
வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை
16. விளையாட்டு வாழ்க்கை
இன்பங்கருதி ஏதாவது ஒரு தொழில் செய்தால், அது விளையாட்டு எனப்படும். குழந்தைகள் வேறு பயன் கருதாது விளையாடுவதில், தங்கள் பெரியாரைப்பார்த்து அவர்களைப் போல நடக்கும் இயற்கையுடையவர்கள். விளையாட்டுச் செயலிலே பல நுட்பமான உண்மைகள் அறியப்பட்டுள்ளன. கல்வியை விளையாட்டாகக் கற்றல் நல்லது. எத் தொழிலிலும் விளையாட்டு முறையைப் பின் பற்றித் தேர்ச்சியடையலாம். ஊதிய சம்பந்தமான கட்டுப் பாடுகளால், வேலைகள் செய்பவர்க்கு வேலையில் இன்பந்தோன்றுவதில்லை.
பிழைப்புக்காக ஏதாவது ஒரு வேலை பார்க்கின்றவர்கள், பிறிதொரு வேலையைத் தங்கள் பொழுது போக்கு அல்லது மன இன்பத்தின் பொருட்டுத் தங்கள் ஓய்வு நேரங்களிற் செய்து வருகிறார்கள். ஊதிய வேலைக்காலம் முற் றிய பின், இன்ப வேலைத்தொடர்ச்சி ஆயுள் கால முழுவதும், முதியவர்களுக்கு ஆறுதலளிக்க வல்லது. ஊதிய வேலையொன்றிலேயே காலங்கழிப்பவர்க்கு அது பற்றிய முதுமைப் பருவத்திலே வாழ் நாள் சுமையாகத் தோன்றும். சிலர்க்கு ஆயுள் முழுவதி லும் ஊதிய வேலையே இன்பத்தொழிலாகத் தோன்றுகிறது.
எழுதுகோல் செய்வதில் தேர்ச்சியுற்ற ஒரு வர், அவ்வேலையை விட்டு ஓய்வடைந்த காலத்தில், இயற்கை வளமுள்ள ஒரு பொழிலிலே குடிசை கட்டிக்கொண்டு, அங்கே இயற்கை வனப்பினை நுகர்ந்து திரிவதிலே இன்பங்கண்டனர். மலையேறுதல், தோட்டப்பயிர் செய்தல், நெடுந்தூரம் நடத்தல் முதலியன விளையாட்டாகக் கருதப்பட்ட விடத்து, அவற்றின் கடுமை புலனாவதில்லை. கட்டாய வேலை, எளிதாக இருந்தாலும்,சிலர் மனத்திற்கு அது கடுமையாய்த் தோன்றும். உடல் வேலையைப்பார்க்கிலும், மூளை வேலை கடினமாதலால், மூளை வேலையை இன்ப வுணர்ச்சியோடு செய்துகொண்டிருப்பவர்கள், வேலை யில்லா திருப்பவர்களல்ல. செல்வருட்சிலர், யாடத்தெரியாமல், சோம்பராய்க் காலங்கழிக்கின் றனர். உண்ணுவதும் உறங்குவதும் தவிர வேறொன்றும் செய்யாதவர்கள், தங்களுக்காவது பிறர்க்காவது நிலையான பயனை அளிக்கமாட்டார் கள். அவரவர் இயற்கைக்கேற்றவாறு விளையாட் டுத் தொழில் ஏதாவது செய்யப் பழகிக்கொள்ளுவதே நலம். அது முதுமையில் இளமைத் தன்மையை அளிக்கக் கூடியது.
மூளை வேலை மிகுதியாகச் செய்கிறவர்கள், அலுப்பு ஏற்பட்ட போது, இளைப்பாற வேண்டும் ; அல்லது விளையாட வேண்டும். ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலை செய்வது சிலர்க்கு இளைப்பாறுதலாய் இருக்கும். முதல் வேலை கடினமாயிருந் தால், இரண்டாவது வேலை எளிதாய் இருக்கவேண் டும். வீட்டுள்ளிருந்து கடினவேலை செய்பவர்கள், வெளியே சென்று உலாவி வருதல் நலம், இருதய நோய் இல்லாதவர்கள் சற்று ஓடித் திரிவதால் உட லுக்கு உரந்தேடிக்கொள்ளலாம். முதியவர்களுக்கு நடப்பதே தக்க உடற்பயிற்சியாகும். ஒரு மணிக்கு 2 மைல் அல்லது மூன்று மைல் நடக்கலாம். மெதுவாய்ச் சென்றால் நெடுந்தூரம் போகலாம். நடக்கும் போது, நடப்பதை மட்டுங் கருதாது, இயற்கைக் காட்சிகளிற் கருத்துச்செலுத்துதல் நலம். ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்ற உடற்பயிற்சி முறைகள், இக் காலத்தில் அவை வல்லாரால், வகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படிப்படியாகச் செய்யப் பழகிக்கொள்ளு தல் நலம். எதனையும் ஒருவன் தனது ஆற்றலுக்கு மிஞ்சிச் செய்தால், அவனுக்கு இருதய நோய் டாதல் கூடும்.
இயற்கைக் காட்சிகள் சிலர் உள்ளத்தைக் கவர்வதில்லை. மற்றுஞ்சிலர்க்கு அவை பரமானந்தம் அளிப்பன. சிலர்க்கு நகரக் காட்சிகளே. புதுமையும் இன்பமும் அளிப்பன. இறை வழிபாட்டில் நமது நாட்டில் பலர்க்கு மகிழ்ச்சி உண்டாதல் போற்றற்பாலதே. கோவில்களுக்குப் போவதிலும், திருவிழாக் காண்பதிலும், நம் பெண்டிர் ஊக்க முள்ளவரே. ஆனால், சுகாதாரக் குறையும், சண்டை சச்சரவுகளும், திருட்டுச் செயல்களும் இல்லாமல், திருவிழாக்களும் வழிபாடுகளும் நிகழ்தற்குரிய ஏற் பாடுகளும், சமய அறிவு, நல்லொழுக்க அறிவு முதலி யவை பரவுதற்குரிய போதனை முயற்சிகளும் நடை பெறுதல் மக்களுக்கு உண்மையான நன்மையையும் நிலைத்த இன்பத்தையுந் தருவதாகும்.



