
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
8. கண்ணாடி அறை
இரண்டு நாட்கள் எப்படியோ ஓடிவிட்டன. இன்னும் ரமணியைப் பற்றிய தகவலே இல்லை. மூன்றாவது நாள் காலை மணி பன்னிரண்டு இருக்கும். மானேஜர் மதுர நாயகம் நாடகசபாவை விட்டுப் புறப்பட்டார். நேராக எழும்பூரிலுள்ள போலீஸ்-கமிஷனர் ஆபீஸிற்குச் சென்றார்.
என்ன விஷயம்? ரமணியைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா? அதெல்லாம் இல்லை. சபா விஷயமாகத்தான் அங்கு சென்றார். நாடக சபாவுக்கு ஒரு வருஷத்துக்குத்தான் முதலிலே ‘லைசென்ஸ்’ கொடுத்திருந்தார்கள். அதை இன்னொரு வருஷத்துக்குப் புதுப்பிக்க வேண்டுமென்று பத்து நாட்களுக்கு முன்பு மனுக் கொடுத்திருந்தார் மதுர நாயகம். போலீஸ், கமிஷனர் அனுமதி கொடுத்து விட்டா ராம். ஆனாலும், லைசென்ஸ் கைக்கு வரவில்லை அதை வாங்கிக் கொண்டு வரவே நேராகப் புறப்பட்டார் மதுர நாயகம்.
போலீஸ்-கமிஷனர் ஆபீஸின் வெளிவாயிலைத் தாண்டி உள்ளே சென்றார். சிறிது தூரம் சென்றதும், இடது பக்கமாக இருந்த அறை அவரது கவனத்தைக் கவர்ந்தது அது ஒரு கண்ணாடி அறை. அதன் உள்ளே சைக்கிள், கடிகாரம், குல்லாய், பூட்டு, புத்தகம் இப்படிப் பல சாமான்கள் இருந்தன. அறையின் வெளிப்பக்கத்தில் ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் ‘காணாமல் போன சாமான்கள் அறை’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஒருவர் வழியிலே ஒரு சாமானைத் தவறுதலாகப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது வேறொருவர் கைக்குக் கிடைக்கிறது. அவர் யோக்கியமானவர் சாமானுக்குச் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட நினைக்கிறார். ஆனால், சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை. உடனே பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து அதன் சொந்தக்காரரிடம் சேர்க்கச் சொல்லுகிறார். அங்கிருந்து அந்தச் சாமான் போலீஸ் கமிஷனர் ஆபீஸிற்கு வருகிறது. அதைக் கண்ணாடி அறையில் வைக்கிறார்கள்; சாமானுக்குச் சொந்தக்காரர் கண்ணில் பட வேண்டுமென்றுதான் அப்படி வைக்கிறார்கள். இதே போல், திருடர்களிடமிருந்து பறி முதல் செய்த சாமான்களில் சில இங்கே வருவதும் உண்டு. திருடனுக்கு யாரிடமிருந்து எடுத்தோம் என்பது சரியாகத் தெரியாது. சாமானைப் பறிகொடுத்தவரும் போலீஸில் ‘ரிப்போர்ட்’ கொடுத்திருக்க மாட்டார். யாரிடம் சாமானைக் கொடுப்பது? கொடுப்பதற்கு வழி இல்லாததால், அதையும் கண்ணாடி அறையில் வைத்து விடுகிறார்கள்.
இப்படிப் பல சாமான்கள் வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடி அறையின் அருகே சென்று ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தார் மதுரநாயகம். இருந்தாற் போலிருந்து, “ஆ! அதோ இருக்கிறதே என் பேனா” என்று அவர் வாய் விட்டுக் கூறிக்கொண்டே ஆவலோடு உற்றுப்பார்த்தார்.
ஆம், அது அவருடைய பேனாவேதான்! தங்க மூடி போட்டிருக்கிறது. அடிப்பாகம் கறுப்பாயிருக்கிறது. மேலே ‘சேகர் அன்பளிப்பு’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லை. அவருடையதேதான்! ஆனால், அது எப்படி அங்கே வந்தது? அதுதான் மதுரநாயகத்துக்குச் சிறிதும் புரியவே இல்லை.
கண்ணாடி அறைக்குள் பேனாவைக் கண்டதும் முதலாளியின் கைக்கடிகாரமும் அங்கே இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார் மதுரநாயகம். அது அங்கே இல்லை. “நமது பேனா எப்படி இங்கு வந்தது? ஒருவேளை ரமணியிடமிருந்து பிடுங்கியிருப்பார்களோ! அப்படியானால், அது ஏன் இங்கு வரவேண்டும்?” என்றெல்லாம் யோசனை செய்தார். சரியாக விளங்கவில்லை.
‘சரி, எதற்கும் உடனே போய் விசாரித்துப் பார்க்கலாம் என்று எண்ணித் திரும்பினார். அப்போது அங்கே ஒரு போலீஸ்காரர் வந்தார். ஒரு விஷயம் என்று தமது ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டே அந்தப் போலீஸ் காரரின் அருகே சென்றார்.
“என்ன விஷயம்?” என்று கேட்டார் போலீஸ்காரர். ”காணாமற்போன என்னுடைய பேனா ஒன்று இந்தக் கண்ணாடி அறையில் இருக்கிறது. இது சம்பந்தமாக நான் யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார் மதுரநாயகம்.
உடனே அந்தப் போலீஸ்காரர் மதுரநாயகத்தை அழைத்துக்கொண்டு ஓர் அறைக்குள்ளே சென்றார். அங்கிருந்த அதிகாரியைக் காட்டி, “இவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.
மதுரநாயகம் அந்த அதிகாரியின் முன்னால் போய் “வணக்கம்” என்றார். உடனே அவர் எதிரிலே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். மதுரநாயகம் உட்கார்ந்ததும், “என்ன விஷயமாக வந்தீர்கள்?” என்று அதிகாரி கேட்டார்.
“போன செவ்வாய்க்கிழமை சாயங்காலம் என்னுடைய எவர்-ஷார்ப் பேனா காணாமல் போய்விட்டது. அது இப்போது இங்குள்ள கண்ணாடி அறையில், காணாமல் போன சாமான்களுடன் இருக்கிறது. அது எப்படி இங்கே வந்தது என்பது தெரியவில்லை. அதை நான் திரும்பப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து சொல்ல முடியுமா?” என்று கேட்டார் மதுரநாயகம்.
“எப்போது காணாமல் போனது, எங்கிருந்து காணாமல் போனது, அது உங்களுடையதுதான் என்பதற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா என்பதையெல்லாம் விவரமாக எழுதிக் கொடுங்கள். நான் உடனே எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அந்தப் பேனா வந்ததோ, அங்கு உங்கள் மனுவை அனுப்புகிறேன். அவர்கள் விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்துத் தகவல் அனுப்புவார்கள். பிறகு உங்களுக்குக் கடிதம் அனுப்புவோம். நீங்கள் வந்து பேனாவைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார் அதிகாரி.
“இப்போதே மனு எழுதித் தரலாமா?” என்றார் மதுர நாயகம்.
“எழுதிக் கொடுங்களேன். வெள்ளைக் காகிதம் வேண்டுமா?”
“வேண்டாம் சார், என்னிடம் லெட்டர் பேப்பர் இருக்கிறது. அதில் எழுதித் தருகிறேன்” என்று கூறி விட்டு, கையிலிருந்த தோல் பையைத் திறந்தார் மதுரநாயகம். உள்ளேயிருந்து அவருடைய பெயர், விலாசம் அச்சிட்ட கடிதக் காகிதத்தை எடுத்தார். அதில் பேனாவின் அடையாளம், அது எங்கிருந்து எப்போது காணாமல் போனது என்ற விவரம், திருடிப் போன ரமணியின் அங்க அடையாளங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டார். அத்துடன் அந்தப் பேனா சிங்கப்பூரிலிருந்து பார்சலில் வந்தது என்றும், சேகர் என்பவர் பேனாவைப் பற்றி எழுதிய கடிதம் தம்மிடம் இருக்கிறது என்றும் எழுதிக் கொடுத்தார்.
மதுரநாயகம் கொடுத்த மனுவை அதிகாரி ஒரு முறை படித்துப் பார்த்தார். பிறகு அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அதில் பேனா எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்தது என்ற விவரம் இருந்தது. உடனே அவர், “சரி, இதை நான் இன்றைக்கே அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறேன். நாளைக் காலையில் இது அங்கே போய்ச் சேரும். நாளை சாயங்காலம் நீங்கள் அங்கே போய்ப் பாருங்களேன். அந்தப் போலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? உங்கள் நாடகக் கொட்டகைக்குச் சிறிது தூரத்தில் ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கிறதே அதன் பக்கத்தில் தான் இருக்கிறது. நீங்கள் நேரில் போனால் இன்னும் ஏதாவது விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
“சரி, சரி! நான் வருகிறேன்” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு லைசென்ஸ் விஷயத்தையும் முடித்துக்கொண்டு நேராக நாடக சபாவுக்கு வந்தார் மதுரநாயகம்.
சபாவுக்கு வந்ததும், கமிஷனர் ஆபீஸில் பேனாவைக் கண்டது, மனு எழுதிக் கொடுத்தது முதலிய விவரங்களை முதலாளியிடம் கூறினார். உடனே முதலாளி, “புரிந்து விட்டது, புரிந்துவிட்டது?” என்றார். ‘என்ன புரிந்து விட்டது?” என்று வியப்புடன் கேட்டார் மதுரநாயகம்.
“நீங்கள் உங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ரமணிப் பயல் நம் நாடகக் கொட்டகைக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பட்டணத்தில் தான் B, B-1, B-2, B-3, B-4, என்று ஆரம்பித்து K, K-1, K-2, K-3, K-4, வரை கிட்டத்தட்ட ஐம்பது போலீஸ் ஸ்டேஷன்கள் இருப்பதாகத் தெரிகிறதே! ரமணியை இந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பிடித்து வந்தபோது அவன் கையில் பேனா மட்டுமே இருந்திருக்க வேண்டும். கடிகாரத்தை அவன் எங்கோ ஒளித்து வைத்திருக்க வேண்டும் அல்லது விற்றிருக்க வேண்டும். ‘இந்தப் பேனா யாருடையது?’ என்று கேட்டிருப்பார்கள். அவன் உள்ளதைச் சொல்லியிருக்க மாட்டான். சொன்னால் தான் உடனே இங்கு கூட்டிக் கொண்டு வந்திருப்பார்களே! அப்போது அவனுக்கு எப்படி இருக்கும்? அவமானமா யிருக்குமல்லவா? அது மட்டுமா? நானும் என் கடிகாரத்தைப் பற்றிக் கேட்காமல் விடுவேனா? அதற்கும் பதில் சொல்லி ஆக வேண்டுமே? அதனால், பேனா எங்கோ வழியில் கிடந்ததாக அவன் சரடு விட்டிருப்பான்…”
முதலாளி மோகனரங்கம் இப்படிக் கூறிக்கொண்டிருக்கும் போதே, “அப்படியானால்… கீழே கிடந்ததாகக் கூறி என் பேனாவைப் போலீஸில் கொடுத்துவிட்டு ரமணி தப்பித்துக்கொண்டிருப்பானோ!” என்றார் மதுரநாயகம்.
“யார் கண்டது? ஒருவேளை அவன்மீது சந்தேகப் பட்டு அடைத்துவைத்திருந்தாலும் இருக்கலாம். எதற்கும் நாளை சாயங்காலம் கட்டாயம் போய்ப் பார்த்து விடுங்கள். அந்த ரமணிப் பயல் அங்கே இருந்தால் என் கடிகாரத்தைப் பற்றியும் கேளுங்கள். மறந்து விடாதீர்கள்!” என்றார் மோகனரங்கம்.
மறுநாள் மாலை மணி நாலு இருக்கும். மானேஜர் மதுரநாயகம் புறப்பட்டுத் தபாலாபீஸ் அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கே சென்றதும், சப்-இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைக் கூறினார்.
“ஒஹோ! அது நீங்கள்தானா? ஆமாம், நீங்கள் சொல்வதற்கும், பேனாவைக் கொடுத்த ஆசாமி சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே!” என்று கூறினார் சப்-இன்ஸ் பெக்டர்.
“அது எப்படி சார் இருக்கும்? திருடிக்கொண்டு வந்தவன் உண்மையையா சொல்லுவான்?”
“ஆத்திரப்படாதீர்கள்! இப்போது பேசாமல் வீட்டுக்குப் போங்கள். நாளைக் காலையில் நான் ஆள் அனுப்புகிறேன். அப்போது வந்தால் விவரமாகப் பேசி முடிவு செய்யலாம்” என்று கூறினார் சப்-இன்ஸ் பெக்டர்.
“சார், பேனாவைக் கொடுத்தது யார்? அவன் எங்கே இருக்கிறான்?”
“அதெல்லாம் இப்போது சொல்லக்கூடாது. சொன்னால், உடனே நீங்கள் போய் அந்த ஆசாமியைப் பார்த்து, உங்களுக்குச் சாதகமாகப் பேசச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?” என்று சற்றுக் கடுமையாகக் கூறினார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.
“சரி சார், உங்கள் ஆள் வந்ததும் நாளைக்கு வருகிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு வந்தார் மதுரநாயகம்.
நாடக சபா முதலாளியும், கமலாதேவியும் விஷயத்தைக் கேட்டதும், “சரி, நாளை எப்படியும் அந்தப் பயல் அகப்பட்டுக்கொள்வான். சந்தேகமே இல்லை!” என்று முடிவு கட்டிவிட்டார்கள்.



