாயோன் நேமிக்கு விருந்தாவர். எனவே, பறவை இனங்களும் பெரியாரைச் சார்ந்து பயமின்றி வாழ்கின்றன.
இன்னும், சிறிய உயிர்களாய அணிலும், ஆகுவும், குரங்கும், கழுதையும், பெரியாரருளால் பெருமையுற்று விளங்கக் காணலாம். அணிற் பிள்ளை காலத்தில் உதவிசெய்து இராமனது அருளைப் பெற்றது. ஆகுவோ பிள்ளையார் வாகனமாய்ப் பெருமையுற்றது.வானரம் இராமனுக்குத் துணைபுரிந்து உயர்ந்தது. கத்தும் கழுதை மூத் ள் வாகனமாய் அமைந்தது. திருமால் மச்சாவதாரம் கொண்டமையால் மீனினங்களையும் ஈனமென்றெண்ணி ஊறுசெய்தல் ஆகாது.
இனி, மரங்களின் உயிரை ஆன்றோர் பாதுகாத்த மாண்பும் அறிந்து மகிழத்தக்கதாகும். இனிய நிழல்தரும் மரங்களின் அடியில் இறையவரை அமைத்துப் பழந்தமிழ்நாடு வழிபட்டது.
குற்றாலநாதர் குறும்பலாவின் கீழ் அமைந்தார். நெல்வேலியப்பர் வேணுவின் அடியில் வீற்றிருந்தார். ஆலவாய் அண்ணல் கடம்பவனத்தில் களித்தமர்ந்தார். தில்லைமரத்தடியில் அழகிய கூத்தர் திளைத்தார். மரமடர்ந்த வனங்கள் பிற்காலத்தில் நகரங்களாய்ச் சிறந்த பொழுது குறும்பலாவனம் திருக்குற்றாலமாகவும், வேணுவனம் திருநெல்வேலியாகவும், கடம்பவனம் மதுரையாகவும்,தில்லைவனம் சிதம்பரமாகவும் திகழ்வனவாயின. முன்னாள் கல்லாலின் கீழ் அமர்ந்து இறையனார் அறமுரைத்தார். அரசமரத்தடியில் அமர்ந்து கௌதம புத்தர் அரிய உண்மைகளை அறிந்தார். அசோக மரத்தடியிலமர்ந்து அருகனார் அறமுணர்ந்தார். கூவிளமரம் எப்பொழுதும் ஈச னுக்கு உகந்ததாகும். இன்னும்,வன்னியும் தென்னையும், மருதும் நாவலும், ஏனைய மரங்களும் இறையவர் விரும்பி உறையும் இடங்களாகும். வினை தீர்க்கும் விநாயகரை வேம்பும் அரசும் கலந்துவாழுமிடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் நின்று நிலவுகின்றது.
மரங்களைப் போலவே செடி கொடிகளும், புற்பூண்டுகளும், இறையவரோடிணைந்து வாழும் தன்மை அறியத்தக்கதாகும். பயனும் தாராத எருக்கும், குருக்கும் ஈசனுக்கினிய வென்றால், ஏனைய செடிகளைச் சொல்லவும் வேண்டுமோ? தும்பையும் துளசியும், அறுகும் புல்லும், இறையவர்க் கேற்றனவாம். மாயோன் துளசியில் மகிழ்ந்துறைகின்றான். ஆனைமுகத் திறைவனுக்கு அறுகினும் இனிய பொருளில்லை. ஆகவே, அறநெறியை அகிலமெலாம் பரப்பக் கருதிய தமிழ்மக்கள் உயிர்ப்பொருள் அனைத்தையும் இறையவரோடிணைத்துக் காக்கக் கருதிய திறம் நினைக்குந்தோறும் உள்ளத்தை நெகிழ்விப்பதாகும்.



