அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

26. அப்பரடிகளின் அருள்நெறி

⁠தமிழகம், வளர்ந்த நாகரிக மரபுகளைக் கொண்டு புகழ் பூத்ததாகும். மொழியியல், வாழ்வியல், கலையியல், சமயவியல் அனைத்திலும் தமிழகம் தனக்கென்று ஒரு மரபும், தனி நட்பையும் கொண்டு விளங்கிய பெருமையுடையது. காலந்தோறும் தமிழ் மொழியையும் தமிழ்நெறி மரபுகளையும் வளர்த்துப் பாதுகாத்த வரலாற்றுப் பெருமை தமிழினத்திற்கு உண்டு.

⁠ஆயினும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ் மொழி வரலாறு- தமிழின் ஒருமைப்பாடு, சமயநெறி ஆகியனவற்றைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் ஒரு தொய்வு ஏற்பட்டது உண்மை. செந்தமிழ் வழக்கில் அயல் வழக்கு புல்லுருவி வடிவத்தில் ஊடுருவியமையால் தமிழ் மக்கள் ஏமாந்தனர். ஏமாற்ற வந்தவர்கள் ஏற்றங் கொண்டனர். தமிழ் மொழியில் அயல் மொழிச் சொற்களில் ஊடுருவல்! திருத்தலங்களுக்கிருந்த தமிழ்ப் பெயர்களில் மாற்றம்! திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் – இறைவியின் தமிழ்ப் பெயர்கள் மாற்றம்! வரலாற்று அடிப் படையில் புகழ்பெற்ற திருத்தலங்களுக்குப் பொருந்தாப் புராணங்கள் செய்து, புகழ் மங்கச் செய்தல்! கொள்கை – கோட்பாடுகளில் கலப்படம்! எல்லாம் செய்யப் பட்டன! தன்னையும், கடவுளையுமே நம்பும் தமிழர்கள் சிறு தெய்வங்களை நம்பத் தலைப்பட்டனர்; நாளையும் கோளையும் கூட நம்பி வழிபடத் தலைப்பட்டு விட்டனர். தமிழர்களின் அறிவு கெட்டது; ஆள்வினைத்திறன் சுருங்கிற்று. வாழப் பிறந்தவர்கள் பிழைப்பு நடத்தத் தலைப்பட்டனர்.

⁠இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை மீட்க ஏழாம் நூற்றாண்டில் ஒரு பேரொளி எழுந்தது; நாடு முழுவதும் ஒளி வீசியது; கண்மூடித்தனமான மூடப்பழக்கங்களைச் சுட்டெரித்தது; ஞானத்தைப் பரப்பியது. தமிழர்கள் எழுச்சி பெற்றனர்; ஏற்றம் பெற்றனர். அந்தப் பேரொளி எது?

⁠அந்தப் பேரொளிதான் ஞாலமெலாம் ‘அப்பரடிகள்’ என்று புகழ்ந்து போற்றும் தமிழ்த் தலைவர். அப்பரடிகள் அயல் வழக்கின் காரணமாக வந்து மண்டிக் கிடந்த தீமைகளைச் சாடினார்; மக்களுக்கு அறிவு விளக்கம் தந்தார்.

முடியாட்சியை எதிர்த்த முதல்வர்

⁠உலகம் முழுவதும் “அரசனின் ஆணை ஆண்டவனின் ஆணை” என்ற கொள்கை இருந்தபொழுது தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்கு முரணாக இருந்து முடியாட்சியை, எதிர்த்துப் புரட்சி செய்த முதல் தலைவர் அப்பரடிகள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

⁠(ஆறாம் திருமுறை. 961)

என்று முடியாட்சியை எதிர்த்துப் புரட்சி செய்த தலைவர் அப்பரடிகள். அப்பரடிகள் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு.

ஆனால், அன்று (ஏழாம் நூற்றாண்டில்) அப்பரடிகள் எண்ணிச் சொன்னவைகள், இன்று சீர்த்திருத்தக் கருத்துக்களாகப் போற்றப்படுகின்றன. தமிழுலகில் முதன் முதலில் சமுதாயச் சீர்திருத்தத்தைச் சிந்தித்துக் கூறிய முதல் புரட்சித் தலைவர், ஞானத் தலைவர் அப்பரடிகள்.

சமுதாயச் சீர்த்திருத்தம்

தமிழ் மரபில் குலம் மட்டும் உண்டு. குலம் என்பது வழி வழி தலைமுறை சார்ந்த நெறி மரபினைச் சார்ந்தது. இதனை,

இலமென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள

⁠- திருக்குறள் 223

என்ற திருக்குறளாலும் அறிக. பிறப்பினால் அமையும் சாதிக் கொடுமைகள் தமிழகத்தில் இருந்ததில்லை. அயல் வழக்கின் நுழைவாலும் நிலபிரபுத்துவ சமுதாய அமைப்பின் காரணமாகவும் பிறப்பினால் சாதி வேற்றுமை, தீண்டாமை முதலியன வந்து புகுந்தன. இந்தச் சாதி வேற்றுமைகளை அப்பரடிகள் வன்மையாக மறுகின்றார்; கண்டிக்கின்றார்.

சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமுங்குல மும்கொண் டென்செய்வீர்
பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்

மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே
என்று சாடுகின்றார். மேலும்,
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே!

என்றும் அப்பரடிகள் பாடுகின்றார்.

இதையே பாரதியும்,

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்

என்று பாடுகின்றார்.

இந்தப் பாடல்களின் கோட்பாடுகளை இப்போதும் ஏற்காத இதயம் படைத்த, மருட்டுகின்ற மதத் தலைவர்கள் நமது நாட்டில் உள்ளனர். ஐயகோ! இன்றைய தமிழகம் யாரோ ஒரு பாவி நுழைத்த சாதிப் புன்மைகளால் சீரழிந்து வருகிறது. இந்தப் பொல்லாச் சாதித் தீமையை நீக்கினால் ஒழியத் தமிழகம் மீளாது. தமிழினமே ஒருமைப்பாடு குலைந்து சிதறுண்டு போகும். தமிழினத்தில் நுழைத்துள்ள சாதி வேற்றுமைகளை முற்றாக அகற்றத் தக்க வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, நடைமுறை விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டு முறையிலும் கருவறையில் உள்ள பெருமானைப் பத்தராவார் அனைவரும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் வாய்ப்பு, வழங்கப் பெறுதல் வேண்டும். இந்த உரிமை திருமுறைக் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தது.

அப்பரடிகள்,

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

⁠(4ஆம் திருமுறை)

என்று ஒதும் பாடலின் மூலம் பத்தராவார் ஒவ்வொருவரும் கருவறையில் எழுந்தருளியுள்ள பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிப்பட்டுள்ளனர் என்பதை அறிகின்றோம். இன்றும் வடபுலத்தில் இந்த மரபு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இந்த உரிமை இல்லை. அர்ச்சகர் சாதியை மாற்றும் முயற்சியை விட இந்த முயற்சி பயனளிக்கத்தக்கது. பழைய மரபைப் புதுப்பிப்பதுமாகும். மூலவர்-இறைவன் சந்நிதியில் (திருவாபரணங்கள் இல்லாத நிலையில்) நடை முறைப்படுத்தலாம்.

அறக்கட்டளை முறை

இன்று நம்மை வருத்தும் தீமைகளில் இரண்டாவது வறுமை, ஏழ்மையாகும். இந்த வறுமையிலிருந்து மக்களை மீட்கத் தவறிவிட்டால் இந்தத் தலைமுறையிலேயே தமிழர்கள் வலிமை இழப்பர்; தமிழகம் தாழும். பொருளியல் துறையில் அறக்கட்டளை முறையை-தர்மகர்த்தா முறையை வலியுறுத்துவர்.

இந்தத் தர்மகர்த்தா முறையை அண்ணல் காந்தியடிகள் இன்று இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்தத் தர்மகர்த்தாக் கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லால்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே

(4ஆம் திருமுறை)

இது அற்புதமான தத்துவம். இரப்பவரின் துன்பம் நீக்கவே செல்வம் உடைமை. அச் செல்வம் உடைமையும் நாமாகப் பெற்றதல்ல. இறைவன் திருவருளால் அமைந்தது. அதுவும் இரப்பவர்க்கு ஈதல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது. இது நியதி. இங்ஙனம் அல்லாத உடைமை அமைப்புகள் ஏற்கத்தக்கன அல்ல. அவை பிறர் பங்கைத் திருடிச் சேர்த்தவை. இவர்கள் பொருள் ஈட்டும் பொழுதும் பேணும்பொழுதும் கரந்து வாழ்பவர்கள். ஆதலால் இவர்களுக்கு நரகம் உறுதி என்கிறார் அப்பரடிகள்.

பழகும் பண்பியல் கோட்பாடு

மனிதகுலம் கூடிவாழும் இயல்பினது. கூடிவாழ்வதே ஒழுக்கம். கூடி வாழ்தலுக்குச் சில பண்பியல்கள் தேவை. இதனைப் “பழகும் பண்பியல்” என்று கூறலாம். இத்துறையை மேலை நாட்டினர் “Behaviorial Science” என்று வள்ர்த்துள்ளனர்.

பழகும் பண்பியலில் தலையாயது எது எனில் யாரோடும் அன்பாகப் பழகுவது. அந்நியமாவதற்குரிய செய்திகளைப் பின்தள்ளி வைத்து, ஒன்றுபடுதலுக்குரிய களங்களை உரமூட்டி வளர்த்தல். ஒருவர் இல்லாத இடத்தில் அவருடைய புகழ்மிக்க குணங்களைப் பலர் அறியக் கூறவேண்டும். அவரை நேரில் காணும்போது அவரிடம் முகமன் பேசாமல்-புகழ்ந்து கூறாமல் இடித்தும் எடுத்தும் கூறுவனவற்றைக் கூறித் திருத்த முற்படுதல் வேண்டும்.

குணங்கள்சொல்வியும் குற்றங்கள்
பேசியும்வணங்கிவாழ்த்துவர் அன்புடையாரெலாம்

என்று பழகும் பண்பியலுக்கு இலக்கணம் கூறுகின்றார் அப்பரடிகள்.

உழவாரத் திருத்தொண்டு

தமிழகத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்கள் ஆதலால் திருக்கோயில்களைப் பேணுவதில் அப்பரடிகள் ஆர்வம் மிகுதியும் காட்டினார். திருக்கோயில்களைப் பேணும் ஆர்வத்தினாலேயே உழவாரத்தினைக் கையிலேந்தி திருத்தொண்டு செய்தார். சேக்கிழார் “கைத்திருத் தொண்டு” என்று இதனைப் பாராட்டினார். அப்பரடிகள்,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே

என்று திருக்கோயில் பணி செய்யக் கூவி அழைக்கிறார்! அப்பரடிகள், வாழ்ந்த காலத்தில் இந்தப் பணிகள் எந்த அளவுக்கு அவசியமாக இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இன்று இந்தப் பணிகளை அவாவி நிற்கும் திருக்கோயில்கள் எண்ணற்றவை. நமது திருக்கோயில்களை நாம் பேணிக்காக்க வேண்டும். அது நமது கடமை.

எல்லை கடந்த அருளாளர்

அப்பரடிகள் வேறுபாடுகளைக் கடந்த நெஞ்சினர். உலகந் தழிஇய உணர்வினர்; நாடு, மொழி, சமய எல்லைகள் கடந்த அருளாளர். ஒரோவழி சமணர்கள், பௌத்தர்களைக் கடிந்த பகுதிகள் சில உண்டு. இவை மதத்தின் பெயரால் தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் நோக்கத்திலேயன்றி வேறு அல்ல. அதே போழ்து வேறுபாடுகளையும் தனித் தன்மைகளையும் அங்கீகரிக்கும் பேருள்ளம் அப்பரடிகளுடையது.

வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்,
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

என்ற அடிகள் கவனித்துப் படித்து இன்புறத் தக்கன. இறைவனை “எல்லா உலகமும் ஆனாய்” என்ற பாடல் உலக ஒருமைப்பாட்டினை வற்புறுத்தும் பாடல்.

இன்றைய தமிழகத்திற்கு அப்பரடிகளே சிறந்த வழிகாட்டி அப்பரடிகள் காட்டிய அருள்நெறியே நமது நெறி.

உலகப் பொது நெறி.

வளர்க அருள்நெறி!

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !