அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

22. அகப்பகையை வெல்க

⁠மனித உலகம் இன்பத்தையே விழைகிறது. அதற்காகவே உழைக்கிறது. ஆயினும், இன்பத்தின் சாயல்கூட இன்னும் மனித உலகத்தை அணுகவில்லை. இன்பத்தின் நிழல்களைத்தான் இன்று இன்பமென்று கருதி உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிழல், நிழல்தானே! இன்று மனித உலகம், இன்பத்தை ஆரத் துய்க்க முடியாமல் தடையாக இருப்பது புறப்பகையன்று. ஒரு காலத்தில் புறப்பகையும் மனிதனை வருத்தியது. ‘சுறுக்’ கென்று தைக்கும் புறப்பகையைக் கடிதில் உணர்ந்த மனிதன், புறப்பகைகளை வெற்றி காண்பதில் படிப்படியாக முன்னேறி விட்டான்.

⁠ஆதலால், இன்று அவனை வெள்ளம் வருத்துவதில்லை; தீ, சுடுவதில்லை; கொடிய விலங்குகளும் கூட வருத்துவதில்லை. அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தன் ஆற்றல் எல்லைக்குள் உட்படுத்தி அனுபவத்திற்குக் கொண்டு வந்து விட்டான். அஃதோர் அற்புதமான சாதனை. அந்தச் சாதனையின் அருமையைக் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை. ஆயினும், பலவற்றைப் பழக்கிய அவன், பழகத் தவறிவிட்டான். நாயினை நல்லவிதமாகப் பழக்கினான். ஆனாலும் அவன் பழகத் தவறிவிட்டான். அவனை இன்று வருத்துவது, புறப்பகையல்ல. அகப்பகையே யாகும். அழல் நெருப்பு அவனைச் சுடுவதில்லை. ஆனாலும், அழுக்காற்றுத் தீ அவனைச் சுடுகிறது. அலைகடல், அவனை வருத்துவதில்லை. அதனை அடக்கிக் கலம் செலுத்துகிறான். ஆனாலும் அவா வெள்ளம் அவனை அலைக்கழிக்கிறது.

⁠இந்த அகப்பகையை வென்று, வெற்றி பெற்றாலேயே மனிதன் பகைப் பலத்துக்கு ஆளாகமாட்டான். மனிதனின் வாழ்வில் படைக்கலங்கள் மட்டும் அஞ்சாமைக்கு அடையாளமல்ல. படைக்கலம் தாங்கியவர்களிலும், பஞ்சை மனிதர்கள் உண்டு. படைக்கலம் தாங்காமலே கூடச் செருக் களத்தில் நின்ற வீரர்களுண்டு. அப்பரடிகள் படைக்கலம் தாங்கிய வீரரா? வில்லைத் தாங்கினாரா? வாளைத் தாங்கினாரா? இல்லை! அவருடைய நெஞ்சத்தைப் பழுதிலாத் துறவு என்ற அரணில் சேர்த்தார்; அங்கே நிலைநிறுத்தினார்; ஒடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார். ஒண் திறல் பிறந்தது. இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தையே நாவினில் படைக்கலமாகக் கொண்டார். கோட்டை கொத்தளங்கள் பெற்றுக் கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை வெற்றி கண்டார். “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்று அடலேறு என முழங்கினார். இந்தத் தறுதண்மை-பேராண்மை சமய நெறிக்கே உரியது; அருளியலுக்கே உரியது.

⁠ஆனால், ஐயகோ! இன்றைய சமய வரலாறு அச்சத்தின் கொள்கலனாக மாறியிருக்கிறது. பல்லவப் பேரரசனையே கலங்க வைத்த நெறியினைச் சார்ந்தவர்கள் கோட்டைக் காவலர்களைக் கண்டே கலங்குகிறார்கள். இன்று சமயம் வாழ்க்கைக்காக இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக என்று ஆகிவிட்டது. பயனுக்காக அன்றிப் படாடோபத்துக்காக என்றாகி விட்டது. இன்றைய சமய உலகில் ஈர நெஞ்சினைக் காணோம். ஆதலால், கனிந்த அன்பினையும் காணோம். துறவு இன்மையால் தூய நெஞ்சத்தையும் காணோம். அஞ்சாமை யின்மையால் சைத்தானும் கை வரிசை காட்டுகின்றான்.

⁠ஆதலால் எங்கு நோக்கினும் துன்பம்! பகை; இந்த இருண்ட சூழ்நிலைகளிலிருந்து நம்மை வழிகாட்டிக் காப்பாற்ற வல்ல ஆசிரியர் அப்பரடிகளேயாவார். அப்பரடிகள் மனித உலகத்தின் துன்பம் துடைக்க வந்த மாமணி! இருள் கடிந்து எழுந்த ஞாயிறு! வாழ்க்கைக்கொரு வழித்துணை! அப்பரடிகள், உபதேசங்களால் மட்டுமல்ல, அவர்தம் வாழ்க்கையாலும் நமக்கு வழி காட்டினார். மனம், ஒரு தன்மைத்தாயிருக்கக் கூடியதன்று. நெஞ்சமும் கூட அப்படித்தான்! இறைவனைவிட்டு ஒரு நொடி பிரிந்திருந்தாலும் அது கெட்டுவிடும். புறத்தே மண்டித் திணிந்து கிடக்கும் தீமையை உடனே பற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. அதனாலன்றோ, “நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்று கூறுகின்றார். மாணிக்கவாசகரும் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்று குறிப்பிடுகின்றார். நெஞ்சத்தை, இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே பழக்க வேண்டும். அஃது ஒரு பொழுது மறந்தாலும் உடன், பாசி மூடிக் கொள்ளும். ஆதலால் அப்பரடிகளுடைய நெஞ்சு எப்பொழுதும் – இடையீடில்லாமல் இறைவனுடைய திருவடிகளைத் தடவிக் கொண்டிருந்ததாம். இன்றோ, நம்முடைய கைகள்தான் இறைவனின் திருமேனிகளைத் தீண்டித் தடவுகின்றனவே தவிர, நம்முடைய நெஞ்சு அவனைத் தீண்டித் தடவுவதில்லை.

⁠உடலுக்கு உயிர்ப்பு உயிர், உயிர்க்கு உயிர்ப்பு இறை, உடல் உயிர் உறவுக்கு இணைப்பு மூச்சுக் காற்று. இந்த இணைப்புக்கு அன்பே காரணம். இங்ஙனம், நெஞ்சத்தை இறைவன் தாளிணைகளுக்குத் தந்து வாழும் வாழ்க்கையே வாழ்க்கையென்றார் அப்பரடிகள். இறைவனை நமக்குப் பெற்றுத் தர வல்லது, நம்மிடத்தில் இருத்தி வைக்கவல்லது அன்பேயாகும். மாணிக்கவாசகர் இந்த அன்பினை ஆற்றல் மிக்க அன்பு என்று கூறுவார். அப்பரடிகள் “ஐயன் ஐயாறனார்க்கு, அன்பலால் பொருளுமில்லை” என்றார். அது போலவே, தொண்டு செய்தலே உயிர்க்கு ஊதியம் என்றார். அப்பரடிகள் காட்டிய இறைவனை விட்டுப் பிரியாத நெஞ்சம், அவர் காட்டிய அன்பும் அவர் காட்டிய தொண்டும் நம்மைச் சேருமாயின் அவலம் வந்து அடையாது. ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பு கிடைக்கும். இம்மையோடன்றி மறுமையும் ஏமாப்புடன் வாழலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !