அப்பர் விருந்து
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

12. அஞ்சுவது யாதொன்றும் இல்லை!

மானிடராய்ப் பிறந்து வாழ்தல் அரிய பேறு; இனிய பேறு; எளிமையிற் கிடைக்கக் கூடிய ஒன்றன்று. அதனாலன்றோ, ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று ஆன்றோர் கூறினர். இந்த மானுட வாழ்க்கையின் பயனாவது, உயிர், அறிவு நலம் பெறுதல்; ஆன்ற அனுபவம் பெறுதல்; மூத்து முதிர்தல்; துன்பத் தொடக்கிலிருந்து விலகி இன்பச் சார்பாதல் ஆகியனவாகும். எங்ஙனம் உயிர் அறிவுபெறும்? குறைகள் நீங்கி நிறைவு பெறும்?

அறிவு எல்லையற்றது. அறிவுக்கோர் எல்லை அரனே யாம்; அதனாலன்றோ, வள்ளுவம் ‘வாலறிவன்’ என்று இறைவனை வாழ்த்துகிறது. கடவுள் நம்பிக்கையுடையவர்கள், இயல்பில் முட்டாள்களாக இருக்க முடியாது. காலத்தின் கொடுமை, இடையில் கடவுட் சார்புடைய மதத் தலைவர்கள், புரோகிதர்கள் தங்கள் பணியைச் செய்யத் தவறியதால் அறிவு விளக்கம் இல்லாதவர்களும் கூட இன்று கடவுள் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அது நம்பிக்கையே தவிர, வாழ்க்கையன்று. கடவுள் கொள்கையை நம்பி ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஆழமும் அகலமும் நிறைந்த அறிவின் முதிர்ச்சியிலே ஏற்படக் கூடியதாகும். உலகியலின் அமைதியினை ஆராய்ந்து அந்த ஆய்வின் முடிவாகவே, கடவுளைக் கண்டனர் நம்முடைய முன்னோர். கடவுள் நம்பிக்கையுடையோராக வாழ்தற்குப் பேரறிவு தேவை; விரிவான வாழ்க்கை அனுபவங்கள் தேவை. ஆதலால், அறிவின் உயர்மட்ட எல்லையாக விளங்கும் அரனை, எண்ணி வழிபடுதலின் மூலம், வாழ்க்கையில் உறவுபடுத்திக் கொள்ளுதலே அறிவு பெறுவதற்குரிய வழி.

இந்த முயற்சியிலே உலகியல் நுண்கலைகள் அனைத்தையும் ஆரத் துய்த்தறியும் வாய்ப்புகள் ஏற்படும். உலகியலைத் துறைதோறும் ஆராய்ந்து அவற்றின் இயல்புகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பாற்பட்டிருக்கும் கடவுளை அறிதலே, அறிவில் முதிர்ந்த ஞானம். இதனை விளக்கத்தான் போலும் பரப்பில் பெரிய திருக்கோயிலை எடுத்து வாயில்கள் பல அமைத்து அத்திருக்கோயிலினூடே பரப்பில் மிகச் சிறிய ஓரிடத்தில் கூர்ந்த கவனத்திற்குரியதாக எம்பெருமானை எழுந்தருளச் செய்தனர்! அறிவுப் புலன் ஆழமும் அகலமும் உடையதாக வளர்ந்து, பின் நுண்மாண் நுழைபுலமாக வளர வேண்டுமென்பதே வாழ்வியல் நியதி.

அறிவின் தெளிவில்லாத இடத்தில் கடவுட் சார்பு இருக்கும் என்பது நம்பமுடியாத ஒரு செய்தி. வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருக்கலாம். அதுவும் அச்சத்தின் பாற்பட்டதாகவோ, அல்லது வழக்கத்தின் பாற்பட்ட தாகவோ இருக்கலாம். கடவுட் சார்புடைய வாழ்க்கை அச்சத்திற்கு முரணானது. ஆங்கு அஞ்சாமையே நிலவும்.

“அஞ்சுவது யாதொன்றும் இல்லை” என்பது அப்பரடிகள் வாக்கு. ஆதலால், இந்த உடம்பு உயிர்க்குக் கிடைத்த ஒப்பற்ற கருவி. இக்கருவியை முறையாகப் பயன்படுத்தி உயிர் பயனடைதல் வேண்டும். உயிரடையக் கூடிய பயன்நிலை பேறுடையதாகவும், இன்பம் தருவதாகவும் இருக்க வேண்டும். அதற்குரிய ஒரே வழி, அறிவிற்கறிவாக விளங்கும் அரனை வழிபடுதலாகும். வழிபடுதலென்பது, இன்று பெரும்பாலும் வையகத்தில் இல்லை. ஓர் உயிர், ஒன்றில் அகமும் புறமும் ஒன்றெனக் கலந்து, ஒன்றாகிச் செய்தலே வழிபாடு.

உயிரின் இயல்பு ஒன்றைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல் ஆகிய ஐந்து செயல்களின் வழியாகவே முழுத்தன்மை அடைய முடியும். அஃதின்றிக் கடையில் தேங்காயை வாங்கிக் கொண்டு போய்க் குருக்கள் கையில் கொடுத்து உடைக்கச் செய்து, வாங்கி வருதல் மூலம் பக்தியும் வந்துவிடாது; பயனும் வந்துவிடாது. கோயிலில்தான் தேங்காயை உடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அம்மியில் உடைத்தாலும் உடைபடும். அறிவு தொழிற்படும் பொழுதே, அனுபவம் கிடைக்கிறது.

அனுபவம் வந்த பிறகே அந்த அறிவு உயிருக்கு உடைமையாகிறது. அதுவரையில் அறிவிற்குத் தெரிந்த ஒன்று கூட அனுபவத்திற்கு வருவதில்லை; உடைமையாக மாறுவ தில்லை, அறிவு செயற்பாட்டின் மூலம்தான் சிந்திக்கும்.

இன்று நம்முடைய வழிபாட்டு முறைகள், மனித குலத்திற்கு வந்த சாதிப்பழக்க வேற்றுமைகள் மனித குலத்தை வழிபாட்டினின்று விலக்கியிருக்கின்றன. மனிதன் இன்றைக்கு திருக்கோயிலைக் காட்சிச் சாலையாகப் பயன்படுத்துகின்றானே தவிர, அவன் வழிபடுவதில்லை. வழிபாட்டுக்குரிய உரிமைகள் அவனுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் தகுதி வேண்டாமா? என்கிறார்கள் சிலர்.

தகுதி பெறத்தான் திருக்கோயிலுக்கு வருகிறோமே தவிர, தகுதி பெற்றதைக் காட்ட வருவதில்லை. எழுதிக் காட்டும் ஆசிரியன் எழுதுவிக்கவும் செய்தால்தான் அறிவு உரிமையாகிறது. அறிவியல் ஆய்வுச் சோதனை செய்யும் ஆசிரியன் மாணாக்கனையும் செய்யச் செய்தால்தான் மாணாக்கர்க்கு அறிவு கிடைக்கிறது. அதுபோலத்தான், வழிபாடு செய்து வைக்கும் அர்ச்சர்கள் வழிபாடு செய்யச் செய்தால்தான் வழிபாட்டின் பயன் கிடைக்கும்.

இதுவே காலத்திற்கு முந்திய ஆன்றோர் வழக்கு. இடையில் புகுந்த சாதி முறையும் தொழில் முறையும் இந்த இனிய வழக்கத்தைக் கெடுத்துவிட்டன. ஆதலால், உண்மையான வழிபாடு உயிர்கள் செய்வதில்லை. உண்மையான வழிபாடு செய்யாமையின் காரணமாக உயிர்கள் அடைய வேண்டிய வழிபாட்டின் பயனாகிய பேரறிவும் பேராற்றலும் கிடைக்கப் பெறவில்லை. ஏதோ பழக்கத்தின் காரணமாகச் செய்கிறான். நனைய வேண்டிய இடத்தில் நனையாமற் குளிக்கிறான். தோய வேண்டிய இடத்தில் தோயாமல் தொங்குகிறான். ஒன்றித்துக் காதலிக்க வேண்டிய இடத்தில் ஒதுங்கி நிற்கிறான். மிகச்சிறந்த உயிரறிவின் ஒளிவிளக்காகத் திகழ வேண்டியவன் முட்டாளாகப் பெயர் சூட்டிக் கொள்கிறான்.

⁠வழிபாடு ஓர் அறிவியல் சாதனை அதன் பயன் பொய்யன்று. இன்று அது பலருக்குப் பொய்ம்மையாக விளங்குகிறது. காரணம் பொய்யுடைய மனிதர் கையில் அது சிக்கியதேயாகும்.

⁠வழிபாடு அறிவின் விளக்கமாக அமைந்தது. ஆனால் அஃது இன்று முட்டாள்தனமாகக் காட்சியளிக்கிறது. பலர் அதை அப்படியே ஆக்கிவிட்டனர். சிந்திக்க வேண்டியது சிலையின் அடியிலுள்ள எழுத்துக்களையல்ல. இந்த எழுத்துக்களைத் தோற்றுவிக்கக் கூடியவாறு, நம்முடைய கடந்த காலச் சமய வாழ்க்கை அமைந்திருக்கும் கால நிலையை எண்ணி நோதல் வேண்டும். எல்லாமாய் அல்லதுமாய் விளங்கும் பெருமானைக் காப்பாற்ற மட்டும் திருக்கோயில்கள் அல்ல. உயிர்களைத் தூய்மை செய்து பேணி எடுத்து வளர்க்கவே திருக்கோயில்கள். உயிர்களிடத்தில் அன்பு ஊற்றினைக் காணவே திருக்கோயில்கள். அந்த ஊற்றின் முன்னே கடவுள் குழைந்து நிற்கிறான். அதனைத் துய்ப்பதில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவனுடைய அருள் வெளிப்பாடு அங்கேயே பூரணத்துவம் பெறுகிறது.

⁠மனிதனை மிருகமாக்கி, வேறுபாடுகளை நிரந்தரப் படுத்துவது இறை நெறியாக இருக்க முடியாது. பாவியே ஆனாலும் அவன் மாட்டு இறைவனுக்குள்ள கருணை இம்மியும் குறையாது. தூய்மை என்பது, சாதி முறைகளைக் காப்பாற்றும் கண்ணாமூச்சி விளையாட்டே தவிர, அதில் உண்மை இருக்க முடியாது. உடலால் தூய்மையற்று உள்ளத்தால் தூய்மையுடையோர் இல்லையா? உள்ளத்தால் உலகத்து அழுக்கெல்லாம் பெற்று உடலால் தூய்மை காட்டுபவர்கள் இல்லையா? அன்றும் முத்தநாதன் இருந்தான். இன்றும் முத்தநாதன் இருக்கலாம் அல்லவா?

⁠தனித்தனியே மனிதர்கள் வழிபாட்டிற்குரிய இடங்களைப் பெறுதல் அரிது என்பதனால் தான் நமது திருக்கோயிலில் பண்டு பலரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர் என்பது, வரலாற்று முறையிலும் மறுக்க முடியாத உண்மையாகும். வேத நெறி தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரும் திருத்தொண்டின் நெறி விளக்கத் தோன்றிய திருநாவுக்கரசரும் இந்த வழிபாட்டு முறையையே எடுத்துக்காட்டிப் பாடியுள்ளனர். திருக்கோயிலில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது வழிபாடு பெற அல்ல; உயிர்களுக்கு எளிமையான அருள் வழங்கவேயாம்.

⁠அப்பரடிகள் திருவங்கமாலையில் மிகத் தெளிவாக நம்மை வழிபாடு செய்து கொள்ளும்படி ஆணையிடுகிறார். வழிபாட்டில் நாட்டமின்றித் திரிவோரைப் பார்த்து யாக்கையால் பயனென்? என்று வினவி, வழிபாட்டுணர்வில் ஆற்றுப்படுத்துகின்றார். அரன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் வலம் வந்து வணங்கச் சொல்கிறார்; கைகளால் பூக்களை எடுத்துப் போடச் சொல்கிறார்; தாமே போடுதல் போன்ற பொருள்பட ’அட்டி’ என்று பாடுகின்றார்; இறைவனைப் போற்றி போற்றியென்றே தொழுது வணங்கித் தூமலர் தூவச் சொல்கிறார். இதுவே திருமுறை வழிபாட்டு நெறி; நமது ஆன்றோர்களில் திருக்கோயில் வழிபாட்டு ஒழுக்கம். அப்பரடிகள் அருளிய திருப்பாடலைச் சிந்தனை செய்யுங்கள். –

ஆக்கையாற் பயனென்?—அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையா லட்டிப் போற்றி யென்னாதஇவ்
ஆக்கையாற் பயனென்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !