
அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
7. இருட்டறையில் மலடுகறந்து எய்த்தவாறு…!
சமயநெறிகள் உலகிடைப் பலப்பலவாய்த் தோன்றி விரிந்துள்ளன. குறிக்கோள் அடிப்படையில், அதாவது உயிர்கள் உய்திபெறு நிலைபேறாய இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற நோக்கில், சமய நெறிகளுக்குள் முரண் பாடுகள் இல்லை; மோதுதலும் இல்லை. ஆயினும் உயிர், உலகு, கடவுள், பிறப்பு, இறப்பு ஆகிய உண்மைகளைப் பற்றிய அறிவில் சமய நெறிகள் முரண்பட்டே பேசுகின்றன. இந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. காலம், பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையேயாம்.
ஆதலால், சமய ஒருமைப்பாட்டுணர்வைப் பேணிப் பாதுகாப்பதோடு பல்வேறு சமய நெறிகளையும் கற்றுத் தெளிந்து நின்று ஒழுகி அனுபவமும் பெற்று, எந்த நெறியில் அதிகத் தெளிவும் உறுதியும் இருக்கின்றனவோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுவது மனித உலகத்தின் கடமை யாகும். இங்ஙனம் எடுத்துக் கொள்ளக் கூடிய தகுதி பெறாதவர்களை விரிவிலார் என்று அப்பரடிகள் கண்டிக்கிறார். இன்று, சமய நெறியினர் பல்துறையையும் ஆராயும் துணிவின்றித் தேங்கியே நிற்கின்றனர். மக்களைச் சிந்திக்கத் தூண்டாமல் பழக்க வழக்க வலையிற் சிக்கவைத்து ஆதிக்கம் செய்யவே சமய நெறியாளர்களும் விரும்புகின்றனர். சமய அனுபவம் சிந்தையில் தோன்றித் தெளிவடைய வேண்டிய ஒன்று. அதற்குரிய வாய்ப்பைச் சமயவுலகம் வழங்க மறுத்தால், மனித உலகம் உணர்வும் அனுபவமுமற்ற ஒரு கண்மூடித்தனமான சமய பழக்கவழக்கங்களிலேயே நிற்கும். இதனால் சமய நெறிக்கும் சிறப்பில்லை; மனித உலகத்திற்கும் பயன் இல்லை.
அப்பரடிகள் சமண சமயத்தில் தொடக்க காலத்தில் நின்று ஒழுகியவர். அந்நெறி அவருடைய அறிவுப் பசிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவரது அனுபவ உணர்வுக்கும் அது களமாக அமையவில்லை. சமண சமயம் அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்குப்பதில் உலகியலை விரித்துப் பேசி ஒடுங்கச் சொல்லிற்று. ஒன்றை விரித்துப் பேசுதலே ஒடுங்குவதற்குத் துணை செய்யாது. அதோடு, ஒடுங்குதலால் உயிர் ஒருபொழுதும் உய்தி பெற முடியாது. மாறாக ஒழுகுதலால் உயிர் உய்தி பெற முடியும். ஒழுகுதல் புலன்களை நல்லன சுவைக்கப் பழக்கப்படுத்திப் பக்குவப்படுத்துதல். இதனைத் திருமூலர் ‘மடைமாற்றுதல்’ என்பார். அதாவது வீணே போகும் தண்ணிரை மடை மாற்றிக் கழனியிற் பாய்ச்சுதலைப் போலத் தற்சார்பான ஆசைகளில் செல்லும் புலன் நுகர்வை இறையருளில் மடை மாற்றி ஈடுபடுத்துதல் ஆகும்.
ஓடுதலும் திரிதலும் சமணர் இயல்பு. அதாவது ஓரிடத்தில் இருந்தாலே பற்று வந்துவிடுமாம். அதனால் இடம் விட்டு இடம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இங்ஙனம் ஒடுவதால் பற்று இல்லாமல் போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. பற்று, மற்றவர் காட்சிக்குப் புலனாகும் வண்ணம் வெளிப்படுதற்கு வேண்டுமானால் வாய்ப்பில்லை எனலாம். பற்று ஒட்டிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்திலிருந்தே பற்றின்றி இருப்பதுதான் உண்மையில் முற்றிலும் பற்று விடுதற்குச் சாதகமாகும். தாமரையிலை, தண்ணிருக்குள்தான் கிடக்கிறது. ஆனால், தண்ணிர் அதில் ஒட்டாது. புளியம்பழம் ஓட்டுக்குள்ளிருந்தாலும் ஓட்டுக்கும் பழத்துக்கும் உறவு இருக்காது. அதுபோல் ஒன்றில் நின்று பற்றின்றி வாழ்தலே சிறப்பு. இதுவே, சிவநெறியின் இயல்பு. இங்ஙனம், வாழ்க்கையோடியைந்து வராத சமண சமயத்தில் நின்று அலைந்து திரிந்து எய்த்தலை அப்பரடிகள் இனிய உவமையால் விளக்குகின்றார்.
இருட்டறை! ஒளியில்லை! அந்த அறையில் ஒரு மலட்டுப் பசு! அதனைப் பால் கறந்து எய்த்த காட்சியை அப்பரடிகள் உவமையாக்குகின்றார். இருட்டறையில் பசு இருப்பதையே காண முடியாது. அதுபோல் உயிரின் தன்னறிவும், இறைவனின் பேரறிவும் இணைந்து செயற் பட்டாலன்றி ஞானத்தைக் காண முடியாது. பசுவோ மலட்டுப்பசு! அதாவது, அனுபவத்திற்கு வராத சமயம் என்பது கருத்து. கறந்து எய்த்தல்-சமண சமயத்தினின்று அலுத்ததை நினைவூட்டுகிறது; இங்ஙனம், கிடந்து எய்த்த அப்பரடிகளுக்கு இறைவன் உறுதி காட்டி உய்ய ஆட் கொண்டதை அப்பரடிகள் அழகு தமிழில் பாடுகின்றார்.
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி
னுள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போது மடியவர்கட்
காரமுதா மாரு ராரை
எப்போதும் நினையாதே யிருட்டறையின்
மலடுகறந் தெய்த்த வாறே
என்பது அப்பர் திருப்பாடல்.



