ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

22. தமிழ்த்தாயின் முறையீடு

தமிழ்மொழி வழங்கும் தென்னாடு தெய்வத் திருநாடென்று போற்றத்தக்கதாகும்; ஆன்றோர் வாழும் நாடென்று அறிந்து வழுத்தத் தக்கதாகும். “பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற” பெருமான், வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாய் அமைந்த வேங்கடமலையில் நின்று அருந்தமிழைக் காக்கின்றான். நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவஞ்செய்யும் கன்னித் தெய்வம் கருங்கடலைக் கையமர்த்திக் காவல்புரிகின்றாள். இன்னும் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்த முத்தமிழ் முனிவர், புகழ்பூத்த பொதியமாமலையில் அமர்ந்து தமிழகத்தைக் கண்ணினைக் காக்கும் இமைபோற் காத்தருள்கின்றார். இங்ஙனம் வடபால் நீல மேனி நெடியோனும், தென்பால் கன்னித் தெய்வமும், குடபால் அருந்தவ முனிவரும். கருத்துற நோக்கிக் காவல்புரிதலால் செந்தமிழ் நாடு தெய்வக்காவலில் அமைந்த திருநாடாகப் பாரதியார் உள்ளத்தில் தோன்றுகின்றது.

இத்தகைய திருநாட்டிற் பிறந்து வளர்ந்த தமிழ்மொழியின் முற்காலப் பெருமையையும், பிற்காலச் சிறுமையையும் தமிழ்மக்களுக் குணர்த்தக் கருதிய பாரதியார், தமிழ்த்தாய் முறையிடும் பான்மை யில் உருக்கமாகப் பாடியுள்ளார்.

தலையிலணிந்த சூளாமணி சரிய, இடைடையிலணிந்த மணிமேகலை தளர, இணையடிச் சிலம்புகள் புலம்ப, கண் கலங்கி நிற்கும் தமிழன்னை தன் தகை சான் ற மக்களை நோக்கி ‘என் ஆருயிர் மக்காள்! ஆதிசிவனருளால் இந்நானிலத்தில் தோன்றினேன்; முத்தமிழறிந்த முனிவரருளால் திருந்தினேன்; நற்றமிழ் மன்னரது செல்வச் சிறுமியாய்ச் செழித்து வளர்ந்தேன்; அறிவறிந்த மக்கள் ஆக்கியளித்த காவியக் கலனணிந்து விளங்கினேன்; இடைக்காலத்தில் பல நல்லணிகளைக் காலமென்னும் கள்வனிடம் பறிகொடுத்தேன்; இன்று வறுமையுற்று வாடுகின்றேன்; பசையற்ற மாக்கள் பேசும் வசைமொழி என் செவியினைச் சுடுகின்றது; உள்ளத்தை அறுக்கின்றது; புத்தம் புதிய கலைகள் மேலை நாடுகளில் மெத்த வளர்கின்றனவாம். அக் கலைகள் ஐம்பெரும் பூதங்களின் திறத்தினை நுணுக்கமாக உணர்த்து கின்றனவாம்.

அம்மேன்மைக் கலைகள் என்பால் இல்லையாம். மேலை நாட்டு மொழிகளே இனி மேலோங்கி வளர்ந்து வாழுமாம். யான் மெல்லத் தளர்ந்து மேன்மையிழந்து அழிந்து ஒழிவேனாம். இவ்வாறு மதியிலார் உரைக்கும் மாற்றம் அறியீரோ? பேதையர் கூறும் புன்மொழி உணரீரோ? இவ்வசை மொழி என்பாலமைய நீர் வாளாவிருத்தலாகுமோ? எட்டுத் திசையும் சென்று கிட்டிய கலைகள் யாவும் கொணர்வீர்,புத்தணி புனைந்து என் நலத்தினைப் புதுக்குவீர். நல்ல கலைப்பொருள் அனைத்தையும் வாரிக் கொணர்ந்து நல்குவீர். ஆதி பகவன் அருள் வலியாலும், இன்று சார்ந்த புலவரது தவவலியாலும் அப்பேதையர் உரைத்த பெரும்பழி ஒழியும்; புகழ் ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்’ என்று தமிழன்னை தன் ஆற்றாமையை அறிவித்துத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்புகின்றாள்.

இங்ஙனம் தமிழ்த்தாயின் வாய்மொழியாகப் பாரதியார் எழுதியுள்ள பாட்டின் கருத்து அறிந்து போற்றுதற்குரியதாகும். மேலை நாடுகளில் நாள்தோறும் நலமுற்றோங்கி வளரும் நவீனக் கலைகள் தமிழ் மொழியில் இல்லை யென்பதுண்மையே. அக்குறைபாடறிந்து தமிழன்னை வருத்தமுற்றாளேனும் சீற்றமுற்றாளல்லள். மேலை நாட்டுக் கலைகளிலமைந்த அரும் பொருள்களை எடுத்துரைக்கும் திறம் தமிழ் மொழிக்கில்லை என்றும், அத்திறமின்மையால் இனி மெல்லத் தமிழ் மொழி இறந்து படுமென்றும் விரிவிலா அறிவினார் கூறும் வசை மொழி கேட்டுத் தமிழ்த்தாய் வெகுள்கின்றாள்; அருந் தமிழின் ஆற்றலறிந்தவர் எவரும் அவ்வாறு உரை செய்யாராதலால் கூறத்தகாதவன் கூறினன்’ என்றாள். தமிழ் மொழியின் நீர்மை உணராத முழு மகனே அவ்வாறு உரைக்கத் துணிவனாதலால் ‘அந்தப் பேதை உரைத்தான்’ என்று அன்னை அவனைச் சுட்டி இகழ்ந்துரைத்தாள். ஆயினும் அத்தீய வெஞ்சொல் அன்னையின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்கின்றது. வாள்போல் அழுந்தி நின்று அறுக்கின்றது. தகவிலார் கூறும் வசையினைத் தீர்த்து இசையினை நல்குமாறு அருந்தமிழ் மக்களை அன்னை வருந்தி அழைக்கின்றாள்.

ஆங்கிலம் முதலிய மேலைநாட்டு மொழிகளையறிந்த மாணவர் கடமையைப் பாரதியார் பண்புற கூறுகின்றார். பிறநாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும். அக்கலைகளிலமைந்த புதிய கருத்துக்களை உணர்த்தும் பெற்றி வாய்ந்த பழந்தமிழ்ச் சொற்கள் பண்டைப் பனுவலிற் பதிந்து கிடக்குமாயின் அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்காற்றில் உய்த்தல்வேண்டும். புதிய சொற்கள் வேண்டுமாயின் தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண் டும். நல்ல நூல்களை மொழி பெயர்த்தும், நவீன நூல்களை இயற்றி யும் தமிழ் மொழியின் கலைச்செல்வத்தைப் பெருக்க வேண்டும். இங் ஙனம் விரைந்து பணி செய்ய முற்படாது தமிழ் மொழியின் பழம் பெருமை பேசிமகிழ்தலாற் பயனில்லை. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. ‘கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து, பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழ்’ என்று பாராட்டுவதனால் தமிழ்மொழி பரவிவிட மாட்டாது. என்று முளதென்றமிழ் என்று இறுமாந்து பேசுதலால் தமிழ்மொழி ஏற்றமுறமாட்டாது. ‘சங்கத்திருப்பிலேயிருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை’ என்று வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ் மொழி வளர்ந்துவிட மாட்டாது. தாய்மொழித் தொண்டு செய்யக் கருதும் தகைசான்ற அறிஞர் பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட்டொழித்து, தமிழ் மொழியின் குறைகளை அறிந்து, பணிசெய்ய முற்பட வேண்டும். தமிழ் நாட்டிலமைந்த பல்கலைக் கழகங்கள் மேலை நாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். அரசியலாளர் அம் முயற்சியை ஆதரிக்க வேண்டும். தமிழன்னை மீண்டும் தலைசிறந்து விளங்கும் காலம் வருமோவென்று ஏங்கித்தளர்பவர் இந்நாளிற் பலராவர். இங்ஙனம் தமிழ்ச் சேய்களிற்சிலர் மயங்கித் தளர்ந்தாலும் தமிழ்த் தாய் மனம் தளரவில்லை; உரனிழந்த மக்கள் மனத்தைத் தேற்றுகின்றாள்; எத்திசையும் புகழ்மணக்க மீண்டும் தான் ஏற்றமுறுங்காலம் அண்மையில் வருமென்று அறிவிக்கின்றாள்; “ஆதிசிவன் அருளாலும் அறிவறிந்த என் மக்கள் ஆர்வத்தாலும் வீறுபெற்று விளங்குவேன்” என்று தமிழன்னை வாயிலாகப் பாரதியார் கூறும் வாய் மொழி கார்மேகத்தினிடையே இலங்கும் கதிரொளியாகும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *