பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

9. நல்ல மறதி!

மறுநாள் காலை மானேஜர் மதுரநாயகம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல் வருமா, வருமா என்று எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

பிற்பகல் மணி ஒன்று இருக்கும். அப்போது சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவரைக் கண்டதும், “யார் வேண்டும்?” என்று கேட்டார் மதுரநாயகம்.

‘நாடக சபா மானேஜரை சப்-இன்ஸ்பெக்டர் கையோடு அழைத்துவரச் சொன்னார்’ என்றார் போலீஸ்காரர்.

“நான் தான் மானேஜர். காலையிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதோ நேராக வருகிறேன்” என்றார் மதுரநாயகம்.

“சீக்கிரம் வாருங்கள். நான் முன்னால் போய்ச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு சைக்கிளில் திரும்பிவிட்டார் போலீஸ்காரர்.

மதுரநாயகம் சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள்ளே நுழைந்ததும் அங்கே ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் உயரமாக, நல்ல சிவப்பாக இருந்தார். கதர் ஜிப்பா அணிந்திருந்தார். அவர் ஏதேனும் வேறு வேலையாக வந்திருப்பார் என்று நினைத்தார் மதுர நாயகம். ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் அவரைச் சுட்டிக் காட்டி, “என்ன மிஸ்டர் மதுரநாயகம், இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

மதுரநாயகம் அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பார்த்துவிட்டு, “அடிக்கடி பார்த்ததில்லை. சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது…” என்று இழுத்தார்.

உடனே சப்-இன்ஸ்பெக்டர் அந்த மனிதரிடம், மதுர நாயகத்தைக் காட்டி, “இவரை உங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார்.

“சந்தேகமில்லை சார்! அந்த மனிதர் இவரேதான்! கண்ணாடி அணிந்திருக்கிறார். சுருட்டை மயிர், அரை மீசை. சிவப்பு நிறம், வலது கையில் கிருஷ்ணன் பொம்மை போட்ட மோதிரம்- எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. நான் அன்றைக்கு எழுதிக் கொடுத்ததில் கூட இதையெல்லாம் குறிப்பிட்டிருக் கிறேனே!” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.

உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜிப்பாக்காரரைப் பார்த்து, “ஏனய்யா! நீர் எழுதிக்கொடுத்திருப்பதெல்லாம் பொய்யாம்! உம்மைத் திருடன் என்றும், திருடன் சொல்லுவது உண்மையாக இருக்க முடியாதென்றும் இவர் சொல்லுகிறாரே!” என்றார் சிரித்துக்கொண்டே.

உடனே அவர், “நானாவது, திருடவாவது! யார் திருடன்? இது நல்லதுக்கே காலமில்லை” என்று ஆத்திரத்தோடு கூறினார்.

“ஐயையோ! நான் உங்களைத் திருடன் என்று சொல்லவே இல்லையே!” என்று கதறினார் மதுரநாயகம்.

அதைக் கேட்டதும், சப்-இன்ஸ்பெக்டர், “சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் போஸ்டாபீஸிற்கு அடிக்கடி போவதுண்டா?” என்று கேட்டார்.

“இல்லை. அவசரமான வேலை இருந்தால் தான் போவேன் “என்று பதிலளித்தார் மதுரநாயகம்.

“சமீபத்தில் எப்போதாவது நீங்கள் போனது உண்டா?”

“சென்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் என் அம்மாவுக்கு மணியார்டர் செய்யப் போனேன்.

“உடனே மணியார்டர் செய்துவிட்டுத் திரும்பி விட்டீர்களா? அல்லது காத்திருந்தீர்களா?”

“க்யூ வரிசையில் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தேன்.”

“காத்திருந்து உங்கள் முறை வந்ததும் மணியார்டர் செய்தீர்கள். அப்படித்தானே?”

“இல்லை. மணியார்டர் செய்யப்போன சமயம் எங்கள் சபா முதலாளி அவசரமாக என்னை அழைத்து வரச் சொன்னதாக ஒரு பையன் ஓடிவந்து சொன்னான். உடனே நான் மணியார்டர் செய்யாமலே திரும்பி விட்டேன்.”

“க்யூவில் நிற்கும்போது யாராவது உங்களிடம் பேனாக் கேட்டதுண்டா?”

இதைக்கேட்டதும், மதுரநாயகம் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, “அடே! இப்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது, சார்! அப்போது ஒருவர் மணியார்டர் பாரம் பூர்த்தி செய்ய வேண்டுமென்று பேனாக் கேட்டார். கொடுத்தேன். திரும்பி வாங்குவதற்குள் அந்தப் பையன் வந்து கூப்பிட்டு விட்டான்…!” என்று சொல்லிவிட்டு, மேலும் ஏதோ சொல்லப் போனார்.

அதற்குள் அந்த சப்-இன்ஸ்பெக்டர், “யாரிடம் பேனாவைக் கொடுத்தீர்கள்? அந்த ஆள் பத்துப் பேருக்கு நடுவிலே வந்து நின்றால், அவரைக் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்டார்.

உடனே மதுரநாயகம். “அவர் இவர் தானோ…” என்று சந்தேகத்துடன் பக்கத்திலிருந்த ஜிப்பாக்காரரை உற்றுப் பார்த்தார். பார்த்துவிட்டு, “சார் சார், இவராகத்தான் சார் இருக்க வேண்டும்!” என்றார் உறுதியான குரலில்.

“இவராகத்தான் இருக்க வேண்டுமா! நல்ல மனிதரய்யா நீங்கள்! பேனாவை இவரிடம் கொடுத்துவிட்டு எவனோ ஒரு சிறுவன் மீது பழி போட்டுவிட்டீர்களே! பாவம்!’ என்று அனுதாபப்பட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

“பாவம், சார்! அந்த ரமணி மிகமிக நல்லவன் என்று தெரிகிறது. எல்லாம் இந்த மறதியால் வந்த வினைதான்!” என்று வருத்தப்பட்டார், மதுரநாயகம்.

“ஆமாம். நான் பாரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். உங்களைக் காணோம்! தபாலாபீஸ் முழுவதும் தேடுதேடு என்று தேடினேன். பேனாவோ விலை உயர்ந்தது. சாதாரணப் பேனாவைக்கூடச் சிலர் தரமாட்டார்கள். நீங்கள் முன்பின் அறியாத என்னை நம்பி அந்த உயர்ந்த பேனாவைத் தந்தீர்கள். நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? பேனாவின் மேலே பெயர் இருக்கிறதா என்று பார்த்தேன். ‘சேகர் அன்பளிப்பு’ என்று மட்டுமே இருந்தது “யார் அந்த சேகர்?” என்பது எனக்குத் தெரியுமா? யோசித்துப் பார்த்தேன். கடைசியில், இந்தப் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுவந்து கொடுத்து சொந்தக்காரரிடம் சேர்த்துவிடச் சொன்னேன். அப்போது, பேனா என் கைக்கு எப்படி வந்தது என்பதை விவரமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன்” என்றார் ஜிப்பாக்காரர்.

இதைக் கேட்டதும், “நீங்கள் மிகவும் தங்கமானவர், சார். இல்லாத போனால், தங்கமூடி போட்ட என் பேனாவை இப்படிக் கொண்டு வந்து கொடுப்பீர்களா? வேறொருவராயிருந்தால், பேனா திரும்பியே வராது! ரமணிதான் திருடிவிட்டான் என்று சொல்லிக் கொண்டே இருப்போம். நல்ல காலம். உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார் மதுரநாயகம்.

அந்தக் கேள்விக்கு சப்-இன்ஸ்பெக்டரே பதில் சொன்னார்.

“இவர் பெயரா? தங்க மூடி போட்ட உங்கள் பேனாவைக் கொண்டுவந்து தந்த இவர் பெயரே தங்கவேலு தான்! சரி, இப்போது உங்கள் சந்தேகமெல்லாம் தெளிவாகி விட்டதல்லவா? அது மதுரநாயகத்தின் பேனாதான். போஸ்டாபீஸில் தங்கவேலுவிடம் கொடுத் ததைத் திருப்பி வாங்காமல் அவசர வேலையாகப் போய்விட்டார். யாரிடம் கொடுப்பது என்று தெரியாததால், தங்கவேலு இங்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டார். மதுரநாயகம், மறதியால் தமது வீட்டில் இருந்த ரமணிதான் திருடி விட்டான் என்று நினைத்துப் போலீஸில் தகவல் கொடுத்தார். இப்போது, அவர் தவறை உணருகிறார். ‘பேனா அவருடையதுதான். அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம்’ இதே போல் போலீஸ் கமிஷனர் ஆபீஸிற்கு எழுதி அனுப்பிவிடுகிறேன். மிஸ்டர் மதுரநாயகம், இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் உங்களுக்குக் கமிஷனர் ஆபீஸிலிருந்து கடிதம் வரும். அதை நேராக எடுத்துக் கொண்டு போய்க் காட்டினால் பேனாவைத் தருவார்கள். என்ன, சரிதானா?” என்று கேட்டார்.

“சரி சார். உங்களுக்கு அதிக சிரமம், மிஸ்டர் தங்கவேலுவுக்கும் அதிக சிரமம் கொடுத்துவிட்டேன். மன்னிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு, அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார் மதுரநாயகம். அப்போது சரியாக மணி இரண்டரை. மதுரநாயகத்துக்கு நல்ல பசி. ஆனாலும், அவர் பசியைத் தீர்த்துக்கொள்ள நேராக வீடு செல்லவில்லை. வீட்டுக்குச் சிறிது தூரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை நோக்கியே வேகமாகச் சென்றார். ரமணி பேனாவைத் திருடிக்கொண்டு ஓடிப்போய்விட்டதாக பாஸ்கரனும் மதுரநாயகமும் அங்குதான் ரிப்போர்ட் கொடுத்திருந்தார்கள்.

அந்தப் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், நேராக சப்-இன்ஸ்பெக்டரின் அறைக்குள்ளே வேகமாகச் சென்றார். செல்லும்போதே, “சார், சார்! பேனா சம்பந்தமாக ஒரு ரிப்போர்ட் கொடுத்திருந்தோமே…” என்று தமது பேச்சை ஆரம்பித்தார்.

உடனே அந்த சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, “ஆமாம், கவலையே வேண்டாம். சீக்கிரத்திலே அவன் சிண்டைப் பிடித்துக் கொண்டுவந்துவிடுவார்கள். நாலா பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

“இல்லை சார், அந்த ரிப்போர்ட்டை வாபஸ் வாங்கத் தான் நான் ஓடோடி வருகிறேன்” என்றார், மதுரநாயகம். “ஏன்? அந்தப் பையனே நேராக உங்களிடம் பேனாவைக் கொண்டுவந்து கொடுத்து சரணாகதி அடைந்து விட்டானோ!” என்று வியப்புடன் கேட்டார், சப்- இன்ஸ்பெக்டர்.

“இல்லை சார்’’ என்று ஆரம்பித்து நடந்ததைக் கூறினார், மதுரநாயகம். அதைக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர், “நல்ல வேடிக்கைதான்! உங்கள் பேச்சை நம்பி நாலு பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன். இப்போது நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே! ஒருவருக்கு மறதி இருக்கலாம். ஆனாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாமா மறதி!” என்று கொஞ்சம் கடிந்து கொண்டார். பிறகு “நல்லகாலம். உடனேயே நீங்கள் வந்து சொன்னீர்களே! இல்லாதபோனால் என் ஆட்கள் தேடுதேடன்று தேடிக்கொண்டேயிருப்பார்கள். வீண் அலைச்சலாகப் போயிருக்கும். சரி, இது சம்பந்தமாக இனி எந்தவித முயற்சியும் எடுக்க வேண்டாமென்று சொல்லிவிடுகிறேன்” என்றார்.

மதுரநாயகம் அங்கிருந்து புறப்படும் போது மணி மூன்று. வழக்கமாக இரண்டு மணிக்குச் சபாவுக்கு அவர் வந்துவிடுவார். அதனால், “சரி, இனிமேல் வீட்டுக்குப் போனால் நேரமாகிவிடும். பேசாமல் இப்படியே சபாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்” என்று அங்கிருந்தபடியே நாடக சபாவுக்கு வந்துவிட்டார்.

முதலாளியிடம் நடந்ததைச் சொன்னதும் அவர்… “மனுஷனுக்கு மறதி இருக்கிறதுதான். ஆனாலும், இந்த மாதிரியா? நாலைந்து நாட்களாக உங்கள் வேலையைக் கெடுத்து, என் வேலையையும் கெடுத்து, போலீஸ்காரர் வேலையையும் நீங்கள் கெடுத்துவிட்டீர்களே!” என்று சிறிது கோபமாகப் பேசினார்.

“பாவம், ரமணியைத் திருடன் என்று சந்தேகப்பட்டு விட்டோமே!” என்று வருத்தத்தோடு கூறினார் மதுர நாயகம்.

“உங்கள் பேனாவைத் திருடாததால், அவன் பரம யோக்கியனாக்கும்! அன்றைக்குப் பட்டுத் துணியை எடுத்து ஒளித்து வைத்தானே. அது என்னவாம்?”

மதுரநாயகம் பதில் எதுவும் கூற விரும்பவில்லை. பேசாமல் தமது அறைக்குச் சென்றுவிட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *