அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

13. நமது பழக்கமா?

⁠நமது குமுகாய வாழ்க்கையில் பலர் கூடி உண்ணும் பொழுதும் ஒருவரோடொருவர் பேசாமலேயே உண்கிறோம். உண்ணும்பொழுது பேசுவதைப் பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. அங்ஙனம் பேசுவது ஆசாரக்கேடு என்று கருதுகிறார்கள்; கண்டிக்கிறார்கள். குழந்தைகள் உண்ணும் பொழுது, பேசத் துடிக்கிறார்கள்; பெரியோர்கள் அடக்குகின்றனர். பேச்சுக்குப் பதில் அழுகை பிறக்கிறது. இங்ஙனம் உண்ணும்பொழுது உரையாடக் கூடாது என்ற வழக்கம் எப்பொழுது தோன்றியது? யாரிடமிருந்து வந்தது? என்று அறிந்து கொள்ளுதல் சுவையான செய்தி!

⁠தமிழர் வாழ்வில் சமண சமயம் வந்து கலந்த பொழுதே இந்த வழக்கம் வந்திருக்கிறது. தமிழினம் சமண சமயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களை யறியாமலே அந்த சமயப் பழக்கவழக்கங்கள் சில, அவர்களுடைய வாழ்க்கையில் வந்து பொருந்தியுள்ளன. சமணர்களின் சீரிய ஒழுக்கங்களுள் தலையாயது, நேரிடையாகவோ மறைமுகமாகவோ திட்டமிட்டோ தற்செயலாகவோ பிற உயிர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது. தற்செயலாகவும் உயிர்க்கொலை நிகழக் கூடாது என்பதற்காகச் சமண்சமயம் சில ஒழுக்க விதிகளை விதித்திருக்கிறது. அவற்றுள் ஒன்று திறந்த வாயினராக இருத்தல் கூடாது என்பது. இருந்தால், சிறு பூச்சிகள் இயற்கையில் வாய்க்குள்ளிருக்கும் பற்பசையில் சென்று ஒட்டி இறத்தல் கூடும் என்று கருதுகிறது. அதனாலேயே சமண முனிவர்கள் தம் வாயின்மீது ஒரு சிறு திரையிட்டிருப்பர்.

⁠இவ்வளவு விழிப்பாகக் கொல்லாமையைக் கருதுபவர்கள் உண்ணும்பொழுது உரையாடினால் சிறு பூச்சிகள் வாய்க்குள் செல்லக் கூடுமென்று உரையாடுவதற்கு தடை விதித்தார்கள். அடுத்து உரையாடுதலின் மூலம் மகிழ்வு பிறந்து, அம்மகிழ்ச்சிப் போக்கில் திட்டமிட்ட அளவிற்கு மேலாக உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அது நோன்பை மீறிய செயலாகும். இந்த அடிப்படையிலும் உண்ணும் பொழுது உரையாடுதலைச் சமணம் தடுக்கிறது. சமணர்களுக்குரிய இந்த பழக்கம்-சமண முனிவர்களுக்கு விதித்த இந்த நெறி எப்படியோ நம்மையும் அறியாமல் நம்முடைய குமுகாய வாழ்க்கையிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

⁠அப்பரடிகள் “மூங்கைகள் போல் உண்ணும் மூடர்” என்று உண்ணும்பொழுது உரையாடாதார் பண்பைக் கண்டிக்கிறார்.

⁠பொதுவாக, உண்பதும் ஒரு விழுமிய கடமையேயாம். மிகச்சிறந்த பயனுடைய பணிகளைச் செய்தற்குக் கருவியாக அமைந்துள்ள உடலைப் பேணுதலும் ஒரு தவமேயாகும்.

⁠“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று திருமந்திரம் பேசுகிறது. இங்கே உடம்பை வளர்த்தல் என்பது சதைப் பிண்டங்களை வளர்ப்பது என்பதன்று. உடலுக்குரிய விழுமிய திறன்களை வளர்ப்பது என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சதைத் திரட்சிகள் எரி விறகிற்குப் பயன்படுமேயன்றிப் பணிகளுக்குப் பயன்படா. உயிர் உயர்தற்குரிய அன்பிற்கலத்தல், தொண்டு செய்தல் ஆகியனவற்றிற்குத் துணையும் தோழமையும் குமுகாயச் சூழலும் இன்றியமையாதன. தனி மனிதன் தனியே அன்பிற்கலத்தல் இயலாது. அவன் தன்மாட்டே அன்பு காட்டுதலை ‘அன்பு’ என வழக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அது சுயநலம்! அன்பன்று; அவமேயாம்.

⁠ஒருவன் தன்மாட்டே தான் அன்பு காட்டிக் கொள்ளுதல் தீமையையே பெருக்கும்; இன்பத்தினைப் பெருக்காது. அதனாலேயே அன்பு காட்டுதற்குரிய களமாக விலங்குகள் போலல்லாது மனித குமுகாயத்தை ஒரு கூட்டு வாழ்க்கையாக இயற்கை அமைந்துள்ளது. மனித குமுகாயத்தில் அரக்கனைத் தவிர, தனி மனிதனே இல்லை! ஞானியானால் இறையுடன் தோழமை கொண்டு ஒன்றிக் காதலித்து இன்புறுவர். அவர்களுக்கும் இறைவன் என்ற ஒரு தோழனுண்டு. இவன் அவனைக் காதலிக்க, அவன் இவனைக் காதலிக்க மிகப் பெரிய ஞானக் காதல் வாழ்வு மலர்கிறது.

⁠எனவே, மனித உயிர் குறைகளினின்று விடுதலை பெற அன்பினாற் கலந்த உறவு தேவை. உறவு தோன்றி வளர்தற்குரிய சூழ்நிலைகள் பலவற்றுள் பலர் ஒருங்கிருந்து உண்ணும் சூழ்நிலையே சிறப்புடைய சூழ்நிலையாகும். அதனாலேயே வள்ளுவம், பகுத்துண்ணலைத் தொடர்ந்து “பல்லுயிர் ஒம்புதல்” என்று பேசியது. திருமுறைகளும், திருக்குறளும், விருந்தோம்புதலை நெறிகளுக்கெல்லாம் உயர்ந்த நெறி என்று எடுத்தோதுகின்றன.

⁠மனித உறவுகளுக்குக் கொடிய பகையாகிய அழுக்காறு, பிற கட்டங்களில் தலை காட்டுதல் போல உண்ணும் பொழுது தலைகாட்டுதல் இயலாது. அளவுக்கு மிஞ்சிக் குவித்து வைக்கின்ற செல்வத்தைப் போலல்லாமல் யாரும் அளவோடுதான் உண்ண இயலும். ஆதலால் அழுக்காற்று உணர்வு தடை செய்யப்படுகிறது. அதோடு பிற கட்டங்களில் மனிதன் தன் மகிழ்வுணர்வைப் பூரணமாக வெளிப்படுத்தி விடுவதில்லை. உண்ணும்பொழுது தன்னுடைய நிறைவை அகன்ற ஒளிபடைத்த கண்கள் மூலமும், மகிழ்வு கொப்பளிக்கின்றதை முகத் தோற்றத்தின் மூலமும், சுவைத்து மகிழ்ந்தமையை உதடுகளில் பொங்கி வழியும் புன்னகை மூலமும் யாதொன்றும் தடை செய்ய முடியாவண்ணம் வெளிப்படுத்துகிறான். இத்தகைய சூழ்நிலையில் உறவு கலத்தலைப் போலப் பிற சூழ்நிலைகளில் முடியாது. ⁠அது மட்டுமின்றி ஒருவர் உண்பதை உடனிருப்பவன் விரும்புகிறான் என்பது தெரியாது போனால், உண்பவனுக்கு அவனையறியாமலே ஐய உணர்வும், கூச்சமும் தலை காட்டுகின்றன. அதன் காரணமாகத் தயங்கித் தயங்கி உண்கிறான். அப்பொழுது அவன் உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமற் போகிறது. உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமல் உண்ணும் உணவு, நஞ்சாக மாறி விடுகிறது. அதனால் நலம் கெடுகிறது; நோய் வந்தமைகிறது.

⁠ஆதலால், உண்ணும்பொழுது உரையாடாது உண்ணுதல் நல்ல வழக்கமன்று; ஒழுக்கமன்று அறநெறியுமன்று; வாழ்வாங்கு வாழும் நெறியுமன்று; உடலியலில் பேணும் நெறியுமன்று. அதனாலன்றோ, தாயுமானார் “உறவு கலந்து உண்ணக் கண்டீர்” என்று எடுத்தோதினார். உறவு கலக்க உரையாடல் இன்றியமையாதது. ஆதலால், பலர் கூடி – உண்ண வேண்டும். உறவு கலந்து உண்பித்துச் சிரித்துப் பேசி மகிழ்வு சிறக்க உண்ண வேண்டும். ஆனால் உண்ணும் பொழுது உரையாடலை ‘அரட்டைக் கச்சேரி’யாக மாற்றிவிடக் கூடாது. பயனற்ற சொற்களைப் பலர் கூடி உண்ணும் பந்தியில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

⁠அதுமட்டுமின்றி உணர்ச்சி வசப்படுத்தக் கூடிய, அவல உணர்வுகளைத் தரக்கூடிய செய்திகளை மறந்தும் பேசக் கூடாது. இது நேர்மாறான பயனைத் தந்துவிடும். உண்ணும் நேரம் குற்றங்குறைகளை உணர்த்தவன்று. உண்ணும்பொழுது மனித இயலைத் தூண்டி உயர்த்துதற்குரிய மகிழ்வும் ஊக்கமும் தரத்தக்க செய்திகளையும், உயர்வு தாழ்வுகளை விரிவுபடுத்தாத உறவு நெறிகளையும் காட்டிப் பேசுதல் வேண்டும். இத்தகைய உரையாடலோடு கலந்துண்ணும் பழக்கம் நமது குமுகாய வழக்கம். இந்த இனிய வழக்கம் மீண்டும் நமது குமுகாயத்தில் மலர்வதாக.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !