
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
16. உழுத சாலிலேயே உழுதல்
நெஞ்சம் விந்தையானது. அலைகடலையும் நெஞ்சத்தையும் ஒப்பிடலாம். அலைகடலில் எண்ணத் தொலையாத அலைகள் உண்டு. அது போல, எண்ணத் தொலையாத ஆசை அலைகள் நெஞ்சில் உண்டு. அலைகளின் எண்ணிக்கை பலவானாலும், அவை புதிய வண்ணமும் வடிவமும் உடையன அல்ல; முன் பின் என்ற காலமாறுபாடேயாகும். உருத்தெழுந்து வந்த அலை, கரையில் மோதி அலையென்ற வடிவமிழந்து, பெயரழிந்து ஆங்காரமடங்கிக் கரையால் எதிர்த்துத் தாக்கப் பெற்று உருக்குலைந்து கரைந்து தண்ணீராகக் கடலில் கலக்கிறது. மீண்டும் அத்தண்ணீர்த் துளிகளே காற்றழுத்தத்தின் துணை கொண்டு அலையாகி மோதுகிறது. ஆக வடிவத்திலும் மாறுதலில்லை; செயலிலும் மாறுதல் இல்லை. அதுபோலவே ஆசை அலைகள் நெஞ்சில் எழுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தாலும் ஆசைகள் புதியன அல்ல, பழைய சுயநலமேதான்! பழைய சுயநலம் மாறிப் புதிய பிறர் நலமாக இருப்பின் குணம் மாறும் பயன் விளையும். ஒருக்கால் சுயநலமும் காப்பாற்றப் பெற்றாலும் பெறலாம்.
இந்த நெஞ்சு, அறியாமைத் தன்மையுடையது. அதற்கு ஆய்ந்தறியும் அறிவுணர்வை விட வழக்கம்தான் பெரிது. அது, இன்று புதுப்பாதை போடாது. நேற்று நடை பயின்ற பாதையிலேயே செல்லும்; அந்தப் பாதை நாற்றமுடையதாக இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டாவது அந்தப் பழைய பாதையில் செல்ல வழி நடத்துமே தவிர, எளிதில் வழக்கத்தை மாற்றாது. நெஞ்சம், ஆசைகளின் ஊற்றுக்களன். ஆசைகள் துன்பத் தருவனவேயன்றி இன்பந்தரா. அதனாலன்றோ,
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
என்று திருமந்திரம் பேசிற்று. ஆசையை விடுக என்றால் ஒன்றும் வேண்டாம் என்பது பொருளன்று. அன்பின், வழியல்லாமலும், பண்புவழிப் பயன் கருதாமலும் விழைவது, ஆசை. உணவு, உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலைப் பேணவும், பேணிப் பாதுகாக்கவும், திறனுறு வகையில் உடலைப் பயன்படுத்திக் கொள்ளவும் உணவை விரும்புதல் ஆசையாகாது. ஆனால், உணவின் மேலேயே ஆசை கொண்டு சுவையில் நாட்டம் வைத்து அச்சுவை உடலியக்கத்திற்குத் தீங்கு பயந்தாலும் உணவை விரும்பியுண்பது ஆசையாகும்.
