
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
15. மணவாழ்க்கை
சுகத்திற்கும் ஆயுளுக்கும், ஒழுங்கான மண வாழ்க்கை பெரிதும் துணை செய்வதாகும். மணம் புரிந்தவர், மணம் புரியாதவரைப் பார்க்கிலும் சராசரி நீண்ட ஆயுளுடையராய் வாழ்கின்றனரென்பது மேலை நாட்டிற் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மணம் புரிவதால் ஆண் மக்களுக்கு ஐந்து ஆண்டு ஆயுள் நீடிப்பும், பெண் மக்களுக்கு நான்கு ஆண்டு வாழ்க்கை நீடிப்பும் ஏற்படுகின்றன என்பர்.
முதுமையின் கெடுதி விரைவாகத் தொடங்குவதில்லை.
கீழ்ப்பிராணிகளும், நாகரிகமில்லாத மக்களும், மணமில்லா வாழ்க்கை நடத்துவதில்லை ; தனி வாழ்வைப் பெரிதாகப் பாராட்டுவதில்லை. (நாகரிக மும் கல்வியுமுள்ள மக்களுள்ளே தான் சிலர் தனி வாழ்க்கையைப் போற்றுகின்றனர்.
மேலை நாட்டில் மனநிறைவில்லாத காதல் வாழ்க்கையே நல்ல வாழ்வின்பம் இல்லாமைக்கு முக்கிய காரணமாம் என்று ஆங்கில அறிஞர் ஒருவர் கூறுகின்றார். சிறுபான்மையினரே உணவின்மைக்காக வருந்துபவர். உயர்வாழ்க்கை உடையவருக்குள் வறுமையென்பது சௌகரியக் குறைவுகளையே குறிப்பதாகும். சுறுசுறுப்பான மக்களுக்குக் காதலை விளைக்கும் இயைபுகள் அல்லது சந்தர்ப்பங்கள் பல உள்ளன. கல்வி, கற்பனையெல்லாம் சித்திரவேலைப் பாடுகள். நாடகங்கள், பேசும்படங்கள், நல்லுணவு முதலியன எளிதிற் காதலை விளைவிக்கும். நாகரிகம் அதிகப்படுவதால், காதல் வாழ்க்கை எளிதில் நன்கு அமைதல் கடினமாகிறது. கற்றவர் பலர், காதலைப் பற்றிப் பேசுவதே தவறென்று எண்ணுகின்றனர். சுகாதாரத்தைப்பற்றி நூலெழுதுபவர் காதல் வாழ்க்கை முக்கியமானதென்று கருதுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் காதல் வாழ்க்கை நுட்பங்களை அறிதல் நன்று. இளமையிலே காமத்தை வெல்லுதல் கடினமா யிருத்தல்போலவே, ஐம்பதுவயதுக்கு மேலும்சிலர்க்கு இச்சையை வெல்லுதல் அசாத்தியமாகும். பெண் களுக்கும், மாதவிடாய்ப் பருவம் தீர்ந்த பின்னும், இச்சை ஒழிவதில்லை. நாற்பத்தாறு வயதுக்கும் ஐம்பது வயதுக்கும் இடையே பெண்டிர்க்கு மாதவிடாய் நீங்குவதுண்டு. 70 வயதுக்குப்பின் இச்சை இயற்கையாகத் தோன்றுவதானால், அது சுகத்தையும் ஆற் றலையும் உணர்த்துவதாகும். எழுபது அல்லது எண்பது வயதுக்குப் பின்னும், குழந்தை பெற்றவர்கள் உண்டு. வயது முதிர்ந்தவர் பலவீனமான பிள்ளைகளைப்பெறுதல் கூடுமாதலின், அவர்களுக்குச் சந்ததி இல்லாதிருத்தலே நலம்.
பிள்ளைபெறும் ஆற்றல் வேறு; காதல்வாழ்க்கை நடத்தும் ஆற்றல் வேறு. ஆண் குறி விதையிலுள்ள குழாயிலாத் தசைக் கோளங்களிற் சுரக்கும் நீரும் பெண்களது வித்துப்பையிற் சுரக்கும் நீரும் உடம் பில் முக்கிய சத்தியொன்றை உண்டாக்குகின்றன. விதையின் சிறு குழாய்க்கிடையிலுள்ள தசைக் கோளங்கள் உடம்பின் நிலையைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமானவை. விதைப்பையிற் சுரக்கும் நீர் குறைவுபட்டால், பெண்களுக்கு வீரமும் இச்சைக் குறைவும் ஏற்படும். அந்நீர் மிகுமானால், அது பெண்டிர்க்குப் பெருங்காமத்தை உண்டாக்கும். உடம்பின் அந்தரங்கப்பகுதிகள் பிள்ளைப் பேற்றிற்குக் காரணமாவதோடு, எழுச்சியை விளைக்கும் துகள் களைப் பிறப்பித்தலால், அவை உடம்பு வளர்ச்சிக்கும் தோற்றப் பொலிவுக்கும் காரணமாகின்றன. அவற்றையுண்டாக்குந் தசைக் கோளங்களைக் குரங்கினின்றெடுத்து மனித உடம்பிற்பொருத்துவதால், மனிதனுக்கு ஆற்றலும்,இளமையும் ஏற்படுகின் றன. அவ்வாறே விதைப்பை மாற்றத்தால், பெண்களுக்கு இளமை ஏற்படுகின்றது. இவ்வாறு செய் வது போகத்திற்கு உதவுதல் மாத்திரமன்றி, மன ஆற்றலையும்,நோயை எதிர்க்குஞ் சத்தியையும் அதி கப்படுத்தும்.
ஜீவ சத்தி, பரம்பரையாக வருதல் உண்டு. நல்வளர்ப்பினால், அது பாதுகாக்கப்படும். தவறாகப் பயன்படுத்துவதால், அது கெட்டொழியும்.
மணவாழ்க்கைக்கும் பிள்ளைப் பேற்றிற்கும் தகுதியடைந்துள்ள பெண்டிர் பலர், மணவாழ்க்கைக்கு வழியில்லாமல் வருந்துகின்றனர். வறுமை காரணமாக இளைஞர் பலர் உரிய வயதில் மணம் புரி யக் கூடாமையால், தவறிய ஒழுக்கத்தவராய் வாழ் நாளைக் கழிக்கின்றனர். பலர் மணம் புரியப் பெற்றும் மணவாழ்வின் நுட்பங்களையும் விதி முறைகளை யும் அறியாமல் இடருறுகின்றனர். நடுப்பருவத்தி லுள்ள மக்களுள் பலர், மணவாழ்க்கை நலன் அனு பவிக்கப் பெறாமல், இரத்த அழுத்தம் உடையவர்க ளாய்க் கோபம் அடிக்கடி தோன்றக்கூடிய மனநிலை யுடன் வருந்துகின்றனர்.
உடம்புதோறும் போக ஆற்றல் வேறுபடுவதால், இன்ன வயதில், இன்ன அளவில் அந்த ஆற்றல் இருப்பதென்று பொதுவிதியாக வரையறுத்துக்கூற முடியாது. ஒவ்வொருவரும் சொந்த அனுபவத்தைப் பரபரப்பின்றி ஆராய்ந்து, தத்தம் நடத்தையை ஒழுங்கு படுத்திக்கொள்ளுதல் நல்லது. மென்மைப் பண்பைப் பாதுகாக்கும் அளவு தெரிந்து, ஊக்கம் நிலைபெறும் அளவுணர்ந்து, நல்ல தூக்கத்திற்கேதுவாகின்ற சேர்க்கையை மிகைபடாமற்செய்யின், அது உடம்பின் சுகநிலைக்குக் காரணமாகும். போக ஆற்றல் இயற்கையாகக் குறைந்தொழியுங் காலத் திற் சேர்க்கையை நிறுத்திவிடல் வேண்டும். நாற்பது வயதுக்கு முன்னும் அது குறைவுபடுதல் உண்டு. நல்லுடலில் அறுபத்தைந்து வயதிலே அது குறைந்தொழியும். இதற்குப் புறநடைகள் பல உள்ளன. இளமையில் மிகுந்த போக அனுபவங் காரணமாகச் சிலர் சத்தியை இழந்துவிடுதலும் உண்டு. பிறப்பி லேயே குறைந்த ஆற்றலோடு பிறப்பவர்களும் உ ண் டு. ஐம்பது வயதுக்குமேல் சாதாரணமாக ஒருவன் தன் உயிராற்றலைப் பாதுகாக்க முயலவேண்டும். உயிராற்றல் குறைவதோடு மன ஆற்றலும் தளர்தல் உண்டு. அதனால், மூளை வேலை செய்யும் போது தளர்ச்சி ஏற்படும்.
வாழ்க்கைத்துணையோடு கலந்து உரையாடிக் காலங்கழிக்கப் பெறாமல் வருந்தும் முதியவர் பலர் உளர். முதுமைப்பருவத்தில், பிறர் உதவி வேண் டப்படும்போது, மனைவியின் பணிவிடை மிக்க ஆறுதலளிக்கும். மனைவியை இழந்த போது, பலர்க்கு மக்கள் பேரன்மார் முதலியவர்களுடைய உடனுறைவு மிக்க இன்பத்தைக் கொடுக்கும். மனித அனுபவத் தில், அன்புணர்ச்சியே தலை சிறந்ததாகும். குற்ற மற்ற நட்பு, முதுமைக்காலத்தில் காதலர் உள்ளங் களை ஒற்றுமைப்படுத்துகின்றது. ‘காமத்திற்சிறந் தது காதல்’ என்பது இக்கருத்துப் பற்றியதே யாகும்.
முதுமையில் இளமை உண்டாக்குவதற்குச்செய் யும் முயற்சிகள் பல: வித்துப்பையைப் பலப்படுத்துவது இக்காலத்திற் பாராட்டப்படுகிறது. எலிகளுள் ஆண் எலியின் விதையை எடுத்துவிட்டு ஆணில் பெண் எலியின் விதைப்பையைப் பொருத்தினால், பால் மாற்றம், அதாவது ஆண் பெண்ணாதல் காணப்படுகிறதாம். அவ்வாறே, முதிய எலியின் உடம்பில் இளைய எலியின் விதையை ஒட்டினால், முதிய எலி இளமையை அடைகின்றதாம். இதனால், உடம்பின் உயிர்ச்சத்து விதைப்பையில் அமைந்திருப்பது தெரிகிறது. விதைப்பையின் குழாயற்ற தசைக் கோளங்கள் தொழிலற்றால், முதுமையும் தளர்ச்சியும் தொடங்குகின்றன என்பர். இளைஞரின் விதைப் பை, மக்களுள் எளிதாகக் கிடையாமையின், டாக்டர் ஒரோனோவ் (Dr. Voronoff) என்பவர், மக்களுக்கு முற்பட்ட பிராணியாகிய குரங்கின் விதைப்பையை முதியவர் உடம்பிற்பொருத்திப் பார்த்த போது, இரத்த அழுத்தம் குறைந்து, பலம் ஏற்பட்டு, சீவ சத்தி அதிகரித்ததாம்; நினைவாற்றலும் மிகுந்ததாம். வியன்னுவிலுள்ள டாக்டர் லிக்டென்ஸ்டீன் (Dr. Lich- tenstein) என்பவர், வேறுவிதமாக விதைப்பையைப் பண்படுத்தி உயிராற்றலை உண்டாக்கலாமென்பதைக் கண்டுபிடித்துள்ளார். விதைப் பையில் ஒரு சிறு கீறல் உண்டாக்கி, தாதுக் குழாயைக் கட்டி விடுதல் இம்முறை என்பர். இதனால் பிள்ளைப் பேறு ஒழிந்தாலும், உயிராற்றல் மிகுதிப்படும். இம் முறையில் விதையை வேறாக எடுத்தல் இல்லை.
பெண்மக்கள் ஆண்மக்களைவிட ஆற்றல் குறைந் தவர்கள் என்று முற்றிலுங் கருத இடமில்லை. ஆண் மக்களுக்கு வரும் சில நோய்கள் பெண் மக்களைத் தாக்குவதில்லை. பெண் மக்களுக்கு ஏற்படுகிற காயங் கள் மிக விரைவில் குணம் அடைகின்றன. முற் காலத்தில் வேலை செய்வதில் பழக்கமிகுந்த பெண் கள் மிகுந்த தொந்தரவில்லாமல் பிள்ளை பெற்றார் கள். இக்கால நாகரிகத்தில் அப்பழக்கம் குறைந் தவர்கள், பேறு காலத்தில் மிகுந்த நோவுறுகின்றார் கள். சில நோய்கள் பெண்களுக்கே ஏற்படுதல் உண்டு. இளமையில் பெண்களை விட ஆடவர்களே விரைவில் மரணம் அடைகிறார்கள். பெண்கள் உடலமைப்பைப்பற்றிப் பெரும்பாலும் யாதும் அறியா திருக்கின்றனர். பிள்ளைப்பேற்றுக் காலந்தான் பெண் களுக்கு அபாயகரமான காலம். மாதவிடாய் தோன் றிய வயதிலிருந்து பெண்கள் ஆண் மக்களினும் அதிக வளர்ச்சியுற்றாலும், அது நீங்கும் பருவத்திற் குள், சுகாதார விதியறியாமையால், அவர்களுக்கு நேரும் நோய்களும் ஒழுங்கீனங்களும் பலப்பலவாத லால், முதுமை பெண்களிடம் அதிகமாகத் தோன்று தல் காணப்படும். பூப்பு அடையும் பருவத்திற்கு முன்னே, ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் பெற்றோர் கள் சுகாதார விதிகளையும், மாதவிடாயின் சார்பாக அறியத்தக்கனவற்றையும் போதிக்க வேண்டும். பிள்ளைப்பேறு அடிக்கடி நேர்வது பெண்கள் உடம் புக்குக் கேடு பயப்பதே. மேலை நாடுகளில், கருத்தரி யாக்காப்பு (Birth Control) மிகுதியாக இக்காலத் திற் பெரிதும் கையாளப்பட்டு வருகின்றது. அது தடைபடுமானால், இரகசியமான கருச்சிதைவுகள் நிகழக்கூடியனவே. பெண்களுக்குக் கருப்பையின் இடப்பெயர்வு, விதைப்பை நோயடைதல் முதலிய வியாதிகள் துன்பந் தருவன. ஆதலால், அவற்றை நீக்குவதோடு, அவை வாராது தடுத்தலும் வேண் டப்படுவது. வேலை செய்து பிழைக்கும் பெண் களுக்குப் பிரசவங் கழிந்த பின், உடல் தேறு வதற்குப் போதிய கால அளவு அமைதி கொடுக்க வேண்டும்.
ஆண் மக்களைப்பார்க்கிலும் பெண் மக்களுக்கு மண வாழ்க்கை இன்றியமையாததாகும். ஆனால், சேர்க்கையும் பிள்ளைப்பேறும் மிதமாக இருத்தல் அவசியம்.
பெண்களது சுகநிலை, கா தல்வாழ்க்கை, பிள்ளைப் பேறு என்பவற்றைப் பொறுத்தே பெரும்பாலும் நிலவுந் தன்மையது. மலச்சிக்கல் பல நோய்களுக்கு மூலகாரணம் என்பதைப் பெண்கள் தங்கள் நினை வில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். மலச்சிக்கல் இரத்தத்தை நச்சுப்படுத்தி, இளமை நலத்தைத் தொலைக்கும். ஒரு நாளுக்கு இரு முறை மலங் கழிப்பதைப் பெண் குழந்தைகள் பழகிக்கொள்ள வேண் டும். வித்துப்பை, கருப்பைகளிலுள்ள ஒழுங்கீனங் களுக்கும், வாழ்க்கையில் இன்பந் தோன்றாமைக்கும் மலச்சிக்கலே முக்கிய காரணம். நாள்தோறும் நன்னீரைப் போதுமான அளவு குடித்தலால், மலச்சிக்கலை நீக்குதல் கூடும். மாதவிடாய்க் காலத்தில், வேலையினின்று ஓய்வு பெற்றிருத்தல் நலம். சேர்க்கையும் அக்காலத்திற் கூடாது. ஓய்வில்லாமை காரணமாக, மாதவிடாய் உரிய காலங்களில் ஒழுங் காக ஏற்படாதிருத்தல் கூடும். பெண்கள் வீடுகளில் அடைபட்டு நல்ல காற்றில் உலவப் பெறாமை அவர் களது இரத்த ஓட்டக் குறைவுக்குக் காரணமாகும். அஃது அவர்கள் மனவலிமையைப் பாதிக்கும். இரத் தக் குறைவு. இரும்புச் சத்துள்ள நல்லுணவால் நீங்குதற்குரியது.
பெண்டிர் ஆடை, சுகாதாரத்துக்கேற்ற முறை யில் அமைந்திருத்தல் வேண்டும், செயற்கை நறுமணச் சுண்ணங்கள் பெண்டிர் முகத்திற்கு அழகு தரமாட்டா.
நரை திரைகளை நீக்கக் கருதிப் பயன் படுத்தும் மருந்துகள், அவற்றை அதிகப்படுத்துதல் கூடும். தூய நன்னீரினால் முகத்தைப் புழுதி படி யாமற் கழுவிக்கொள்ளுதலே அழகளிப்பது. மலச் சிக்கலையொழித்தால், உடம்பு ஒளியும் வனப்பும் உடையதாகும். அழுகாத கனிகளையும், பச்சைக் காய்கறிகளையும் முக்கியமாக உபயோகித்தல் வேண் டும். உரிய நேரங்களில் ஒழுங்காக உணவு கொள் ளுதலன்றி, இடையிடையே பல பண்டங்களையுந் தின்னுதல் செரிமானத்திற்கிடையூறாகும். கதிரவ னொளியும் காற்றும் சுகாதாரத்துக்கு இன்றியமை யா தன. மழை நீர், திரையைத் தடுக்க வல்லது. வியர்வை ஏற்படுவதால் தோல் சுத்தமாவதுடன், மென்மையுமடையும். வாசனையற்ற நல்ல சோப்பே உபயோகிக்கத்தக்கது.
உணர்ச்சிகள் பெண்களுக்கு விரைவில் உண்டாவன. மூளையினும் நெஞ்சமே மிகுதியாக அவர் களில் தொழிற்படும். பெண்கள் முகத்தில் உணர்ச்சி கள் எளிதிற்புலனாவன. நாணம் அவர்கள்பால் மிகுதியாகக் காணப்படும். கண்ணீர் வடிப்பதில் பெண்கள் ஆண்மக்களுக்கு முற்பட்டவர்கள். நரம்பு நோய்கள், மனநோய்களுக்குக் காரணம் ஆவன. சிரிப்பு நோய் (Hysteria) பெண்டிருள் மிகுதியாயுள்ளது. உள்ளறிவுக்கு ஊறு நேர்ந்ததன் காரணமாக, இந்நோய் ஏற்படுகிறதென்பர். கோபத்தை அடக்குதல் பல பெண்டிர்க்குக் கடினமான செயலாகும். ஏசிப் பேசுவதில், அவர்கள் முற்போக்குடைய வர்கள். இது காரணமாக, உடலிற்கேடுகள் உண் டாகும். சுகவாழ்வு, நல்ல மணவாழ்க்கை, சிறந்த கல்வி என்பன, பெண்களின் மனநோய்களை ஒழிக்கும் இயல்பின.
முதுமையென்பது வயதைப் பொறுத்ததன்று. அறுபத்தைந்து வயதில் இளமையுடனிருந்த மாது ஒருத்தி, எழுபது வயதில் காதல் வாழ்க்கை நடத்தத் தொடங்கி, தொண்ணூற்றோராவது வயது வரை உயிர் வாழ்ந்திருந்த செய்தி கேட்கப்படுகிறது. உணவைக் குறைப்பதாலும், உடற்கனத்தைக் குறைப்பதாலும், முதுமையை ஒழித்துவிட முடியாது. சுக வாழ்வே முதுமையைச் சில காலம்வரை ஒதுக்கிவைத் தல் கூடும். மாதவிடாய் நாற்பத்துமூன்றாவது வயது முதல் நிற்கத்தொடங்கும். சிலர்க்கு ஐம்பத்துநான்கு. அல்லது அறுபத்து நான்கு வயது வரை அது நிற்பதில்லை. மாதவிடாய் நின்ற பின்னும் சிலர்க்கு இச்சை ஒழிவதில்லை. அது தவறாகாது. அஃது இயற்கையா யிருக்கும் வரை, மிதமான சேர்க்கை கேடு பயப்ப தில்லை. மாதவிடாய் நின்றபின், உடம்பின் உழைப்பு ஓரளவுப்படுதல் நலம். குடி முதலியவற்றை ஒழித்தல் வேண்டும், புனிதமான வழக்கங்கள் உடற்கு உறுதியளிக்கும்.
காதல் வாழ்க்கை இயற்கையில் எங்குங் காணப் படுவதே. மணமின்மையே உலக இயற்கைக்கு மாறாவது. ஆனால், இளமையில் இன்பம் துய்ப்பது அளவுக்கு மிகுமானால், பலக்குறைவும், நரம்புத் தளர்ச்சியும் விரைவில் ஏற்படும். உடல் நிலைகள் வேறுபடுவதால், சேர்க்கையின் அளவும் அதற்குத் தக்கபடி வேறுபடக் கூடியதே. இயற்கையாக மிகுந்த இச்சையில்லாதவர்களுக்குச் சேர்க்கைக் குறைவு, மூளை வேலைக்குத் துணை செய்யும். ஆனால், மூளை வேலையிற்சிறந்த சிலர்க்குக் காதற்சேர்க்கை மிக அவசியமாக உணரப்படுகிறது. அஃதில்லாமை, அவர்களுக்கு வேலைத் தடையாகத் தோன்றுகிறது.
உடம்பு வளரும் பருவத்தில் சேர்க்கையின்மையே நன்று. இருபத்து நான்கு வயதுக்கு முன் இளைஞரும் இருபத்தொரு வயதுக்கு முன் இளஞ்செல்விகளும் சேர்க்கையின்றியிருத்தல் உத்தமமென்று மேலை நாட்டறிஞர் கருதுகின்றனர். மேலை நாட்டில் முப்பது வயதுக்குமேல் மணமில்லாதிருத்தல் மிக்க இடைஞ்சலை விளைப்பதாம். சிறந்த காதல் வாழ்க்கை பலர்க்குச் சுகாதாரமாய்ப் பயன்படுவதே. திருப்தி கரமில்லாத காதல் சுகக் கேட்டிற்குக் காரணமாகும். நாகரிக மக்களுள் ஏற்படும் அதிருப்தி, நாகரிகமில் லாதவர்களுக்குள் காணப்படுமாறில்லை. பிள்ளை பெற இயலாமை காரணமாக, நாகரிகமக்கள் வெறிப் பானங்களை உட்கொள்ளும் தீய வழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். பிள்ளைப்பேற்றிற்கு இடையூறாகிற நோய்களையும் ஒழுங்கீனங்களையும் தக்க மருத்துவ முறைகளால் நீக்கிக்கொள்ளுதல் நலம். காதல் வாழ்க்கைச் சார்பான சுகாதார நுட்பங்களை அறி யாமையே இளைஞர்க்குப் பல விதமான உடற்கேடு களை விளைக்கின்றது. ஆடவரும் பெண்டிரும் அந் நுட்பங்களை அறிந்திருத்தல் வேண்டும். நல்ல எண்ணமுடைய இளைஞன் ஒருவன், தன் காதலி யின் உடல் நிலை, மனப்பாங்கு முதலியவற்றை முயன்று அறிந்து, அவற்றிற்கேற்றவாறு நடவாமல், அவளுக்குப் பலவிதமான உடற்கேடுகளை விளைத்தல் கூடும்.
கருத்தடை, பல காரணங்களால், ஓரளவில் வேண்டப்படுவதே. நன்மக்கள் இருவர் அல்லது மூவர் சுகமாகவும் வளமாகவும் வாழப் பெறுதலே யாவரும் விரும்புவதாகும். ஏழு அல்லது எட்டுப் பிள்ளைகளைப் பெற்று வறுமையாலும் பிணியாலும் அவர்களை வருந்தவிடுதல் தக்கதன்றென்பது யாவரும் அறிந்ததே. ஒரு பிள்ளை பிறந்து, குறைந்தது இரண்டு வருடங் கழிந்த பின், அடுத்த பிள்ளை பிறக்கத்தக்க முறையில் வாழ்க்கை நடத்தப்பட வேண்டும். நிலையான நோயுடையவர்கள் பிள்ளைப்பேறில்லா திருத்தல் நலமே. கருத்தடை முறைகள், தக்க மருத் துவர்களின் துணைக்கொண்டு, கேடில்லா முறையிற் கையாளப்படவேண்டும். அவற்றால், தக்க வயதில் மணம் புரிதல், பலமுள்ள மக்களைப் பெறுதல், பல வீனமான பெண்களின் பாதுகாப்பு, நோய்த்தடை, கருச் சிதைவின் ஒழிப்பு முதலிய நன்மைகள் வாம்.
வேலையாட்கள் சுகநிலையைப் பாதுகாப்பதற்கு, அவர்களுள் சூலிகளுக்குப் பிள்ளை பெறுவதற்கு மூன்று மாதங்கள் முன்பாகவே வேலை ஓய்வுகொடுக் கப்படவேண்டும். நன்மக்கட்பேற்றினை நாகரிக மக்கள் ஆதரித்துப் போற்றுதல் வேண்டும்.



