வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

6. மூச்சுக் கருவிகள்

உடம்பு ஒரு நிமிடம் நிலை பெற வேண்டுமானா லும், அதற்கு வேண்டும் அளவு காற்று இல்லாமல் முடியாது. உணவு இல்லாமற் சில வாரங்கள் உயிரோடு இருக்கலாம். நீரில்லாமல் சில நாட்கள் இருக்கலாமென்பர். ஒருவரும் காற்றில்லாமல் சில நிமிடங் களுக்கு மேல் உயிருடன் இருத்தல் முடியாது. காற் றில் பிராணவாயு கலந்திருக்கிறது.காற்றுச் சுவாசப் பைக்குள் போனவுடன் அதிலுள்ள உயிர்க் காற்று (பிராணவாயு) இரத்தத்திற்கலந்து உடம்பெங்கும் பரவுகிறது. உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாய்ச் சூடும் ஆற்றலும் உடம்பில் உண்டாக்குவது உயிர்க் காற்று. ஆதலின்,

அது மிகுதியாய்க் கலந்த காற்றினையே நாம் உட்கொள்ள வேண்டும். வெளியே இருந்து உட்புகுங்காற்றில் பிராணவாயுவுண்டு. உள்ளே இருந்து வெளியே செல்லுங்காற்றில் அது மிகக் குறைவாய் இருக்கும்.ஆதலால், அதனை மீட்டும் உட்செலுத்துதல் கூடாது. வெளியே விடும் மூச்சில் இரத்தத்தினின்று சுவாசப் பையினுள் தள்ளப்பட்ட நச்சுப்பொருள்களும் உள்ளன. அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. அவற்றைத் தூரத்தே கொண்டு செல்வதற்கு நல்ல காற்று உலாவ வேண்டும். காற்று உலாவுவதற்கு இடமில் லாத அறையிற் பலர் படுத்திருந்தால், அறையி லுள்ள காற்றோடு வெளி விடும் மூச்சுக் காற்றுக் கலந்து மீட்டும் சுவாசிக்கப்பட்டு, நோயினை விளைக்கும். ஆதலால், அறையின் பலகணிகளைத் திறந்து வைக்க வேண்டும். அவற்றின் வழியாகக் கதிரவன் ஒளியும் தூய காற்றும் அறைக்குட்பாய்தல் நல்லது.

நாம் உட்கொள்ளும் காற்றானது மூக்கு வழி யாகக் காற்றுக் குழலினூடு சென்று சுவாசப்பையை அடைகிறது.கழுத்திலுள்ள அதன் பகுதி குரல் வளை யெனப்படும். காற்றுக் குழல் கழுத்திற்குக் கீழே இரு கிளையாகப் பிரியும். ஒவ்வொரு கிளை ஒவ்வொரு சுவாசப் பைக்குச் செல்லும். ஒவ்வொரு சுவாசப் பையிலும் அளவற்ற மிக நுண்ணிய காற்றுப்பைகள் இருக்கின்றன. மூச்சு இழுப்பதால் அச்சிறு பைகளில் காற்று நிரம்பும். மூச்சு விடுவதால் அச்சிறு பைகள் காலியாகும். ஒரு நிமிடத்திற்குச் சுமார் பதினாறு அல்லது பதினெட்டு முறை முச்சு இழுத்து விடு கிறோம். ஒவ்வொரு மூச்சுக்கும் காற்றுப் பைகள் நாலு முறை சுருங்கி விரியும். உடற்பயிற்சியால் மூச்சு அதிக முறை நிகழும்; சுரத்திலும் அவ்வாறே யாகும். உயிர் உள்ள பொருள்கள் யாவும் மூச்சுக் கொள்வனவே. செடி கொடிகள் அவற்றின் இலைகள் வழியாகச் சுவாசிக்கின்றன. சில வகைப் புழுக் கள் தோலின் வழியாகச் சுவாசிக்கின்றன. மீன்கள் நீரிலிருந்து காற்றை உட்கொள்கின்றன. மூச்சிழுத் தலும் விடுதலும் கடவுள் செயலால் நிகழ்வனவே.

ஏனெனில், நாம் தூங்கும் போதும் சுவாசம் நாம் அறியாமலே நிகழ்கின்றது. சுவாசம் நன்றாக நடைபெறுவதற்கு நம்முடைய உடம்பை வளைவின்றி நேராக வைத்துக்கொள்வது அவசியம். காற்றுப் புகுதற்கு உண்டான இயற்கை வழி மூக்கே. வாயினாற்சுவாசித்தல் நல்லதன்று. மூக்கிலுள்ள சிறு மயிர்க்கால்கள் காற்றிலுள்ள புழுதியையும் புழுக்களையும் உட்புகாமல் தடுக்கும். மூக்கின் வழி செல்லும் காற்று, வெதுவெதுப்பும் ஈரமும் உடையதாகிறது. வாய் வழியாக உட்புகுங்காற்று, அவ் வாறாவதில்லை. வாய் வழியே சுவாசிப்பதனால் இருமலுங் கோழையும் உண்டாதல் கூடும். காற்றிலுள்ள புழுதியைச் சுவாசப்பைக்குள் போகாமல் தடுத்தல் வேண்டும். அப்புழுதியில் கண்ணுக்குத் தெரியாத நோய்ப் புழுக்கள் தங்கி இருக்கும். தெருவிலுள்ள புழுதி மேற்கிளம்பிச் சுவாசிக்கப்படுங் காற்றோடு கலவாதபடி அதன்மீது தண்ணீர் தெளித்தல் வேண் டும். நோயாளிகள் துப்பிய உமிழ்நீரிலுள்ள நோய்ப் புழுக்கள் புழுதியிற்றங்கிப் புழுதியோடு காற்றிற் கலந்து, மூச்சிழுக்கும்போது நமது சுவாசப் பைக்குள் செல்லுதல் கூடும். உமிழ் நீர் கலந்த குப்பையை அல்லது துணிகளை எரித்துவிடுதல் நலம்.

குடிப் பழக்கத்தாலும் சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தினாலும் சுவாசக் கருவிகள் கெடுகின்றன. மூக்கு, தொண்டை, குரல் வளை, மூச்சுப்பை ஆகிய இவற் றின் உட்பகுதியை மூடி உள்ள சவ்வினைச் சுருட்டுப் புண்ணாக்குகின்றது. அவ்வாறே வெறிச் சரக்குகளும் தீங்கு விளைக்கின்றன. சாராயமானது இரத் தத்தில் சேர்ந்து சுவாசப்பைக்குச் சென்றவுடன் சுவாசப்பை அதிலுள்ள நச்சுப்பொருளை வெளியே தள்ளுவதற்கு விரைந்து முயல்கின்றது. அந்நச்சுப் பொருள்கள் வெளியே விடும் மூச்சோடு கலக்கும் போது அது சுவாசப்பையில் பட்டு, அதைத் தாக்கு கின்றது. ஆதலால், வெறிமிக்க பானங்களையும் புகை யிலையையும் ஒழித்தல் நலம்.

இரவும் பகலும் காற்றுத் தாராளமாய் உலாவும் வீட்டிற் குடியிருத்தல் நலம். இரவில் படுக்கும் அறையின் கதவுகளைத் திறந்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். குளிர் இருந்தால், உடம்பை மூடிக் கொள்ளலாம்; முகத்தை மூடுதலாகாது. வளையாமல் நேராகவே நிற்றலும் இருத்தலும் சுவாசப்பையில் காற்று நன்கு நிரம்புவதற்கு ஏதுவாகும். புகையிலையை எந்த விதமாகவும் உபயோகப்படுத்துதல் கூடாது. வெறி விளைக்கும் எவ்விதப் பானத்தையும் உபயோகப்படுத்துதல் கூடாது. மூக்கின் வழியாகவே மூச்சு இழுத்தலும் விடுதலும் வேண்டும். பிராணாயாமம் செய்வது சுவாசப் பைக்குப் பலங் கொடுக்கும். கொசு நிறைந்திருக்கும் இடங்களில் வீடு கட்டுதல் கூடாது. கோழி, பன்றி,நாய்,ஆடு, மாடு முதலியவைகளை வீட்டிற்கருகில் வைத்து வளர்த்தல் கூடாது. அவற்றின் மேலுள்ள ஈக்கள் நோய்க்குக் காரணமாகும். அவை போன்ற பல பிராணிகளுக்கு இருமல் நோய் உண்டு. அவைகளிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவும். சுத்தமான காற்றே உயிர்க்கு ஆதாரமானதால், காற்றினை மாசு படுத்தும் எவ்விதப் பொருளையும் வீட்டிற்கருகில் வைத்தல் கூடாது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *