அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

5. முயல் விட்டுக் காக்கையின் போனவாறே!

அப்பரடிகள் இறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள். அதற்கு ஓர் உருவத்தைத் தந்து உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து—குறை நீங்கி நிறைநலம் பெறச் செய்யும், அவன் கருணையே கருணை. இதனை,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டு

என்னையோ ருருவமாக்கி,

என்று பாடுகிறார். உருவமாக்கிய இந்தப் பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும்? இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான்; வரலாறு படைக்கிறான்; உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதிநுட்பமானது. அறிவியல் தன்மையுடையது. இந்த உடல் உயிர்க்கூட்டின் பயன், உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம் இன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது? அது தன்னிச்சையிலேயே ஆட்டம் போடுகிறது! அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும் நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சிலநாள் அடங்கும். வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே-அதனை அறியச் செய்தே பக்குவப்படுத்த வேண்டியதிருக்கிறது; அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பம். துன்பத்திற்குக் காரணம் அறியாமை. அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகள் வினை! நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காது என்பதுபோல, வினை நீக்கம் பெறும்வரையில் நிறைநல இன்பத்தையும் துய்க்க முடியாது. ஆதலால்,

முன்பிருந்த வினை தீர்த்திட்டு

என்கிறார்! தீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டும். இதனை வள்ளுவமும்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்று கூறுகிறது. அருணகிரியாரும்,

“பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்,” என்று கூறுகிறார். தீமைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்கவேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு, அந்த உயிரின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான்.”

அறியாமையில் உயிர் கிடக்கும்பொழுது உடலினுள் இருக்கும் உயிரும், மாற்றாரும் அறிய முடியாவண்ணம் நின்றருள் செய்யும் இறைவன், வினை நீக்கத்துக்குப் பிறகு பலரும் காணும் திருக்கோயிலென்ன, உயிரிடத்து விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன், உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பு ஊற்றுக்கண் திறக்கிறது; உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது; இந்த நிலையில் ‘அன்பும் சிவமும்’ ஒன்றென்ற குரல் எழும்புகிறது. அன்பினாலாவது இன்பமே, அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பு இன்புறுத்துகிறது. அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது? கீழேது? உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தும் அடிமையாகிறது. இஃது அறிவியல் அடிமை; உணர்வின்பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிற நெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கிறது! அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நாட்டில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப் பிடிக்காமல் விட்டுவிட்டு எளிதிற் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்கக் காக்கையின் பின்னே ஓடித்திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை, எங்ஙனம் பிடிக்க முடியும்?

கையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப் போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி; நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூநெறி; இனிய நெறி, எளிய நெறி. இந்நெறிகளில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும் தாயிற்சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஓடுவதை யொக்கும்.

இனிய பாடல்! பாடிப் பயிலுக!

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்ந்திட்
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
டருள்செய்த வாரு ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கையின் போன வாறே.

(அப்பர் தேவாரம்–நான்காந் திருமுறை திருவாரூர்: பழமொழி)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !