அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

6. காயும் கனியும்

⁠இந்த உலகிடைப் பல சமய நெறிகள் நின்று நிலவுகின்றன. இச்சமய நெறிகள் அனைத்தும் இலட்சிய நோக்கால் ஒருமைப்பாடுடையனவேயாம். ஆயினும் இலட்சியத்தைப் பற்றிய அறிவிலும் தெளிவிலும், அந்த இலட்சியத்தை அடைதற்குரிய நெறிமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் இயல்பாய அறிவு அனுபவக் கூறுகளின் அடிப்படையிலேயே தோன்றுவன. இவ்வேறுபாடுகள் சிந்தனையுடையார்க்கு மகிழ்வையே தரும்; வெறுப்பினை விளைவிக்கா.

⁠உயிர்களின் மேம்பாடு என்ற அடிப்படையில் சமய நெறிகள் ஒன்றுபட்டாலும் தத்துவ அடிப்படையில் மாறுபடுகின்றன. இம்மாறுபாடுகள் தத்துவக் கூர்தல் வழி தோன்றுவன. தமிழினத்தின் தனி நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி முழுதுற வளர்ந்த நெறியாகும். சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்த முடிபு என்பது பொருள். சித்தாந்தச் சிவநெறியில் இறைவன் கருணை நிறைந்தவனாக – தாயிற் சிறந்த தயாவுடைய தண்ணளியுடையோனாகப் போற்றப் படுகின்றான். திருநீறு உயிர்களுக்குக் கவசம், வினை நீக்கிப் பாதுகாப்புத் தரவல்லது. திருக்கோவையார் அருளிச் செய்த மாணிக்கவாசகர், குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்துண்பதைப் போன்று இறைவன் தன்னைத் தொழுது எழும் உயிர்களின் “வினை வலம் நீறெழத் திருநீறணி அம்பலவன்” என்று ஆண்டவனைப் பாராட்டினார். இந்த அனுபவத்தைக் கண்டு சுவைத்தற்கேற்றவாறு கூறுபவர் நமது அப்பரடிகள். இறைவன், “மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான்” என்று இதயம் குளிரப் பாடுகின்றார். அவன்றன் திருவடியைத் தொழுதால் நோன்பின்றி – வருத்தமின்றி இறைவனே நம்மை வலிய ஏற்றுக் கொள்வான். அதனுடைய அடையாளமே அவன் வெண்ணிறு சண்ணித்த மேனியனாக இருப்பது. அவனைத் தொழாது உறிதுக்கித் திரிந்து உடலையும் உயிரையும் வருத்திக் கொள்வதால் பயன் என்ன? உடலையும் உயிரையும் வருந்துகின்ற நோன்புகளால் உயிர் உய்தி பெறலாம் என்று கூறும் சமய நெறிகள் காய் அனையவே.

பெரும்பாலும் காய்கள் சுவையாக இருப்பதில்லை. காய்களை எளிதில் பெறவும் முடியாது; அடித்துப் பறிக்க வேண்டும். காய்களைத் தின்று அனுபவிப்பதிலும் தொல்லை அதிகம். காய்கள் எளிதில் செரிக்கா; ஆண்டில் இளையர் உண்ண முடியாது; பிறிதொரு சுவையூட்டாமலும் உண்ண முடியாது; செரித்த பின்பும் காய்களால் பெறப்படும் உடற்பயன் மிகமிகக் குறைவு. அதுபோலவேதான் நோன்புகளால் உடலை வருத்தும் சமய நெறிகளைச் சார்ந்து நிற்பதும் எளிதன்று. அவை உடலையும் உயிரையும் வருத்துவன: விளையும் பயனும் தெளிவானதன்று. கனி, எளிதில் கிடைப்பது, வலியக் கிடைப்பது; தொட்டால் சாறு கிடைக்கும்; ஆண்டில் இளையவரும் உண்ணலாம்; முதியவரும் உண்ணலாம்; தானே கனிந்ததானமையால் சுவை முற்றியது; சுவையூட்டத் தேவையில்லை; சுவைத்தலும் இனிது; தின்று மகிழ்தலும் இனிது; எளிதில் செரிக்கும்; முழுவதும் உடலுக்குப் பயன்தரும். சித்தாந்தச் சிவநெறி கனிச்சாறு அணையது. “ஒரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த, ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுதருந்தினர்” என்பது குமர குருபரர் வாக்கு சிவன், விரதங்களெல்லாம் மாண்ட மனத்தவன்; பழத்திடைச் சுவையொப்பவன்; கனியும் கனிதரு சுவையும் ஒத்தவன், “ஈசன் எனுங்கனி” என்பர் அப்பரடிகள். காய் காவலுடையது; கனியாகும் வரையில் காவலுண்டு. காயாகப் பறித்துத் தின்ன வேண்டுமென்றால் களவாகக் கல்லெறிந்து பறித்திடுதல் வேண்டும்; கனி காவலற்றது. கனி பறித்தற் குரியதுமன்று. அதுபோலவே காய் அனைய சமயங்களில் நிற்பவர்களுக்குப் பொறிகள் காவலும் புலன்கள் காவலும் வேண்டும். சிவநெறியின் கொள்கை வாழ்க்கை மகிழுதலுக் குரியது என்பதாகும். இறைவனே “பொன்னும் மெய்ப்பொருளும் தந்து துய்க்கச் செய்வான்; “ஒப்புடைய மாதராய்” நின்று துய்க்கச் செய்வான். அனுபவத்திற்குத் தடையில்லாத இடத்தில் காவலும் கிடையாது; களவும் வாராது. சிவநெறி காவலற்ற நெறி; அனுபவ நெறி. இந்நெறியல்லாது வேறு நெறிகளில் நின்றொழுகுதல் கணியிருக்கக் காய் கவர்ந்ததையொக்கும். “கனியிருக்கக் காய் கவர்ந்தது” என்பது மிகவும் சுவையானது. சிவநெறியில் பிறந்திருந்தும் சமணத்திற்குச் சென்று திரிந்ததை அடிகள் அழகாகக் குறிப்பிடுகிறார். இதனை,

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி
யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்,
கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேனே,

என்ற அப்பர் திருப்பாட்டு உணர்த்தும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !