
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
9. எண்சாண் உடம்பில் இருக்கும் வணிகர்!
இந்த உடம்பு எண்சாண் அளவினது; உயிர் உறைதற் கேற்ற இனிய குடியிருப்பு. உயிர் உடலில் குடியிருந்தாலும் வாடகைக் குடியிருப்பேயாம்; முற்றிலும் உரிமையுடைய தன்று. ஐம்பொறிகளும், உடலுக்கு நாயகராக விளங்கி உடலுக்குத் துன்பமே செய்கின்றன. நீதி நெறிக்கு மாறுபட்ட வாழ்க்கை முறைகளிலேயே பொறிகள் ஈடுபடுத்துகின்றன. இந்த ஐம்பொறிகளும் வணிகரைப் போல் வாணிகம் செய்கின்றன. அதிலும் நெறிவழிப்பட்ட வாணிகமன்று; தம் சுவை ஒன்றையே முன்னிலைப்படுத்தி முனைகின்றன; தாம் துய்த்தலிலேயே வேணவாக் காட்டுகின்றன. இந்தத் துய்ப்பின்மூலம், யாதொரு பயனும் உடலுக்கும் இல்லை; உயிருக்கும் இல்லை. முறைகேடான பொறிகளின் துய்ப்பாதலினால் உடல் நோய் வாய்ப்படவே செய்கின்றது. எளிதில் மூப்பும் முதுமையும் வந்தடைகின்றன. திறன் மிக்க அறிவும், ஆற்றல் நிறை உழைப்பும் மக்கி மறைந்து போகின்றன. வாழ்க்கையில் ஈடு இணையற்ற பேறாகிய புகழை இழப்பதோடன்றி இகழ்ச்சியும் வந்தடைகிறது. தம்மைக் கொண்டவர்க்கு, இல்லாத தீங்குகளைச் செய்து, தாம் சிறுபொழுது மகிழும் ஐம்பொறிகளின் வாணிகம், வாணிகமா? இல்லை, இல்லை, கொள்ளை! ஆனாலும் அப்பரடிகள் வாணிகமாகவே உருவகம் செய்கிறார். இந்த நீதியோடு படாத வாணிகத்தை ஐவர் செய்யத் துணை நிற்கின்றனர். ஏனைய உள்பொருள்களாகிய தத்துவங்கள் தொண்ணுற்றாறு. இந்த தொண்ணுற்றாறு தத்துவங்களும் தெளிந்த வாழ்க்கை வழங்குவதற்குப் பதில் மயங்குகின்றன.
இந்த மயக்கத்தின் காரணமாக உய்திக்குத் துணைசெய்யத் தவறிய இந்த உடம்பில் உயிர் தானே குடியிருப்பதாகக் கருதி மயங்கி அறிவிழந்து பொறிகளின் ஆதிக்கத்திலிருக்கும் இந்த உடம்பைப் பேணிப் பாதுகாக்கின்றது. காலம் தவறாமல் உணவு வழங்கியும், நோய்க்கு மருந்து கொடுத்தும், இன்னும் என்னென்னவோ எடுபிடிகள் எடுத்தும் உடலைப் பேணத்தான் செய்கின்றோம். இந்த உடம்பின் மீது ஓர் ஈ, கொசு உட்காரத் தாங்கினோமோ, என்ன? அவ்வளவு பாதுகாப்பு! எனினும் இந்த வீடு காலி செய்யப் பட வேண்டிய ஒன்றே. நாமாகக் காலி செய்தாலும் பரவாயில்லை. நமக்கு உணர்வில்லாமலே மயங்கிய நிலையில், பேணிய உடம்பினின்று பெயர்ந்து நகர்கின்றோம். எங்கு நகர்வது? ஆயுட் கால முழுவதும் அண்டி இச்சை முகம் காட்டிச் சுரண்டிப் பிழைத்த பொறிகளாகிய வாணிகர்களையும் இப்பொழுது காணோம். தத்துவங்களும் மயங்கிக் கிடக்கின்றன. அதன் காரணமாக அறிவும் வேலை செய்யவில்லை; உணர்வும் வேலை செய்யவில்லை! நம்முடைய நிலை வலிவற்றுப் போயிற்று! உழைத்து ஊட்டி வளர்த்த பொறிகள் கைகொடுக்கவில்லை; மயக்கம் போடுகின்றன. எங்கும் இருள்! என்ன செய்வது நம்மால் ஒன்றும் ஆவதற்கில்லை! இறைவனுடைய கருணையே வலிய வந்து எடுத்தாள வேண்டியதிருக்கிறது.
திருக்கொண்டீச்சரத்து இறைவன் நம்மை எடுத்தாள்பவன். அவன் விண்ணுயர்ந்த நிற்கும் திருக்கோயிலை உடையவன். அவன் திருக்கோயிலின் உயரம், எடுத்தாளும் கருணைக்கு எடுத்துக்காட்டு. உலகின் எந்த திசையிலும் நின்று நிலவும் உயிர்களையும் வானுயர்ந்து நின்று அழைக்கும் அவனது கருணையின் சின்னமே, அணி செய்து நிற்கும் கோபுரம், அவன்றன் அழைப்பை அலட்சியம் செய்யக்கூடாது. அந்த அருளழைப்பை ஏற்று அவனுடைய திருவடியைச் சார்ந்து பீடுசால் பெருமை பெற்று வாழவேண்டும். அப்பொழுதும் பொறிகளுக்கு இழப்பில்லை. மாறாக நிறைதல் இன்பம் அவைகளுக்குக் கிடைக்கின்றன. நுகராத மணத்தை நுகரவும், காணாதன காணவும், கேளாதன கேட்கவும், வாய்ப்பு ஏற்படுகிறது. உலகியலைத் துய்க்கும் பொறிகள் அழிந்து போகின்றன. திருக்கொண்டீச்சரத்தான் திருவடியைத் துய்க்கும் பொறிகள், திருவருளைத் துய்க்கும் பொறிகளாகின்றன. ஆதலால், வறிதே பாழாகாமல் வாழ்வாங்கு வாழத் திருக்கொண்டீச்சரத்தான் திருவடிகளைப் பேணுவோம்.
சானிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ் செய்து
பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே
– அப்பர்



