ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை


1. தென்மலையும் வடமலையும்


இயற்கைவளஞ் சான்ற மலைகள் எந்நாட்டு மாந்தர்க்கும் இன்பம் விளைப்பனவாம். தமிழ்நாட்டில் அடுக்கடுக்காக ஓங்கி உயர்ந்த குன்றுகளையும், அவற்றினின்று பொங்கி வழிந்து இறங்கிய அருவி களையும் கண்டு களிப்புற்ற பண்டைத் தமிழ் மக்கள், ஆண்டு இறை நலம் சிறந்து இலங்கக் கண்டார்கள். இத்தகைய தெய்வமணம் கமழும் மலைகளுள் தமிழ் முனிவன் வாழும் பொதியமலை தலைசிறந்ததாகும். மஞ்சுலாவும் அம்மலை முடியில் விளங்கும் வெண்மதியின் தண்ணொளியும், அம்மலைச்சாரலி லமைந்த நறும் பூம்பொழில்களில் தவழ்ந்து திரியும் தென்றலின் இனிமையும், கருமலையினின்று இழியும் வெள்ளருவியின் வனப்பும் மாந்தர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்வனவாம். இத்தன்மை வாய்ந்த இயற்கை அழகினை,

திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழமலை தமிழ்ழனிவன் வாழமலை
அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே

என்று குறத்தியின் வாயிலாகக் குமரகுருபர அடிகள் புகழ்ந்துரைத்தார். தமிழ்முனிவன் வாழும் பொதியமாமலையிற் பொங்கிப் பொழியும் தண்ணருவி, கன்னிநாட்டை ஆளும் அங்கயற்கண் அம்மையின் தண்ணருள்போல் அடிகளது உள்ளத்தைக் குளிர்விக்கின்றது. ‘உலகு புரந்தூட்டும்’ உயரிய அருள்வாய்ந்த அருவியை அங்கயற் கண்ணியின் கருணை வடிவாகக் கண்டு அடிகள் மனமாரப் போற்றுகின்றார்.

தென்னன் தமிழும் தென்றற் கொழுந்தும் திளைத்து உலாவும் பொதியமலைக் குறிச்சிகளில் குறமாதர் இயற்கை உடை உடுத்து, இயற்கை உணவருந்தி, இயற்கை மலர் தொடுத்து, இயற்கை அழகில் இறைநலங்கண்டு வழிபட்டு இனிது வாழ்வார்கள். நாள்தோறும் வள்ளிக்கொடியில் வீழ்ந்த கிழங்குகளை அகழ்ந்தெடுப்பார்கள்; குறிஞ்சிமலரைக் கொய்து முல்லைக்கொடியில் வைத்துத் தொடுப்பார்கள்; பசுந்தழையையும் மரவுரியையும் பாங்குற உடுப்பார்கள்; செழுந்தினையையும் நறுந்தேனையும் விருந்தினர்க்குக் கொடுப்பார்கள்; தேனையும் கனியையும் திருத்தி உண்பார்கள்; பதனிட்ட புலித்தோலைப் பாயலாக விரித்துக் கவலையின்றி உறங்கிக் காலையில் எழுந்து கடவுளைத் தொழுவார்கள். இத்தகைய எளிய வாழ்க்கையின் அழகினை,

கொழுங்கொடியின் விழந்தவள்ளிக் கிழங்குக்கல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துழல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழந்துவினை கெடுப்போம் எங்கள்குறக் குடிக்கடுத்த இயல்பிதுகாண் அம்மே

என்று குறவஞ்சியின் வாயிலாகக் குமரகுருபரர் அருளிப் போந்தார்.

‘புலவர் பாடும் புகழுடைய’ பொதியமலையைத் தன்னகத்தே கொண்ட தென்தமிழ்நாட்டிற் பிறந்து, முருகவேள் அருளால் முத்தமிழ்ப் புலமைவாய்ந்து விளங்கிய முருகதாசர், குறுமுனிவன் வாழும் தமிழ்மலையைப் போற்றிப் புகழும் பான்மை புதியதோர் இன்பம் தருவதாகும். கங்கையாற்றைத் தரும் வடமலையினும், காவிரியாற்றைத் தரும் குடமலையினும், பொருனையாற்றை நல்கும் பொதியமலையே சிறந்ததென்று அப்புலவர் கூறுகின்றார்.

என்றுமுள தென்தமிழை இயம்பி இசைகொண்ட குறுமுனிவன் என்றும் இனிதமர்ந்து தமிழ் வளர்க்குமிடம் பொதியமலையே யாதலால் அம் மலை ஏனைய மலைகளினும் மாண்புடையதென்பது அவர் கருத்தாகும். முத்தமிழும் செழித்து வளரும் பொதியமலையில் முருகவேள் அருள் பெற்றுவாழும் திருமுனிவன் பெருமையை,

கந்தன் அம்பொற் கழற்றுணை நீங்குறச்
சிந்தனைக் குறுமாழனி சேர்தலால்
அந்தமால்வரை அன்புசெய் வார்க்கெலாம்
சந்தழத்தமி ழைத்தரத் தக்கதே

என்று அடிகள் போற்றுகின்றார். மறைமொழி யென்னும் திரு மொழியை மாதொரு பாகனார்க்குக் ‘கொஞ்சித் தமிழாற் பகர்ந்த கும ரேசனை’ வழிபட்டு அருள்பெற்ற குறுமுனிவன் வாழும் மலையை முருகதாசராய அடிகள் புகழ்ந்து போற்றுதல் முறையேயன்றோ? முத்தமிழ்த் தலைவனாய முருகனைப் போற்றும் குறுமுனிவன் உறையும் தமிழ்மலை, அன்போடிறைஞ்சி அகங்குழைவார்க்கு முத்தமிழ்ச் செல்வமும் வழங்கும் தகுதிவாய்ந்ததென்பது அடிகள் கருத்தாகும்.

இத்தகைய புகழ்வாய்ந்த பொதியமலையின் பெருமைக்கு முருக தாசர் பிறிதொருசான்று தருகின்றார். பொன்மலையெனவும், வெள்ளி மலையெனவும், இவ்வுலகிலுள்ள உயரிய மலைகளைச் சிறப்புப் பெயர்களாற் குறிக்கும் தமிழ்க்கவிஞர் ‘மலையம்’ என்னும் பொதுப் பெயரால் பொதியமாமலையைக் குறிக்கும் பான்மை அம்மலையின் இணையற்ற சீர்மைக்கு ஏற்ற சான்றாகுமென்று அடிகள் எண்ணுகின்றார். தமிழ்நூல் வழக்கில் ‘பூ’ என்னும் பொதுப்பெயர், திருமகள் உறை யும் செந்தாமரையைச் சிறப்புறக் குறித்தல்போலவும், ‘ஊர்’ என்னும் பொதுப்பெயர், வளவர் வாழ்ந்த பழம்பதியாய் உறையூரைக் குறித்தல் போலவும், ‘மலையம்’ என்னும் பொதுப்பெயர் தமிழ்மலையாய பொதியமாமலையையே குறிப்பதாகும். இவ்வுண்மை,

மலையத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றல்

என்று இளங்கோவடிகள் பொதியமலைத் தென்றலைப் புகழுமாற்றால் இனிதுவிளங்கும். இங்ஙனம் நினைப்பிற்கும் எட்டாத நெடுங்கால மாக நிலவும் நூல்வழக்கினை ஆதரவாகக்கொண்டு பொதியமலையின் சிறப்பினை முருகதாசர் உணர்த்தலுற்றார்.

கலையுணர்வார் பலர்தாமும் தொன்றுதொட்டிந்
நாள்வரையும் கடல்சூழ் பாரில்
நிலைபெறுபொன் மலைவெள்ளி மலையாதி
யனகோடி நிலவக் கண்டும்
புலைவெறுத்துச் சாபமிட்ட புகழ்முனிவன்
வசிப்பிடமாம் பொதியை என்னும் மலையழகு மிகப்பொலிதல் உணர்ந்தன்றே
மலையமென வகுக்கின் றரே”

என்னும் முருகதாசர் வாய்மொழி தமிழ்மக்கள் உள்ளத்தில் புதியதோர் ஆர்வத்தை எழுப்புவதாகும்.

இனி, செந்தமிழ்நாட்டின் சென்னியாய்த் திகழ்வது வேங்கட மென்னும் விழுமிய மலையாகும். பழந்தமிழ்ப் பனுவலாய தொல் காப்பியம் எழுந்த காலத்திற்கு முன்னமே வேங்கடமலை தமிழ்நாட்டின் வடஎல்லையாக விளங்கிற்று. வானுற ஓங்கிய அவ்வடமலையில் திருமால் கோயில் கொண்டருளினார். அக்காரணத்தால் திருவேங்கடம் என்னும் திருப்பதி ‘நெடியோன் குன்றம்’ என வழங்கலாயிற்று. அம்மலையில் திருமால் நின்று இலங்கும் கோலத்தைச் சிலப்பதிகாரம் அழகொழுக எழுதிக்காட்டுகின்றது. ஆழியும் சங்கும் அங்கையி லேந்தி, அழகிய ஆரம் மார்பிலணிந்து, பொலம்பூவாடை புனைந்து திருமால் வடமலையிற் காட்சி தருகின்றார்.

வடமொழி வழங்கும் நெடுநிலத்திற்கும் தென்மொழி நிலவும் தமிழகத்திற்கும் இடையே நின்று எல்லைகுறிக்கும் பெருமை வேங் கடத்திற்குரியதாகும். ஆரிய மணமும் அருந்தமிழ் மணமும் ஒருங்கே கமழும் அம்மலையில் முனிவரும் சித்தரும் மகிழ்ந்துறைவாராயினர். அம்மலையினின்று வீழும் அருவியில் அருமறை அறிந்த அந்தணரும், மெய்யறிவுபெற்ற மேலோரும், சிந்தையை அடக்கிய சித்தரும் நாள்தோறும் நீராடிச் செல்லும் நீர்மையைக் கம்பர் புகழ்ந்து போற்றியுள்ளார்.

அம்மலைச்சாரலில் விரைந்துசெல்லும் ஆறுகளில் அருமறை யோர் நீராடும் அழகும், அவற்றின் இருமருங்கும் அமைந்த தவச் சாலைகளில் மாதவத்தோர் உறையும் மாண்பும், குறிஞ்சிநிலமாதர் பண்ணொடு பாடும் இசைப்பாட்டின் இனிமையும் மாந்தர் மனத்தைக் கவர்வனவாகும். பல்லாண்டு மறைபயின்று பண்புற்ற ஆன்றோர், விரையுறு நறுமலர் ஏந்தி வடமலைப் பெருமானை வணங்கும் கோலம் விண்ணவரும் கண்டு வியக்கத்தக்கதாகும். இந்நீர்மை வாய்ந்த நெடுமலை ‘புகழ்பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்றது’ என்று கம்பர் புகழ்ந் துரைத்தார். இங்ஙனம் வடமலையில் திருமாலும், தென்மலையில் குறுமுனியும், அகலாது நின்று காத்தருளும் பேறுபெற்ற தமிழ் நாட்டின் பெருமையை,

நீலத் திரைக்கட லோரத்தி லேநின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லைவட
மாலவன் குன்ற மிவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.
முத்தமிழ் மாமுனி நீள்வரை யேநின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடுசெல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே அவை
யாவும் படைத்த தமிழ் நாடு.”

என்று பாரதியார் புகழ்ந்து மகிழ்ந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *