
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
18. களவுபடாத காலம்
இந்த உலகை-உலக இயக்கத்தை நடத்துவது காலம். காலம் என்னும் களத்தில்தான் மனிதன் வளர்கிறான்; வரலாறு உருவாகிறது. காலம் மிகவும் விழுமியது; போற்றத்தக்கது; பயன்கொள்ளத்த தக்கது. காலம் என்ற நெருக்கடியை இலட்சியமாக வைத்துத்தான் மனிதன் வளர்கிறான். காலம் அருமையானது. சென்ற காலம், நிகழ் காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்காலமும், எதிர் காலத்தை உருவாக்குகிறது. இந்த உலகில் எந்த ஒன்றையும் மனிதன் படைத்துக் கொள்ள முடியும். ஆனால் புதியதொரு காலத்தை அவன் படைத்துக் கொள்ள முடியாது. அது போலவே மனிதன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது.
வாழ்நாள் பல வினாடித் துளிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வினாடித் துளியும் கழியும்போது உயிர்வாழ்க்கை கரைகிறது; மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மகிழ்விலேயே ஈடுபடும் மனப்போக்குடைய நாம் மரணத்திற்கு அஞ்சுவதால்-அயர்ந்து மறந்து விடுகிறோம். நாம் அறிந்துகொண்டாலும் சரி, அறியாமல் போனாலும் சரி, உணர்ந்தாலும் சரி, உணராமல் போனாலும் சரி வாழ்நாள் கரைந்தே போகிறது. எப்படி முயன்றாலும் வாழ்நாள் கரையத்தானே செய்யும். அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன? என்று கேட்கலாம். ஆனால் வாழ்நாளை முற்றிலும் முழுதுமாகப் பயன்படுத்தினால் அது கரைந்து அழிந்ததாகக் கருதமுடியாது. வள்ளுவரும் “உளதாகும் சாக்காடு” என்பார். காலம் விரைந்து செல்லக்கூடியதே. அதனைத் தடுத்து நிறுத்துதல் என்பது இயலாது. ஆயினும் காலத்தின் நோக்கம் பயன்படுதலேயாம். காலம் முழுதுமாகப் பயன் பட்டிருக்குமானால் அஃது அழிவன்று; ஆக்கமேயாம். மனித உலகத்திற்கு ஒவ்வொரு வினாடித்துளியும் பயன்பட வேண்டும்.
ஒரு மனிதன் தனக்குரிய பொருள், தனது வாழ்வுக்குரிய பொருள், பிறரால் அவனறியாமல் கொள்ளை கொள்ளப்படும்போது களவு போய்விட்டது என்று கூறுகிறான். இத்தகைய களவு, உடைமைகளுக்கு மட்டும் தானா? காலத்திற்கும் உண்டு, அடிக்கடி சிலர் நேரம் போனதே தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். இப்படிக் கூறும் பொழுது அவர்கள் இம்மியும் கவலைப் படுவதில்லை.
நம்மை அறியாமல் நமது செயலுக்கும் பயன்படாமல், பயன் தராமல் வாளா கழிகின்ற காலமும் களவு போனதாகவே கருதப்படும். இங்ஙனம் அப்படி அடிகளே கூறுகின்றார், “களவுபடாததோர் காலம்” என்பது அவர் வாக்கு! உடைமைகளைப் பாதுகாக்கும் கவலை இல்லையா? பூட்டும் சாவியும் தோன்றவில்லையா? கணக்குப் பார்க்கும் பழக்கம் இல்லையா? காலம் படைத்துத் தரும் உடைமைகளுக்கு இவ்வளவு அக்கறை எடுப்பவர்கள் ஏன் மூலப் பொருளாகிய காலம் பற்றிக் கவலைப்படாது இருக்கிறார்கள்? அதுதான் புரியாத புதிர்! உடைமை இழப்பு உடனடியாகத் துன்பம் தருவது. ஆனால் மனம் வைத்து முயன்றால் ஈடு செய்யவல்லது. காலத்தின் இழப்போ நெடிய துன்பத்தைத் தரவல்லது; ஈடுசெய்ய முடியாததும் கூட. ஆயினும் அதைப் பற்றி மனித உலகம் போதுமான கவலை காட்டுவதாகத் தெரியவில்லை. எப்படியும் மனிதனுக்குக் காலம் போற்றும் உணர்வு வேண்டும் என்பதற்காக வினாடி வரையில் பகுதி பிரித்துக் காட்டினார்கள். வினாடியை விட்டால் நிமிடத்திலாவது முடித்துக் கொள்ளட்டும் என்றும் நிமிடம் குறைந்தாலும் மணிக்கணக்கில் தொலைக்காமல் இருக்கட்டும் என்றும் பிரித்துக் காட்டினார்கள். ஆனால் நாள்கணக்கில், மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில்கூடப் பயனற்றுக் காலம் கழிவதை-இல்லை, அழிக்கப்படுவதை என்னென்று கூறுவது?
காலம் முழுமையாகப் பயன்படுத்தப் பட வேண்டும்; ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். காலம் சென்ற அடிச்சுவடு சாதனையின் மூலமாகத் தெரியவேண்டும். அப்பொழுதுதான் காலம் பயன்பட்டதாகும். அங்ஙனம் இல்லாமல் “நாளை” என்று கடத்தி வாழ்வதை இயற்கை ஒரு பொழுதும் மன்னிக்காது. அப்படிப்பட்டவனுடைய காலம் சைத்தனால் களவு கொள்ளப்படும். ஆதலால், உய்திக்குப் பயன்படவேண்டிய காலத்தைக் களவு போகாமல் உரியவாறு பயன்படுத்தி அளவுக்குட்படாத அன்பால் ஐயாறப்பனை வாழ்த்தி வாழ்ந்திடுதல் வேண்டும் என்றார் அப்பர் அடிகள். அறநெறிப்படி காலம் போற்றுதலும் சிறந்த கடமையாகும்.
வளர்மதிக் கண்ணியி னானை
வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாதோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
யேறு வருவன கண்டேன்!
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்!
என்பது அப்பர் அருள்வாக்கு.



