அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

2. அன்பில்லையேல்…!

இன்று நம் நாட்டில் கடவுள் நம்பிக்கையுண்டு; வழிபாட்டு வெளிப்பாடும் உண்டு; திருக்கோயில்கள் சூழ்தலும் உண்டு; திருநீறு அணிதலும் உண்டு; ஆறுகாலப் பூசைகளுமுண்டு; விழாக்களும் உண்டு; வேடிக்கைகளும் உண்டு; “அருச்சனைகள்” உண்டு; அமுது படையல்கள் உண்டு; இன்னும் என்னென்னவோ உண்டு. இவ்வளவும் இருந்தும் நாம் ஏன் கடவுளைக் காணவில்லை? கடவுள் காண முடியாத பொருளா? கடவுள் என்ன கற்பனையா? அல்லது பொய்யா? புனைந்துரையா? கடவுள் நம்பிக்கை யில்லாதவர்கள், “கடவுள் இல்லை, அதனால் காண முடியாது” என்பர். கடவுள் உண்டா? இல்லையா? என்ற வழக்கை நடத்துவதற்கு இன்றைய தமிழர்கள் தகுதியுடையவர்களல்லர். அண்டங்களில் ஒன்றாகிய மதியினையே இப்பொழுதுதான் மாந்தன் பார்க்கத் தொடங்குகிறான்; அமெரிக்க மாந்தனும் உருசிய மாந்தனும் இதில் போட்டியிட்டுக் கொண்டு முயற்சி செய்கிறான்.

அண்டங்களில் ஒன்றாகிய மதியைக் கண்டுபிடிக்கவே இத்தனை நாளாயினவென்றால் “அப்பாலுக்கப்பாலாய்” என்று பாடப்பெற்ற பரம் பொருளை, உண்டா? இல்லையா? என்று ஆய்வதற்குரிய அறிவெல்லையை நாம் இன்னும் அணுகக்கூட இல்லை. ஆதலால், கடவுள் உண்டு என்று நம்புவதே இப்போதைக்கேற்ற அறம். ஆனால், ஏன் நம்மால், உள்ள கடவுளைக் காணமுடியவில்லை? கடவுள் ஏன் நம்மைக் கண்டு ஒளிந்து கொள்கிறார்.

நாம் கடவுளையும் ஏமாற்றுவதில் வல்லவர்கள். கடவுள் நம்மிடத்தில் எதை விரும்புகிறாரோ, நாம் அதைத் தருவதில்லை. கடவுள் நம்மிடத்தில் நம்முடைய நெஞ்சத்தில் ஓரிடம், ஒண்டுக் குடித்தனம் செய்ய விரும்புகிறார்; மாறாத அன்பை வேண்டுகிறார். நாமோ அவருக்கு இவற்றைக் கொடுக்க அணியமாய் இல்லை. அதற்கு மாறாகத் தேங்காய்களைக் கொடுக்கிறோம்; பழங்களைக் கொடுக்கிறோம். ஏன்? சிலர் முடியையே கொடுக்கிறார்கள். கடவுள் விருப்பத்தை வழங்காத வல்லாள கண்டர்கள் நாமே! இன்னும் சிலர் திருத்துறை, திருக்குளங்களில் நீராடுவதில் வல்லவர்கள்! கங்கை என்றும் காவிரி என்றும் சுற்றித்திரிந்து மூழ்கிக் குளித்து மகிழ்கின்றனர். ஆனாலும் அவர்களிற் பலர், சராசரி மக்களாகக்கூட விளங்காமையைப் பார்க்கிறோம். நறுநீரால் (தீர்த்தத்தால்) இவர்களுக்குப் பயன் விளைந்ததோ இல்லையோ, இவர்களால் நறுநீர் கெட்டது என்னவோ உண்மை. இவர்களை ஆட்சி செய்யும் விலங் குணர்ச்சியிலிருந்து இவர்கள் விடுதலை பெறவில்லை. திருத்துறைகளில் மூழ்கி எழுந்திருப்பதால் திருவருட்பேறு பெற்று விடுவதென்றால் நீர் வாழ்வன அனைத்துமே பெற்றுவிடுமே! நண்டும் தவளையும் நாயகன் அருள் பெற்றிருக்கவேண்டுமே! அப்பரடிகள், வினாவிற்கேற்ற விடை தருகிறார். அப்பரடிகள், சமயத்தைப் பருவுடல் வாழ்க்கையில் மட்டும் கொண்டவரல்லர்: உயர்ந்த பட்டறிவில் திளைத்தவர். அவர் வாழ்ந்த மெய்யறிஞர்; புரட்சியிற் பூத்த புதுமலர்; புதுமணம் வீசிய நறுமலர்; அருள் மணங்கமழ்ந்த திருமலர்.

தண்ணீர் இயல்பாக ஓடும் தன்மையுடையது. எங்கும் கெட்டியான அடைப்பிருந்தாலன்றித் தண்ணீர் தேங்காது. உருண்டு ஓடுதல் அதன் இயற்கை. இங்ஙனம் ஓடும் தண்ணீரை ஓட்டைக் குடத்தில் இரண்டு கைகளால் அள்ளிச் சேர்த்து மூடி வைப்பது முடிந்த காரியமோ? தண்ணீரைக் கைகளால் அள்ளிப் பானையில் சேர்ப்பதற்கு முன்பே பாதி போய்விடும். பானையோ ஓட்டை! பானையில் விழுந்த தண்ணீரும் அடுத்த கைத் தண்ணீர் வருவதற்கு முன்பு ஓடிவிடும். இந்த நிலைமையில் ஓட்டைப் பானைக்குள் தண்ணீரை வைத்து எப்படி மூடுவது? வெறும் பானையைத் தண்ணீர் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு மூடினால்தான்! அப்படி மூடி வைப்பதால் என்ன பயன்? என்ற இரக்கத்திற்குரிய வினாவை அப்பரடிகள் வினவுகிறார். அதுபோல ஓரிடத்திலும் நிலைபெறாது உருண்டு ஓடும் மனம். இந்த மனம் தங்கியிருக்கின்ற குடமாகிய உடம்பைத் திருத்துறைகளில் குளிப்பாட்டித் திருவருள் கிடைத்ததாக நம்பி வாழ்வது ஓட்டைக் குடத்தில் ஓடும் நீரினை அடைத்து வைத்த முட்டாளின் செயலோடு ஒக்கும்.

இறைவனைக் கோடி துறைகளில் குளித்தாடுவதால் மட்டும் காண முடியாது; நெஞ்சு கலந்த அன்பினாலேயே காண முடியும். “ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” என்றும், “அருச்சனை வயலில் அன்பு வித்திட்டு” என்றும் மாணிக்கவாசகர் பேசுகின்றார். “ஐயன் ஐயாறனார்க்கு அன்பலால் பொருளில்லை” என்பர் அப்பரடிகளும். ஆதலால், இறைவனின் திருவருளைப் பெற அன்பே வழி; வேறு வழிகள் இறுதிப் பயனைத் தரா.

கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே

என்பது அப்பரடிகளின் திருப்பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !