ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

15. ஊர்ப்பெயர்களின் உருமாற்றம்

ஒரு நாட்டில் வாழும் மக்களின் பண்புகளையும், பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதற்கு ஊர்ப்பெயர்கள் ஒரு சிறந்த கருவியாகும் என்பர். தமிழ் நாட்டில் வழங்கும் ஊர்ப்பெயர்கள் பெரும் பாலும் உருக்குலையாதிருப்பினும் சில அழகிய பெயர்கள் சிதைந்தும் பிறழ்ந்தும் தம் வனப்பிழந்திருக்கின்றன. காவிரியாற்றின் கரையில் கண்ணுக்கினிய தண்ணறுஞ்சோலையினடுவே நின்ற பழம்பதி மயிலாடுதுறை யென முற்காலத்தில் வழங்கலாயிற்று. பொன்னித் துறையில் மெல்லிய தோகையை விரித்தாடும் மயிலின் வண்ணம் அவ்வூர்ப்பெயரைக் கருதுவார் மனக் கண்ணெதிரே மிளிர்வதாகும்.

பூவார் சோலை மயிலாடப் புரிந்துகுயில்கள் இசைபாடக் காமர்மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி

என்னும் வரிப் பாட்டுக்கிசைய அமைந்திருக்கும் ஊர்ப்பெயரைக் கண்டு அறிஞர் மனங்களிப்பர். செழுந்திரையலைத்துப் பரந்து ஒழுகும் பொன்னியாற்றின் தென்கரையில் நிரந்து மணங் கமழும் நெடுஞ்சோலையின் நடுவே மயிலாடுதுறை அமர்ந்திருந்த அழகினைத் திருஞானசம்பந்தர் தேவாரப் பாட்டிலெழுதிக் காட்டியுள்ளார். பிற்காலத்தில் அவ்வூர்ப் பெயர் மாயூரம் என்றும் மயூரபுரம் என்றும் வடமொழியிற் பெயர்த்தமைக்கப்பட்டது. வழக்காற்றில் அப்பெயர் கள் சிதைந்து மாயவரமாயின. இப்பொழுது வழங்கும் மாயவரம் என்னும் பெயரில் காவிரித் துறையிற் களித்தாடும் கலாப மயிலின் கோலத்தைக் காண்பது எளிதன்று.

தென் தமிழ் நாட்டிலுள்ள திருக்குற்றால மலைச்சாரலில் ஒரு சிற்றூர் அமைந்துள்ளது. இக்காலத்தில் பம்புளி என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது. குறிஞ்சி வளம் படைத்த அச்சிற்றூரில் செம் மாந்ததெங்கும் கமுகும் செழித்து உயரும்; வேங்கையும் மருதும் ஒங்கி வளரும்; தேமாவும் பலாவும் தீங்கனி உதிர்க்கும்; செண்பகமும் முல்லை யும் செழுமணம் கமழும்; வண்டும் குயிலும் பண்ணார்ந்த பாட் டிசைக்கும். இவ்வாறு இயற்கையன்னை களித்து நடம்புரியும் காமர் பூஞ்சோலையைப் ‘பைம்பொழில்’ என்னும் அழகிய பெயரால் பண்டைத் தமிழ் மக்கள் அழைத்தார்கள். பாநலமறியாப் பாமரர் நாவில் பைம்பொழில் நுழையாமையால் பம்புளி என்னும் பண்பற்ற பெயரை அவ்வூர் இன்று தாங்கி நிற்கின்றது.

சேர நாட்டின் கண்ணுள்ள ஒரு மலை ஏழில் மலை என்னும் பெயர் பெற்றிருந்தது. அம்மலையையும் அதைச் சான்ற நாட்டையும் ஆண்ட குறுநில மன்னரைத் தமிழ்க்கவிஞர் பாடியுள்ளார்கள். ‘இருள்தீர் மணிவிளக்கத்து ஏழிலார் கோவே’ என்று ஒளவையார் அம்மலைநாட்டு மன்னனை விளித்துப் பாடிய பாட்டைத் தொகைநூல் களிற் காணலாம். ஏழில்மலையிலமைந்த சிறப்பெழுத்தாய ழகரத்தை ஒலிக்கமாட்டாத பொதுமக்கள் அதனை எலிமலையாக்கினர். எலிமலையைக் குறித்து வடமொழியில் ஒரு காவியம் எழுந்திருக்கின்றது. மன்னர் குலத்தை வேரறுப்பதாக வஞ்சினம் பூண்ட பரசுராமன் ஓர் அரசனைக் கொன்றான் என்றும், கருவுற்றிருந்த அவன் மனைவி தப்பியோடி ஒரு குகையில் ஒளித்திருந்தாள் என்றும், அங்கு யானையினளவினதாய ஓர் எலி தோன்றி அவளைக் கடித்து விழுங்க முயன்ற தென்றும், வீரக் கற்பரசியாய அம்மங்கை தன் கண்ணழலால் அவ் வெலியை எரித்து வீழ்த்தினாள் என்றும், அப்பேரெலி எரிந்து விழுந்த இடத்தில் எழுந்த பெருமலை எலிமலை எனப்பட்டதென்றும், அம்மலையில் அரசி ஈன்ற மைந்தன் மூசிக வம்சத்தின் முதல்வனாயினன் என்றும் அக்காவியம் கூறுகின்றது. சேரநாட்டுக் கடற்கரையில் வாணிகம் செய்யப்போந்த ஐரோப்பிய நாட்டினர் எலிமலையை Rat Mountain என மொழிபெயர்த்து அமைத்துக்கொண்டார்கள்.

இன்னும், பழம் பெருமைவாய்ந்த தமிழ்நாட்டில் வடமொழிக் கதைகள் பரவியபொழுது பல ஊர்ப்பெயர்கள் தம் இயற்பொருள் இழந்து புதுப்பொருள் புனைந்தன. திரிசிரபுரம் என்று கற்றோராலும், திருச்சினாப்பள்ளி என்று பொதுமக்களாலும் அழைக்கப்படுகின்ற ஊர்ப்பெயரின் வரலாறு இவ்வுண்மைக்கு ஒரு சான்றாகும்.

தென்னாட்டில் தேவாரப் பாடல் எழுந்த காலமாகிய ஏழாவது நூற்றாண்டில் அவ்வூர் ‘சிராப்பள்ளி’ என்னும் பெயருடன் விளங்கிற் றென்பது திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறியப்படும். ‘நன்றுடை யானைத் தீயதில்லானை’ என்று தொடங்கும் நற்றமிழ்ப் பதிகத்தில் ‘சிராப்பள்ளி’ என்னும் பெயர், பதினொரு பாட்டிலும் அமைந்திருக்கக் காணலாம். தேவாரப் பாமாலைபெற்ற பதிகள் ‘திரு’ என்னும் அடைபெற்று விளங்கலாயின. அம்முறையில் பாடல்பெற்ற சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி என்று வழங்கலாயிற்று. வடமொழியில் எழுந்த இராமாயணக் கதை தமிழ்மக்கள் கருத்தைக் கவர்ந்த பொழுது திருச்சிராப்பள்ளி அதனோடு தொடர்புறுவதாயிற்று.

இலங்கையில் வாழ்ந்த அரக்கர் குலத்தினர் சைவ சமயத்தினர் என்பது வடமொழிக் காவியத்தாலும், அதன் வழிவந்த கம்பர் காவியத்தாலும் நன்கு விளங்குகின்றது. இலங்கையர் கோன், ‘ஈசனை இமையா முக்கண் இறைவனை’ வழிபடும் இயல்பினன் என்று கம்பர் குறித்துள்ளார். ‘இராவணன் மேலது நீறு’ என்று அரக்கர்கோன் மேனியில் விளங்கிய வெண்ணீற்றைத் திருஞானசம்பந்தர் போற்றி யுரைத்தருளினார். அம்மன்னன் உடன்பிறந்தவருள் ஒருவனாய திரிசிரன் என்பான் விந்தியமலைக்குத் தென்பாலமைந்த தண்டக வனத்தைச் சார்ந்த இடங்களில் வதிந்ததாகத் தெரிகின்றது. முத்தலை வீரனாய் திரிசிரனும் அரக்கர் குலத்திற்குரிய சிவவழிபாட்டை மேற் கொண்டிருந்தான். திரிசிரனைத் ‘திரிசிரா’ என்றும் வழங்குவதுண்டு. இத்தகைய வீரன் பெயரைத் திருச்சிராப்பள்ளியோடு சேர்த்துக் கவிஞர் கற்பனை விளைத்தார்கள். திரு என்னும் அடை திரி எனத் திரிந்தது. திரிசிராவின் பள்ளி திரிசிரபுரம் எனப்பட்டது. இப்பொழுது அவ்வூர்க்கு வழங்கும் ‘திருச்சி’ என்னும் நாகரிகப் பெயரிலுள்ள ‘திரு’ என்னும் பழைய அடையைப் பெயர்த்துவிட்டால் எஞ்சி நிற்கும் ‘சிகரம்’ ஒன்றே தற்காலத் தமிழுலகம் அதற்களித்த சிறப்பாகும்.

இனி, பழந்தமிழ் நூல்களிற் குறிக்கப்படும் ‘அயிரை’ என்னும் தமிழ்நாட்டு மலை பாரதக் கதையொடு தொடர்புற்ற வகையும் அறியத்தக்கதாகும். அயிரை யென்னும் மலையில் அமைந்த வீரத்தெய்வ மாகிய ‘கொற்றவை’யைத் தமிழ்நாட்டுப் பெருமன்னர்கள் போற்றியுள்ளார்கள். அயிரை மலையைப் பொதுமக்கள் ‘ஐவர்மலை’ யென்று சிதைத்து வழங்கலாயினர். ஐவர்மலை யெனவே பாரதப் போரில் வெற்றிபெற்ற பாண்டவர் ஐவர்க்கும் உரிய மலை யென்று பாராட்டுவது கற்பனைத் திறனுடையார்க்கு எளிதாயிற்று. அயிரை மலையில் வீற்றிருந்த கொற்றவை ஐவர்மலையில் பாண்டவர்க்குத் தேவியாய பாஞ்சாலியாயினள். இவ்வாறே மாமல்லன் என்னும் பல்லவமன்ன னால் புதுப்பிக்கப்பெற்ற மாமல்லபுரம் என்னும் மணிப்பூம்பட்டினம் மக்கள் நாவில் மகாபலிபுரம் என்று மருவி, திருமாலடியால் அழிவுற்ற மகாபலி மன்னனொடு தொடர்புற்று விளங்குகின்றது. இங்ஙனம் பழைய சாடியில் புதிய மதுவை வார்த்துவைக்கும் முறை, புராணமியற்றும் புலவர்க்கும், புதுமை விளைக்கும் பொதுமக்களுக்கும் உரியதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *