
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
20. இறைவன் தங்கும் இடம்
நமது சமயநெறி இனிய நெறி; எளிய நெறி; “இது”, “அது” என்ற பிரிவினைச் சழக்குகளைக் கடந்த பெருநெறி. நமது சமயநெறியில் இறைவனை எப்படியும் தொழலாம்; எந்தப் பெயராலும் அழைக்கலாம்; எங்கும் தொழலாம். இங்ஙனம் அமைந்த ஒரு சன்மார்க்க நெறியை உலகில் வேறெங்கும் காண முடியாது, இறைவன் உருவமுடையவனல்லன்; ஆயினும், உருவமுடையான். அவனை ஆலயங்களிலும் வழிபடலாம்; அவரவர் அகத்திலும் வழிபடலாம். இறைவன் என்ற சொல்லுக்கே பொருள், எல்லா உயிர்களிடத்திலும் தங்கியிருப்பவன் என்பதே. இறைவன், விரும்பி எழுந்தருளும் திருக்கோயில், உயிர்களின் நெஞ்சமேயாகும். “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்றார் மாணிக்கவாசகர்.
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்தறியேன்
என்று அப்பரடிகள் முதற்பதிகத்தில் அருளிச் செய்துள்ளார். இறைவனைத் தன் உயிருக்கு உயிராக எண்ணி உணர்தல் வேண்டும்.
இறைவனைத் தன் உயிரில் அறியும் தகுதியுடையவர்கள் உள்ளத்தில், இறைவன் தங்கி அருள்செய்வான்; அங்கனம் தன் உயிரில் இறைவனை அறியும் அறிவிலனாயின் அவனிடத்தில் தங்கி நிற்கும் இறைவனை அடைதற்கு இயலாதவனாகி அவலமுறுகின்றான்.
தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
தன்னிற் றன்னை யறியில னாயிடில்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே!
என்பது அப்பர் வாக்கு.
தன்னில், தன்னுயிரில் இறைவனைக் கண்டு தொழுதல் இனியதவம். “விறகில் தீயினன்” என்பர் நமது அடிகள். விறகிற்குள்தான் சக்தி மண்டிக் கிடக்கிறது. மணியினுள்தான் மணியின் ஒளி கனன்று கொண்டிருக்கிறது. பாலினுள்தான் நெய் இருக்கின்றது. அதுபோல் ஊனில், ஆவியில் இறைவன் இருக்கின்றான். ஆங்கு அவனைக் கண்டு தொழாமல் – நெஞ்சத்தைக் கோயிலாக்காமல் புறத்தே தேடியலைவதில் பயனென்ன? இதனையே சித்தர் ஒருவர், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உன் இருக்கையில்” என்று கூறினார். இதயத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து பத்திமை செய்யும் தகுதியற்றவர்கள் திருக்கோயிலிலும் இறைவனைக் காண முடியாது. ஆதலால், மெய்ஞான நெறியில் வளர விரும்புவர்கள் இறைவனை உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி நினைக்கவேண்டும். அகப்பூசை செய்யாமல் புறப்பூசை செய்தலை அருணந்திசிவம், “கையிலிருக்கும் தேனைப் பருகாமல் முழங்கை வழியாக வழிகின்ற தேனைக் குடிப்பதற்கு முயற்சி செய்வது போல” என்று கூறுகின்றார். ஆதலால் நம்முடைய மனம் என்ற கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்து நாள்தோறும் அவனை வழிபட்டு உய்வோமாக!



