
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
18. முதுமையில் வசதிக் குறைகள்
பெரும்பாலும் முதுமைப் பருவத்திலே, உணவி லுள்ள புழுக்களும், பல்லின் ஈறு முதலியவற்றி லுள்ள புழுக்களும் இரத்தத்தை நச்சுத்தன்மை உடையனவாக்குகின்றன. நகரங்களில் கரித்துகள் களும் புழுதியும் சுவாசப்பையிற்புகுந்து நுட்ப மாகத் தங்குவன. ஆதலால், புறத்தோலையும் உட் கருவிகளையும் கூடிய வரையில் அடிக்கடி சு சுத்தமாக வைக்க வேண்டும். மரக்கறியுணவு, மாமிச உண வினும் சிறந்தது. பின்னதால், உடம்புக்கு நச்சுத் தன்மை தானே விளையும். புகையிலையும் வெறிப் பானங்களும் அத்தன்மையன. காப்பி, தேயிலை முதலியவற்றையும் மிதமாகவே உபயோகித்தல் வேண்டும்.
நரை, திரை, நரம்புத்தளர்ச்சி, கண்ணொளி மழுக்கம், இரத்தக்குழாய் இறுக்கம், இரத்த அழுத் தம், கோழை மிகுதி, இருமல், வாதம் என்பன முதுமைக்குரியன. எனினும், ஒழுங்கான சுகாதாரப் பழக்கமுள்ளவர்களை அவை வந்து பாதிப்பதில்லை. நாட்டுப் புறத்திலுள்ள இயற்கை வாழ்க்கையில், மலச்சிக்கல் நீங்கியொழிவதால், வாதநோய்கள் அகன்றுவிடும். ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை என்பவற்றின் பழங்கள் குடல் நோய்களை நீக்கும். மலச்சிக்கல், உணவு வெறுப்பு, வாதம் என்பன ஒன்றோடொன்று தொடர்புடையன. அவற்றை வரு முன்னர்க் காப்பதே வயோதிகரது முதற்கடமை. நோய்ப் புழுக்கள் உணவு பானங்களிற்கலந்து வாய் வழியாகவும், புழுதியிற்கலந்து காற்றோடு மூக்கின் வழியாகவும், தோலிலுள்ள காயத்தின் வழி யாகவும் உடம்புட்புகுவன. அவற்றை அங்ஙனம் புகாதபடி விலக்குதல் அவசியம்.
மக்கள் ஒழுங்காகத் தமது உடம்பைப் பாது காத்து வந்தால், பொதுவாக அவர்கள் நூறு ஆண்டு கள் இவ்வுலகில் வாழ்க்கை நடத்தலாமென்பது சில அறிஞர் கருத்து. அதற்கு முக்கிய சாதனம் பொறி யடக்கம், அமைதி, அளவு கடவாமை என்பனவே. சினம், பொறாமை, மனக்கசப்பு முதலிய தீமைகள் உடம்பைப் பாதிப்பன; வாழ்நாளைச் சுருக்குவன. அன்பான எண்ணங்களும், போதும் என்ற மனமும் ஆயுளை நீட்டிப்பன. கடவுளன்பும் அத்தகையதே. நூற்றுப் பதின்மூன்று வயது வரை உயிர் வாழ்ந்த ஒருவர் கறுப்பு ரொட்டியும் சீமை அத்திப்பழமும் பாலுமே உட்கொண்டனராம். பழ வகைகள் பலந்தரு வனவே. நாள்தோறும் ஏழு மணி நேரமுதல் ஒன்பது மணிநேரம் வரை உடம்பின் தேவைக்குத் தக்கபடி தூங்குதல், காற்றுலவுமிடத்தில் நிமிர்ந்திருத்தல், உடம்பின் சூட்டளவு நீரிற்காலையில் நாடோறுங் குளித்தல், உடம்பில் ஈரந் தங்காது உலர்ந்த ஆடை யால் உடம்பைத் துடைத்தல், நன்றாக மூச்சிழுத்து விடுதல், மிதமாக உணவு கொள்ளுதல், தூய உணவு கொள்ளுதல், தூய நீரே பருகுதல், குளிர் படாது உடம்பை நன்கு போர்த்துக்கொள்ளுதல், மலச்சிக்கலை நாடோறும் ஒழித்தல், உணவை மெதுவாக மென்று விழுங்குதல், பற்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நோய்ப்புழு உட்புக இடங் கொடாமை, அளவுக்கு மிஞ்சி உழையாமை, இளைப் பாற வேண்டும்போது இளைப்பாறுதல், கோபத்தை யுங் கவலையையும் ஒழித்தல் என்பன ஆயுளை நீடிப் பன என்பது அறிஞர் கொள்கை.



