அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

17. யாதினும் இனியன்

மனித உயிர் வாழ்க்கை சுவையொடுபட்டது. உயிரின் இயக்க உணர்ச்சி சுவைத்தலேயாகும் துய்த்தலும், சுவைத்தலும் உயிரின் பிறப்புரிமைகள். உயிர் வளர்தலுக்கும் சுவைப் புல உணர்வே மூலமும் முதலுமாக விளங்குகிறது. அது போலவே உயிர் வாழ்க்கை, அவலத்தில் ஆழ்தலுக்கும் சுவையே காரணம். தனிமனிதப் போராட்டமானாலும் சரி, சமுதாயப் போராட்டமானாலும் சரி, ஆழச் சிந்தித்தால் சுவைப்புலன்களை மையமாகக் கொண்டே தோன்றியிருக்கும்.

⁠மனிதரில் பெரும்பாலோர் ஏன், எல்லாருமே நாவின் சுவைக்கு ஆளாகின்றனர். இதில், அதீத மாமுனிவர்களைத் தவிர வேறு யாரும் விதி விலக்கல்லர். சுவையாக உண்பதற்கே வாழ்வதாக கருதிக் கொண்டிருப்போர் ஏராளம்! சோறே சொர்க்கமென்று வாழ்பவர்களும் உண்டு! இன்னும் கொஞ்சம் வளர்ந்தவர்கள் பால்சுவையில் ஈடுபடுகிறார்கள். பால்சுவையைச் சுவைத்து மகிழ்ந்து வாழ்கிறார்கள். நாச் சுவையை விட இந்தச் சுவையை ஆர்தல் நுட்பமானதாகும். பலர், சுவையுணர்வின்றிப் பால்வாழ்க்கை நடத்துகின்றனர். இஃதொரு கலை. அதனாலன்றோ திருவள்ளுவரும்,

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

என்றார். இந்த இரண்டு சுவையிலும் ஈடுபடத் துடிக்கும் மனிதர்களை எங்கும் காணலாம். இன்னும் சற்று வளர்ந்தவர்கள் இந்த இரண்டு சவையிலும் அமைதி கொள்வதில்லை. ஏன்? இவ்விரண்டையும் கூடத் துச்சமெனத் தள்ளவும் துணிவர். அவர்களுடைய சுவைப் பசி, ஆணை செலுத்துதல் ஆகும். பலரோடு பிறந்து வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரிலும் தன்னை உயர்த்தி விஞ்சியவனாகக் காட்டிக் கொள்ளுதல்; தன்னாணை கேட்டுச் செயற்படுவோரைக் கண்டு மகிழ்தல். இத்தகு சுவை நுகர்ச்சி கோடியில் ஒருவருக்கே ஏற்படும். அவர்களே பலர் புகழ விளங்குவார்கள். இன்னும் வளர்ந்தவர்கள் மேற்கூறிய சுவை நுகர்வினால் இன்பமுண்டு, துன்பமுமுண்டு, ஆக்கமுண்டு, அழிவுமுண்டு என்பதனை உணர்ந்து, தன்னை, தன்னுடைய வாழ்க்கையைச் சுவைத்து சுவைத்துத் திருத்தித் திருத்தி முழுநலம் அடையச் செய்தலில் ஈடுபடுவர். அவர்கள் தம் உயிரினும் இனியனாகிய இடைமருதீசனை எண்ணித் தம்முயிருடன் கலக்கச் செய்து இனிமை நலம் துய்ப்பர். வேறு எப் பொருளைச் சுவைத்தாலும் பசி நீங்காது. காமமும் எல்லைக்குட் பட்டதன்று. மேலும் மேலும் முறுகி வளர்வதே காமத்தின் இயல்பு. அதிகார மனப் போக்கும் எல்லைகளைக் கடந்து விரிவடைவதேயாம். பகையும், போரும் விகாரத்தின் விளைவுகள்; திருவருட் சுவையோ தீதற்ற சுவை. சுவைத்த அளவுக்குப் பயன் தரும். அச்சுவை முறுகி வளர்ந்தாலும் சுவைக்கின்றவனுக்கு நன்மையே. இச்சுவை, அழுக்காறு, அவா, வெகுளிகளுக்கு அப்பாற்பட்டது. ஆதலால் சுவைகளுக்கெல்லாம் தலையாயது திருவருட்சுவையே. இதனை அப்பரடிகள் படிமுறையில் விளக்கிக் காட்டுவது உணரத் தக்கது.

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே!

என்பது அப்பர் திருப்பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !