வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

17. ஓய்வு

நாடோறும் நிகழும் வாழ்க்கையில், தூக்கத்திலே தான் நாம் ஓய்வு பெறுகிறோம். வயிற்றுக்கும் ஈர லுக்கும் நாம் ஓய்வு கொடுப்பது அவசியம். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக்கொண்டிருந்தால், சீரணக் கருவிகளுக்கு மிகுந்த வேலை கொடுத்து, அவற்றைக் கெடுக்கும்.

அது தூக்கம் இத்தனை மணி நேரந்தான் இருக்க வேண்டுமென்று பொது விதி அமைத்தல் இயலாது. சிலர்க்கு ஆறு மணி நேரத் தூக்கம் போதுமானது. வேறு சிலர்க்குப் பத்து மணி நேரத் தூக்கமும் போதாது.

தூக்கம் பழக்கத்தைப் பொறுத்ததென்பர். சிலர் ஆழ்ந்த உறக்கத்திற் பழகியிருக்கின்றனர். சிலர் தூக்கத்திலிருந்து இலகுவில் விழித்துவிடுவர். சிலர் தூக்கத்தினிடையே எழுவதில்லை. மற்றவர் கள் எழுவதையும் அவர்கள் அறியார்கள். நாகரிக மக்களுள், தூக்கமின்மையென்ற நோய் காணப்படு கிறது. முற்றிலும் தூக்கம் ஒழிந்தால், சில வாரங் களுள் மரணம் நேரிடுதல் கூடும்.

இரவில் தூங்குமுன், வயிறு நிறைந்திருத்தலும் கெடுதி; பசியாயிருத்தலும் கெடுதியே. படுக்கை அறையில் காற்று நன்கு உலாவுதல் வேண்டும்; போர்வையிருத்தல் வேண்டும். மிகவும் உயரமான தலையணை கூடாது. படுப்பதற்கு ஒரு மணி நேரத். திற்கு முன் மன வேலையை நிறுத்திவிட வேண்டும்.

பயமும் கவலையும் இருத்தல் கூடாது. கால்கள் குளிராதபடி அவற்றை மூடிக்கொள்ள வேண்டும். தூங்குமுன் மூளைக்கு வேலை கொடுத்தால், மூளையில் இரத்த ஓட்டம் அதிகமாயிருக்கும். பால் உட் கொண்டால் மூளையிலுள்ள மிகுதி இரத்தம் வயிற்றுக்குப் போம் என்பாரும் உளர். இரவு உண்ட பின், ஒரு மைல் அல்லது இயன்ற தூரம் நடத்தலும். மாலையிற்குளித்தலும், உடம்பைப் பிடிப்பித்தலும், எளிய நூலை வாசித்தலும், தூக்கத்தை வரவழைக்கும் என்பர். மனக் கவலையும், மனம் ஒருமைப் படாமையுமே, தூக்கமின்மைக்குக் காரணம் என்பர். நாகரிக மக்களுள் மனக்கவலை வழக்கமாக ஏற்பட்டுள்ளது. வறுமையும், நோயும், வாழ்விலின்ப மின்மையுமே தீராக் கவலைக்கு முக்கிய காரணம் ஆவன. உலக வாழ்விற் கவலையுற்றிருத்தற்குக் கடின நெஞ்சமும், நல்ல வயிறும் வேண்டும் என்றார் ஒரு புலவர். மிகுந்த நுட்பமான அறிவுக்கு எளிதாகக் கவலை ஏற்பட்டுவிடும். கடவுள் நம்பிக்கை, மறுமையில் நம்பிக்கை என்பன பலர்க்குக் கவலையை ஒழிக்கின்றன.

ஓவியம், காவியம் முதலியவற்றின் நயங்களில் ஈடுபடுவதாலும், சமய ஒழுக்கத்தாலும் பலர் தம் கவலையைத் தீர்த்துக் கொள்ளுகின்றனர். நல்லறி வாலே உலகம் திருந்தி இன்பம் அடையுமென்பது கல்வியாளர் பலருடைய கருத்தாகும். கருத்திற்கும் ஆற்றலுக்கும் இசைந்ததாய் ஊதியந் தருவதாயுள்ள வேலை, எளிதாக இன்பம் பயக்க வல்லது. அவ்வேலை ஒழிந்தால், கவலை தோன்றும். அடக்கு முறைகள் அச்சம் விளைவிக்க, அச்சம் உடற்கேட்டையும் மரணத்தையும் உண்டாக்குகின்றது. இளமையில் உண்டாகின்ற அச்சம், முதுமை வரைத் தொடர்ந்து துன்புறுத்துகிறது. நாகரிக வாழ்வில் ஏற்படும் அச்சங்களால், பைத்தியமும் தற்கொலையும் மிகு கின்றன.

கவலையும் அச்சமும் அறிவாராய்ச்சி யாலும் அருளொழுக்கத்தாலும் தொலைந்தால், முதுமையின் கெடுதிகள் குறைவுபடும்.

வாழ்க்கையில் விரைந்து விரைந்து காரியங்களைச் செய்தலும், வாழ்க்கை நடத்துதலும், பல நோய்களுக்குக் காரணமாவதுடன், முதுமையையும் விரைவிற்கொணரும். மூளை வேலையை மெதுவாகச் செய்தால், அது நரம்பு நோய்களை உண்டு பண்ணுவ தில்லை. படபடப்பும், அதிகமாகக் கவலைப்படுதலும், போதுமான ஓய்வும் பொழுது போக்கும் இல்லாமை யும், சுகாதாரம் பேணாமையும் நரம்பு நோய்களுக்கும் தளர்ச்சிக்கும் காரணமாகும். தொழிற்றலைவர்கள் காலையிலெழுந்தவுடன் அவசியகருமங்களைச் சர்வ தானமாகச் செய்வதில்லை. அதனால், மலச்சிக்கல் ஏற் படுகின்றது. பற்கள் முற்றிலும் சுத்தமாக்கப்படுவ தில்லை. உடம்பு நன்றாகக் கழுவப்படுவதில்லை. வள மான காலை உணவை அவசரமாக விழுங்குவதால், அது நன்கு சீரணமாவதில்லை. அதனை உண்ணும் போதே தபாற் கடிதங்களையும் பத்திரிகைகளையும் படிப்பவர் பலர் உளர். வயிற்றுள் நிகழவேண்டிய இரத்த ஓட்டம் தலையில் நிகழும். உண்ட உடனே இரயிலில் அல்லது மோட்டார் வண்டியில் வேலை யகத்திற்கு விரைந்தோடவேண்டும் உத்தியோக நிலை யத்தில், சிலர் பல செயல்களை ஒரே நேரத்திற் செய்ய முயல்வர்.

தொலையொலிக் கருவியிற்பேசுவதும், எழுத்தாளனுக்குக் கடிதச் செய்திகள் கூறி எழுதுவித்தலும், தம்மைப் பார்க்க வருபவர்களோடு பேசுதல் முதலியனவும் ஒரே காலத்தில் நிகழும். அவசர வேலை யினாற்களைப்புத் தோன்றியவுடன், வயிற்றிலிருக்கிற உணவு சீரணமாகுமுன் ஏதாவது தின்னுதலும், ஊக்கந்தரும் பானங்களை உபயோகித்தலும் சிலர் வழக்கமாகும். அது செரிப்பதன் முன், பின்னும் ஏதாவது பண்டம் அருந்துவர். அவை இரவு உணவு கொள்ளுவதன் முன், செரிமானமாவதில்லை. இருக்கு மிடம் நெருக்கமான தெருவில் இருந்தால், அழுக்கடைந்த காற்றுச் சுகக்கேட்டை விளைக்கும். அதனோடு சுருட்டுப் பிடிக்கும் பழக்கமுள்ள வேலைத் தலைவர்கள் ஒரு நாளைக்கு இருபத்தைந்து சுருட்டுகளைப் பிடித்துவிடுகிறார்கள் ; அதனால், நுரையீரற் குழாய் களில் புகையடையும். இக்கெடுதிகளோடு வாழ்வில் உண்டாகும் கூச்சல்களும் நரம்புகளைத் தாக்கிப்பாதிக்கும். மேலை நாட்டு நாகரிகம் இவ் வகையான துரிதக்கேடுகளுக்குக் காரணம் என்பது யாவரும் அறிந்ததே.

சிலர்,பருத்த உடம்புடைமை, ஒரு சிறப்பென் றெண்ணுகின்றனர். உடம்பிலிருக்கும் கொழுப்பு, குளிருணர்ச்சியைக் குறைப்பதானாலும், உடம்பின் உட்கருவிகளைப் பாதுகாப்பதானாலும், அளவுட்பட்டு அழகு கொடுப்பதானாலும், அளவு கடந்தால் அஃது ஒரு நோயெனவே கருதவேண்டும். காதல் வாழ்க்கை தளர்தற்குரிய பருவத்தில், நாவிற்கினிய சுவையுணவுகளை நாடுவதில் மக்கள் மனஞ் செல்லுவதால், அவை வாய்க்கப்பெறுஞ் செல்வமுடையார், அவற்றை மிகுதியாக உண்டு, அடி வயிறு கனக்கப் பெறுதல் இயற்கை. கனத்தவர் கூரிய உடலுணர்ச்சியுடைய ரல்லர்.

உடற்பயிற்சியும் கொழுப்புக் குறைந்த தூய உணவும் உடற்கனத்தைக் குறைக்கக்கூடி யவை. சிலர்க்கு உடம்பு இயற்கையாகவே கனத் திருக்கிறது. அவர்கள் என்ன முயற்சி செய்தாலும் சுகக்கேடு, பலக் கேடில்லாமல் தங்கள் கனத்தைக் குறைப்பது கடினமாகும். வயிற்றுக்குப் பயிற்சி அளித்தல் அவசியம். மலச்சிக்கலைத் தவிர்த்தல் மிக அவசியமானது. உற்சாகமும் ஊக்கமும் குறைந்து, கனங்குறையப் பெறுதல் அத்துணை நல்லதன்று.

நீண்ட ஆயுள், குடும்பத்தன்மையைப் பொறுத் திருப்பதுண்டு. சுகாதார முறையைப் பின் பற்றாம லும் சிலர் நீண்ட ஆயுளுடையராயிருக்கின்றனர். உதாரணமாக, கிதே (Goethe) என்ற ஜெர்மன் புல வர், 74-ஆம் வயதில் காதல் வாழ்க்கையுற்றார்; 84- ஆம் வயதில், மிகுந்த வாத்துக்கறி, ஒயின் என்பன உட்கொண்டார். விதைப்பையிலுள்ள குழாயற்ற தசைக் கோளங்களின் நீர் நீண்ட ஆயுளுக்குக் காரணமாதல் கூடுமென்ற கருத்துண்டு. உடம்பிலுள்ள குழாயற்ற தசைக் கோளங்களின் சமநிலை நீண்ட ஆயுளுக்குக் காரணமாயின், அச்சமநிலையை வாறு நிலைப்படுத்துதல் கூடுமென்பது தீர்மானிக்கப் படவில்லை. கழுத்தின் சங்கின்பாலுள்ள கேடயம் போன்ற தசைக்கோளம் சுகாதார நிலையிலில்லா திருந்தால் அது உடம்பின் ஆற்றலைக் குறைத்தல் கூடும். அயர்லந்து தேசத்தில் 125, 136, 137, 143, 146,180 வயதுவரை வாழ்ந்த மக்கள் உண்டு. இடத்தின் சூட்டுநிலை, சூழ்நிலைகளின் வளம் என்பவற்றைப் பொறுத்தும் வாழ்நாள் மிகுதிப்படும். சில ஊர் களில் உள்ளவர்கள் நரை, திரை, பல் வீழ்ச்சியின்றி நெடுநாள் வாழ்கின்றார்கள். தீரா நோயோடும் உடல் வருத்தத்தோடும் நெடுநாள் வாழ்வதினும் சுகமான நல் வாழ்க்கையோடு சுருக்க நாள் உலகில் வதிதல் நன்றென்பது சிலர் கருத்து.

முதியவருட்பலர் நோய் காரணமாகவே மடி கின்றனர். முதுமைத் தளர்ச்சி ஒன்றே பற்றி மடி பவர் சிலரே. மலச்சிக்கலும், புலால் உணவும், இளைஞரினும் அதிகமாக முதியவரைத் துன்புறுத்து வன. அளவுக்கு மிஞ்சிய உணவு மரணத்திற்கு நெருக்கமான ஏதுவாகும். முதியவர்க்கு உணவு குறைவுபடுதலே நன்று. உருளைக் கிழங்கு போன்ற கிழங்குணவுகளையும் கடினப் பொருள்களையும் அகற் றல் வேண்டும். கனி வகைகள், கீரையுணவு, பால் முதலியன நாடோறும் உட்கொள்ளத்தக்கன. தண்ணீரைப் போதுமான அளவு பருகுதல் வேண்டும். வெறிப்பானங்கள் தீமை விளைப்பனவே. நல்ல தூய ஆடை, பலத்திற்கேற்ற உடற்பயிற்சி, உடம்பிற் கேற்ற உணவு, உடற்புனிதம் என்பனவே முதுமை யில் உடம்புக்குப் பாதுகாப்பாவன.

முதியோர், பொழுது போக்க வகையறியாநிலையி லிருத்தல் கூடாது. நமது நாட்டில் சமயவாழ்க்கை அக்குறைவை நீக்குகிறது.

முதியவர்க்கு இளையவரின் தொடர்பு ஆறுதல் அளிக்க வல்லது. முதியவர்கள் இளைஞர்களை அள வுக்கு மிஞ்சிக் குறை கூறுதலும் அடித்தலும் செய்தல் நல்லன அல்ல. முதியவர்கள் தங்கள் இளமையை நினைத்து இளைஞரோடு பழகுதல் வேண்டும். இளைஞரும், தாம் ஒரு காலத்தில் முதியராதல் கூடுமென்பதை நினைக்க வேண்டும். முதியவர் பிற்போக்கும் இளைஞர் முற்போக்கும் உடையராய்ச் சில காரியங் களிற் காணப்படுதல் இயற்கையே. புதிது புதிதாக அறிய வேண்டுவனவற்றை அறிதல் இருவர்க்கும் பொதுவானதே. இளைஞர்கள் தங்கள் முதிய உற வினருக்கு ஆதரவாய் இருத்தல் நலம். முதியவர்கள் வயது காரணமாக மாத்திரம், பிறர் மதிப்பை நாடு தல் நன்றன்று. பிறர் உதவியை அதிகமாக நாடா மல் தம்முயற்சியால் வாழ்தல், முதியர்க்கு மதிப்பை உண்டாக்கும். தேவைகளைக் கூடியவரை குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்துதல், பிறர் உதவியை மிகுதியாக நாடாமைக்கு ஏதுவாகும்.

எவ்வேலை செய்தாலும், செய்பவனுக்கு அதில் விருப்பமுண்டாகவேண்டும். அவ்வாறாயின், அதன் கடுமை தோன்றாது. அளவுக்கு மிஞ்சிய வேலையினால் பலர் முதுமையுறாது மாள்கின்றனரெனில், வேலை அவர்களைக் கொல்லவில்லை ; அதனால் ஏற்படுங் கவலையே பெரும்பாலும் அவர்கள் சாவுக்குக் கார ணம் என்பது உண்மை ஆய்வார்க்கு விளங்கும். வேலை மிகுதியும் உடம்புக்கு இளைப்புண்டாக்கலாம். அஃது எப்போதும் நிகழ்வதில்லை. அளவுக்கு மிஞ் சிய உழைப்பும், சோம்பலும்,உடம்புக்கு இடையூறு தருவனவே. வியாபாரம் முதலிய தொழில் நடத்துபவர், முதுமையில் இளைஞர்க்குக் கடின வேலைகளை விடுத்து, அறிவுரை கூறலும் மேற்பார்த்தலுமே தமது கடமையெனக் கருதவேண்டும். நினைவாற்றல் முதுமையிற் குறைவுபடுதலால், அதையுணர்ந்து, வயோதிகர் தம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண் டும். முதுமையிற் குழந்தை நிலை ஏற்படுதல், மன அறிவு செவ்வையாக வளரப்பெறாதாரிடமே பெரும் பாலும் காணப்படும். முதுமையில், கடுமையான மூளை வேலை செய்வது பலர்க்கு இயலாத காரியம் என்பது உண்மையே. மூளை வேலையை எளிதாகச் செய்யும் முதியவர்களுக்கு வாழ்நாள் இன்பமாய் இருக்கும். முதுமையில் வாழ்க்கை நடத்தற்குரிய பொருட்செல்வமுடைய அறிஞர் அதிகக் கவலைப் படுதற்கிடமில்லை. ஒழுக்கக்கேடின்மையும் நல் வாழ்க்கைப் போ தங்களிற் சிறந்ததே. நோயில்லாத போது நோயிருப்பதாயெண்ணுதல், சில வயோதிகர்களது மனப்பாங்கு. தீய வழியிற்செல்லுங் கருத்து களை நல்ல வழியிற்செலுத்தப் பழகிக்கொள்ளுதல் பெரும்பயன் விளைக்கும். நிறைவேறப் பெறாத ஆசைகளே பல வகையான விபத்துக்களுக்கும் நரம்பு நோய்களுக்கும் காரணமாவன. காதல் நிலை ஐம்பத் தைந்து வயதில் மாறும் என்பது சில வைத்தியர்கள் கருத்து. அதற்கு முன், அணையப்போகும் விளக்குப் பிரகாசமாய் எரிவது போல, இச்சைகள் மிளிர்ந்து தோன்றும். அக்காலத்திற் பாதுகாப்பாக உடம்பைப் பேணுதல் நலம். வெறிப் பானங்களில் அக்காலத் திற் செல்லும் நாட்டத்தை ஒழிக்கவேண்டும். நூலாராய்ச்சி, நூல் கற்றல், போதித்தல், பொதுநல உழைப்பு, சமயவாழ்க்கை முதலிய நற்பழக்கங்கள் வாழ்க்கைக்கு அக்காலத்தில் தீமையை ஒழிப்பன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *