அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

19. சிற்றம்பலம் சென்றுய்விர்

சுடுகாட்டில் எரிகின்ற நெருப்புக்கிடையில் ஒருவன் கிடக்கின்றான். அவன் பிணமல்ல, அவனுக்கு உயிர்ப்பிருக்கிறது. ஆனால் உயிரோட்டமாக இல்லை. மெல்ல மூச்சு வந்து கொண்டிருக்கிறது. அவன் நெருப்பினால் எரிந்து அழிக்கப் படுகின்றான். எரி நெருப்பிலிருந்து அவனால் தப்பித்துக் கொள்ளமுடியும். ஆனாலும், உயிர்ப்பாற்றல் குறைவின் காரணமாக-பிணத்தின் தன்மையை எய்திவிட்டதன் காரணமாக ஆற்றலின்றி எரிநெருப்புச் சுடக்கிடக்கின்றான். சுடுகாட்டில் இங்ஙனம் கிடப்பதால் மற்றவர்களும் எடுத்துக் காப்பாற்ற முன் வரவில்லை. அவர்களுக்கு இவன் பிணமாகவே காட்சியளிக்கின்றான். தப்பித்தவறி உயிர்ப்பிருப்பதை அறிந்தாலும் சுடுகாட்டில் உயிர்ப்பிருப்பது ஏலாது; அது கேடு என்று கருதி எடுத்துக் காப்பாற்ற முன் வரவில்லை. மாறாகப் பிணம் அசைகிறது. மூச்சு விடுகிறது, என்று சிரித்துக் கேலி செய்து அவனைக் கொல்லாமல் கொல்லுகின்றனர்.

⁠இத்தகைய ஒரு காட்சியை அப்பரடிகள் உவமிக்கின்றார். எதற்கு? உயிர், அரித்துத் தின்னும் வினையினால் அரிக்கப்பட்டு அழிந்து போதலுக்கு உவமிக்கிறார்! உயிர் ஆற்றலுடையது; அறிவுடையது; ஆள்வினையுடையது; இன்ப அன்பு நுகர்வுக்குரியது; சிறப்புடைப் புலன்களைக் கருவியாக உடையது. ஏன்? எந்தை ஈசன் இறைவனையே அன்னையாகவும் அத்தனாகவும் உறவு பூண்டது. ஆயினும் என்? வினையின் அரிப்பிலிருந்துது அது மீள முடிவதில்லை. தனது தகுதிப் பாட்டினை இழந்து, வஞ்சப் புலன்களின் வஞ்சனைகளுக்கு இரையாகி மயங்கிக் கிடக்கிறது. அறிவு தொழிற் படவில்லை; ஆன்ற ஆள்வினையும் தொழிற்படவில்லை. துன்ப இன்பச் சுவை வேறுபாடுகளை உள்ளவாறு சுவைத்துத் தீயதை விலக்குதலுக்கும், நல்லது மேற்கொள்ளுதலுக்குமுரிய செயற்பாடில்லை. இந்தத் தளர்ச்சி பொருந்திய-முறை பிறழ்ந்த நிலையினால், வினை மேலும் மேலும் அடர்த்துத் தாக்கி உயிரை வலுவிழக்கச் செய்கிறது. நல்லுணர்விலிருந்து விலக்கித் தனிமைப்படுத்துகிறது. அதன் மூலம் வாழ்வுக்கும் புகழுக்கும் உரிய உயிரை அரித்து அரித்து அணு அணுவாக அழிக்கின்றது.

⁠இங்ஙனம் வினைகளால் அரிப்புண்டு, அணு அணுவாக அழிதலை விடச் சாவது மேல். ஆயினும், எலும்பு கடித்துத் தின்னும் நாய்க்குத் தன் வாயிலிருந்து செங்குருதி கொட்டினாலும் எலும்பு துண்டின் வேட்கை அதற்கு மாறாததைப் போல, மனிதன் எவ்வளவுதான் வினை வழிப்பட்ட துன்பத்தை அனுபவித்தாலும் அவனுக்கு வினையிலிருந்து முற்றாக விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கை இல்லை. சுடுகாட்டில் பிணத்தன்மை தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி, அவன் திருச்சிற்றம்பலத்தை நாடி அடைதலாகும். திருவருள் தன்மையுடைய அறிவு மயமான மன்றத்தில் இன்பக் கூத்தாடும். இறைவனை – ஆடலரசை – தில்லைக்கூத்தனை நினந்து நினைந்து வழிபாடு செய்தால் வினைகளின் அரிப்பிலிருந்து விடுதலை பெறலாம் என்று நம்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அப்பரடிகள் வழி நடந்துகின்றார்.

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தீரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே!

என்பது அப்பர் திருப்பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !