அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

8. பாழுரில் பிச்சை

⁠பிச்சையெடுத்து வாழ்வது வையகத்தின் இயற்கையன்று. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்” என்ற திருக்குறளில் திருவள்ளுவர் “இரந்தும்” என உம்மை கொடுத்து அழுத்தியதே இரந்து வாழும் வாழ்க்கை, நெறி பிறழ்ந்தது – நியதி கடந்தது என்பதை அறிவுறுத்தவேயாம். ஒரோவழி, இயற்கைச் சூழலால் எளியராகிய வழி, இரந்தும் வாழவேண்டிய இன்னாத சூழல் ஏற்பட்டுவிடின், அந்த இன்னாமையை ஓரளவாவது இனியதாக்கிக் கொள்ள வேண்டாமா? அது மட்டுமின்றி நெறி கடந்த இரப்பினை, நெறியுடையதாக்கிக் கொள்ள வேண்டாமா? அதனால் இரப்பினையும் நெறியாக்கிக் கொள்கிற இனிய வழி வகையைக் கண்டு காட்டியது வள்ளுவம். இதனை,

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று,

என்ற திருக்குறளால் அறியலாம். அதாவது இரப்போர்க்கு கரவாது உவந்து ஈவார்கண்ணே இரத்தல் குற்றமன்று. அவரிடத்து இரத்தலும் ஈதலே போலும் என்றும் வள்ளுவம் கூறுகிறது. அஃதெங்ஙனம் இரத்தல், நெறியாக முடியும்? ஈதலாக முடியும்? இரப்பார்க்கு உவந்து ஈயாது கரப்பார் மாட்டு இரத்தல் மூலம் இரப்பவர்க்கு இழிவு வருகிறது; ஏமாற்றம் ஏற்படுகிறது; வறுமையும் அழிந்த பாடில்லை. அதே போழ்து தன்னை நோக்கி இரந்தவர்க்கு ஈயாது கரந்தவனுக்கும் இழிவு வருகிறது; இரந்தும் இல்லையென்று கூறியதால் பாவம் ஏற்படுகிறது. கரவாது உவந்து ஈவார்கண் இரந்து கேட்பதன் மூலம், இழிவு தோன்றுவதில்லை, பயனும் கிடைக்கிறது; வறுமையும் நீங்குகிறது. அதோடு ஈவான் உவந்து ஈதலின் மூலம் அவனுக்கு மகிழ்வு கிடைக்கிறது; ஈத்துவக்கும் இன்பம் கிடைக்கிறது; ஈவானுக்கு இரப்பானின் மூலம் அறம் செய்த புண்ணியம் கிடைக்கிறது. ஆதலால், கரவாது ஈவார்கண் இரப்பது முற்றிலும் தவறன்று.

⁠ஆனால், அப்பரடிகள் பாழூரில் பிச்சையெடுத்து அல்லற்படும் அவலத்தை எடுத்துக் கூறி விளக்குகின்றார். ஊரோ பாழூர்! ஆங்கு பொருள்வளம் இல்லை! உருவத்தால் மனிதர்கள் வாழுகிறார்கள்! உள்ளத்தால் கொடிய விலங்குகள் அனையர் வாழுகிறார்கள்! ஆங்கு ஆள் வினையும் இல்லை; ஒயாது உழைத்திடும் இயல்பும் இல்லை; உறுபொருள் ஈட்டுதலும் இல்லை; அன்பும் இல்லை; ஆர்வமும் இல்லை; இடிந்த வீடுகள்; ஓட்டைக் கூரைகள்! ஒட்டிய வயிறுகள்! ஒளியிழந்த கண்கள்! கபடு நிறைந்த கன்றிய நெஞ்சங்கள்! விரோத மனப்பான்மையுடன் வீண்வம்பு விளைவித்திடும் நரியனையார்! அழுக்காற்றுப் பிண்டங்கள் இன்னும் எப்படி எப்படியோ கூறலாம்! “பாழ்” என்ற சொல்லில் அனைத்தும் அடங்கும். பாழ்பட்ட பொருள், தான் பயன்படாததோடன்றிப் பிறிதொன்றையும் பயன் பயன்படாதபடி தடுக்கும். இத்தகு பாழூரில் பிச்சையெடுக்கப் போகும் மனிதனின் பேதமையை என்னென்பது? பிச்சை போடுவார் யார்? பல ஊர்களில் கெட்டவர்களாகப் பலர் இருந்தாலும், சிலராவது நல்லவர்களாக வாழ்வார்கள். அத்தகு ஊரில் ஒருவரிடம் இல்லையானாலும் பிறிதொருவரிடம் வாங்கலாம். ஆனால், அப்பரடிகள் காட்டும் ஊர் பாழூர்! ஆங்கு வாழும் அனைத்து மனிதரும் பாழ்! அந்த ஊரில் ஆசை மிகுதியால் பிச்சையெடுக்கப் புகுந்து அலைந்தவன் அடையும் அவலம் கொடிது! கொடிது! அதுபோல் தொழுதகைத் துன்பம் துடைத்திடவும் இருளகற்றி இன்பம் வழங்கிடவும் தந்தையாய், தாயாய், இன்னுயிர்த் தோழனாய் துணை நின்று தண்ணளி செய்து அருளாரமுதத்தை வாரி வழங்கி இன்புறுத்தும் தலைவனாம் ஈசனில்லாத சமண் சமயத்தின் அனுபவம் அப்பரடிகளுக்குப் ‘பாழூரை நினைவுபடுத்தியிருக்கிறது. “யாரொடு நோகேன்; யார்க்கெடுத் துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்?” என்ற மணிமொழியைப் போல எய்ப்பினில் சேம வைப்பாகப் பயன்படும் சிவனெம்பிரான் இல்லாத சமண நெறியில் யாரிடம் போய் எதைக் கேட்பது? வழங்குவார் தாம் யார்? அங்கு மாசில் வீணையின் நாதம்தான் ஏது? மாலை மதியத்தின் மகிழ்வு ஏது? வீசு தென்றல் ஏது? மலரிடை மணம் நுகர முடியுமா? யாதொன்றும் இல்லை! சூன்யம்! எங்கும் வறட்சி! இன்பமே நிறைந்த உலகைத் துன்ப நரகாக்கிடும் பொல்லாத விரத நெறி வாய் படைத்தவனைத் துய்க்கச் செய்யாமல் அழிக்கும் நெறியன்றோ? அப்பரடிகள் சிவநெறியில் பிறந்தவர்; உய்யும் நெறி நாடியவர். உறி தூக்கிச் சமண் நெறியில் புகுந்தார்! தேடினார்! தேடினார்! ஆனால், ஆங்குத் தேவர்கோ அறியாத தேவ தேவனைக் காணோம். “என்று வந்தாய்” எனும் இனிய சாயல் காட்டித் தண்ணளி செய்து சுவையமுதூட்டி வாழ்வித்திடும் வள்ளல் சிவபெருமான் இல்லை! அதனாலேயே சமண நெறியைப் “பாழூர்” என்றும், யாருமில்லாத ஊரில் பிச்சையெடுக்கப் புகும் பேதைமையைக் காட்டியும் பெரு நெறியில் பிறந்தும் இச்சிறுநெறியில் புகுந்ததை நினைத்தும் பாடுகின்றார்! ஆவியை வீண் போக்காமல் அழகியதாக்கி, தமக்கு அணியென ஆக்கிக் கொண்ட ஆரூரானை நினைந்து நினைந்து நெஞ்சு நெகிழப் பாடுகின்றார் அப்பரடிகள்.

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
⁠சமண் நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார் கண்டோடிக்
⁠கதவடைக்கும் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
⁠யாட்கொண்ட வாரு ராரைப்
பாவியே னறியாதே பாழுரிற்
⁠பயிக்கம்புக் கெய்த்த வாறே!

என்பது பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !