
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
6. கனியும் காயும்
மலைவளமுடைய தமிழ் நாட்டில் முற்காலத்தில் அருந்தவம் முயன்ற முனிவர்கள் காய் கனிகளை அருந்தி வாழ்ந்தார்கள். நாவிற் கினிய நற்கனிகளும் காய்களும் தமிழ்நாட்டுத் தென்மலையில் மாண்புற நிறைந்திருந்தமையால் ஆன்றோர் பலர் அம்மலையில் வாழ்ந்து அருந்தவம் புரிவாராயினர். திருமுனிவன் வாழும் பொதியமலையில் பன்னீ ராண்டு முனிவர் ஒருவர் அருந்தவம் புரிந்தார். நெடுந்தவம் முடிந்த நிலையில் பசி நோயின் கொடுமையறிந்த முனிவர் அம்மலையிலிருந்த ஒரு நாவல் மரத்தின் நற்கனியைக் கொய்து அதனைத் தேக்கிலையிற் பொதிந்து அங்கையிலேந்தி அருகேயிருந்த ஆற்றை நோக்கிச் சென்றார். பன்னீராண்டுக்கு ஒருமுறை பழுக்கும் பெருமை வாய்ந்த அக்கனியை ஆற்றங் கரையில் வைத்துவிட்டு முனிவர் நீராடப் போந்தார். அப்பொழுது அவ்வழியாகத் தன் காதலனுடன் களித்து விளையாடி வந்த ஒரு சிறுமி அதனைக்காலால் மிதித்துச் சிதைத்தாள். அரும்பசி தீர்க்கும் பெருங்கனி சிதைந்தழியக் கண்ட தவ முனிவர் சீற்றமுற்று, பன்னீராண்டு கடும் பசியால் நலிந்துழலுமாறு பிழை செய்த பேதையைச் சபித்தார். அச்சாபத்தின் வலிமையால் அன்று முதல் வயிறு காய்ந்து வருந்திய மங்கை, பன்னீராண்டு அருந்துயருழந்த பின்பு அமுதசுரபியினின்று மணிமேகலை வழங்கிய அன்னத்தை உண்டு பசி தீர்ந்தாளென்று பழஞ்சரிதை கூறுகின்றது. இத்தகைய நாவற்கனிபோன்று, கடும்பசியைக் கொல்லும் கருநெல்லிக் கனியும் முற்காலத்தில் தமிழ் நாட்டு மலைகளில் இருந்ததாகத் தெரிகின்றது.
பழந்தமிழகத்தில் வறுமையின் பகைஞராய் வள்ளல்கள் பலரிருந்தார்கள். அவர்களுள் குதிரைமலைக் கோமானாகிய அதிகமானும் ஒருவன். வறுமையுற்று வருந்திய மக்கள் பலநாட் செல்லினும் பலருடன் செல்லினும், அவரை இனிய முகத்தோடு ஏற்றுப் போற் றிய அவ்வள்ளலின் பெருமையை,
“ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாட் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ“
என்று ஒரு கவிஞர் பாடி மகிழ்ந்தார். இத்தகைய ஆண்மையும் வண்மையும் வாய்ந்த அதிகமான் அமுதம் சுரக்கும் நெல்லிக் கனியின் வரலாற்றைக் கேள்வியுற்று அதனை அருந்தி நீடு வாழ ஆர்வமுற்றான். மந்தியுமறியா மரங்கள் செறிந்த தென்மலையில், நெல்லியின் பளிங்கரும் அணுகுதற்கரிய விடரொன்றில் நின்ற கரு நெல்லியின் பெருமையை அறிந்த காவலன் பல்லாண்டுகளாகப் பெரிதும் முயன்று, விடரை நண்ணுதற்குத் தடமமைத்து, மருந்து தூவி மலை வண்டுகளை விலக்கி, மஞ்சினில் மறைந்திருந்த செழுங்கனியைக் காவலாளர் மூலமாகப் பெற்றான்.
பல்லாண்டுகளுக்கு ஒரு முறை பழுக்கும் பான்மை வாய்ந்த அந்நெல்லிக்கனியின் வண்ணத்தை வள்ளல் அங்கையில் வைத்து நோக்கி அகமகிழ்ந்திருக்கையில், சொல்லின் செல்வியாய ஒளவையார் செந்தமிழ்க் கவிபாடி அவன் முன்னே சென்றார். அப்பாட்டின் சுவையைச் செவிவாயாகப் பருகிய அதிகமான் மதுவுண்டவன் போல் மகிழ்வுற்றான். அதிமதுரக் கவிபாடிய ஒளவையார்க்கு அமுதம் பொழியும் நெல்லிக்கனியே ஏற்ற பரிசென்றெண்ணி அங்கையில் இருந்த கனியை அவரிடம் அகமலர்ந் தளித்தான். அந்நெல்லிக் கனியினை ஔவையார் அருந்தியபொழுது அதன் அருந் தீஞ்சுவையினை அறிந்து திகைப்புற்றார். அந்நிலையில் அதிகமான் அந்நெல்லிக்கனியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்துச் செழுந்தமிழ்க் கவி பொழியும் செந்நாப்புலவர்க்கு அமுதம் சுரக்கும் அருங்கனியே அமைந்த உணவாகும் என்று மன மகிழ்ந்துரைத்தான். பலநாள் முயன்று வருந்திப் பெற்ற அருங்கனியைத் தானருந்தி இன்புறக் கருதாது பாடிவந்த வறிஞர்க்கு அதனைப் பரிசாக அளித்த வள்ளலின் அருங்குணத்தை ஒளவையார் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார்.
“போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றெருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே“
என்று கனியுண்ட ஒளவையார் பாடி அருளினார். ‘பொன்னொளி மாலையணிந்த வள்ளலே! அணுகுதற்கரிய மலை விடரில் அமைந்த இனிய கனியின் அருமையும் கருதாது, பெரும்பயனையும் குறியாது அக்கனியை என்னிடம் உவந்தளித்தனையே! உன் பெருமையை ஏழையேன் எவ்வாறு புகழ்வேன்? பாலாழியில் எழுந்த அமுதினைப் பிறர்க் களித்து நஞ்சுண்டு கண்டம் கறுத்த செஞ்சடை வானவன்போல் நீயும் என்றென்றும் இவ்வுலகில் வாழ்வாயாக’ என்று நிறைந்த மொழிகளால் ஒளவையார் அருளிய வாழ்த்துரையில் கருநெல்லிக்கனியின் வரலாறும், அதனை அன்புடன் அளித்த அதிகமானது வள்ளன் மையும் ஒருங்கே விளங்கக் காணலாம்.
ஒருவன் உண்ணும் பொருளைப் பசித்த உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்தலே அறங்களுள் எல்லாம் தலையாகிய அறமென்று தமிழ் மறை கூறுகின்றது.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை“
என்பது வள்ளுவர் வாய் மொழியாகும். இங்ஙனம் பகுத்துண்டு பழகிய நல்லோனை எந்நாளும் பசிப்பிணி நலிவதில்லையென்று நாயனார் கட்டுரைத்தார். இன்னும் பசித்தோரைப் பார்க்கவைத்து உணவருந் தல் ஆகாதென்றும், அருந்தும் பொருள் வான் அமிர்தமே யெனினும் விருந்தினரை விலக்கித் தனித்துண்ணல் தீதாகுமென்றும் தமிழ்மறை அறுதியிட்டுரைக்கின்றது. இவ்வாறு அறநூலோர் விதித்ததற்கும் மேலாகத் தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பெருந்தகைமை சாலச் சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும். தான் அருந்திப் பயன்பெறுமாறு வருந்திப் பெற்ற அருங்கனியை ஔவையாருடன் பகுத்துண்ணவும் எண்ணாது, முழுக்கனியையும் அக்கவிஞர்க்கு ஈந்து மகிழ்ந்த வள்ளலின் பெருமை உலகமுள்ளளவும் அழியாத தன்றோ இப் பண்பினைக் கண்டு வியந்த மற்றொரு புலவர்,
“கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக் கீந்த
உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடற்றனை அதிகன்”
என்று புகழ்ந்துரைத்தார்.
இத்தகைய அமிழ்தூறும் அருங்கனிகள் தமிழகத்தில் முற்காலத்தில் இருந்தமையாலேயே, ‘கனியிருப்பக் காய்கவர்தல் ஆகாது’ என்று கற்றறிந்தோர் கருதுவாராயினர். கனி என்னும் சொல் பொதுவாகப் பழங்களை எல்லாம் உணர்த்துமாயினும் சிறப்பு வகையில் அமிழ்தம் பொழியும் அருங்கனிகளையே குறிக்குமென்பது ஆன்றோர் கருத்து.
“இனிய வுளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
என்னும் திருக்குறளில் அமைந்த ‘கனி’யென்னும் சொல், ஒளவை யுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தான கனிகளைக் குறிக்குமென்றும், ‘காய்’ என்பது காஞ்சிரங் காய்போல நஞ்சான காய்களைக் குறிக்கு மென்றும் பரிமேலழகர் விளக்கியருளினார். இன்னும் பெரு நெறியினின்று விலகி இறைவனைப் போற்றாது ஆற்ற நாள் போக்கிய புன்மையை நினைந்து வருந்திய திருநாவுக்கரசர்,
“கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆநராரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வனேனே“
என்று அருளிய தேவாரத்திருப்பாட்டிலும் ‘கனி’ என்னுஞ் சொல் அழியாப் பெருவாழ்வளிக்கும் அமுதக்கனியையே குறிப்பதாகும். இத்தகைய கனியினைப் பெற்றும் அதனைத் தானருந்தி நீடு வாழ விரும்பாது தக்கார்க்கீந்து இன்பமுற்ற வள்ளலை ஈன்ற தமிழ் நாடு அறநெறியில் தலை சிறந்ததென்பதில் ஐயமுண்டோ?