பொருள், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருளின்றேல் பூவுலகம் இல்லை. நெறிமுறைப்பட்ட துய்ப்பிற்கும், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு, மற்றவர் உயிர் வாழும்படிச் செய்யும் அறமாகிய ஈதலுக்கும் பொருள் தேவை. இந்த வகையில் பொருளை விரும்புதல் ஆசையன்று. அங்ஙனமின்றிப் பொருள் மீதே விருப்பங்காட்டி, “பொருளுடையோன்” என்று பலர் சொல்ல விரும்பித் ‘துய்க்காமலும், ஈந்து மகிழாமலும், மகிழ்விக்காமலும் பொருளொன்றையே குறியாகக் கொண்டு சேமிப்பது’ ஆசையாகும். மண்ணில் பயிர் தழைக்க மழைத்துளி தேவை. அதுபோல, மனிதகுலம் செழிக்க அன்பு தேவை. உயிர், காதலால் செழித்து வளரும். காதல் பாலுணர்வின் பாற்பட்டது மட்டுமன்று; அதனையும் கடந்தது. காதல் உயிர்களைச் செழிக்கச் செய்யும்; உணர்வுகளைச் செழிக்கச் செய்யும்; தூண்டி வளர்க்கும்; தூய்மை சேர்க்கும்; பொறிகளுக்கும் புலன்களுக்கும் அன்பினைச் சேர்க்கும். இத்தகு தூய காதல் வழி ஒருவன் ஒருத்தியை நாடுதலும் ஒருத்தி ஒருவனை நாடுதலும் ஆசையாகாது. பயனின்றி உயிர்களை அரித்தழித்து உருக்குலைக்கும் பாலுணர்ச்சியின் வெறியில் மகளிரை நாடுதல் ஆசையாகும். உயிருக்குக் கடவுள் துணை. தாயிற் சிறந்த தயாவுடன் தண்ணளி சுரக்கும் துணை. கடவுளை வாழ்த்துதல் வாழ்வேயாகும். கடவுளை மாறா அன்பினில் வாழ்த்துதல் வேண்டும்.
அங்ஙனம், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகாது. அங்ஙனமின்றி, “இது வேண்டும், அது வேண்டும்” என்ற விண்ணப்பங்களுடன், விண்ணப்பத்தை நிறைவேற்றுவதற்காகக் கடவுள் மீது விருப்பமின்றி, விருப்பங்கள் மீது விருப்பத்துடன், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகும்.
ஆசை துன்பத்தையே தரும். ஆசையுணர்வில் சுவை புதிதன்று; பொருள் புதிதன்று; உணர்வும் புதிதன்று. எல்லாம் பழைய சுயநலத் தேவையின் மயம். அஃது அரிப்புடைய சொறிசிரங்கைப் போல உயிர் வாழ்க்கையை அரித்து எரித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று, என்னை நான் நேசித்ததால், அடைந்தது, துன்பமே. நேற்றுக்கு முந்திய நாள் கதையும், அதுவே. ஆயினும் “நான்”, “எனது” என்ற நச்சு உணர்வுகள் மாற்றப்பட்ட பாடில்லை. திரையில் காட்சி மாறினாலும் உணர்வு மாறாது போனால் பயனில்லை. நாள்கள் மாறினாலும், நாடிடும் நாட்டம் மாறினாலொழியப் பயனில்லை. நேற்றைய துன்பமே இன்று மீண்டும் வருகிறது. நேற்றைய ‘நான்’ இன்று ‘நாம்’ ஆக மாறி வளர்ந்தால், துன்பம் தொலையும். நேற்று என்னுடையது. இன்று ‘நம்முடையது’ என்று மாறி, வளர்ந்தால் பயனுண்டு. ‘நானில்’ உலகமில்லை. ஆனால் ‘நம்மில்’ ‘யானும்’ அவலம் தரத்தக்க ஆசையினின்று விலகி அன்பு வடிவம் பெற்று ஆங்கு இருக்கிறது. ஆளுக்கு அழிவில்லை. தீமைக்கே அழிவு. ‘என்னுடையது’ ‘நம்முடையது’ ஆன பிறகு தனி ஒருவரின் உரிமை அழிந்துவிடவில்லை; மாறாக உறுதி பெற்றிருக்கிறது; ஆங்காரமற்றிருக்கிறது. மேலும் சொன்னால், ஒருவரைப் பாதுகாக்கப் பலர் முன் வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒருவனாகத் தனித்து, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவலத்துடன் வாழ்க்கை முடிவதைவிடப் பலர் பாதுகாக்கும் வாழ்க்கையே புகழுடைய வாழ்க்கை. தானே உண்பதைவிட, உண்பிக்க உண்பது சுவையுடையது. தானே சிரித்து மகிழ்வதைவிடப் பிறர் மகிழ்விக்க மகிழ்வது மாண்புடையது. தானே, தன்னை வியந்ததலைவிட மற்றவர் வியந்து பாராட்டுதல் சிறப்புடையதாகும்.
ஆதலால், நேற்றைய வாழ்க்கையில் விளைந்த துன்பத்தினைப் பார்த்து அதனினும் விலகி வாழ்தல் வேண்டும். அதுபோலவே நேற்றைய வாழ்க்கையிலேற்பட்ட இன்பத்தினைப் பார்த்து அந்த இன்பத்தினை மேலும் வளர்த்துப் புதுமையாக்கி அனுபவித்தல் வேண்டும். ‘நேற்று’ அப்படியே அப்பட்டமாக ‘இன்று’ ஆகுமானால், பயனில்லை ‘நேற்று’ போய் ‘இன்று’ உருவாகும் பொழுது கழிப்பன கழித்து, கொள்வன கொண்டு புதுமைப் பொலிவு பெறவேண்டும். வறட்சித் தன்மையுடைய கிழட்டுத் தனத்தை நீக்கப் புதுமை உணர்வு துணை செய்யும். ஆக புலன்களைச் சென்ற வழியே செல்லவிடாமல், போன வழியிலேயே போய்ப் பாழாகி விடாமல், புதுநெறியில்-பொது நெறியில் நெஞ்சத்தை நாம் பழக்க வேண்டும். ஆனால், புலன்களோ புதுமையில் நாட்டமில்லாது வழக்கத்திற்கும் பழக்கத்திற்கும் அடிமையாகின்றன. “எங்களால் மாற்றிக் கொள்ள இயலவில்லையே! நாங்கள் என்ன செய்வது” என்று அங்கலாய்க்கின்றன. இந்தப் பொல்லாப் பழக்கம் பயனுடையதன்று.
நிலம், பரப்பளவில் அதிகமுடையது. ஒரு நிலம் முழுவதையும் உழுதால்தான் நிலம் பயனுடையதாகும். ஒரு நிலத்தின் ஒரு சால் நிலம் உழப்பெற்று, அதற்கு அண்மைத்தாய அடுத்த சால் நிலம் உழப்பெறாது போகுமானால், முன்னர் உழுத உழவினால் பயனில்லை. அது போலவே நேற்றைய தீய பழக்கத்தை விலக்க அதனைச் சார்ந்து வரக்கூடிய தீய பழக்கங்களையும் விலக்க வேண்டும்.
நேற்றைய நற்பழக்கத்தை உறுதிப்படுத்திக் காப்பாற்றிக் கொள்ளப் புது நற்பழக்கங்களும் தேவை. பக்தியாகிற நற்பழக்கத்தை அரண் செய்து காப்பாற்றத் தொண்டு தேவை. இங்ஙனம் இனிய பழக்கங்களை விரிவாக்கிக் கொள்ளாமலும் வாழ்தல் வாழ்க்கை ஆகாது. இதனை அப்பரடிகள் “உழுத சாலில் உழவே விரும்பும் இழுதை நெஞ்சம்” என்று எடுத்துக் காட்டி இடித்துரைக்கின்றார். ஆதலால், வழக்கங்களையும் பழக்கங்களையும் மாற்றி நலம் பல பெருக்கி, நன்றுடை யானை வாழ்த்தி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுவைத்தனவே சுவைக்க விரும்புதல் நெஞ்சத்தியல்பு; அங்ஙனம் மாறாது சுவைக்கத் தக்கன நன்றுடையான் திருத்தாள்களேயாம். மற்ற சுவைப் பொருள்கள் மாறாது போனாலும் சுவைத்தற்குரிய நோக்கம் மாறவேண்டும். இதனை,
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு நின்றதே!
என்ற அப்பர் திருப்பாட்டால் அறியலாம்.



