பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

21. இருண்ட குகையில்

மூன்று நிமிஷமாகியும் காமாட்சி அம்மாளுக்கு மயக்கம் தெளியாதலால், ரமணிக்குப் பயம் அதிகமாகி விட்டது. “சரி, சரி! இனியும் இங்கு இருப்பதில் பயனில்லை. உடனே ஓடிப்போய் நமது டாக்டரை அழைத்து வருவதே நல்லது” என்று தீர்மானித்தான். மறு நிமிஷம், சிற்சபேசனிடம் கூடக் கூறாமல், தலை தெறிக்க அவர்களது குடும்ப டாக்டர் வீட்டை நோக்கி வேகமாக ஓடினான்.

டாக்டர் வீட்டுக்கு இன்னும் ஒரு பர்லாங் தூரம் கூட இல்லை. ஒரு சந்திலே ரமணி வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். அப்போது, யாரோ இருவர் திடீரென்று அவன் மேல் பாய்ந்தார்கள். அவர்களில் ஒருவன் தன் கைகளால் ரமணியின் வாயைப் பலமாகப் பொத்தினான். மற்றொருவன் ஒரு முரட்டுத் துணியால் ரமணியின் முகத்தை நன்றாக மூடிவிட்டான். ரமணிக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று கையையும், காலையும் ஆட்டிப் பார்த்தான். அசைக்க முடியாதபடி அந்த முரடர்கள் இரும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். வாய் திறந்து கத்தவும் முடியாதபடி செய்துவிட்டார்கள். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் ரமணி மூர்ச்சையடைந்து விட்டான்.

ரமணி கண் விழித்துப் பார்த்தபோது, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எழுந்து உட்கார்ந்துகொண்டு, ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என்ற கலவரத்தோடே பார்த்தான். அவன் இருந்த இடத்தில் மின்சார விளக்குகள் இல்லை; ஒரே ஒரு பழங்காலத்து லாந்தர் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் வழவழப்பான சுவர்கள் இல்லை; கரடுமுரடான பாறைகளே இருந்தன. சிற்சபே சன், காமாட்சி அம்மாள், மாலதி இவர்களில் யாராவது அங்கே இருக்கிறார்களா என்று பார்த்தான்; யாரையும் காணோம்!

“ஐயோ! இது என்ன குகை மாதிரியல்லவா இருக்கிறது! நம்மை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள்?” என்று அவன் புரியாமல் விழித்தான். மறுநிமிஷம், காமாட்சியம்மாளின் உடம்பு இப்போது எப்படி இருக்குமோ!’ என்ற கவலை வந்துவிட்டது. உடனே தன்னையும் அறியாமல், ‘அம்மா!’ என்று வாய்விட்டுக் கதறிவிட்டான்.

அவன் அப்படிக் கத்தியது தான் தாமதம். மற்றொரு பக்கத்திலிருந்து நாலு முரடர்கள் அவன் இருந்த இடத்துக்கு ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ரமணிக்குப் பயமாக இருந்தது. ஒரு முறை அவர்களை ஏற இறங்கப் பார்த்தான். அந்த நாலுபேரில், மூன்று பேர் பர்மாக்காரர்கள். ஒரே ஒருவன் மட்டும் இந்தியன்…. அவனும் தமிழன் என்று ரமணிக்குத் தெரிந்தது.

“தம்பி, பயப்படாதே! உன்னை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்” என்றான், அவர்களில் மிகவும் பருமனாக இருந்த ஒரு பர்மாக்காரன். அவன்தான் அவர்களுக்குத் தலைவன்.

“நீங்கள் யார்? எதற்காக என்னை இங்கே கொண்டு வந்தீர்கள்? அம்மாவுக்கு ஆபத்து என்று டாக்டரைக் கூப்பிடப் போன என்னை இங்கே கொண்டு வந்து விட்டீர்களே! ஐயோ! அம்மாவுக்கு என்ன ஆனதோ!” என்று கூறி அழுதான் ரமணி.

உடனே அந்தத் தலைவன், “ஏன் தம்பி அழுகிறாய்? உன்அம்மாவுக்கு உடம்புசரியாகிவிடும். கவலைப்படாதே! உனக்கு இப்போது ஆகாரம் தரச் சொல்லுகிறேன். சாப்பிட்டுவிட்டுச் சுகமாகத் தூங்கு. காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, “சுப்பையா, தம்பிக்கு ஆகாரம் கொண்டு வா” என்று அங்கிருந்த தமிழனைப் பார்த்து உத்தரவிட்டான்.

உடனே ரமணி, “வேண்டாம், வேண்டாம், எனக்குப் பசியே இல்லை. என்னை எப்படியாவது டாக்டர் ஆனந்தராவ் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று மிகவும் கெஞ்சிக் கேட்டான்.

“தம்பி, வீணாக அலட்டிக் கொள்ளாதே! உன் அப்பா மனசு வைத்தால், நீ வெகு சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம் “என்றான் தலைவன்.

“என்ன! என் அப்பா மனசு வைக்க வேண்டுமா? அவர்தான் எப்போதோ இறந்து போய்விட்டாரே!”

ரமணி இப்படிச் சொன்னதும் தலைவன் பலமாக ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு, “ஓஹோ! அப்பா இறந்து போய்விட்டார் என்றால், நாங்கள் உன்னை விட்டு விடுவோம் என்றுதானே நினைக்கிறாய்? அதுதான் நடக்காது. உன் அப்பா சிற்சபேசனை எங்களுக்குத் தெரியாதென்று நினைத்துவிடாதே! அவர்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி இன்னும் உயிரோடு இருக்கிறாரே” என்றான்.

“ஐயோ! நான் ஓர் அனாதை. சிற்சபேசன் என் அப்பா இல்லை” என்று ரமணி சொல்லும் போதே, “சரி, சரி. இப்போது அதைப் பற்றி என்ன கவலை? பேசாமல் படுத்துத் தூங்கு. காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டுத் தலைவன் அங்கிருந்த ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டான். மற்றவர்களும் அங்கேயே படுத்துக் கொண்டார்கள். ரமணிக்குத் தூக்கம் வரவில்லை. “அப்பா மனசு வைத்தால் சீக்கிரம் போய்விடலாம் என்றான் இந்த முரடன். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாகச் சொல்ல மாட்டேன் என்கிறானே! அது என்னவாக இருக்கும்?” என்று யோசித்துப் பார்த்தான். அதற்குள் காமாட்சி அம்மாள், சிற்சபேசன், மாலதி முதலியோரது நினைவு வந்துவிட்டது. அத்துடன், நாளை கதை கேட்கக் குழந்தைகளெல்லாம் வருவார்களே! அவர் களுக்கெல்லாம் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்!” என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. இவற்றையெல்லாம் நினைத்து நினைத்துக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தான்.

வெகுநேரம் ஆயிற்று. தூங்கிக்கொண்டிருந்த தலைவன் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்தான். உடனே ஒரு பெரிய கொட்டாவி விட்டான். பிறகு, “டேய், டேய், எல்லோரும் எழுந்திருங்கள். பொழுது விடிந்துவிட்டது” என்று கத்தினான். சத்தம் கேட்டு மற்ற மூவரும் எழுந்தார்கள். அப்போதுதான் ரமணிக்குப் பொழுது விடிந்து விட்டது என்பது தெரிந்தது. அந்தக் குகை இரவிலும் பகலிலும் ஒரே இருட்டாகத் தான் இருந்தது. சூரிய வெளிச்சம்தான் அங்கே நுழைய முடியாதே!

எழுந்தவுடனே அந்த முரடர்கள் அங்குள்ள விளக்கு களையெல்லாம் ஏற்றினார்கள். எல்லாம் அகல் விளக்குகள்! விளக்குகளை யெல்லாம் ஏற்றியதும், குகையில் வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது. ரமணி அந்த வெளிச்சத்தில் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான்.

குகையில் ஒரு மூலையைப் பார்த்ததும், ரமணிக்கு ஆச்சரியமாயிருந்தது. “யாரது! நம்மைப் போல் அங்கே ஒரு பையன் உட்கார்ந்திருக்கிறானே!” என்று கூர்ந்து பார்த்தான். ஆம், ஒரு பையன் மூலையிலுள்ள ஒரு பாறை மேல் உட்கார்ந்திருந்தான். அவன் ரமணியைவிடக் கொஞ்சம் சின்னவன். அவனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தான்.

‘இவன் யார்? எப்படி இங்கே வந்தான்? ஒரு வேளை இவர்கள் பிள்ளை பிடிக்கிறவர்களோ…!’ என்று நினைத் துக்கொண்டே அந்தப் பையனையே ரமணி உற்றுப் பார்த்தான். அந்தப் பையனும் ரமணியைப் பார்த்து விட்டான். உடனே அவன் ஒரு புன்சிரிப்புச் சிரித்தான். வேறு ஒன்றும் செய்யவில்லை. ரமணியும் அந்தப் பையனும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்!. சிறிது நேரம் சென்றது. சுப்பையா என்ப வன் ஒரு தட்டிலே ஆகாரம் கொண்டு வந்து ரமணியின் முன்னால் வைத்தான். உடனே ரமணி, “எனக்கு எதுவும் வேண்டாம். எடுத்துப் போ” என்று கோபமாகக் கூறினான்.

“தம்பி, இது மாமியார் வீடு இல்லை. பிகு பண்ணாமல் சும்மா சாப்பிடு” என்று கேலியாகக் கூறிவிட்டு, சுப்பையா அந்த இடத்தைவிட்டுப் பாறைமேல் இருந்த பையனிடம் சென்றான். இன்னொரு தட்டிலிருந்த ஆகாரத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அந்தப் பையன் ஐந்து நிமிஷத்தில் தட்டைக் காலி செய்து விட்டு ரமணியைப் பார்த்தான். “நீயும் சாப்பிடு” என்று சைகை மூலம் கூறினான். ஆனாலும், ரமணி சாப்பிட வில்லை. அழுது கொண்டேயிருந்தான்.

சிறிது நேரம் சென்றதும், நாலு முரடர்களும் ரமணியிருந்த இடத்துக்கு வந்தார்கள். “தம்பி, இன்னும் சாப் பிடவில்லையா? சரி, அதோ அந்த சுந்தரம் உனக்குத் துணையாக இருப்பான். பயப்படாமல் இரு. நாங்கள் வெளியில் ஒரு வேலையாகப் போகிறோம்” என்று சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

அவர்கள் போனதும் அந்தப் பையன் சுந்தரம் ரமணியின் அருகிலே வந்தான். உடனே ரமணி கண் ணீரைத் துடைத்துக்கொண்டு, “தம்பி, நீ யார்? இங்கு எப்படி வந்தாய்?” என்று கேட்டான். “என் அப்பா பெயர் தாமோதரம். ஐராவதி நதிக்கு அந்தப் பக்கம் இருக்கிறதே அமரபுரா, அங்குதான் என் வீடு இருக்கிறது. என் அப்பா ஒரு பெரிய மரவியாபாரி. அன்று ஒரு நாள் நானும் என் அப்பாவும் யானை மேல் ஏறிக்கொண்டு தேக்கு மரக் காட்டுக்குப் போயிருந்தோம். இரவு நேரத்தில் அங்கிருந்த கூடாரத்தில் படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தோம். பிறகு, என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் கண்களை விழித்துப் பார்த்தபோது இங்கே இருந்தேன்! எதற்காக என்னை இங்கே கொண்டுவந்தார்கள் என்பதே தெரியவில்லை!”

“அப்படியா! உனக்கும் தெரியாதா?”

“ஆமாம், என் அப்பா மனசு வைத்தால், நான் சீக்கிரம் போய்விடலாமாம்! இதைத்தான் கேட்கிற போதெல்லாம் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறார்கள். விவர மாகச் சொன்னால் தானே தெரியும்?” என்றான்.

“என்னிடம்கூட அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். நம்மை அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ, தெரியவில்லையே!”

“போகப் போகத்தான் தெரியும். நாளையோடு நான் இங்கு வந்து சரியாக ஒரு வாரம் ஆகிறது. இது வரை என்னை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. வேளா வேளைக்குச் சாப்பாடு தருகிறார்கள். அடிக்கடி என்னை மட்டும் இங்கே வைத்துவிட்டு எல்லோரும் வெளியில் போய்விடுகிறார்கள்.”

“எல்லோரும்தான் இப்போது வெளியில் போய் விட்டார்களே, நாம் மெதுவாக இங்கிருந்து தப்பி ஓடி விட்டால் என்ன?” என்று கேட்டான் ரமணி.

“அதுதான் முடியாது. நான் இங்கு வந்த மறுநாளே தப்பிச் செல்ல வழியுண்டா என்று பார்த்தேன். அதோ அந்தப் பக்கம் திரும்பி ஒரு சந்து வழியாகத் தான் வெளியே போக வேண்டும். ஆனால், அந்தச் சந்திலே ஒரு இரும்புக் கதவு இருக்கிறது. அதை உள்ளே யிருந்தும் திறக்கலாம்; வெளியே இருந்தும் திறக்கலாம். பூட்டுவதும் அப்படித்தான். சாவி அவர்களிடமல்லவா இருக்கிறது! வா, அந்தக் கதவைச் காட்டுகிறேன்!” என்று கூறி ரமணியை அழைத்துச் சென்றான் சுந்தரம். பூட்டப்பட் டிருந்த இரும்புக் கதவைக் கண்டதும், தொப்பென்று அங்கேயே உட்கார்ந்துவிட்டான் ரமணி.

‘ரமணியைக் காணோம்!’ என்ற செய்தி மாந்தலேயில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்தார்கள். தினமும் கதை கேட்க வரும் குழந்தைகள், “ரமணி அண்ணாவைக் காணோமே! எங்கே போயிருப்பார்?” என்று கவலைப்பட்டார்கள்.

சிற்சபேசன் போலீசுக்கு இதைப் பற்றி உடனே அறிவித் திருந்தார். அவர்கள் அலசு அலசென்று அலசினார்கள். சிற்சபேசனும் அவரது ஆட்களும் தேடாத இடம் பாக்கியில்லை. சில பெரிய குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து கவலையோடு தேட ஆரம்பித்தார்கள். மூன்று நாட்களாகத் தேடியும் ரமணி அகப்படவில்லை!

நாலாவது நாள் சிற்சபேசன் தமக்கு வந்த கடிதங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு கடிதத்தை அவர் பிரித்துச் சாவதானமாகப் படிக்க ஆரம்பித்தார். இரண்டு வரிகளைப் படித்ததும், அவர் முகம் மாறியது. பரபரப்புடன் முழுவதையும் படித்தார். படித்து முடித்ததும், “ஆ, ரமணி! உனக்கு ஆபத்தா? ஐயோ!!” என்று அலறினார்.

சத்தத்தைக் கேட்டுக் காமாட்சி அம்மாள், மாலதி, இன்னும் அங்கு வந்திருந்த நாலைந்து குழந்தைகள் எல்லோரும், “என்ன, என்ன!” என்று திகிலுடன் கேட்டுக்கொண்டே அருகில் ஓடி வந்தார்கள். “ஐயோ, ரமணியைக் கொண்டு போய்விட்டார்களே!” என்று கதறி அழுதார் சிற்சபேசன்.

“என்ன! கொண்டுபோய் விட்டார்களா? யார் கொண்டு போனது?” என்று அங்கே இருந்த எல்லோரும் ஒரே சமயத்தில் பரபரப்போடு கேட்டார்கள்.

பண ஆசை பிடித்த சில அயோக்கியர்கள் தான் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால்தான் ரமணியைத் திருப்பித் தருவார்களாம்!…

“அப்படியா! ஐயோ! ரமணியை அவர்கள் இந்நேரம் என்ன பாடு படுத்துகிறார்களோ!… பத்தாயிரத்தைக் கொடுத்தால் உடனே திருப்பித் தந்துவிடுவார்களா? நிஜமாகவா!” என்று கேட்டாள் காமாட்சி அம்மாள்.

“அப்பா, அப்பா, எப்படியாவது ரமணி அண்ணாவைக் கூட்டி வந்துவிடு. அப்பா, அண்ணா இல்லாமல் எனக்கு ஒரே கஷ்டமாயிருக்கிறது!” என்றாள் மாலதி.

அப்போது அங்கிருந்த அடுத்த வீட்டுப் பர்மியப் பையன்- அவன் பெயர் மவுங் லா அவுங், “ஆமாம், இப்போது ரமணியை எங்கே வைத்திருக்கிறார்களாம்? நாம் யாரிடத்திலே பணத்தைக் கொடுக்க வேண்டுமாம்?” என்று அவர்களிடம் கேட்டான்.

“எந்த இடத்தில் ரமணியை வைத்திருக்கிறார்கள் என்பதை எழுதவில்லை. ஆனால், எந்த இடத்தில் பணத்தைக் கொண்டு போய் வைக்க வேண்டும் என்பதை மட்டும் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பங்களாவுக்குத் தெற்கே ஐந்து மைல் தூரத்தில் ஒரு மலை இருக்கிறதே, அந்த மலையின் வடக்கு ஓரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறதாம். அந்த ஆலமரத்தின் பின்புறத்திலே ஒரு பொந்து இருக்கிறதாம். ஒரு சிறிய பெட்டியில் ரூபாய் பத்தாயிரத்தை வைத்து அந்தப் பெட்டியை நானாவது அல்லது நம் ஆளாவது கொண்டுபோய் அந்தப் பொந்திலே யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே வந்துவிட வேண்டுமாம். நாம் வைக்கும் பெட்டியை அந்த அயோக்கியர்கள் எப்படியாவது எடுத்துக் கொள்வார்களாம். எடுத்துக் கொண்டதும் ரமணியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டுவிடுவார்களாம்.

“அப்படியானால், நாம் ஒரு வேலை செய்யலாம். அந்தப் பொந்துக்குள் நாம் பணத்தை வைத்திருக்கிறோமா என்று பார்ப்பதற்கு அவர்கள் அடிக்கடி வருவார்கள் போல் தெரிகிறது. ஆகையால், நாம் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்து, ஆலமரத்துக்கு வரும்போது அவர்களைப் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்தால் என்ன?” என்று கேட்டான் மவுங் லா அவுங்.

அதற்குச் சிற்சபேசன், “தம்பி, அதெல்லாம் ஆபத்து! அவர்களுடைய ஆட்கள் உளவு பார்த்துக் கொண்டே யிருக்கிறார்களாம். போலீஸில் தகவல் கொடுத்தால், அவர்கள் எப்படியாவது தெரிந்து கொண்டு விடுவார்களாம். அப்புறம் ரமணியை நாம் உயிரோடு பார்க்க முடியாதாம்! நமக்கும் ஆபத்துத் தானாம்! இதையெல்லாம் இதோ இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்களே!” என்றார் கவலையுடன்.

சிறிது நேரம் எல்லோரும் பேசாமல் இருந்தார்கள். பிறகு காமாட்சி அம்மாள், “பாவம், ரமணி இப்போது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறானோ! ரூபாயைப் பார்த்தால் முடியுமா? உடனே பணத்தை அனுப்பி ரமணியைத் திரும்பப் பெறுவதற்கு வழி செய்யுங்கள்” என்றாள்.

“ஆமாப்பா, ரமணி அண்ணாவைச் சீக்கிரம் கூட்டி வாப்பா” என்று கூறினாள் மாலதி.

சிற்சபேசன் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, “பத்தாயிரத்தைப் பற்றிக் கவலையில்லை! ரமணி கிடைத்தால் போதும். ஆனால், ரமணி அவர்களிடம் தான் இருக்கிறான் என்பது என்ன நிச்சயம்? ரமணியைக் காணோம் என்று நாமெல்லோரும் வருத்தப்படு கிறோமே, இதைத் தெரிந்து கொண்டு நம்மை ஏமாற்றிப் பணம் பிடுங்க எவனாவது இப்படி எழுதியிருந்தால்…?” என்று எண்ணினார். அதன் பிறகு, ‘ஆமாம், அப்படியும் இருக்கலாம். எதற்கும் நாமும் ஒரு பதில் கடிதம் எழுதி ஆலமரப் பொந்திலே வைத்துவிட்டு வர ஏற்பாடு செய்வோம்” என்று ஒரு முடிவுக்கு வந்தார்.

உடனே ஒரு காகிதத்தை எடுத்து, அதில் அவசரம் அவசரமாக எழுத ஆரம்பித்தார்.

“நான் பணம் தரத் தயார். ஆனால், ரமணி உங்களிடம் தான் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரிய வேண் டாமா? ஆகையால், ரமணி கைப்பட ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்பி வைத்தால், மறு நிமிஷமே ரூபாய் பத்தாயிரம் கிடைக்கும்” என்று எழுதி, ஒரு சிறு பெட்டி யில் அந்தக் கடிதத்தை வைத்தார். பிறகு ஒரு வேலைக் காரனிடம் பெட்டியைக் கொடுத்து ஆலமரப் பொந்தில் வைத்து விட்டு வரச்சொன்னார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *