அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

21. வானகத்தை வழங்கும் வாழ்க்கை

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம்
நான்நி லாவி யிருப்பன்என் நாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே!

⁠ஊன் வேறு, உயிர் வேறு. ஊன் – கருவி, உயிர் – ஊனாகிய கருவியைப் பயன்படுத்தும் கருத்தா. ஊனிற்குக் குணமில்லை; செயலில்லை. உயிருக்குக் குணம் உண்டு; செயலுண்டு. உயிர், ஊனாகிய கருவியைக் கொண்டுதான் தொழிற்படுகிறது; பயன் விளைவிக்கிறது. உயிர்க்கும் அறிவு, தொழில், குணம் ஆகியவை உண்டாயினும் அவை நிறைவுடையன அல்ல; இன்பமே தருவனவாகவும் இல்லை. ஆதலால், உயிர் தன்னினும் சிறந்த இறைவனை – திருச்சிற்றம் பலவனைத் துணையாக நாடிப் பெறுகிறது. இறைவனைத் துணையாகப் பெற்றோனின் ஊன், உயிர் எல்லாம் அன்பின் நெறிப்பட்டவை; அருளார்ந்தவை. ஊனில் நிலவும் ஆவி-உயிர், உயிர்க்கும் பொழுது எண்ணும்; நோக்கும்; சிரிக்கும்; செயற்படும். இவை நிகழும் பொழுது உயிராற்றல் மங்கி, ஊன் முழுமையாகத் தொழிற்படாது போனால் முடை நாற்றம் வீசும், இரக்க உணர்ச்சியே இருக்காது. இது வெறுத்து ஒதுக்கத்தக்க வாழ்க்கை. உயிர் ஆற்றல் மட்டுமே தனியே தொழிற்படின் பகை, பிணக்கு, போட்டா போட்டிகள் தலைகாட்டும். இன்ப மயக்கத்தில் துன்பமே விளையும்.

⁠உயிர், திருச்சிற்றம்பலவனை நாடித் துணையாகப் பெற்று அவனோடு கலந்து, அவன் தன் இயல்புகளைச் சிந்தனை செய்து, தமக்குரியவனாகப் பெற்று உயிர்க்கும் பொழுதெல்லாம் உயிரின் கரணங்கள், தன்மை மாறித் திருவருள் வயத்தனவாக விளங்கித் தோன்றும்; இறைமைத் தன்மையே வெளிப்படும்; இன்ப அன்பே மேவி விளங்கும்; குற்றங்கள் நீங்கும்; குணங்கள் கால்கொள்ளும்; துன்பங் களில்லை; இன்பமே உண்டு. ஆக, உண்மையான இறை வழிபாடு என்பது, உயிர் உடல் கொண்டு வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் அனைத்துச் செயல்களிலும் திருவருள் மணங்கமழுதலேயாகும். தன் முனைப்பு நாற்றமேயிருத்தல் கூடாது.

⁠தன்னலச் சார்பு, அறவே நீங்குதல் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை முற்றாக நீங்குதல் வேண்டும். மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கும் தன்மையிற் சிறந்து விளங்கவேண்டும். பழுதிலாத் துறவும், பீடுறுபண்பும் வீடும் வேண்டா விறலும், திருவருட் சார்புடையோரின் இலக்கணம். அவர்களை இனங்கண்டு கொள்ளும் அடையாளங்கள் அவை. அத்தகு சான்றோர் அச்சத்தினின்றும் நீங்கியவர்கள். அவலத்தினின்றும் விடுபட்டவர்கள். இறைவன் உவந்து குடியேறி நடமாடும் திருக்கோயில்கள் அவர்கள்! அவர்களே சான்றோர்கள். அவர்கள் மண்ணகத்தையும் விண்ணகமாக்குவார்கள்.

⁠வழிபாடென்பது கைகளால் கும்பிடுவது மட்டுமன்று; மலரிடுதல் மட்டுமன்று; வாழ்க்கை முழுவதுமே சமயமாக இருக்கவேண்டும். ஊனை இடமாகக் கொண்டு உயிர் உயிர்க்கும் பொழுதெல்லாம் அது எந்த சந்தர்ப்பமாயினும் சரி, கொடிய துன்பங்கள் சூழ்ந்தாலும் சரி, அல்லது இன்பமே சூழ்ந்தாலும் சரி இறைத் தன்மையை உயிர்ப்பிப்பதாக இருக்க வேண்டும். அதுவே நிறை நலமிக்க சமய வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கைதான் பிறவிப் பிணிக்கு மருத்தாக அமையும்; ஞானத்திற்கு உணவாக அமையும். அத்தகைய சமய வாழ்க்கையே துன்பத் தொடக்கில்லாத வானகத்தை வழங்க வல்லது என்பது அப்பரடிகள் கருத்து.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !