
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
10. எங்ஙனம் கூடுவது?
அப்பரடிகள், இறைவனைத் தெளிந்து கண்டு துய்த்த சிவஞானச் செல்வர். அவருடைய பாடல்கள் சிவஞானத் தெளிவு. அத்தகு அப்பரடிகளே, பல இடங்களில் எங்ஙனம் இறைவனைக் காண்போம்? என்று ஏங்கிப் பாடுகின்றார். உலகியலானாலும் சரி, அருளியலானாலும் சரி, இன்பம் தருகின்ற ஒன்று மேலும் அன்பினைப் பெருக்கி வளர்க்கும். உலகியல் காதலின்பமும் இத்தகையதே! அருளின்பம் அதனினும் ஆராத தன்மையுடையது! அதனாலன்றோ இறைவனை ’ஆரா அமுது’ என்று அருளாளர்கள் பாடிப் பரவுகின்றார்கள்! இங்ஙனம், சிவத்தில் திளைத்த சிந்தை யுடையோரே ஏங்கியும், அழுதும் பாட, இன்று அதன் நுழைவாயிலிற்கூட அடியெடுத்து வைக்காதவர்கள் ’காட்டு’ என்று கேட்கிறார்கள், பிறிதொருவர் ’காட்டுகிறேன்’ என்கிறார்! இஃதென்ன, விளையாட்டுப் பொருளா? அல்லது வேடிக்கைப் பொருளா? அல்லது சந்தையில் கொள்முதல் செய்யும் காய் கறியா? புற்றாக, மரமாக வடிவம் மாறும் வரையில் கொடுந்தவம் இயற்றியவர்களும் அல்லற்பட்டி ருக்கச் சாதாரண மனிதர்கள் கடவுளைக் காண்பது எங்ஙனம்?
நமது உள்ளத்தின் இயல்பு, எதையாவது ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பது. உள்ளத்தின் இத்தொழிலை ‘உள்குதல்’ என்பர். உள்ளத்தால் உள்ளவாறு நினைப்பவர் உள்ளத்தின் உணர்வாக இறைவன் விளங்குவான். இதனை,
நினைப்பவர்மனம் கோயிலாக் கொண்டவன்
என்றும்,
நினைக்கும்நெஞ்சின் உள்ளார்
என்றும்,
நினைப்பார்கள்மனத்துக்கோர் வித்தும் ஆனாய்
என்றும் அப்பரடிகள் பல இடங்களில் பாடுவது சிந்திக்கத் தக்கது. பல்லவப் பேரரசன் கட்டிய கற்கோயிலைவிட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயில் இறைவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இறைவன் பூசலார் நாயனாரின் மனக்கோயிலுக்குத்தான் முதலிடம் தந்து குடி புகுந்தான். உள்ளத்தின் தொழிற்பாட்டில் விளையும் பண்பே உணர்வு, உணர்வற்றவர்களுக்கு, உள்ளம் இல்லை என்பதே பொருள். அப்படியே இருந்தாலும் அது இயங்கவில்லை என்பது தெளிவு. பெருமைக்குள் எல்லாம் தலை சிறந்தது உணர்வே. உள்ளம், இறைவனை உள்கிட, அவனே அந்த உள்குதலின் விளைவாகிய உணர்வாக வடிவம் பெற்று எழுந்தருள்கின்றான். இதுவே இறைவனை உள்ளத்தில் காண்பதற்குரிய இனிய எளிய வழி.
உள்ளத்திற்கு இயல்பிலேயே ஒன்றினை விட்டுப் பிறிதொன்றினைப் பற்றும் இயல்பு உண்டு. அந்த இயல்பை மடை மாற்றி, உலகுக்கு ஒருவனாய் நிற்கின்ற இறைவனையே உள்கச் செய்து இறைவனை உணர்வு வடிவமாக்கி அவனை நினைந்து நினைந்து, உருகி உருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து துய்த்தல் பேரறிவாளர்கள் இயல்பு. அப்பரடிகளே, “உணர்வு அவன் காண்” என்றும், “உணர்வாய் நின்ற திருவனே” என்றும், “உணர்வெலாம் ஆனானே” என்றும் “உற்றிருந்த உணர்வெலாம் ஆனானே” என்றும், “ஊனாகி, உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி” என்றும் அருளியுள்ள அடிகள் உணரத்தக்கன. இங்ஙனம் உள்கி உணர்வாகிக் காணக் கூடிய இறைவனை அப்பரடிகளும் உள்கி உருகிக் காண ஆர்வம் காட்டுகிறார். ஒரு பொருளை நினைத்து உள்குதற்கு அந்தப் பொருளிடத்தில் பற்று வேண்டும். பற்றுகள் பலவும் தீது என்று பேசிய வள்ளுவர் இறைவனுடைய திருவடியைப் பற்றுதலை மட்டும் நன்றென்று காட்டிப் “பற்றுக’ என்றும் ஆற்றுப்படுத்தினார். –
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு,
என்று பேசுகிறது குறள்.
அப்பரடிகள் இறைவனை உள்கி அன்பின் மிகுதியினால், நினைந்து நினைந்து உருகுகிறார். அடிகள் தம் நெஞ்சத்தில் இறைவனை நினைந்த அன்பு ஊற்றெடுக்கிறது. அதன் காரணமாக அடிகள் உள்ளம் உருகுகிறது. அன்பின் பெருக்கமும் உள்ளத்தின் உருக்கமும் இறை காட்சிக்கு இன்றியமையாதன. ஆற்றல் மிக்க அன்பால் நெஞ்சுருகி நினைப்பதன் மூலம்தான் இறைவனைக் காண முடியும். இஃதன்றிக் கூர்ந்த பகுத்தறிவோ, வாதிடும் திறனோ, சாத்திரத் தொகுப்புகளோ சாட்சியங்களோ கூட இறைவனைக் காணத் துணை செய்ய முடியாது. ஏன்? இறைவனிடத்து அன்பும் உருக்கமும் இல்லாத தவமும் கூட இறைவனைக் காணத்துணை செய்யாது. அப்பரடிகள் நெஞ்சத்தில் அன்பு பெருக்கெடுத்து ஊறுகிறது; தன்னுாற்றாகத் தடைப்படாது பெருக்கெடுத்து ஊறுகிறது. இதனை,
உள்கினேன் நானும் காண்பான்
உருகினேன் ஊறி ஊறி
என்று அடிகள் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். ஆயினும், “நின்னை அரியனாகக் கருதாது, எளியனாகக் கருதிப் போற்றுதல் ஒழிந்தேன்” என்றும் அடிகள் இரங்கிக் கூறுகின்றார். இங்ஙனம், இறைவனை எளியனாகக் கருதி இழந்துபடுதல் படிமுறையில் ஞான நெறிக்கு உயர்ந்தவர்களுக்கும் கூட நேரிடுகிறது என்றால், சாதாரண மனிதர்களின் நிலைமை என்ன ஆவது? இங்ஙனம் அல்லற்படுவோர் வாழ்க்கையை இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பின் உள்ளத்திற்கு உவமிக்கின்றார் அடிகள் பெருமான். உள்ளம் எறும்பென்று உவமிக்கப்படுகிறது. ஆம்! உள்ளம் எறும்பு போலச் சுறுசுறுப்பானதுதான். ஆனால், எறும்பின் சுறுசுறுப்பெல்லாம் வயிற்றுக்கு இரை தேடுவதிலே யாம். அதற்கு வேறு அலுவல் இல்லை. வயிற்றுக்கே இரை தேடி அலையும் எறும்பு இருதலைக் கொள்ளி மேலதானால் உணவு வேட்கையால் ஒட முனைகிறது. ஆனால் இரு முனைகளிலும் பற்றியெரியும் கொள்ளியோ அச்சுறுத்துகிறது. இங்ஙனம் உலகியல் வேட்கை பற்றி யெரியும் உள்ளத்தராக இருப்பவர்களால் இறைவனைக் காண முடியாது; அவனைக் கூட முடியாது என்பது அப்பர் அடிகள் கருத்து.
ஆதலால் தந்தம் ஈசன் எம்பெருமானை உள்ளத்தால் உள்கி, ஆற்றல் மிக்க அன்பால் நினைத்து அவனையே உணர்வாக்கி உருகி, கண்டு இன்புற முயல்வதே சமய வாழ்க்கை.
உள்ளுவார் உள்ளத்தானை உணர்வெனும் பெருமையானை
உள்கினேன் நானுங்காண்பான் உருகினேன் ஊறிஊறி
எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற
கொள்ளிமேல் எறும்பெனுள்ளம் எங்ஙனம் கூடுமாறே!
என்பது அப்பர் திருப்பாட்டு.



