
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
5. இரத்த ஓட்டம்
இரத்தமே உடம்பிற்சேரும் பொருள்களை உடம்பின் எல்லாப் பாகத்திற்கும் கொண்டு போகிற நீர்ச் சாலையாகும். எல்லாப் பாகத்திலும் உள்ள கழிவுப் பொருள்களைக் கழிக்குங் கருவிகளிற் கொண்டு சேர்ப்பதும் அதுவே. அது சுவாசப்பைக்குள் வரும் காற்றிலுள்ள பிராணவாயுவையும், வயிற்றில் செரித்த உணவையும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக் கும் கொண்டு போவதால், அதுவே உடம்பின் தேவையைப் பூர்த்தி பண்ணுவதாகும். அதனால் இரத்தத் துளியினை உயிர்த்துளி என்று பலருங் கூறுவர். ஒரு துளி இரத்தத்தைப் பூதக் கண்ணாடி யாற் பார்த்தால், சிறிய உருண்டை போன்ற செவ் வணுக்களும் வெள்ளணுக்களும் காணப்படும். அவை இரத்தக் கால்வாயில் மிதக்கும் மீன்கள் போலக் காணப்படும். இரத்தமானது இரத்தக் குழாய்களில் ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஓடுவதற்குக் காரணம், நெஞ்சப் பையாகிய இருதயம் அடிக்கடி சுருங்குவதேயாகும். வயது வந்த மனிதனது நெஞ்சப் பையானது ஒரு நிமிடத் திற்குச் சுமார் எழுபது முறை துடிக்கிறது. உடற் பயிற்சியின் போதும், சுர நோய் கண்ட போதும் அதிகத் துடிப்பு ஏற்படும். பெண்டிரின் நெஞ்சப்பை ஆடவரின் நெஞ்சத்தைப்பார்க்கிலும் எட்டு அல்லது பத்துத் தடவை அதிகமாகத் துடிக்கும். குழந்தையின் இருதயம் அதைவிட அதிகமாகத் துடிக்கும்.
நெஞ்சப்பை தலை கீழாய்த் தொங்கும் தாமரை மொட்டுப் போன்று தொங்குவதாய், விரல் மடக்கிக் குவித்த கையினளவாய் இருக்கும். அது வலப்பாதி. இடப்பாதி என்னும் இரு பகுதிகளையுடையது. அதன் இடப்பாகத்து மேல் மூலையில் பெரிய குருதிக் குழாய் ஒன்றுள்ளது. அஃது உடம்பின் மேற்பாகத் துக்குச் சென்று, கிளைகளாய்ப் பிரியும். அக்கிளை களின் வழியாக இரத்தமானது தலைக்கும் புயங்களுக் கும் செல்லும். அது வளைந்து நெஞ்சப்பைக்குப் பின்னாக ஓடிக் கிளைகளாய்ப் பிரியும். அக்கிளைகள் உடம்பின் மற்றப் பாகங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு போகும்.
நெஞ்சப்பை சுருங்கும்போது அதிலுள்ள இரத்தம் பெரிய இரத்தக் குழாயினுள் விரைந்தோடி, அதன் கணக்கற்ற கிளைக் குழாய்களின் வழியாய் உடம்பெங்கும் பரவும். ஒவ்வொரு கிளைக் குழாயும் பல்லாயிரக் கணக்கான சிறு குழாய்களாய்ப் பிரியும். சிறு குழாய்களாய்ப் பிரியும் போது மிகச் சிறிய குழாய்கள் மயிரிழைபோல நுண்ணிய வடிவுடையன வாயிருக்கும். அவை ஓர் அங்குல அகலத்துள் மூவாயிரம் அடங்கும். தசையின் எந்தப் பாகத்தில் ஊசியினாற்குத்தினாலும் அஃது ஏதாவது இரத்தக் குழாயை ஊறுபடுத்தாமல் இராது.
மயிரிழைக் குழாய்களின் வழியாக ஓடிய இரத்தம், அத்தகைய நாளங்களின் வழியாக நெஞ்சத்திற்குத் திரும்புகின்றது. திரும்பி அது நெஞ்சத்தின் வலப் பக்க வாயிலாக அதனுட்செல்கின்றது. வலப்பக் கத்திற்சென்ற இரத்தம், சுவாசப் பையினூடு செலுத்தப்படும். அப்படிச் செல்லும் இரத்தம், இருதயத்தின் வலப்பாதியின் மேற்பாகத்திலிருந்து இருபிரிவாய்ச் செல்லும் குழாய் வழியாக இரண்டு சுவாசப்பைக்கும் பாய்ந்து, கழித்தற்குரிய காற்றுகளைச் சுவாசப்பையுள் விடுத்து, அங்குள்ள காற்றினின்றும் பிராணவாயுவைப் பிரித்தெடுத் துச் செல்கின்றது. உடம்பின் எந்தப் பாகத் திற்காவது இரத்தம் செல்லாமல் தடைபடு மானால், அப்பகுதி அழுகி மடியும். ஆதலால்,உயிர் உடம்பில் இயங்குவதற்கு இரத்த ஓட்டத்திற்குக் காரணமான நெஞ்சுப்பையின் துடிப்புத் தொழில் இன்றியமையாததாகும்.. அத்தொழில், கருவில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் மனிதன் முயற்சியில்லாமல் தானே நிகழ்கின்றது. அது மனிதன் தூக்கத்திலும் நிகழ்கின்றது. அது மனிதனால் ஆவதன்று; கடவுளாலேயே நிகழ்வதாகும்.
நோய்ப் புழுக்கள் இரத்தத்தில் புகுந்தால், அவற்றைப் பிடித்து அழிப்பது இரத்தத்திலுள்ள வெள்ளையணுக்களின் செயலாகும். குடி முதலிய தீய பழக்கத்தால் அவ்வணுக்கள் வலியற்றுப் போனால்,நோய் அணுக்களை அழிக்குஞ் சத்தி அவற்றுக்கு இல்லாது போம். உணவு தூயதாயும் நல்ல தாயும் இருந்தால், இரத்தம் சுத்தமாய் இருக்கும். நன்னீரை மிகுதியாகக் குடிப்பதால் இரத்தத்திலிருந்து கழிவு நச்சுப் பொருள்கள் பிரிவுபடும். உடற்பயிற்சியினாலும் இரத்த ஓட்டம் செவ்வை யாய் அமையும். குடி, இறைச்சியுணவு முதலிய வற்றை ஒழிப்பதால் உயிரைப் பாதுகாக்கும் சத்தி இரத்தத்திற்கு அதிகமாகும்.
இரத்தத்திலிருந்து கழிவு நீர்ச்சத்துகளைப் பிரிப்பதற்கு நீர்க் குண்டிக்காய்கள் பயன்படுகின்றன. இரத்தம் அவற்றினோடு செல்லும் போது சிறுநீரோடு கழிவுச் சாமான்கள் பிரிவுபடுகின்றன. இரு நீர்க்குண்டிக்காய்களிலிருந்து சிறு நீரானது இரு குழாய் வழியாக அடி வயிற்றின் முன் பக்கமுள்ள சிறுநீர்ப்பைக்குச் செல்கின்றது. சிறுநீரைப் பரி சோதனை செய்வதால், உடம்பிலுள்ள நோயின் தன் மையை நிச்சயிக்கலாம். நோயாளிகள் சுத்தமான நீரை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும்.



