
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
8. கண்ணகிக் கூத்து
இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத்தமிழில் இயற்றமிழ், இனிய மொழிகளால் விழுமிய பொருளை விளக்கி, மாந்தர் அறிவினைக் கவர்ந்து உயரிய இன்பம் அளிப்பதாகும்; இசைத்தமிழ், செவியின் வாயிலாக உளத்தைக் கவர்ந்து உலப்பிலா இன்பம் பயப்பதாகும்;
நாடகத் தமிழ், இயற்றமிழின் அழகையும் இசைத்தமிழின் சுவையையும் காட்சியின் நலத்தொடு கலந்தளித்து மனத்தை மகிழ்விப்பதாகும். நாடகசாலைக்குச் செல்வோர், மணிமுடி தரித்த மன்னரும் மதி நலஞ் சான்ற அமைச்சரும், வெம்படை தாங்கிய வீரரும், நல்லணி புனைந்த நங்கையரும், பிறரும் அவ்வரங்கத்தில் நடிக்கக் கண்டு களிப் புறுவர்;
பண்ணார்ந்த பாட்டின் இசைகேட்டு இன்புறுவர்; நாடகக் கதையில் அமைந்துள்ள கருத்தினை அறிந்து நலமுறுவர். இவ்வாறு கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்பமும் பயனும் ஒருங்கே எய்துவிக் கும் தன்மையாலேயே தமிழ்நாட்டு அறிஞர் நாடகத் தமிழைப் போற்றி வளர்ப்பாராயினர்.
மாந்தரை ஒழுக்கநெறியில் நிறுத்துவதற்கு நாடகம் ஒரு சிறந்த கருவியாகும் என்பர். நல்ல நாடகங்களைக் காணும் மக்கள் அறத்தா றறிந்து ஒழுகத் தலைப்படுவர். இம்மையிலும் மறுமையிலும் உயிர்க்கு இன்பம் பயக்கும் உயரிய உண்மைகளைக் கொண்ட கதைகளே முற்காலத்தில் நாடக மேடைகளில் நடிக்கப்பட்டமையால், மக்கள் பெரும்பாலும் நன்மையில் ஆர்வமும், தீமையில் அச்சமும் உடையராய் வாழ்ந்தார்கள். ஆனால் இக்காலத்தில் புன்னெறிப் பட்டோரை இன்புறுத்திப் பொருள் கவரும் நோக்கமே பெரும்பாலும் நாடகசாலையை இயக்குகின்றது. இதனாலேயே தற்கால நாடகங்களைக் காண்பதுவும் தீதென்று நல்லறிஞர் கருதுகின்றனர்.
இக்காலத்து மேடைகளில் நடிக்கப்படும் தமிழ் நாடகங்கள் பெரும்பாலும் பழந் தமிழ் நூல்களிற் கண்ட கதைகளைத் தழுவி எழுந்தனவாகும். ஆயினும் பழமையைப் புதுக்கிக் காட்டப்போந்த நாடகங்கள், பெரும்பாலும் வரையிழந்து, வனப்பிழந்து, பயனழிந்து பாழ்பட்டிருப்பதைக் கண்டு கற்றோர் உள்ளம் வருந்துகின்றது. தமிழ் நாட்டு நாடகமேடையில் நடைபெறும் கோவலன் என்னும் நாடகம், பழந்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்திலுள்ள சிறந்த கதையைத் தழுவி எழுந்ததாகும்.
எனினும் நாடகக் கோவல னுக்கும் சிலப்பதிகாரக் கோவலனுக்கும், நாடகக் கண்ணகிக்கும் காவியக் கண்ணகிக்கும் உள்ள வேற்றுமை புல்லுக்கும் நெல்லுக்குமுள்ள வேற்றுமையைப் போல்வதாகும். கோவலனைக் கோவிலன்’ என்றும், கண்ணகியைக் ‘கர்னகி’ என்றும் சிதைத்துவழங்கும் சிறுமை ஒருபுறமிருக்க, கற்பின் கொழுந்தாய கண்ணகி, நாடக மேடையில் ஆவேசமுற்று வெறியாட்டயர்வதும், தவறிழைத்த பாண்டியன் மார்பைப் பிளந்து அவன் குடலை மாலையாக அணிந்து குருதியிலே திளைத்துக் கூத்தாடுவதும், தமிழறிந்தோர் உள்ளத்தை வருத்து வனவாகும். பெண்மைக்குரிய நாணமும் மென்மையும் அமைந்த நல்லியற் கண்ணகியை அலகைபோல் அலறவைத்தல் அழகாகுமோ? காளியாட்டங் கண்டு கல்லார் உள்ளங் களிக்கும் என்னும் காரணத்தால் கண்ணகியின் மென்மையை அழித்தல் முறையாகுமோ? இன்னும் நீதி வழுவா நெறிமுறையில் நின்ற நெடுஞ்செழியன் என்னும் மாறன் உயிரை வலிந்து பிழிதலும் வேண்டுமோ? அறியாது பிழை செய்த அவ்வரசன் நீதி தவறியதென்றறிந்த பின்னர் உயிர் வாழ இசைவானோ?
நாடகக் கண்ணகியின் தன்மை இவ்வாறாக, காவியக் கண்ணகி யின் செம்மையும் மென்மையையும் சிறிது காண்போம். மதுரைமா நகரில் கோவலன் கொலையுண்டிறந்தான் என்றறிந்த கண்ணகி பாண்டி மன்னனிடம் வழக்குரைத்து நீதியை நிலை நிறுத்துமாறு காவிமலரனைய கண்கள் அவன் மாளிகையினுள்ளே சென்றாள்.
கண்ணகியின் கண்ணீர் சொரிய, கருங்கூந்தல் விரிந்துகிடக்க, ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்திக் கொற்றவன் முன்னே போந்த கோலத்தை,
“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்—வையக்கோன் கண்டளவே தோற்றன்“
என்று சிலப்பதிகாரம் உருக்கமாக உரைக்கின்றது, கண்ணீருகுத்த கண்ணகியைப் பாண்டியன் குழைந்து நோக்கி ‘மனம் வருந்தி வந்த மாதே நீ யார்?’ என்று வினவினான். அதற்கு மாற்றமுரைக் கப்போந்த மங்கை ‘அரசே! கன்றை இழந்த தாய்ப்பசுவொன்று மனங் கரைந்து கண்ணீருகுக்கக் கண்டு, அவ்வான்கன்றைக் கொன்ற தன் அருமந்த மைந்தன்மீது தானே தேராழி ஊர்ந்து முறை செய்த சோழ மன்னனது புகழமைந்த புகார் நகரமே என்பதியாகும். அந் நகரில் மாசாத்துவானுக்கு மகனாய்த் தோன்றி, ஊழ்வினைப் பயனால் உன் நகரிற் புகுந்து, கொலையுண்டிறந்த கோவலன் மனைவியே யான்’ என்று கொதித்துக் கூறினாள். அப்பொழுது அரசன்,’மாதே! கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோலன்று; அது நீதியின் நெறியே யாகும்’ என்று நேர்மையாய் உரைத்தான். கோவலன் குற்றமற்ற வனென்றும், அவனைக் குற்றவாளி என்று கொன்ற கொற்றவன் தவறிழைத்தான் என்றும், ஐயந்திரிபற விளக்கவந்த கண்ணகி, காவலனை நோக்கி, ‘நற்றிறம்படராக் கொற்கை வேந்தே! என் கணவன் கள்வனல்லன்; அவ்விணையரிச் சிலம்பில் ஒன்று இதோ, என் கையில் உள்ளது. இதன் உள்ளே அமைந்த பரல் மாணிக்கம்,’ என்று மயங்கா துரைத்தாள். அப்பொழுது மன்னவன் மனம் பதைத்து, அரண்மனைச் சிலம்பின் பால் முத்தென்று மொழிந்து, தன் காவலாளர் கோவலனிடமிருந்து கொணர்ந்த சிலம்பினை எடுத்துவந்து கண்ணகியின் முன்னே வைத்தான். அச்சில்லரிச் சிலம்பைக் கண்ணகி தன் செங்கையால் எடுத்து நோக்கிக் காவலன் கண்ணெதிரே அதனை உடைத்தாள். சிலம்பின் உள்ளே இருந்த மாணிக்கம் விரைந்தெழுந்து அரியணை மீதமர்ந்திருந்த அரசனிடம் தானே தகைசான்ற சான்றுரைப்பதுபோல் அவன் முகத்தில் தெறித்தது. தெறித்து விழுந்த மாணிக்கத்தை மன்னவன் கண் டான். அந்நிலையில் அவன் வெண்குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது; ‘பொற்கொல்லன் சொற்கேட்டுப் பிழை செய்தயானோ அரசன்? யானே கள்வன்; இதுகாறும் என் வழிமுறையில் இத்தகைய பிழை செய்தார் எவருமிலர். இன்னே என்னுயிர் முடிவதாக’ என்றுரைத்து மயங்கி மண்மீது விழுந்தான். விழுந்த மன்னன் எழுந்தானல்லன்.
“தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சோற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகஎன் னாயுளென
மன்னவன் மயங்கி வீழ்ந் தனனே“
என்று சிலப்பதிகாரம் ஏங்கி உயிர்துறந்த பாண்டியன் பெருமையை இரங்கிக் கூறுகின்றது. காவலன் மயங்கி விழுந்து மாண்டதைக் கண்ட கோப்பெருந்தேவி, கணவனை இழந்து நின்ற கண்ணகியின் கமலபாதம் பணிந்து, அரும்பிழை பொறுக்குமாறு வேண்டினாள்.
இங்ஙனம் அறநெறி பிழைத்த அரசனுக்கு அறமே கூற்றாக அமைந்தது. ‘அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றமாம்’ என்பது தமிழ் நாட்டு அரசியற் கொள்கையாகும். இவ்வுண்மையை உலகினர்க்கு உணர்த்துதல் சிலப்பதிகாரத்தின் குறிக்கோள் என்பது,
“அரசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றவதும்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்ப தும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்“
என்னும் அழகிய அடிகளால் நன்கறியப்படும். அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றமாக அமையுமென்றும், கற்பமைந்த மாதரை மக்களும் தேவரும் போற்றுவரென்றும், வினையின் பயனை விலக்கலாகாதென்றும், இவ்வுலக மாந்தர் அறிந்து உய்யுமாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றி அருளினார் என்பது இதனால் இனிது விளங்கும். இவ்வுண்மைக்கு முற்றும் மாறாக அரசியல் பிழைத்த பாண்டியன் அறத்தால் ஆவி துறவாது கண்ணகி யின் மறத்தால் ஆவி துறப்பதை நாடக மேடையில் காண்கின்றோம்! கணவனாய கோவலனையன்றி ஆடவர் எவரையும் சிந்தையாலும் தொடாச் செம்மைவாய்ந்த கண்ணகி, பாண்டியன் மெய் தீண்டி அவன் மார்பைப் பிளந்து உயிரைப் பருகப் பார்க்கின்றோம்! இவ்வாறு தமிழ்நாட்டு மன்னர் அறமும், மாதர் கற்பும் நிலைகுலையுமாறு நிகழ்த்தப்பெறும் கூத்தைக் கண்டு கல்லார் நெஞ்சம் களிக்குமெனி னும் பழந்தமிழ்நாட்டின் பெருமை பாழ்படுவதைக் கண்டு பயனறிந்தோர் வருந்துவர்.



