வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

4. உணவின் செரிமானம்

பற்கள் உணவைச் சவைத்து அரைத்தபின் அவ் வுணவு உமிழ்நீரோடு கலக்கின்றது. உமிழ்நீரானது வாயிலுள்ள மூன்று இணைத் தசைக் கோளங்களி னின்று (Glands) வாய்க்குட்பாய்கிறது. உமிழ்நீர் உணவோடு கலப்பது அதன் செரிமானத்திற்கு மிகவும் அவசியமாதலின், அஃது உணவோடு கலப்பதன்முன் உணவினை விழுங்கிவிடுதல் நன்றன்று.

வாயிலிருந்து செல்லும் உணவு இரைக்குழல் வழியாக வயிற்றினை அடைகிறது. இரைக்குழல் மார்புக்குக் கீழுள்ள நடுச்சுவர் வழியாகக் கீழ்ச் சென்று, வயிற்றோடு சம்பந்தப்படுகின்றது. வயிறு என்பது இரைக்குழலின் அடிப்பாகத்திலுள்ள ஒரு பை போல்வது. வளர்ந்த ஒரு மனிதனது வயிறு, சுமார் அரைப்படி நீர் கொள்ளும். வாயின் உட்பக்கமெங்கும் பரவியுள்ள சிவந்த சவ்வுபோல வயிற்றினுள்ளும் ஒரு சவ்வு பரந்திருக்கும். அதிலிருந்து உமிழ்நீர் போல ஒருவகைச் செரிநீர் (Gastric juice) உடம்பில் வியர்வை உண்டாதல் போல வெளிப்படும். அது சுவையிற் புளிப்பாய் இருக்கும். அந்நீரானது உண வைச் செரிப்பித்து இரத்தத்தோடு சேர்வதற்கு அத னைத் தகுதியாக்கும். நன்கு சமைத்த உணவே எளி தாகச் செரிக்கும். வெறி உண்டாக்கும் பானங்களும் மிக்க காரமும் சூடுமுள்ள உணவுகளும் வயிற்றின் உட்பாகத்திற்கு ஊறு செய்து, எரிவுண்டாக்கும். உணவு வகைக்குத் தக்கபடி செரிமானம் விரைவாகவோ மெதுவாகவோ நிகழும்.

முப்பது நிமிடம் முதல் சில மணி நேரம் வரையில் செரிமானத்திற் காக உணவு வயிற்றுப் பையினுள் தங்கும். அதற்குப் பின் அதன் மிகுதிப் பாகம் சுருண்டு சுருண்டு இருபதடி நீளமுள்ள சிறுகுடரினுட்செல்லும். சிறுகுடரின் மேல் முனையில் உள்ள ஒரு சிறு குழாய் வழியாகப் பித்தநீர் ஈரலிலிருந்து சிறுகுடரினுட் பாயும். அப்பம் போன்ற தசைக் கோளம் (Pancreas) ஒன்றிலிருந்து மற்றொரு சிறு குழாய் வழியாக ஒரு வகைநீர் சிறு குடரினுட்பாயும். அது உணவு செரிப் பதற்கு மிகவும் அவசியமானதே. சிறு குடரில் உணவு முற்றிலும் செரிமானமுற்று இரத்தத்திற் கலக்கும்.

இரத்தத்திற்கலக்கும்போது உணவானது நீர்த்தன்மை அடைந்துவிடும். ஆதலால், அஃது இரத்தத்தில் எளிதாகக் கலந்து, உடம்பெங்கும் பரவி, உடம்பின் ஒவ்வொரு பாகத்திற்கும் வளமும் ஆற்றலும் சூடும் தரும். உணவின் சாரத்தின் வேறா கக் கழிதற்குரிய நச்சுப் பொருள்களும் நாற்றப் பொருள்களும் சீரணமாகாதனவும் பெருங்குடலிற் புகுந்து, மலமாகிக் கழிவன. மலங்கழித்தல் ஒழுங் காக நிகழாத போது உடம்பில் நோய் ஏற்படும்; கழிக்கப்படாத நச்சுப் பொருள்கள் இரத்தத்திற் கலக்கும். ஆதலால், பெருங்குடர்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *