அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

24. அருள் நெறி வாழ்க்கை

⁠நமது தாய்மொழியில் நிறைய இலக்கியங்கள் உண்டு. புறத்திணை இலக்கியங்களும் உண்டு; அகத்திணை இலக்கியங்களும் உண்டு; இந்த இரண்டையும் கடந்து வளர்ந்த அருள்திணை இலக்கியங்களாகிய பக்தி இலக்கியங்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பதும் அருள்நெறி வாழ்க்கை வாழ்வதும் எளியதன்று. விஞ்ஞானிக்குத் தேவையான ஆற்றல்கள் அனைத்தும் அவ்வாற்றல்களோடு சீலமாகிய தவமும் அருள் வாழ்க்கைக்குத் தேவை. விஞ்ஞானத்தின் படைப்புக்கள் உலகியலை வளப்படுத்த மாறாது பயன்படுவன போலவே, மனித இயலில் உள்ளங்களை வளப்படுத்த மாறாது பயன்பட வல்லது மெய்ஞானம். அதாவது, பத்திமை வாழ்வு! ஆயினும், இன்று பத்திமை வாழ்வு அங்ஙனம் பயன்படாமையின் காரணமாக அதன் மீது ஐயங்கள் எழுந்துள்ளன. ஏன்? எதிர்க்களம் ஒன்றே தோன்றி வளர்ந்து வருகிறது.

⁠அருளியல் வாழ்க்கை ஆற்றல் நிறைந்த வாழ்க்கை; அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை அன்பில் தழைத்த வாழ்க்கை. அச்சத்தை உதறிய வாழ்க்கை; தனி உணர்வு செத்த வாழ்க்கை; பொதுவில் பூத்த வாழ்க்கை. இந்த இலக்கணத்தோடு நமது அருளியல் வாழ்க்கை அமையுமானால் மறுப்பார் யார்? கதிரவன் உலாப் போதலை மறுப்பாரும் உண்டோ? வீசு தென்றலை மறுப்பாரும் உண்டோ? இறைவனிருப்பிடத்தை உலகத்திற்கு அப்பரடிகள் அறிமுகப்படுத்துகின்றார். கோட்டையென விளங்கும் கோயிலைக் காட்டியா? அழி பசிக்குப் பயன்படும் அப்பத்தைக் காட்டியா? இல்லை! இல்லை! மாசில் வீணையைக் காட்டுகிறார்! இசைக்குரிய இசைவிக்கும் ஆற்றல் வேறு யாருக்கு உண்டு? கட களிறும் அடங்கவல்ல இசை! மாலையில், செவ்வானத்தில் திங்கள்! வீசுதென்றல்! அடைந்து கிடக்க, வீடு கட்டிய ஒருவன் அதனைக் கடந்து வெளியே வருகிறான்! காவலோடு வெளியே உலாப் போகிறான். ஏன்? வீசு தென்றலை அனுபவிக்க! இன்பத்திற்கு எல்லையேயான இளவெயிலை வஞ்சனையின்றி காழ்ப்புக் கலப்பின்றி – கலகப் புகைச்சலின்றி அனுபவிக்க! ஆகா, என்ன இனிமை! வண்டுகள் பாடுகின்றன! தண்ணிர் தங்கிய பொய்கை! அதன் எல்லையில் இனிய காற்று! தண்ணளி தழுவிய காற்று! இத்தகு இன்ப மயமானதாக இறையின் திருவடிகளைக் காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் விங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!

என்பது அப்பர் திருப்பாடல்.

இன்றைய சமுதாயத்தில் அருளியல் வாழ்க்கை இத்தகைய இன்பம் தழுவியதாக இருக்கிறதா? இன்று சமய வடிவம் தெரிகிறது; ஆனால் சமய வாழ்க்கையைக் காணோம். ஆரவாரம் கேட்கிறது; ஆனால் அமைதியைக் காணோம். தண்ணளியைக் காணோம். வேற்றுமையைக் காண்கிறோம். இந்த அவல நிலைமை எங்கிருக்கிறது. எங்கு இல்லை என்று சொல்ல முடியாது; எங்கும் பரவிக் கிடக்கிறது.

⁠சமயம், ஒரு தத்துவம் மட்டுமல்ல, அஃதொரு வாழ்க்கை முறை. கடவுள், வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வுப் பொருள்; சமயம் உருவங்களோடு நிற்பதன்று. உருவங்களைக் கடந்த உணர்வுகளால், உணர்வுகளையும் கடந்த இன்ப அன்பால் மனித மனங்கள் மலரினும் சிறந்து மணம் பரப்ப வேண்டும். கனியினும் சிறந்த கனிவு பெற வேண்டும்; தீங்கரும்பினும் சிறந்த சுவை பெற வேண்டும். அப்பொழுதே சமய வாழ்வு முழுமை பெறுகிறது. இறைவன் தீதற்றோர் திருவுள்ளங்களில் எழுந்தருளவே விரும்புகின்றான், காஞ்சி மன்னன் கட்டிய பெருங்கோயிலை வறிதே விட்டு விட்டு, உள்ளத்தால் தூயதாகிய பூசலார் மனத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். ஆதலால் உள்ளத்தைக் கோயிலாக்குங்கள்! அதனை அன்பினால் மெழுக்கிடுங்கள்! இறைவனை எழுந்தருளச் செய்யுங்கள்! பண்டு கண்ணப்பன் வழங்கிய அன்பினைப் போன்று இறைவனுக்கு வழங்குங்கள்! அவனுடைய தண்ணருள் சுரக்கும்; புன்புலால் யாக்கை புனிதமாகும். உங்கள் புலன்களில் இறைவன் தங்கித் திளைப்பான்! திருவருள் சுரப்பான். இன்பமே சூழும். எல்லோரும் வாழ்க!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !