அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

14. ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடுவதா?

⁠இறைவன் எங்கும் இருக்கின்றான்; எல்லாவற்றிலும் இருக்கின்றான்; எப்பொழுதும் இருக்கின்றான். எங்கும் இறைவன் தங்கியிருப்பதனாலேயே அவனுக்கு இறைவன் என்று பெயர். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று மணிமொழி இறைவனைப் போற்றுகிறது; பாராட்டுகிறது. எல்லாத் திருக்கோயில்களுக்குள்ளேயும் நுண்ணறிவில்லாத வரும் கண்டு அறிந்து போற்றும்படி திருமேனி கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான். திருக்கோயில்கள் யாவும் இறைவன் திருக்கோயில்களே. எல்லாத் திருக்கோயில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்திகளிலும் இறைவன் திருவருட் பொலிவோடு எழுந்தருளியிருக்கிறான். ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை. இங்கென்றும் அங்கென்றும் இறைவனைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.

⁠ஒரு திருக்கோயிலில் வழிபாடு செய்து வைக்கும் பொறுப்புள்ள அர்ச்சகரே இன்னொரு திருக்கோயிலில் உள்ள தெய்வத்திற்கு நோன்பு எடுத்துக் கொண்டு அங்குச் செல்வார். இது எவ்வளவு பெரிய அதிசயமான செய்தி! சிற்றுண்டிச்சாலையை வைத்திருப்பவர் தாம் அங்கு உண்ணாமல் அடுத்த கடையில் போய் உண்டு, வருகிறதென்றால் அது வேதனையைத் தரக்கூடிய செய்தியல்லவா?

⁠திருநல்லூர்த் திருக்கோயில், எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில். அங்கு, கண்ணுக்கும் கருத்துக்கும் தோற்றமாகும்படி இறைவன் எழுந்தருளியிருக்கின்றான். ஆனாலும் திருநல்லூர்த் தொண்டர், திருநல்லூர்த் திருக்கோயிலுக்குள்ளேயா இறைவனைக் காண முயல்கின்றனர்? காசிக்குச் செல்லுகின்றனர்! இதனை அப்பரடிகள் கண்டிக்கின்றார்.

⁠கெட்ட புத்தியால் ஆற்றில் ஒரு பொருளைக் கெடுத்து விட்டு அந்தப் பொருளைக் குளத்தில் சென்று தேடினால், கிடைக்குமா? ஒரு பொழுதும் கிடைக்காது. சுந்தரருக்குக் கிடைக்கவில்லையா? என்று கேட்கத் தோன்றும். சுந்தரர் ஆற்றிலே பொன்னை, இறைவன் ஆணைப்படி போட்டவர்; கெடுத்தவரல்லர்.

⁠ஆற்றில் போடுதலுக்கும், கெடுத்தலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதுவும் துர்மதியால் கெடுத்தது என்பது அப்பரடிகள் வாக்கு. மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்து அனுபவிக்க வேண்டும் என்று மடியில் மறைத்தது துர்புத்தி, அப்படியே ஆற்றில் இறங்கும் பொழுது அந்தப் பொருள் கெட்டுப் போகிறது. அதை எப்படி குளத்தில் எடுக்க முடியும்? அதுபோலச் சிலர் இறைவனை உள்ளூரில் நன்றாகக் கும்பிட்டால் மற்றவனும் கும்பிட்டுவிடுவானே என்றஞ்சி அயலூர்களுக்கே கும்பிடப் போவதுண்டு.

⁠இறைவன் எங்கும் இருக்கிறான். நம்மூர்க் கோயிலில் இருக்கிறான்; பூசனை இல்லாது பூட்டப் பெற்ற கோயிலுக்குள்ளும் இருக்கிறான். கதவைத் திறவுங்கள்; அன்போடும் ஆராக் காதலோடும் அவனோடு பேசுங்கள்: மலர்ந்த மனத்தைப் பேசிக் காட்டும் மலர்களைத் தூவுங்கள்; உணர்வின் சின்னமாக- உருக்கத்தின் வெளிப்பாடாகத் திகழும் கண்ணீரால் முழுக்காட்டுங்கள்; கண்ணீர் வர மறுத்தால் குடங்களால் நீர் முகந்து ஆட்டுங்கள். காலத்திற்குக் காலம் கனிந்து கண்ணீர் வரும். இறைவனைக் காணலாம். அதனை விடுத்துக் காற்றிலும் கடிய வேகத்தில் உலகெல்லாம் திரிந்து இறைவனைக் காணமுயல்வது ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய அறியாமையோடொக்கும். இதனை,

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர்
⁠துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப் போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே!

என்று அப்பர் பாடுகிறார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !