அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

11. தடை செய்து ஆட்கொண்ட தண்ணளி!

⁠அப்பரடிகளை இறைவன் நாடறியச் சூலை மூலம் ஆட்கொண்டார். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற பிறகு அப்பரடிகள் இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து நாடு முழுதுமுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று, உருகிப்பாடி வழிபட்டு வருகின்றார். திருவருளின்பம் ஆராத் தன்மையது. ஆதலால், மேலும் மேலும் இன்பமுற வேட்டு நைந்து பாடுகின்றார். சிலபொழுது, இன்ப அன்பு மேலும் முறுகி வளரும் நோக்கத்துடன், இடையறவு படும்பொழுது துடிதுடிக்கும் உள்ளத்துடன் அழுது பாடுகின்றார்.

⁠திருக்கச்சியேகம்பத் திருத்தலத்தில் அப்பரடிகளுக்கு இன்பத்தில் இடையறவு ஏற்பட்டிருக்கிறது என்று ஆங்கு அருளி செய்த பதிகத்தின் மூலம் உணர முடிகிறது. முதற்பாட்டிலேயே, “செய்ய வேண்டிய பணிகளிலிருந்து தவறினால், புளியம் விளாறினால், இறைவன் மோது விப்பான்” என்ற குறிப்பிற் பாடுகின்றார். “புளியம் விளாறினால், மோதுவித்த பின் உகந்தும் மகிழ்விப்பான்” என்றும் பாடுகின்றார்.

⁠இந்தப் பதிகத்தில் இம்மாதிரி ஏராளமான செய்திகள் பேசப்படுகின்றன. உயிர்களிடத்தில் அன்பினைத் தழைக்கச் செய்து, அதனை நுகர்ந்து அனுபவிக்கும் இயல்பினன் இறைவன். சிறந்த அன்பு, தடைகளால்தான் தழைத்து வளரும். தரங்குறைந்த பெயரளவில் அன்பு என்று மினுக்குவது தடைகளால் தடைப்படும். ஆதலால், இறைவனும் உயிர்களிடத்தில் செயற்கையில் தடைகளைத் தோற்றுவித்துத் தடைகளைத் தாண்டி வளரும் அன்பினைத் தழைக்கச் செய்து வளர்க்கின்றான். இங்ஙனம் செய்யும் இயல்பினனாக இறைவன் இருப்பதை, நினைத்து பாடுவதால், அத்தகைய ஒரு தடைப்பட்ட உணர்ச்சி அப்பரடிகளுக்குக் கச்சியில் கால்கொண்டிருக்க வேண்டும்.

⁠திருமால் நாள்தோறும் ஆயிரம் பூக்கள் கொண்டு அரனை அர்ச்சிக்கும் நோன்பேற்று, முறை வழுவாமல் செய்து வந்தார். ஒருநாள் திருமால் ஆயிரம் பூ எண்ணி எடுத்து வந்து அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஆயிரத்திற்கு ஒரு பூ குறைந்து விட்டது. இயல்பாகக் குறையவில்லை. சிவபெருமானே வேண்டுமென்று ஒரு பூவைக் குறையச் செய்து, மலர் குறைந்ததன் காரணமாகத் திருமால் மனங்கரைந்து அழுது, தனது கண் மலரை இடந்து மலரென இடத் தூண்டித் தடுத்தாட்கொண்டதை அப்பரடிகள் நினைத்து பாடுகிறார்.

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே!

என்பது அப்பர் திருப்பாடல்.

⁠தன்னை இறைவன் இனிதே ஆண்டுகொண்டான் என்றும் பின்னர் ஐம்பொறிகளுக்கு ஒற்றியாக வைத்தான் என்றும் கூறுகிறார். ’ஏன்று ஆண்டு கொண்டாய்’ என்பது மலக்கட்டு நிலையில் வாழ்ந்த போது, கருணையினால் ஆண்டு கொண்டு உய்தற்குரியவாறு முதற் பிறப்பு கொடுத் தமையைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். உய்தற்குரிய வண்ணம் உயிரை இறைவன் உடலொடு சேர்ப்பிக்கின்றான்.

⁠உடலிடைத் தங்கிய உயிர், பொறிகளைக் கொண்டு ஆரத் துய்த்து, வேட்கை தணிந்துழி இறைவா இன்ப நிலையை எய்துகிறது. பொறிகளுக்கு உயிரிடத்தில் நிரந்தரமான செல்வாக்குமில்லை; உரிமையுமில்லை. உயிர்களுக்கும் பொறிகளுக்கும் உள்ள உறவு தற்காலிகமானதே.

அதனைத்தான் அடிகள், “ஐவருக்கு ஒற்றி வைத்தாய்” என்று பாடுகின்றார். ஒற்றி அனுபவம் பொறிகளுக்கு முழு உரிமையைத் தராது. பொருளுக்குரியவர் பொருளைக் கேட்கும் பொழுது பொருளைத் திரும்பத் தர வேண்டும். உயிருக்கு உரிய நாயகன் இறைவனே. உயிருக்கு உடையவனாகிய நாயகன் உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்காகப் பொறிகளிடத்தில் ஒற்றிவைக்கிறான். பின்னே, உரிய பொழுது மீட்டுக் கொள்கிறான். திருவாளன் திருநீறு, திலகவதியார் தர, சிவநெறிக்கு அடிகள் வருவதற்கு முன்பிருந்த நிலையை ஒற்றிக்காலமென அடிகள் பாடுகின்றார். பின், திருவதிகையில் ஆட்கொண்டமையை ஐவரிடமிருந்து ஒற்றி மீட்டதாகப் பாடுகின்றார். இப்படி முன்னர்க் கட்டுண்ட நிலையில் கிடந்தபொழுது, ஆட்கொண்டு உடைமைக்காரனாகிப் பிறப்பருளி ஐவருக்கு ஒற்றி வைத்து ஒற்றி மீட்டுத் திருவதிகையில் ஆட் கொண்டமை நாடறியும். ஆதலால், உடையவனாக ஏற்றுக் கொண்டமையை இனி மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆதலால், அருள் புரிக என்று பாடுகின்றார்.

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி
யல்லமென்னில்,
சான்றுகண் டாயில் வுலகமெல் லாந்தனி
யேயென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை
யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய
சுடர்வண்ணனே!

என்பது அப்பர் பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !