
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
4. நெஞ்சமும் ஊசலும்
மனித வாழ்வின் மையம் நெஞ்சமேயாம். நெஞ்சத்தின் இயல்பே மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளமாகிறது. நெஞ்சு நிலையான தன்மையுடையதன்று, அதற்கென்று தொழில் தன்மை உண்டே தவிர, குணத்தன்மை கிடையாது. நெஞ்சிற்குக் குணங்களாகிய சிறப்பை, மனிதன் தன்னுடைய அறிவறிந்த ஆள்வினையால் ஆக்கித்தரக் கடமைப் பட்டிருக்கின்றான். நெஞ்சிற்கு மெல்லியல்புகளை மனிதன் தந்து, நெஞ்சின் வழி இயங்குகின்ற பொறிபுலன்களாலே பயன் அடைய வேண்டும். அதனால்தான் நெஞ்சை இரந்து கேட்கிறார் திருஞானசம்பந்தர், நல்லவண்ணம் இருந்து துணை செய்யும்படியாக!
நெஞ்சத்தின் தொழில் – இயல்பு சுவைத்தலாகும்; ஆனால், அலையும் இயல்புடையதுமாகும். அது ஒன்றை நன்றென்று கருதி ஏற்றுச் சுவைக்கும். உடனடியாகவே, “சீச்சி, இது நன்றன்று” என்று பிறிதொன்றினை நாடும். நாடிப் பிடித்து நன்றென்று சுவைக்கும். பின் “சீச்சீ, இது நன்றன்று; முந்தியதே நன்று” என்று மீண்டும் போய்ச் சுவைக்கும். சில சமயங்களில் “இதுவா? அதுவா?” என்று விரைந்த முடிவுக்கு வரமுடியாமல் இடையிலும் நின்று அலையும். இதுவே நெஞ்சத்திற்குரிய தொழில்.
மனிதன் தன்னுடைய அறிவின் திறன் கொண்டு நலம்தரும் சுவையைத் தேர்ந்து அதனை நெஞ்சு துய்க்கும் படி செய்யவேண்டும். நெஞ்சு துய்ப்பதற்கே உரிய ஒன்று. அதற்குரிய அனுபவத்தை நாம் தேர்ந்து தேர்ந்து தெளிந்து வழங்கத் தவறிவிட்டாலும், அது தன் முயற்சியில் தன்னிச்சையாகத் துய்த்தற்குரிய பொருளைத் தேடி அலைகிறது. அதுபோதே அவலம் தொடருகிறது. நாள்தோறும், நாழிகைதோறும் தூய அன்பு, தொண்டு, நல்வழிபாடு ஆகியவற்றில் நெஞ்சத்தை ஈடுபடுத்தித் துய்க்கச் செய்தல் வேண்டும். அதற்கு அறிவறிந்த ஆள்வினை தேவை. அஃது அற்றவர்கள், நெஞ்சத்தைத் தன் போக்கில் விடுகிறார்கள். அது முன்னர்ச் சொன்னது போல் ஒன்றைவிட்டு ஒன்றுபற்றி நிறைவான துய்ப்புக் கிடைக்காமல் எய்த்து அலைகிறது; சோர்வடைகிறது; துன்பத்தின் கொள்கலன் ஆகிறது. நெஞ்சுக்கு உற்ற அனைத்து அவலங்களையும் மனிதனின் ஆன்மாவும் அடைய வேண்டியதிருக்கிறது. ஏன்? உடம்பும் பொறி புலன்களும் கூட, அல்லற்பட வேண்டியதிருக்கிறது. இங்ஙனம் அலையும் நெஞ்சத்தை ஊஞ்சலுக்கு உவமை காட்டுகிறார் அப்பரடிகள், ஊஞ்சல், மரத்தில் கட்டப் பெற்றிருக்கிறது. உயிரியல், வாழ்க்கையென்ற மரத்திற் கட்டப் பெற்றிருக்கிறது. ஊசற்பலகையை மரத்தோடு இணைப்பன இரண்டு கயிறுகள். உயிரை வாழ்க்கையோடு இணைப்பன ஆசை, பாசம் என்ற கயிறுகள். ஊஞ்சல் புறப்பட்ட இடத்திலிருந்து முன்னே செல்லும்; பின்பு புறப்பட்ட இடத்திற்கு வரும்; திரும்ப ஏகும், வரும்; இடை உலவும். இந்த ஊஞ்சலின் இயக்கத்தோடு நெஞ்சை உவமித்தது சிந்தனைக்குரிய விருந்து.
உறுகயி றூசல்போல் ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூரசலானே னதிகை வீரட்டனீரே!
என்பது பாடல்.
“ஊசல் பூத்த உளம்” என்று பிரபுலிங்க லீலை பேசுகிறது. ஒன்று விட்டு ஒன்று பற்றி வந்துலவும் நெஞ்சத்திற்குக் கயிறூசல் ஒப்பு. முதன் முறையாகத் தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோரிடத்தைப் பற்றுவது ‘உறுகயிறூசல்’. பற்றிய அவ்விடத்தை விட்டு மீண்டு, தொடங்கிய நிலைப் பக்கம் வருவது மயிகயிறூசல்; அந்நிலையை விட்டு மற்றொரு பக்கம் சென்று பற்றுவதும் அதை விட்டு மீள்வதும் அவ்விரண்டு ஊசலேயாகும். இடையில் வந்து உலவும் பொழுது வாசற் கயிறு முறுக்கு அவிழ்தல் உண்டு. முறுக்கு ஏறுதல் உண்டு.
“உறுகயிறூசல்” ஆகும் பொழுது, கயிறு முறுக்கேறியும், திரும்ப மறுகயிறூசல் ஆகும் பொழுது முறுக்கவிழ்ந்தும், ஒரு வழிப்படாமல் பிறர் வழிகளில் கயிறு இயக்கப்படுவதால் கயிற்றின் வலிமை தளர்ந்து தாங்கி நிற்கும் இயல்பை இழந்து “அறுகயிறூசல்” ஆகிறது. அது போல அவா மிகுதியினால் நாடி நரம்புகளில் முறுக்கேறி ஒன்றை நாடியும், அதனை அடைந்தும் அடையாமலும் அவலப்படும் வழி அவா என்ற பாசக்கயிறு தளர்ந்து அறுகிறது. ஊஞ்சற் கயிறு அறுந்தால் தரை தாங்குதல் போல, ஆன்மாவைப் பற்றி அலைக்கும் அவா பாசக் கயிறு அறுந்தால் ஆன்மாவைத் தாங்கும் தரை இறைவன் திருவடிகளேயாகும்.
ஊஞ்சல் தன்மை உடையதாக இருக்கும் நெஞ்சத்தை மாற்றி நிலைமாறச்செய்ய வேண்டுமென்றால் தாங்கித் திருவருள் சுரக்கும் திருவடிகளை நினைத்து வாழ்த்துதலே வழி; இதனையே ‘நிலைபெறுமா றெண்ணுதியேல்’ என்ற திருப்பாடலில், அடிகள் விளக்கி அருளுகிறார்.



