
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
3. புகலிப்பிள்ளையும் மிதிலைப்பொன்னும்
ஐம்புலன்களையும் அடக்கி ஆற்றும் அருந்தவத்தின் வலிமையால் இம்மையில் செயற்கருஞ் செயல்களைச் செய்தலும், மறுமையில் எய்துதற்கரிய இன்பநிலை எய்துதலும் இயலும் என்னும் உண்மை யைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே மன்னுயிர்க் குணர்த் திய நாடு தமிழ்நாடாகும். இத்தகைய தமிழகத்தை அணிசெய்த திருத் தொண்டர் செம்மையை விளக்கியருளிய செந்தமிழ்ச் சேக்கிழார், தமிழ்நாட்டின் தவப்பயனாய்த் தோன்றிய திருஞானசம்பந்தர் வடி வத்தை நயமுற எழுதி அமைத்துள்ளார். வேதநெறி தழைத் தோங்கவும், சைவநெறி செழித்து விளங்கவும், சீர்காழிப்பதியிலே தோன்றி இளமையிலேயே கலைஞானமும் மெய்ஞ்ஞானமும் பெற்று நல்லியற் கவிஞராய ஞானசம்பந்தர் பாண்டிநாட்டமைச்சர் வேண்டுகோளுக்கிணங்கி மதுரை மாநகரை அடைந்தார். அரனடியார்க்குரிய திருமடத்தில் அமர்ந்திருந்த சிவஞானச் செல்வரை அரண்மனைக்கு அழைத்துச் செல்லக் கருதி வந்தடைந்த அமைச்சராய குலச்சிறை யாரும் பாண்டிமா தேவியாய மங்கையர்க்கரசியாரும்
“ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மீசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்“
என்று சேக்கிழார் அருளிப்போந்தார். திருஞானசம்பந்தரைக் காணச் சென்ற மெய்யன்பரிருவரும் சிவனடியார் திருமடத்தில் பாலறாவாயராய் பாலரைக் கண்டாரல்லர்; தூயவெண்ணீறு துதைந்த மேனியராய்ச் சூழந்துநின்ற அரனடியார்க்கு உறுதுணை யாயமைந்த பிள்ளையைக் கண்டாரல்லர்; மழலைமொழி பேசும் மைந்தரைக் கண்டாரல்லர். அத்திருமடத்தில் ஞானத்தின் திருவுருவைக் கண்டார் கள்; நான்மறையின் நற்றுணையைக் கண்டார்கள்; மண்ணுலகில் மிளிரும் மதிக்கொழுந்தைக் கண்டார்கள்; பண்ணார்ந்த இசை யின் இன்சுவையைக் கண்டார்கள் என்று சேக்கிழார் எழுதியமைத்த செழுந்தமிழ்ச் சித்திரம் எண்ணுந்தொறும் இன்பம் பயப்பதாகும்.
கன்னிநாடு கட்டழிந்து நின்ற நிலையினைக் கண்டு மனந்தளர்ந்த மெய்யன்பர் கண்ணெதிரே ஒரு மெய்ஞ்ஞான வடிவம் மிளிர்வதா யிற்று; அஞ்ஞான இருளகற்றி மெய்ஞ்ஞான ஒளிவிரிக்கும் அருஞ் சுடரை அத்திருமடத்திற் கண்டார்கள்; ஒளி மழுங்கியிருந்த வேத விழுப்பொருளை மீண்டும் இம்மண்ணுலகில் விளக்கவந்த அவிரொளியைக் கண்டார்கள்; இன்னும் கண்டோர் மனத்தைக் கவர்ந்து குளிர்விக்கும் முற்றிய கலையிற்றாய முழுமதியைக் கண்டார்கள்; ஏழிசையாய் இசைப்பயனாய் இலங்கும் இறைவன் பெருமையை விழு மிய மொழிகளால் இசைக்கும் செஞ்சொல் இசைநலத்தைக் கண்டார் கள், என்று சேக்கிழார் அருளிய பாட்டின் சுவை அறிந்து இன்புறத் தக்கதாகும்.
இவ்வண்ணமே கல்வியிற் பெரிய கம்பரும், இலங்கை மாநகரில் சிறையிருந்த சீதையின் செம்மையை அனுமன் வாயிலாக அறிவிக்கின்றார்.
“விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டே னல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்“
என்று சொல்லின் செல்வனாய அனுமன் இலங்கையில் தான் கண்ட காட்சியை எடுத்துரைக்கின்றான். காதலியைப் பிரிந்து கவலையுற் றிருந்த வெஞ்சிலை வீரனை நோக்கி, “அண்ணலே! கருங்கடல் சூழ்ந்த இலங்கை என்னும் பெருநகரின் ஒருசார் நின்ற நெடுஞ்சோலையில், நற்பெருந் தவம்புரிந்த நங்கையைக் கண்டேனல்லேன்! செந்தேன் துளிக்கும் அச்செழும் பொழிலில் குலநலம் குன்றாது இலங்கக் கண் டேன்; பொறுமை என்னும் பெருமை பிறங்கக் கண்டேன்; கற்பெனும் திண்மை களித்து நடம்புரியக் கண்டேன்” என்று அனுமன் கூறும் முறை அழகுவாய்ந்ததாகும்.
அரக்கர்கோன் தலைநகரில் இராமன் தேவியை நாடிச்சென்ற அனுமன், சிறையிருந்து நோற்ற சீதையை அசோகவனத்திற் கண்ட பொழுது பெருவியப்புற்று, அம்மங்கையின் செம்மையால் மும்மை சால் உலகத்தும் பெண்மையே பெருமையுற்றதென்று உணர்ந்து ஆடிப்பாடி அகங் களிப்பானாயினான். பிறந்த குலப்பெருமையையும், புகுந்தகுலப் பெருமையையும் விளக்கிக் கற்பினுக் கணியாக இலங் கிய அந்நங்கையின் சீர்மையை நாயகன் காணும்பேறு பெற்றிலனே யென்று பெரிதும் வருந்தினான். அக் கண் கொள்ளாக் காட்சியை ஐயனுள்ளங்கொள்ள எடுத்துரைக்க ஆசையுற்றான். எப்பொருளையும் துருவியறிந்து மெய்ப்பொருள் காணும் மதிநலமும் நயம்பட உரைக்கும் நாநலமும் வாய்ந்த அனுமன், நாயகனை மீண்டும் காணும்பேறு பெற்றபொழுது அவனடி தொழுது எழுந்து அடங்கி நின்று, சிறையிருந்த சீதையின் செம்மையை எழுதிக் காட்டலுற்றான். மாசடைந்த மேனியோடும், மாற்றாத ஆடையோடும், கங்குலும் பகலும் கண்ணிமையாது, கணவனையே கருத்திலமைத்து,நாற்றிசையும் நோக்கி நெடுங்கண்ணீர் உகுத்த நங்கையின் வடிவினைக் காணாது மிதிலையர்கோன் குலநலம் ஆண்டு குன்றாது இலங்கக் கண்டதாகவும், இரக்கமற்ற அரக்கர் செய்த மிகையினைத் தன் பெருந் தகையினால் வென்ற இரும்பொறை ஆங்கு இலங்கக் கண்டதாகவும், புலவர் நாவிற் பொருந்திய கற்பெனும் திண்மை களிப்புற்று நடம்புரியக் கண்ட தாகவும் அனுமன் எழுதியமைத்த உயிர் ஓவியம் கவிச்சுவை யறி வார்க்குக் கனிந்த இன்பம் பயப்பதாகும்.



