
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
25. அப்பரடிகளின் தொண்டு நெறி!
மனித உலக வாழ்க்கையின் நியதி வளர்தல், வளர்தல், வளர்தல்! இவ்வளர்ச்சிக்குத் தடை, பழமைகளின் மீதுள்ள பிடிப்பின் காரணமாகச் சிந்தனையில், செயலில் தேங்கிக் கிடத்தல், தேக்கத்தை மறுப்பதற்காகவும், மறைப்பதற்காகவும் உழுதசால் வழி உழுதல் செய்வர். உழுதசால் வழி உழும்போது பொய்த் தோற்றமான ஒர் இயக்கம் இருக்கும். ஆனால், உண்மையில் இயக்கம் இருக்காது. ஆங்கு உயிர்ப்புள்ள பழமையும் இருக்காது; புதுமையும் இருக்காது. ஏன்? உயிர்ப்புள்ள பழமையினால் புதுமையைத் தோற்றுவிக்காதிருக்க முடியாது.
எப்படி ஒரு மனிதன் செத்துப் பிணமாகிய பிறகு உயிர்ப்பில்லாது போகிறானோ, உற்பத்திக்குப் பயன்படாது போகிறானோ அதுபோலவேதான் ஒரு தத்துவம், ஒரு கொள்கை உயிர்ப்பில்லாத நிலையில் முடக்கப்படுமானால் வளர்ச்சிக்குத்த துணை செய்யாது. ஆங்கு முன்னைப் பழமையுமில்லை. பின்னைப் புதுமையுமில்லை. இங்ஙனம் சமய உலகம் தேங்கிக் கிடப்பதை எதிர்த்தார் அப்பரடிகள். அவர் சமய தத்துவங்களை உயிர்ப்புடன் ஆய்வு செய்ததால்தான் சமணத்திற்குச் சென்றார்; பின் சைவத்ததிற்கு வந்தார்; பின் இரண்டும் கடந்த பொதுமை நிலைக்கு வருகிறார்.
உழுதசால்வழி யேஉழு வான்பொருட்(டு)
இழுதை நெஞ்சம்இது என்படு கின்றதே!
(அப்பரடிகள் 5-891)
என்று இடித்துக்காட்டி ‘எல்லா உலகமும் ஆனாய் நீயே!’ என்ற பொதுமை நெறியையும் காட்டுகின்றார். இறைநெறி, ‘இது’, ‘அது’ என்ற சண்டைகளுக்கு இரையாகக் கூடாது. எல்லாம் வல்ல இறைவன் ‘இதற்குள்ளும்’ ‘அதற்குள்ளும்’ மட்டும்தான் இருக்கின்றான் என்றால் இறைவனுடைய பரந்துபட்ட நிலை என்னாவது?
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாதுஒழிந்துஈசன் திறமேபேணி
(அப்பரடிகள் 6,613)
என்பது அப்பரடிகள் வாக்கு. ஈசன் உயிர்களின் தலைவன் என்பது பொருள். சிறுமதிபடைத்த மனிதர்கள், உயிர்குலத்தினரிடையில் வேறுபாடுகளை உண்டாக்கினர்; வேலிகளை அமைத்தனர். சின்னப் புத்தியின் காரணமாகத் தோன்றிய இந்த வேற்றுமைகளை இறைவன் பாற்படுத்தியும் கதைகள் கட்டத் தொடங்கி விட்டனர். அப்பரடிகள் இத்தகைய சிறுமைத்தனமான வேறுபாடுகளை முற்றாகக் கடிந்தவர். அவர் ஒரு பொதுமை நெறியாளர்.
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?
என்ற அவரது வினாவே இதற்குச் சான்று.
இயற்கை உலகு, மானிட சாதிக்கு உணவாக, மருத்துவமாக, உணர்வளிக்கும் ஆசிரியனாக, எல்லை கடந்த இன்ப அன்பினை அளிக்கும் இறையாக விளங்கி வாழ்வளிக்கிறது. . இயற்கையோடியைந்த வாழ்வு யாண்டும் இல்லை. எங்கும் உயிர்ப்பில்லாத செயற்கை உலகு ஊடாடிக் கிடக்கிறது.
மனிதன் இயற்கையாகச் சிந்திப்பதில்லை. அவன் சார்பு வழிச் சிக்கியும், தன்னல வயப்பட்டும் சிந்திக்கிறான். அதனால் அச்சிந்தனையில் உயிர்ப்பில்லை; கவர்ச்சியில்லை. மனிதன் இயற்கையில் நுகர்ந்து வாழப் பொருள் ஈட்டுவதில்லை! துய்த்தும் மகிழ்வதில்லை; உயிர்ப்போடு உலா வந்து உலகத்தை வாழ்விக்கும் செல்வத்தைச் சிறைப் படுத்துகிறான்.
ஒருவன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். மற்றவன் கள்வனாக மாறுகிறான். இம்மறைகேடு, செல்வம் ஈட்டுதலில். இயற்கையாக வேண்டிய உழைப்பாற்றலைச் செலுத்தாமையும் உழைப்பின் விலையைக் கொடுக்காமல் பொருள்களின் மீது ஆசைப்படுதலும் தோன்றியவுடனேயே களவும் காவலும் தோன்றிவிட்டன. இஃது இயற்கை நெறி பிறழ்ந்த வாழ்வு. மனிதர்களிடையில் இன்று நிலவும் உறவுகள் கூட இயற்கையில் அமைந்தவையல்ல. மனித உறவுகளிடையே இன்று பேசப் பெறும் அன்பு, காதல் ஆகியவற்றில் கூட, இயற்கையில் அமைந்திருப்பது மிகமிகச் சிறிய விழுக்காடேயாகும்.
மனித நிலையில் இன்றைக்கு அன்பு, தன்னயப்பை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய வாயிலாக அமைந்துள்ளதே தவிர, அது தியாகமாக இல்லை. மனித குல நாகரிகத்தின் தாயகமாக, தொட்டிலாக விளங்கும் காதல் வாழ்க்கை கூட இன்று நிர்வாணமான நயப்புகளுக்கு இரையாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக உலகைத் தியாகத்தில் இயக்குவதற்காக அமைந்த துறவு நெறியும் கூட, இன்று நிறுவனங்களாகி வழக்கமான செய்முறைகளுக்கு இரையாக்கப்பட்டு, நெகிழ்ந்து கொடுக்காத இறுக்கமான நடைமுறையாகி விட்டது. இதனை, அப்பரடிகள் உணர்ந்து ‘அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்று ஆற்றுப் படுத்துகின்றார். அவர் இறையை, வாச மலரினும், மூரி முழங்கொலி நீரிலும் காணத் தூண்டுகிறார். வழிபாடு இயற்றும்படி வழி நடத்துகிறார். அப்பரடிகள் நடையறாப் பெருந்துறவை நாட்டுக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
இங்ஙனம் விளங்கிய அப்பரடிகள், தமிழக வரலாற்றின் ஒளிவிளக்கு. அப்பரடிகள் மானிட சாதியின் அடிமைத் தனத்தை வெறுத்தவர்; எதிர்த்துப் போராடியவர்; மனித உரிமைகளைக் காப்பதற்காக ஏழாம் நூற்றாண்டிலேயே முடியாட்சியை எதிர்த்துப் போராடியவர். அந்தப் போராட்டத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களை ஏற்றுக் கொண்டவர். இனவழியிலும் மொழிவழியிலும் பொதுமைக்கு இடையூறில்லாத தனித்தன்மையைப் போற்றிக் காத்தவர். ‘வடமொழியும் தென் தமிழும்-ஆனவன் காண்’ என்றும், ‘ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்’ என்றும் அருளியவர். சிறந்த ஞானியாகத் திகழ்ந்த அப்பரடிகள், உடல் உழைப்பிற்கு உரிய ஏற்றம் தந்தவர். தொண்டே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர். ‘தொண்டலால் துணையுமில்லை’ என்று உலகறியக் கூறியவர். திருக்கோயில் தொண்டு முதல், தெருவீதி பெருக்கும் தொண்டு வரையில் செய்தவர். சேக்கிழார், ‘பார்வாழத் திருவீதிப் பணி செய்வார்’ என்று அப்பரடிகளைப் பாராட்டுகிறார். அப்பரடிகள் தம் “கைத் திருத்தொண்டின்” சிறப்பின் காரணமாக ‘வாசியிலாக் காசு’. பெற்றவர். அப்பரடிகளின் வாழ்க்கை அன்பில் பழுத்த தவ வாழ்க்கை. அப்பரடிகள் அருளிச் செய்த பாடல்கள் அருளமுதப் பாடல்கள். அவர் தொண்டு ஞாலமுய்ய, நாமுய்யப் பயன்பட்டது; இன்றும் பயன்படவேண்டும்.
அப்பரடிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு அவர்தம் தொண்டு நெறி நிற்றலேயாம். திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ்க! வளர்க! உலகெலாம் மகிழ்க!



