
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
15. மன்றத்து நின்ற மரம் வாழுமோ?
இன்றைய மனித சமுதாயத்தில் தனி உரிமை, ‘பொது உரிமை’ என்ற சொற்கள் பெரு வழக்கில் வழங்கப் பெறுகின்றன. தனி உரிமை-பொது உரிமை என்ற சொற்கள் பெருவழக்காதல் வளரும் சமுதயாத்திற்கு நல்லதல்ல. ஏன்? தனி உரிமையும் பொது உரிமையும் இன்று ஒன்றோடொன்று மோதக் கூடச் செய்கின்றன. தனி உரிமையும் பொது உரிமையும் அரும்பும் மலரும் போல் ஒன்றையொன்று தழுவி நிற்க வேண்டியன. தனி உரிமை, பொது உரிமை ஆகியவற்றில் முதலிடம் கொடுத்துப் பேணத்தக்கது பொது உரிமையேயாம்.
பொது உரிமை தாயானால் தனி உரிமை சேய், ஆனால் சமுதாயப் பேரறிவு வளராததன் காரணமாகத் தனி உரிமையிலிருந்துதான் பொது உரிமை தோன்ற வேண்டும் என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. ஆனால் மனித சமுதாய வரலாற்றுப்படியும், வாழ்வியல் முறைப்படியும் பொது உரிமை தோன்றி வளர்ந்து செழுமையடையும் பொழுதே தனி உரிமை தோன்றுகிறது.
நம்முடைய சமுதாயத்தில் தனி உரிமை உணர்வு வளர்க்கப்பட்டமையின் காரணமாக, இந்த நாள் வரையில் பொது உரிமையை விட, தனி உரிமையே முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் நம்முடைய சமுதாயத்தில் பொது உரிமை இயக்கங்களாகிய கூட்டுறவு இயக்கங்கள் பலவீனமுற்றேயிருக்கின்றன. அரசு வழிப்பட்ட பொதுத் தொழில்கள் தனியார் தொழில்களை விட- தனியார் தொழில்களை நோக்கச் செழுமையான இலாபங்களைத் தரவில்லை. ஏன் நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே! அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது? இல்லவே இல்லை! இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பேற்றிருக்கின்ற சிலரிடத்தில் கூட, அது பொது, ஆதலால் பேணுகிறோம் என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது வேலை; பலருக்கு அது ‘பிழைப்பு’, அதனாலேயே நம்முடைய பொது நிறுவனங்களுடைய உடமைகளும் முதலீடுகளும், அதற்கியைந்த பணிகளும் கோடிக் கணக்கில் பல்கிப் பெருகவில்லை.
சமுதாயத்தின் இந்த இழிமனப் போக்கு இன்று நேற்று தோன்றியதன்று. அப்பரடிகள் காலத்திலும் இதே நிலைமை தான்! ஊர் நடுவே, ஒரு மன்றம்! மன்றம் என்றால் பொது இடம் என்று பொருள். நம்முடைய இறைவன் மன்றிலாடுகிறான் என்பது நம் ஆன்றோர் வழக்கு. மன்றத்தையே ‘பொதுவில்’ என்றும் அழைப்பதுண்டு. மன்றத்திலாடும் இறைவன் என்றால் இறைவன் உலகுக்குப் பொது என்பது பொருள்.
உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே! அவன் மகிழ்ந்தாடக் கூடிய இடம், மன்றம். அந்த ஆனந்த வெள்ளத்தமுதில் திளைப்பவர்கள் உலகத்து மக்கள். இங்ஙனம் பொது மக்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு, முன்பே, தமிழகச் சமய நெறியில் கருக்கொண்டு விட்டது. ஆயினும் பழக்கங்கள் அக்கருவை மூடி மறைத்துச் சிதைத்து விட்டன. மன்றம் பலர் கூடுமிடம். ஆங்கு நிழல் தருவதற்காக மரங்கள் வைக்கப் பெற்று வளர்ந்திருக்கும். நிழலில் கூடியிருந்து மகிழ்ந்தவர்கள், நிழல் தந்த மரங்களைப் பேணுவதில்லை. பேணாதது மட்டுமின்றித் தேவைக்கேற்பச் சிறிதும் பெரிதுமாகக் கொம்புகளை ஒடித்துச் சேதப் படுத்துவர். தொங்கும் கிளைகளை மாடுகளும் கடித்து மேய்ந்து அழிக்கும். நோய் தரும் பூச்சிகள் ஒட்டி, மரங்களை உருக்குலைக்கும்.
இங்ஙனம் மன்றத்தில் நின்ற மரமாயினும் மன்பதைக்குப் பயன்பட்டதாயினும் அம்மரம் பேணுவாரின்றி பெருந்துன்பமே உறுகின்றது. காரணம், மன்றத்தில் நின்ற மரம்! வீட்டகத்தே நின்ற மரமாக இருப்பின் எங்ஙனம் பேணுவர் என்று எடுத்து எழுதவும் வேண்டுமோ? தாம் வளர்த்ததாக இருப்பின் நச்சு மரமேயானாலும், கொல்ல மாட்டார்கள் என்று மணிமொழி பேசுகிறது. வளர்த்த பாசம் அத்தகையது! மன்றத்தில் நிற்கும் மரமும்-பொது இடத்தில் நிற்கும் மரமும் படும் துன்பத்தைத் துன்பத்திற்கு எல்லையாக எடுத்துக் காட்டுகிறார், அப்பரடிகள். ஆதலால் அப்பரடிகள் காலத்தும் பொதுமையுணர்வு தோன்றவில்லை. பொதுவுரிமைப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு வளரவில்லை எனலாம்.
தனியுரிமையும், தனி மனிதவுணர்வும் நஞ்சென வளர்ந்து மனித சமுதாயத்தை அரித்துக் கெடுத்திருக்கின்றன. மனித சமுதாயம் என்ற ஒப்பற்ற மாளிகை ‘யான், எனது’ என்ற இரண்டு ‘இடி’களால் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ‘யா’னிலும் ‘ஒரு மனித’ னிருக்கிறான். ‘நா’மிலும் ஒரு மனிதனிருக்கிறான். ‘என’ திலும் ‘ஒரு மனித’னுடைய உணர்வு இருக்கிறது. ‘நமதிலும்’ ஒரு மனிதனுடைய உணர்வு இருக்கிறது. ஆனால், இரண்டிற்குமிடையேயுள்ள வேற்றுமை ‘யான், எனது வெறுப்பை வளர்க்கிறது; பகையை வளர்க்கிறது; பாதுகாப்பின்மையைத் தோற்றுவிக்கிறது. ‘நாம்’, ‘நமது என்ற உணர்வு, அன்பைப் பெருக்குகிறது; உறவை வளர்க்கிறது; பாதுகாப்பைத் தருகிறது.
தனியுரிமையில் பொதுவுரிமை அடங்காது. பொதுவுரிமையில் தனியுரிமை அடங்கும். ஆயினும் வழி வழி சமுதாயத்தில் வேண்டிய அளவு பொதுமையுணர்வு வளரவில்லை. ‘யான்’, ‘எனது என்ற உணர்வு மனிதனுடைய உத்வேகத்தை அழிக்கிறது. தனிமனிதன் ஒப்பற்ற காரியங்களைச் செய்துவிட முடியாது. இதனை உணர்த்தவே மிகப் பருமனான ஒரு தேரைப் பலர் கூடி இழுக்கும் மரபைச் சமயநெறி தோற்றுவித்தது. ஆயினும் என்? தேர் இழுக்கப் பெறுகிறது. ஆனாலும் சமுதாயப் பொதுவுணர்வு தோன்ற வில்லை. தேரோட்டம் ஒரு சடங்காகப் போய்விட்டது.
மனிதன், ஒன்றில் ஒன்றவேண்டும். அந்த ஒன்று கடவுள். எல்லா உலகுக்கும் ஒருவனாக இருக்கின்ற கடவுள்! அவன் “இவனுமல்லன்; அவனுமல்லன்” அவனுக்கு ஒன்றென்றே பெயர் கூறினும் பொருந்தும். அவனையே “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்பரடிகள் பாராட்டுகின்றார். “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று சாத்திரம் பேசும்! “ஞாலமே விசும்பே, இவை வந்து போம் காலமே!” என்று மணிமொழி பேசும். அந்த ஒன்றில் வேறுபாட்டுணர்வு அற்று ஒன்றிக் கலந்தால் துன்பம் வராது என்ற கருத்தை அப்பரடிகள் இனிது விளக்கிப் பாடுகின்றார். அதாவது, தனிமை துன்பம் தரும்; பொதுமை இன்பம் தரும். கடவுள் ஒன்று, அதுவே, உலகத்திற்கு ஒன்று. அந்த ஒன்றை ஒன்றியிருந்து நினைத்தால் இன்புறலாம் என்பதாகும்.
மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி
ஒன்றினா லுணரமாட்டே னுன்னையுள்
வைக்கமாட்டேன்
கன்றிய காலன்வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினா னலமந்திட்டே னதிகைவி ரட்டனரே,
என்பது அப்பர் திருப்பாட்டு.



