வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

11. பானம்

நம் உடம்புக்கு ஒரு நாளைக்கு இன்றியமையாது வேண்டப்படும் நீரின் அளவு சுமார் ஐந்து படி ஆகும். ஒரு நாளைக்கு ஒரு படித் தண்ணீருக் குறையாமல் உட்கொள்ளுவது முதியவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால், மலச் சிக்கலும் நீங்கும். பானத்திற்குச் சிறந்தது நல்ல நீரேயாகும். சிலர் தண்ணீர்க்குப் பதிலாகச் சோடா முதலியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். அஃது, அவ்வளவு நல்லதன்று. நன்னீர் இரத்தத்தில் உள்ள சூட்டையும் அழுக்கையும் குறைக்கும்; நோயையும் மாற்றும். அதற்குச் சுவை உண்டாக்கவேண்டினால், கஞ்சியையோ, எலுமிச்சம்பழ ரசத்தையோ, பழ ரசத்தையோ அதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.

பீர் என்னும் மதுவைக் குடிப்பது உடம்புக்கு நல்லதென்று ஆங்கில நாட்டில் சிலர் கருதுகின்ற னர். எனினும், அரிசி, உருளைக்கிழங்கு, சோளம் முதலியவற்றைப் புளிக்க வைத்து அம்மதுச் செய்யப்படுவதால், அது ஈரலுக்குக் கெடுதி செய்யுமென்றறிக. அஃது இரத்தத்திற் புளிப்பை உண்டாக்கி உணவு வெறுப்பை உண்டாக்கும். அதைச் செரித்துக் கொள்ளும் ஆற்றல் ஒருவர் வயதையும் உடலமைப் பையும் பொறுத்தது. அதைச் சீரணத்தின்பொருட்டுக் காற்படிக்கு அதிகமாகாமல் உட்கொள்ளுதலில் கெடுதியில்லை என்பாருமுளர். அஃது உடலுழைப் புக்குத் துணையாகுமென்று அறிவு நூல்கள் திட்ட மாகக் கூறவில்லை. முதியவர்கள் பீர் முதலியவற்றை அதிகமாகக் குடிப்பது முதுமைக்கு ஏதுவாவதுடன் ஆயுளையுங் குறைவுபடுத்தும். சில வகை ஒயின் பருகுவது உடம்புக்கு நல்லதென்பர் சிலர். உடம்பு பருத்தவர் அவற்றைக் குடித்தலினால் இடர்ப் படுவர். சில நோய்களுக்குப் ‘பிராந்தி’ நல்ல தென்பர். ஆனால், அதை அளவாகவே பயன்படுத்துதல் வேண்டும்.

வெறியுண்டாக்காத பானங்களுள் தேயிலையைச் சிலர் நல்லதென்கின்றனர்,ஆனால், வாத நோயுடையவர்களுக்கு அது நல்லதன்று. அது மூளைக்குச் சில வேளைகளில் ஊக்கமளிப்பினும், சூடான தேயிலைப் பானம் அசீரணத்தை உண்டுபண்ணி வயிற்றிற் புண்ணை உண்டாக்கும். தேயிலையைப் போலக் காப்பியிலும் அத்தகைய குற்றமுண்டு. இரண்டிலும் ஒருவிதமான நஞ்சிருத்தலால், அவற்றை மிகுதியாக உபயோகப்படுத்துதல் கூடாது. அவற்றிலிருக்கும் நஞ்சு இருதயத்தையும் நரம்பையும் பலவீனப்படுத்தும்; தூக்கத்தையும் கெடுக்கும். தேயிலையும் காப்பியும் உணவல்ல. அவை உடம்பின் இளைப்பைப் போக்கப் பயன்படுவனவே. காப்பியை விடக் ‘ கொக்கோ’ நல்லதென்பது தெரிகின்றது. தேயிலை உடம்பைப் பருக்க வைக்கின்றதென்றும், காப்பி அவ்வாறு செய்வதில்லையென்றும், காப்பி சில வகை உணவுகள் செரிப்பதற்குத் துணை செய்கின்ற தென்றும் சில அறிஞர் கருதுகின்றனர்.

ஊக்கமளிக்கும் பானத்தைவிட வெறியளிக்கும் பானமே மிகுந்த கேடு பயக்கும். ஒயின் மிகுந்த பிரான்ஸ் நாட்டில் ஒயின் குடிப்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் அதைப்பற்றிக் கூறுவ தாவது:

ஒயின் குடிப்பதால் ஒருவன் தன் பெற்றோர் மனைவி மக்களிடத்துள்ள அன்பை இழக்கின்றான் ; வேலையில் திறமை இல்லாதவனாகின்றான்; களவு முதலிய குற்றங்களை வழக்கமாகச் செய்ய முற்படுகின்றான். ஒயின் திமிர் வாதம், வயிற்றெரிச்சல், ஈரல் வீக்கம், இருமல் நோய், பயித்தியம் முதலிய நோய்களுக்குக் காரணமாகின்றது; குடிகாரனுக்கு வரும் நோய் எளிதிற்குணமாவதில்லை. மரணத் திற்கு அது முக்கிய காரணமாகும்.

வெறிநீர் இயற்கையிற் காணப்படாததொன்று.

இயற்கையிற்காணப்படும் இனிய நீர் மனிதன் செயலால் புளிப்புற்றுப் பொங்கி வெறிநீர் ஆகின்றது. பீர் முதலிய சிலவகைப் பானங்களில் வெறித்தன்மை குறைவாயும், சிலவற்றில் அதிகமாயும் இருக்கும், எனினும், வெறிநீர் நச்சுத் தன்மை உடையதாகலின், எவ்வகை வெறிப்பானத்தையும் உபயோகியாதிருத்தலே நல்லது. வெறி நீரில் ஒரு புழுவையாவது மீனையாவது இட்டால், அது உடனே செத்துப் போம். வெறி நீர் தனது நச்சுத்தன்மையால் வயிறு, நெஞ்சப்பை, ஈரல் முதலியவற்றுக்குத் தீங்கு விளைக்கும்.

வெறி நீர் உணவாகாது. ஏனெனில், உணவென்பது வயிற்றுள் சென்றதும் வயிற்றுக்குத் தீங்கு செய்யாமல் சீரணமாகும்;

வெறி நீர் வயிற்றில் சென்றதும் வயிற்றுக்குக் கேடு செய்து, சீரணமாகாமல் இரத்தத்தில் கலக்கும். வெறி நீர் உடம் பையும் அறிவையுங் கெடுக்கிறது. அது நோய்களுக்கு மருந்தாவதுமில்லை. சில நோய்க்கு உடல் மேலே தேய்ப்பதற்கு மாத்திரம் அது பயன்படலாம்.

வெந்நீரில் முழுகிக் குளிர் நீரை உடல் முழுவதிலுந் தெளித்துத் தோலை விரைவாகத் துடைப்பதனா லும், வேர்வை உண்டாகும்படி உடற்பயிற்சி செய்வ தாலும், காப்பி தேயிலை புகையிலை முதலியவற்றை ஒழிப்பதாலும், வெறிப்பொருள்களை உபயோகிப்ப தில்லை என்று மன உறுதி கொள்வதாலும், புலாலுணவை நீக்கி நல்ல பழங்களையும் நன்னீரையும் ஏராளமாகப் பயன்படுத்துவதாலும் குடிப்பழக்கத்தை ஒழித்துவிடலாமென்பது அறிஞர் கருத்து.

புகையிலை வெறியை உண்டாக்காவிட்டாலும் நச்சுத் தன்மை உடையதாயிருப்பதால், அதனை உப யோகியாதிருத்தலே நலம். புகையிலையில் நூற்றில் இரண்டு பங்கு (Nicotine) நச்சுப் பொருள் இருக்கிறது.

சீன தேசத்தில் புகையிலை நீரைக் குடிப்பதால் தற்கொலை நடந்திருக்கிறது.சில பிராணிகளின் நாவில் அதை வைத்தால், அவை இறந்து விடும்.

புகையிலை மூளையையும் நரம்புகளையும் உணர்ச்சியற்றனவாகச் செய்கிறது. புகையிலையின் நஞ்சு தாக்கிய நெஞ்சப்பை, சிறிது நேரம் மிக விரைவாய்த் துடிக்கும். ஒரு விநாடியில் அத்துடிப்பு நின்றாலும் நிற்கும். புகையிலை ஆயுளைக் குறைக்கின்றது என்பது இன்ஷியூரன்ஸ் கம்பெனியா ராலும் ரணச் சிகிச்சை வைத்தியர்களாலும் கூறப்படுகின்றது.

அது குருட்டுத் தன்மைக்கும் காரணமாகும். அஃது உதட்டையும் நாக்கையும் தொண்டையையும் புண்படுத்தும். ஆதலால், புகையிலை உபயோகத்தை நிறுத்திவிடுவது நல்லது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *