அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

23. வாழ்வியல் இயக்கம்

⁠வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தில் மனிதன், மா மனிதனாக, அதாவது முழு மனிதனாக வளர்ந்து உருப்பெறுகிறான். மனித வாழ்க்கையின் வளர்ச்சி ஒரு பரிணாம வளர்ச்சி! இந்த வளர்ச்சி தனி மனிதனாக நின்று ஒருவன் சாதித்துக் கொள்ளும் வளர்ச்சியல்ல! ஒருவனுடைய வாழ்க்கை முழுதான நிறை நல வளர்ச்சியை அடைய, பலர் உதவி தேவை.

⁠ஆன்மா, உருவம் இல்லாதது. ஆனால் அறியும் உணர்வுடையது. ஆயினும் உருவம் இல்லாமையின் காரணமாக அறிவு இருந்தும் இல்லாத நிலை. எனவே, இயக்கம் இல்லை; வளர்ச்சி இல்லை. அறிவு நலம் சார்ந்த ஆன்மா, அறியாமையோடு பிணைப்புண்டு கிடக்கிறது. இயக்கமும் செயற்பாடும் இல்லையானால் அறிவுநலம் இல்லை; வளர்ச்சி இல்லை. உயிர் இருந்தும் இல்லாதது போல்தான். கோடையில் நீர்வற்றிக் கிடக்கும் குளத்தினால் யாது பயன்? கோடைக் காலத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் மொட்டையாக நிற்கும் மரத்தினால் என்ன பயன்? இந்த நிலையில் திருவருளின் கண்ணோட்டம் உயிர்பால் வீழ்கிறது. ஒரு தலைமகன் வழி, உயிரின் இயக்கம் தொடங்குகிறது; வாழ்வு தொடர்கிறது.

⁠ஆம்! ஒவ்வொருவர் வாழ்விலும் கிடைத்த முதல் துணை தந்தை; அப்பன்தான்! உயிர், அப்பனிடம் ஒராண்டு உற்றிருந்து ஜவ்வரிசி அளவு வடிவமுள்ள ஒர் உருப்பெற்றுப் பயணத்தைத் தொடங்கி, தாயின் கருப்பையைச் சென்று சேர்கிறது. முதற்பயணத்தில் கிடைத்த ஓர் உரு, அவ்வளவு தான்! ஆனால் இயக்கத்திற்குரிய புலன்கள், பொறிகள் கிடைக்கவில்லை. ஆம்! தாயின் கருப்பையே உயிருக்கு முழு வடிவம் கொடுக்கிறது. ஆகா! என்ன அற்புதம்! ஜவ்வரிசிப் பிரமாணமுள்ளதா யிருந்த விந்துவை முதலாகக் கொண்டு என் தாய் தனது வயிற்றில் அற்புதமான மூளையும் இதயமும் அழகும் ஆற்றலும் வாய்ந்த ஓர் உருவமாக என்னை உருவாக்கித் தந்த அற்புதக் கொடைக்கு ஈடு ஏது? ஆதலால் உயிர் சந்தித்த – பெற்ற இரண்டாவது துணை தாய்! உயிர் உடம்பெடுத்துப் பிறந்தாயிற்று! குழந்தை என்ற பெயரில் சிலகாலம் படுத்து, தவழ்ந்து, உட்கார்ந்து, தள்ளாடி நடந்து, விழுந்து எழுந்து நடந்து பையனாயிற்று! அப்பனும் அம்மையும் எப்போதும் உடன் இருப்பதில்லை; இருக்கவும் முடிவதில்லை.

⁠இப்போது அவர்கள் அடுத்த உயிரின் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் பணியில் ஈடுபட்டு விட்டனர்; அப்படியில்லாது போனாலும் அவர்கள் மூத்த தலைமுறையினர். இளமை நலம் சார்ந்த பையனுடைய உணர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிலர் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை. “பையன் நேற்று தோன்றினான், நாம் மூத்தோர்” என்ற எண்ணம் அவர்களுக்கு! இது ஒருவகை நோய்! இதனை தலைமுறை இடைவெளி என்கின்றனர்.

⁠இந்தச் சூழ்நிலையில் தனக்குச் சில ஆண்டுக்கு முன் பயணத்தைத் தொடங்கிய அண்ணன் துணையாக அமைகின்றான். அவன் ஆவல்களை, ஆர்வங்களைப் புரிந்து கொள்கிறான்; உடனுக்குடன் அடையத் துணையாய் இருந்து உதவி செய்கிறான். உணர்வில் ஒன்றாகின்றான், உருவாகி வாழ்கின்றான்; வாழ்விக்கின்றான். ஆயினும் என்ன செய்ய? வாழ்க்கையென்பது நாம் பெற்றதை மற்றவர்களும் பெறத் துணை செய்வதுதானே! அதனால் ஒவ்வொருவருடைய வாழ்வும் பிறிதோர் உயிரின் பயணத்திற்குத் துணையாய் அமைதல் இயற்கை தவிர்க்க முடியாத கடமை! அத்தகைய அமைவில் பிறிதோர் உயிர் பயணத்திற்குத் துணை செய்யத் தக்க உற்பத்திக் கருவிகளுடன் ஒருத்தி பிறந்தாள்; வளர்ந்தாள். குறிப்பிட்ட இளமைப் பருவம் மீதூரத் தொடங்கிய நிலையில் அண்ணனிடம் கொண்டுள்ள உறவு அமைதி பெறுவதில்லை. பாசம், அன்பாக மாறி வளர்ந்தது. இப்போது காதல் பருவம். காதல் பருவத்தில் அண்ணனிடமிருந்த-ஐயனிடமிருந்த உறவு நெகிழும் நிலையில் ஒருத்தியைத் தேடுகிறது.

⁠ஒருத்தி என்ன கடைவீதியில் கிடைப்பாளா? அப்படி கிடைத்தாலும் வாழ்க்கைத் துணைநலமாக அமைவாளா? ஆதலால் இவன் பிறந்து வளரத் தொடங்கிய காலத்திலேயே இவனுக்காக ஒரு பெண்னை ஈன்றெடுத்து வளர்த்து மனைவியாகத் தர முன்வரும் மாமனார், மாமியார் சாதாரண பணியையா செய்கிறார்கள்! இல்லை. அவர்கள் செய்வது மிகப் பெரிய பணி; உதவி! அதனாலேயே “அன்புடைய மாமன், மாமி” என் அழைக்கப்படுகிறார்கள்! ஆம்! எதிர்வரும் தேவையை நெஞ்சில் நினைத்து உதவி செய்வது ஒரு பெரிய அறம். மாப்பிள்ளைகளுக்கு வாய்க்கும் அன்புடைய மாமன், மாமி போல் பெண்கள் அனைவருக்கும் வாய்த்து விட்டால் இந்த உலகம் ஒரு சொர்க்கம்தானே! ஐயனை-அண்ணனைத் தொடர்ந்து அன்புடைய மாமன்; மாமி!

⁠அடுத்து, காதல் மனைவி. அனைத்திலும் தனக்கு ஒப்புடைய தலைவி! இவன் வாழ்க்கைக்கு ஒப்புதல் அளித்து உடன் பயணம் செய்யும் தலைவி-மனைவி! வாழ்க்கைத் துணை நலம்! வேராக நின்று தாங்கி வளமூட்டி வாழ்வளிப்பவள்.

⁠இதுவரை வந்தமைந்த துணைகள் உயிருள்ளன! இப்போது துணையாய் வந்தமைவது கருவியாக அமையும் பொருள்! பொருள், வாழ்க்கையின் தேவை! பொருள் இல்லார்க்கு இவ்வுலகமே இல்லை! அந்தப் பொருளும் உழைப்பால் வந்த பொருளாதலால் ஒண்பொருளாயிற்று! போதுமா? வாழ்க்கை இயக்கமாகி வளர்ந்து வருகிறது. ஆனால் முழுமையான நிறை நலம் சார்ந்த நிலை இன்னமும் வரவில்லை. ஆனால் இந்த நிலையையே முழுமை நிலை என்று பலர் எண்ணுகின்றனர். இது தவறு.

⁠அடுத்த நிலை, குலம் சார்ந்து வாழ்தல்! அதாவது, குல மரபு பேணிக் காத்து வளர்த்தல், இங்குக் குலம் என்று கருதப்பெறுவது சாதியன்று. குலம் என்பது ஒழுக்கம், பண்பு சார்ந்த மரபு! அதாவது வழி வாயாக ஒரு சிறந்த நற்பண்பு மீதூர்ந்து வருதல்.

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்


என்றார் கம்பர்.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள

என்பது திருக்குறள். ஆதலால்; தான் பிறந்த குலம் சார்ந்த சிலரொடு உறவு நலம் காத்தல், பண்பு நலம் சார்ந்த வாழ்வியலுக்குத் தேவை. குலம் பொருந்தி வாழ்தலுக்கும் அடுத்த நிலை, சுற்றம் சூழ வாழ்தல்! சுற்றம் சூழ வாழ்தல் அன்பினை வளர்க்கும்; தன்னம்பிக்கையைத் தரும்; பாதுகாப்பு உணர்வு மேலிடும். கோட்டை, கொத்தளங்கள் தரும் பாதுகாப்பிலும், சுற்றம் தரும் பாதுகாப்பு மிகுதி. சிறந்த சுற்றம் வாழ்விற்கு தூண்டுகோல், நெம்புகோல்! சுற்றம் தாங்குகோலாக வளர்ந்து விளங்கும். குற்றம் குறைகளை மறந்து சுற்றம் பேணுதல், வாழ்க்கை வளரத்தேவை. வாழ்க்கை வளர்ச்சியின் முழுநிலை ஊரில் நிறைவு பெறுகிறது.

⁠ஆம்! ஊரோடு சார்ந்து ஊரவர் கேண்மை பேணி வாழ்தல் வேண்டும். ஊரை வளர்த்து வாழ்தல் வேண்டும். ஊர் எது? ஆன்றவிந்து அடங்கிய கொள்கைக் சான்றோர் பலர் வாழ்வது ஊர், ஊர் பழித்ததாலும் அதனை அணியெனக் கொண்டொழுகி ஊராகி வாழ்தலே வாழ்வின் நிறைவு. இதுவரையில் நலஞ்சார்ந்த வாழ்நிலை. நிறை நலம் என்பது வேறு. அஃது உலகந்தழீஇயது. இந்தப் படிமுறை வளர்ச்சியில் ஒர் ஆன்மா வளர்தலை வாழ்வியலாக வளர்தலை-இயக்கமாகி வளர்தலை அப்பரடிகள் அழகுற விளக்குகின்றார்.

வாழ்வியல் பயணம் முடியவில்லை; தொடர்கிறது. தொடர்கிறது என்று கூறுவது தவறு. உயிர், தன்னை உற்று நோக்குகிறது. இல்லை, உற்று நோக்க ஆன்மாவை ஆற்றுப்படுத்துகிறது. சிவம்-கடவுள்! ஆம்! உற்று நோக்கியதன் பயன்? ஆன்மா மெள்ளத் தற்சார்பு நிலை அடைந்து வந்துள்ளது. ஆற்றலில் தற்சார்பு வரவேற்கத் தக்கது. ஆனால் வாழ்நிலையில் தன்னலம் வளர்ந்து விடக்கூடாது. ஐயனிடமிருந்து அன்பு தடம் புரள்கிறது. வீட்டின் இடையில் சுவர் தலைகாட்டுகிறது. காதல் மனைவி வேலைக்காரியாகிறாள்! அந்நியமாகிறாள்! அவள், தனக்குரிய கடமைகளைச் செய்யும் இயந்திரம்! அவளுக்கு இவன் செய்ய வேண்டிய கடமைகள் இல்லை என்ற நிலை! இந்த நிலை, முறை திறம்பிய வாழ்நிலை! துய்க்கும் நெறியில் துறவு சார்ந்தாலே துய்த்தல் சிறப்பாக அமையும். துறவும், துய்த்தலும் இரட்டை நாடிகள். “பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு” என்பதறிக. இது துறவும் துய்த்தலும் ஒருங்கிணைந்த வாழ்வு நிலை. அப்போதுதான் அன்பு வளரும், அறம் வளரும், துறவு வாழ்க்கை தனி வாழ்க்கையல்ல. துறவும் துய்த்தலும் கலந்ததே நிறை நலம் சான்ற வாழ்க்கை! அப்போதுதான் உழைப்பு உணவாகிறது. கூடி உணவு உண்ணும் சுற்றம் சார்ந்த வாழ்வு மலர்கிறது. உழைப்பின் பயன் உலகை உண்பிக்கப் பயன்படுகிறது. இதுவே அறம் சார்ந்த எருதுவின் வாழ்க்கை முறை! எருது மீது எம்பெருமான்! உழைத்துப் பலபொருள் படைத்து அளித்து வாழ்வித்து வாழ்தல் எருதுவின் வாழ்க்கை! இத்தகையோர் இதயத்தில்தான் எம்பெருமான் எழுந்தருள்கின்றான்! இதயத்தை உறைவிடமாகக் கொள்கின்றான்; ஊர்தியாகக் கொள்கின்றான்! வாழ்க்கை நிறைநலம் எய்திய நிலை இதுவே!

“அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலம் சுற்றம் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறுரர்ந்த செல்வன்நீயே”

⁠- திருநாவுக்கரசு சுவாமிகள்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !